Saturday 10 July 2010

வரவு செலவை கற்றுக்கொண்டால் நாடும் உயரும்!




கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலிருந்து சரியாக 13 கி.மீட்டர் தூரத்தில் இருக்கிறது அருமநல்லூர் என்ற கிராமம். ராகவன் பிள்ளை வீடு எது என்று கேட்டதுமே, மரியாதையோடு வழிகாட்டுகிறார்கள் கிராம மக்கள். அவரைப் போலவே கம்பீரமாக தோற்றமளித்தது அவருடைய வீடும். பாரம்பரியம் மாறாத அந்த வீட்டில் ஏதோ ஒன்றை டைரியில் எழுதிக் கொண்டிருந்தார் அந்த முதியவர். பெயர் ராகவன் பிள்ளை. வயது 74.
அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே இருந்த அலமாரியில் வரிசையாய் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது டைரிகள். எல்லாமுமே ஒரே வடிவில், அவர் கையிலும் அதே மாதிரியான டைரி. ஆனால், அது இந்த வருடத்திலானது.
எங்களைப் பார்த்ததும், ஒரு நிமிஷம் என்று சைகை காட்டிவிட்டு மறுபடியும் எழுத ஆரம்பித்தார். ஒரு பத்து நிமிஷம் கழிந்திருக்கும், டைரியை மூடிவிட்டு, பேச ஆரம்பித்தார் ராகவன் பிள்ளை.
இப்படி எழுத ஆரம்பிச்சு கிட்டத்தட்ட 54 வருஷம் ஆகுது. பெருசா ஒன்னும் எழுதல. வீட்டுப் பிரச்னைகள், வீட்டு வரவு செலவு கணக்கு, எங்க ஊருக்கு வந்த அரசியல் தலைவர்கள். முக்கியமான உலக நடப்புன்னு எழுதிக்கிட்டு இருக்கேன். ஒருநாள் எழுதலைன்னா அன்னிக்கு முழுசும் தூக்கமே வராது.
எப்போ எழுது ஆரம்பிச்சீங்க எப்படி எழுத ஆரம்பிச்சீங்க.
முறைப்படி டைரி எழுத ஆரம்பிச்சது 1954ம் வருஷத்துல. ஆனா, அதுக்கு முன்னாடியிருந்தே எழுதிக்கிட்டுத்தான் இருக்கேன். ஏதோ ஒரு நோட்டுல வீட்டுல உள்ள வரவு செலவு கணக்குகளை எழுத ஆரம்பிச்சேன். ஒரு மாசம் முடிஞ்சி அடுத்த மாசம் பொறக்கும்போது, முதல் மாசம் எழுதி வெச்ச வரவு செலவு கணக்குகளை பார்ப்பேன். எதுல அதிகமா செலவழிக்கிறோம். எது தேவையான செலவு? எது தேவையில்லாத செலவுன்னு யோசிக்க ஆரம்பித்தேன். அதுக்கப்புறம் தேவையில்லாத செலவுகளை குறைக்க ஆரம்பிச்சேன். மறுபடியும் எழுத ஆரம்பிச்சேன். நோட்டுல எழுதி வெச்சா காணாம போயிடும்னு அதுக்குப் பிறகு 1954ம் வருஷத்துல இருந்து டைரியில முறைப்பஐ எழுத ஆரம்பிச்சேன். முதல்ல வீட்டு வரவு செலவு கணக்கு மட்டும் எழுதுவதற்காகத்தான் டைரி எழுத ஆரம்பிச்சேன். அப்புறம் வீட்டு நடப்பு, பசங்க பொறந்தது, வளர்ந்தது இப்படி எல்லா விஷயங்களும் என் டைரியில அடக்கம். அதுவும் ஒரே மாதிரி ஒரே அளவுள்ள டைரியிலதான் எழுதிக்கிட்டு இருக்கேன்.
டைரி அளவுக்கு ஏதும் காரணம் உண்டா?
அப்படியெல்லாம் சொல்லிக்கிற மாதிரி காரணம் கிடையாது. அளவு ஒரேமாதிரி இருந்தா, அலமாரியில அடுக்கி வைக்கறதுக்கும். வருங்காலத்துல என் பேரப்பிள்ளைங்க எடுத்து படிக்கறதுக்கும் வசதியா இருக்கும் இல்லியா. தாத்தா எப்படி இருந்துருக்காருன்னு வியப்பாங்க இல்லியா? அதுக்காகத்தான். நான் நினைச்சது எல்லாம் இப்போ என் கண்முன்னாடியே நடக்கறத பார்க்கற நேரத்துல, நாம எழுதுனது வீண் போகலன்னுதான் நினைக்கத் தோணுது. முக்கியமான கல்யாண பத்திரிகை, வீட்ல வாங்கின பொருள்களுக்கான பில், ரசீதுன்னும் 50 வருஷமா சேர்த்து வச்சிருக்கேன். இது 50 வருஷத்துக்கு முன்னாடியிருந்த கலாசாரத்தையும், வரவு, செலவில் இருந்த ஏற்ற இறக்கத்தையும் நடப்புல தெரிஞ்சுக்கலாம் இல்லியா அதுக்காகத்தான் இதையும் பத்திரமா பராமரிச்சுக்கிட்டு வர்றேன்.
