Friday 30 July 2010

7 ஜூன் 1893, இரவு நேரம்!



சில நாட்கள், சில மணித்துளிகள், சில விநாடிகள் வரலாற்றில் எப்போதும் மறக்க முடியாது. அத்தகைய மிகப்பெரும் வரலாற்றைப் பெற்றுத் தந்த நாள்தான் 7 ஜூன் 1893.
இந்தியாவின் தேசப்பிதா என்று சொன்னவுடன் டக்கென்று நம் நினைவுக்கு வரும் பெயர் மகாத்மா காந்தி. சாதாரன மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை தேசப்பிதா மகாத்மா காந்தியாக இந்தியாவிற்கு பெற்றுத் தந்த அந்த நாள்தான் 7 ஜூன் 1893.

அகிம்சை முறையில் இந்தியாவிற்கு சுதந்தரத்தைப் பெற்றுத் தந்த அந்த மாபெரும் மனிதர், தன் வாழ்நாளில் 25 சதவீதம் வாழ்ந்த இடம் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகர். காந்தி வாழ்ந்தது மொத்தம் 79 ஆண்டுகள். இங்கிலாந்து நாட்டில் யூனிவர்சிட்டி காலேஜ் லண்டன் கல்வி நிலையத்தில் பெற்ற பாரீஸ்டர் பட்டத்துடன் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் மகாத்மா காந்தி காலடி வைத்தபோது அவருக்கு வயது 24. அதிலிருந்து 20 ஆண்டுகள் அவர் வாழ்ந்தது டர்பன் நகரில்தான்.
அங்குதான் அவர் முதன்முதலில் நிறவேற்றுமையின் கொடுமையும் அடிமை வாழ்க்கையின் அவலத்தையும் கண்முன் கண்டார். 1893ம் வருடம், தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் உள்ள தாதா அப்துல்லா என்ற வியாபாரியின் வழக்கு விஷயமாகத்தான் இந்தியாவிலிருந்து அங்கு புறப்பட்டுச் சென்றார் காந்தி.
காந்தியின் விருப்பத்தின்பேரில், பிரெட்டோரியா நகரத்தின் வட பகுதிக்குச் செல்வதற்காக, காந்திக்கு முதல் வகுப்பு டிக்கெட்டை எடுத்துக் கொடுத்திருந்தார் தாதா அப்துல்லா. அந்த லோகோமோட்டிவ் என்ஜின் பொருத்திய அந்த ரயில் புறப்பட்டது. ரயில் கிளம்பிய சிறிது நேரத்தில் ஒரு ஐரோப்பியன் காந்தி பயணம் செய்துகொண்டிருந்த முதல் வகுப்பு பெட்டிக்கு வருகிறார். வெள்ளையர் அல்லாத எவரும் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்யக்கூடாது என்று காந்தியின் உடைமைகளை வெளியே எறிந்து, காந்தியை வெளியேற்றுகிறார். அந்த ரயில்நிலையம் பீட்டர்மேரீட்ஸ்பெர்க். அன்று ஜூன் 7ம் தேதி.
அந் ஒரு சம்பவம்தான் காந்தியை நிறவேற்றுமைக்கு எதிரான தன்னுடைய எதிர்ப்பை வெளிக்கொணர உதவியது. அதற்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவின் டர்பன் மாநகரில் காந்தி வசித்தது கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள். இந்த விஷயங்களை எல்லாம் காந்தியே தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். இந்த நாள்தான் அகிம்சை முறையில் என்னை போராட வைத்தது என்ற வாசகத்துடன் எந்த ரயில் நிலையம் அமைந்திருந்த பீட்டர்மேரிட்ஸ்பெர்க் நகரத்தில் இன்றும் அவர் சொன்ன வாசகத்துடன் அந்த சிலை கம்பீரமாக அந்த நகரின் பிரதான சாலையில் நிற்கிறது.
இந்தியாவின் 65வது சுதந்திர தினத்தைக் கொண்டாட நாடே தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால், இருபது ஆண்டுகள் டர்பன் நகரில் வாழ்ந்த அந்த மகாத்மாவின் வீடு எப்படி இருக்கிறது தெரியுமா? எந்த நபரும் செல்ல முடியாத ஒரு பகுதியாக, சமூக விரோத குற்றங்கள் நிகழும் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது என்று, தன் நெஞ்சக் குமுறல்களை நம் முன் வைக்கிறார் சென்னை பிரசிடன்சி கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவர் ஏழுமலை.
நான் சில மாதங்களுக்கு முன் டர்பன் நகரில் உள்ள டர்பன் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்துவதற்காக சென்றிருந்தேன். அங்கு சில வாரங்கள் நான் தங்க வேண்டியிருந்தது. டர்பன் பல்கலைக்கழகத்தின் கூடுதல் சிறப்பு என்ன தெரியுமா? இந்திய தேசப்பிதா மகாத்மா காந்தியின் பேத்தி ஈலா காந்திகாந்திதான் (காந்தியின் இரண்டாவது மகன் மணிலாலின் மகள்) அந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தர்.