டைரி மட்டுமில்ல விவசாய அக்கவுண்டும் கிட்டத்தட்ட 43 வருஷமா பராமரிச்சிக்கிட்டு இருந்தேன்.
விவசாய அக்கவுண்ட் எப்போ ஆரம்பிச்சீங்க..?
விவசாய அக்கவுண்ட் 1957வது வருஷம் ஆரம்பிச்சேன். எங்க ஊர்ல பேங்க் கிடையாது. பக்கத்துல இருக்கிற திட்டுவிளைக்குத்தான் போகணும். பெருசா எதுவும் படிக்கல. எஸ்எல்சியோட படிப்பை முடிச்சிட்டு விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். விவசாய வரவு செலவைப் பார்க்கறதுக்கும், லாப நஷ்டத்தைப் பார்க்கறதுக்கும் திட்டுவிளை ஐஓபி பேங்க்ல விவசாய அக்கவுண்ட் ஆரம்பிச்சேன். என்னோட அக்கவுண்ட் நம்பர் ஒண்ணு.
இந்த மகசூல்ல வர்ற பணத்துல, வீட்டுச் செலவுக்கான பணத்தை எடுத்துக்கிட்டு மிச்சப் பணத்தை விவசாய அக்கவுண்ட்ல போடுவேன். அந்தப் பணத்துலதான் அடுத்த வருஷத்துக்கு நடவு செலவு ஆரம்பித்து, உரம், விவசாயக்கூலி, அறுப்புச் செலவு வரைக்கும் எல்லாத்துக்கும் அந்தப் பணம்தான். நான் எல்லாச் செலவுக்கும் எடுத்துப் போக மீதிப் பணமும் சேமிப்புல இருந்துக்கிட்டே இருக்கும். நடவு செய்பவர்களுக்கு கூலி, உரம் வாங்கிய செலவு இப்படி எல்லா விஷயத்தையும் நான் டைரியில எழுதி வச்சிருக்கேன். அந்த காலத்துல விவசாயம் ரொம்ப லாபம் தந்துச்சீங்க... 1950வது வருஷத்துல ஒரு நாளைக்கு நடவுக்கு வர்றவங்களுக்கு கூலி வெறும் அஞ்சு ரூபாய்தான். ஆனா இப்போ 250 ரூபாய். அப்போ வயலுக்கு போடக்கூடிய உரத்தின் விலை 18 ரூபாய்தான். ஆனா, இப்போ 400 ரூபாய். நினைச்சுப் பார்க்க முடியாத விலையேற்றம்.
ஆனா, அப்போ வருமைக்கோட்டிற்கு கீழே இருந்தவங்க ரொம்ப பேர். ஆனா, அந்த நிலைமை இப்போ குறைஞ்சிருக்கு. அதேபோல விவசாய நிலங்களும் அழிஞ்சுப் போச்சு. நான் பார்த்து நல்ல விளைஞ்சுக்கிட்டு கிடந்த நிலங்கல்லாம் கட்டடமா நிக்குது. அப்போ வேலைக்கு தகுந்த கூலி இல்லை; இப்போ கூலிக்கு தகுந்த வேலை இல்லீங்க.
அப்போ அஞ்சு ரூபா கூலிக்கு நடவுக்கு வர்றவங்க சூரியன் அடையற வரைக்கும் வேலை பார்ப்பாங்க. ஆனா, இப்போ 400 ரூபாய் கூலி கொடுக்கிறோம். ஆனா, வேலை அந்த அளவிற்கு விசேஷம் இல்லை. எல்லாமே எதிர்மறையா இருக்கு. என் கண்ணுக்கு தெரிஞ்சு எங்கப் பகுதியில விவசாயம் அழிஞ்சிக்கிட்டு வருது. இதை உடனடியா சரிசெய்யலன்னா வருங்கால சந்ததிகளுக்கு விவசாயம்னா என்னன்னு தெரிஞ்சுக்குவாங்களான்னே சந்தேகமா இருக்குன்னு சொல்லும்போதே அவரில் கண்களில் வருத்தம் தெரிந்தது.
இப்பவும் அந்த விவசாய அக்கவுண்டை பராமரிக்கறீங்களா?
இல்ல சார் 2000 வருஷத்தோட அந்த அக்கவுண்டை குளோஸ் பண்ணிட்டேன். மனசு ரொம்பவும் வேதனையா இருந்துச்சு. விவசாயத்துல இப்போ தொடர்ந்து நஷ்டம். எவ்வளவு செவு செஞ்சாலும், விளைச்சலும் இல்லை. விளைச்சலுக்கான லாபமும் இல்லை. முந்தியெல்லாம் சேமிப்பைக் காட்டிக்கொண்டிருந்த சேமிப்புக் கணக்கு, கடன் தொகையையும், நாம் கட்ட வேண்டியத் தொகையையும்தான் காட்டிக்கொண்டிருந்தது.நஷ்டத்தையே காட்டிக்கிட்டு இருக்கற இந்த சேமிப்புக் கணக்கு எதுக்குன்னு, வேண்டாம்னு நிறுத்திட்டேன்.
இந்த விவசாய சேமிப்பு கணக்கால ஏதாவது பிரயோஜனம் இருந்துச்சா?
எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து செஞ்சோம்னா கண்டிப்பா அதற்கு நல்ல பலன் உண்டு. என்னோட வரவு செலவு என்னோட வீட்டுச் செலவை மட்டுமில்லாம, நாட்டோட விலையேற்றத்தையும் தெரிஞ்சுக்க வச்சது. விவசாயம் சம்பந்தமான வணிக ரீதியான விஷயங்கள், லாப நஷ்டங்கள் குறித்த அறிக்கை செய்திகள் அளிப்பதற்காக பத்திரிகை நிருபர்கள் முதல் விவசாய அலுவலர்கள் வரை என்னை தொடர்பு கொண்டு விஷயங்களை தெரிந்து கொள்கிறார்கள். இதைவிட இன்னொரு முக்கியமான விஷயம், நான் எழுதி வந்த டைரியும், நான் பராமரித்து வந்த விவசாய சேமிப்புக் கணக்கும், என் வீட்டு வரவு செலவை தீர்மானம் செய்தது. அதோடு, என் பிள்ளைகளும் சேமிப்பை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். இன்று அவர்கள் என்னைப்போல் வரவு செலவு கணக்குகளை எழுதி வருகிறார்கள் என்று பெருமிதப்படும் ராகவன் பிள்ளைக்கு மூன்று பிள்ளைகள். ஒருவர் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தில் கண்ட்ரோலர் ஆஃப் எக்ஸாமினராகவும், இன்னொருவர் நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் பேராசிரியராகவும், மகள் வெட்னரி மருத்துவராகவும் பணியாற்றுகிறார்கள்.
இந்த வரவு செலவு கணக்குத்தான் என் குடும்பத்தை இந்தளவிற்கு உயர்த்தி இருக்கிறது. வரவு செலவை புரிந்து வாழ கற்றுக்கொண்டால், வீடு மட்டுமல்ல நாடும் உயரும் என்பது ராகவன் பிள்ளையின் கருத்து.
இதுகுறித்து ராகவன் பிள்ளையின் மகன்களின் ஒருவரான திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பி.வி.சிவசுப்பிரமணியத்திடம் கேட்டதற்கு, அப்பாவின் இந்த கட்டுக்கோப்பான வாழ்க்கைதான் நாங்கள் கற்றுக்கொண்ட பாடம். அவர் பராமரித்து வந்த விவசாய சேமிப்பு கணக்கு அவருக்கு சாதாரணமாக தெரிந்தாலும், அது மிகப்பெரிய விஷயம். அப்பாவைப் பார்த்துதான் நானும் டைரி எழுத ஆரம்பித்தேன். இருபது வருஷமா எழுதிக்கிட்டு இருக்கேன். இன்னொரு முக்கியமான விஷயம். அப்பா இத்தனைக் காலங்கள் பராமரித்து வந்த விவசாயக் கணக்கை ஆய்வு அறிக்கையாக சமர்ப்பித்து இருவர் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார்கள் என்றார்.
வாழ்வு நடப்புக்களை டைரி எழுதும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. ஆனால், விவசாய சேமிப்புக் கணக்கு இத்தனை வருடம் பராமரித்தது, அதிசயக்கத்தகுந்த விஷயம்தான். ஆனால், விவசாய நாடான நம் நாட்டில் விவசாயம் அழிந்து வருவதும், விவசாயப் பொருள்களும், உரங்களும் விலையேற்றமும் அதற்கு எதிர்மறையாக விளைப்பொட்களுக்கான சரியான விலை விவசாயிகளுக்கப் போய் சேராததும் சாபக்கேடு என்று சாதாரணமாய் சொல்லிவிட முடியாது. அரசு உற்றுநோக்கிப் பார்க்க வேண்டிய வாழ்வாதாரப் பிரச்னை இது. பொறுத்துக்கொள்ள காலம் இல்லை. இன்னும் பொறுமை காத்தால், கண்முன்னால், இருக்கும் மிச்ச மீதி விளைநிலமும் காணாமல் போய்விடும். விவசாய நிலமும், விவசாயமும் அழிந்து போகிறதே என்பது ராகவன்பிள்ளையின் ஆதங்கமும் மட்டும் இல்லை; நாட்டில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளின் மனக்குறையும் அதுதான்.
விடியல் பிறக்குமோ விவசாயத்தில்?

No comments:

Post a Comment