பார் போற்றும் அந்த உத்தம தலைவரின் வாரிசை நேரில் சந்தித்தபோது எனக்கு பேச்சே வரவில்லை. ஈலா காந்திக்கு மூன்று மகன்கள். அதில் ஒருவர் அச்சு அசப்பில் காந்தியைப் போலவே. ஈலா காந்தி என்னை அவர் வீட்டுக்கு அழைத்திருந்தார். நானும் சென்றிருந்தேன். விருந்து உபசரணைகளுக்கு நடுவே தன்னுடைய தாத்தா இந்தியாவில் வாழ்ந்த நிகழ்வுகளைப் பற்றி பேசி நெகிழ்ந்தார். அவர் குடும்ப புகைப்படத்தை என்னிடம் காட்டினார். அதோடு, கெட்டதைப் பார்க்காதே, தீயவற்றைப் பேசாதே, தீயவற்றைக் கேட்காதே என்று சொல்லும் காந்தியி பயன்படுத்திய அந்த மந்திரச் சொல்லின் அடையாள குரங்கு பொம்மைகள் நமக்குத் தெரியும். ஆனால், காந்தி தன்னுடைய வீட்டில் தன் மேஜையில் வைத்திருந்த பொம்மையை இன்னும், ஈலா காந்தி தன் வீட்டு வரவேற்பறையில் வைத்திருந்தார்.
அப்போது காந்தி வாழ்ந்த வீட்டை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஆசிரியர்களிடம் கூறியபோது, வேண்டாம் அது ரொம்ப டேஞ்சரான இடம் என்றார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
பலரிடம் விசாரித்தபோதும் அதே பதில்தான். என்னுடைய ஆர்வம் இன்னும் அதிகரித்தது. அவர் வாழ்ந்த இடத்தில் என்னதான் பிரச்னை? கடைசியாக அங்கு பணிபுரிந்த இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒரு கார் டிரைவர் என்னை அங்கு அழைத்துச் செல்வதாக கூறினார். ஆனால், அதுவும் நிபந்தனையின் பேரில்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் அவர் வீட்டின் வெளிப்புறத்தை படம் எடுக்க முயற்சிக்காதீர்கள் உயிருக்கே வினை வந்துவிடும் என்று எச்சரித்தார் அந்த கார் டிரைவர். அதோடு, மிகவும் சமூக விரோத செயல்கள் நடக்கும் அந்த இடத்தில் பத்து நிமிடத்திற்கு மேல் இருந்தால் கண்டிப்பாக உயிரோடு திரும்ப வர முடியாது என்றும் மறுபடியும் எச்சரித்தார் அவர்.
ட ர்பன் நகரில் இருந்து கிட்டத்தட்ட இருபது கிலோ மீட்டர் துõரத்தில் இருந்தது. காந்தி செட்டில்மென்ட் என்ற அந்தப் பகுதி. காந்தி வாழ்ந்த வீடு மற்றும் அந்தப் பகுதியை அவ்வூர்வாசிகள் அப்படித்தான் சொல்கிறார்கள். வறுமையின் கோரப்பிடியில் இருக்கும் அந்தப் பகுதிக்கு ஆண்கள் எவரேனும் நுழைந்தால், கையில், பையில் வைத்திருக்கும் பணத்தை பிடுங்கிக்கொண்டு அடித்து அனுப்பிவிடுவார்கள். இல்லை கொலை செய்யக்கூட தயங்கமாட்டார்களாம். அந்நிய பெண்கள் அங்கு நுழைந்தால் கற்பு சூறையாடப்படும். அப்படிப்பட்ட ஒரு பயங்கரமான பகுதியாம் அது. கார் அந்தப் பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தது. காந்தி இருந்த வீட்டைப் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும், மனம் என்னவோ திக்திக் என்றே இருந்தது.
வீட்டிலிருந்து கிட்டத்தட்ட நூறு அடி தொலைவில் காரை நிறுத்தினார் டிரைவர். காந்தியின் வீடு சாதாரணமாய் இருந்தது. அவர் வீட்டைச் சுற்றிலும், குடிகாரர்களும், போதைப் பொருள் விற்பவர்களும் என்று அவர் வீட்டைச் சுற்றியுள்ள பகுதி சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பால் நிறைந்து கிடந்தது.
கேமராவை இப்போ வெளியே எடுத்தா பிரச்னை என்று நினைத்து, மெது மெதுவாய் நகர்ந்து ஒருவழியாய் அவர் வீட்டை அடைந்தேன். காந்தியின் நினைவிடமாக இருக்கும் அந்த வீடு, எந்த ஒரு பாதுகாப்பு வசதியுமின்றி யார் வேண்டுமானாலும், உள்ளே சென்று வரலாம் என்பது போல்தான் இருந்தது. காந்தி வாழ்ந்த அந்த வீட்டின் வெளிப்புறம் முகம் சுழித்த அளவிற்கு வீட்டின் உள்புறம் இல்லை. வீட்டை யாரோ தினமும் சுத்தம் செய்வார்கள் போலிருக்கிறது. வீட்டின் உள்புறம் கொஞ்சம் சுத்தமாகவே இருந்தது. என் கேமராவால் காந்தி இருந்த வீட்டை படம் பிடித்துவிட்டு, அங்கிருந்து பிழைத்தால் போதும் என்று ஓடிவந்து காரில் ஏறிக்கொண்டேன்.
நம் நாட்டின் தேசப்பிதா வாழ்ந்த இடம் அன்றைய பொழுது இந்தியர்கள் பலர் வாழ்ந்த இடமாக இருந்திருக்கிறது. ஆனால், இன்று சாதாரண மனிதர்கள் கூட நுழைவதற்கே அச்சம் நிறைந்த பகுதியாக அந்தப் பகுதிய மாறியிருப்பதை நினைத்துப் பார்க்கும்போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. இவ்வளவிற்கும் டர்பன் நகரில் இந்திய தூதரகம் இருக்கத்தான் செய்கிறது. இருந்தும் ஏன் இன்னும் இந்தப் பகுதியை செப்பனிட்டு, அவரின் நினைவிடத்தை பாதுகாப்பாக்க முயற்சிக்கவில்லை என்ற கேள்வி மட்டும் என்னுள் எழுந்துகொண்டே இருந்தது.
தேசப்பிதா மகாத்மா காந்தி பெற்றுத் தந்த சுதந்திர காற்றை 65வது ஆண்டாக சுவாசிக்கப்போகும் நமக்கு, அவர் அடையாளமாக நிமிர்ந்து நிற்கும் அந்த வீட்டை செப்பனிடுவது நமது இந்திய அரசின் கடமை அல்லவா?


Monday 12 July 2010

தண்ணீரில் எரியும் விளக்கு.!


யோக மார்க்கத்தில் உள்ள சில பயிற்சிகளை சிரத்தையோடு தொடரச்சியாக செய்யும் போது ஒவ்வொரு சாதகனுக்கும் சித்துக்கள் என்ற இயற்கையை கட்டுபடுத்தும் ஆற்றல் இயல்பாக கிடைக்கிறது. அப்பாடி சித்துக்களை பெற்ற எவரும் அவசியம் ஏற்பட்டால் ஒழிய அனாவசியமான வேளையில் அதை பயன்படுத்துவது கிடையாது காரணம் இறைவனை அடைவது ஒன்றே யோக மார்க்கத்தின் குறிக்கோள் என்பதனால் சித்துக்கள் மாயா சக்தி என்றும் சாதனையாளர்களை தவறான பாதையில் வழிநடத்தும் என்றும் கருதப்பட்டு அவைகள் ஒதுக்கபடுகின்றன நிறைநிலை அடைந்த ஞானிகள் சித்துக்களை மலம் என்றே அழைக்கிறார்கள் எனவே நாம் தவம் செய்து பெறுகின்ற சித்துக்களை இங்கு பேச வேண்டாம் சாதாரண மனிதர்கள் சுயலாபத்திற்க்காக பயன்படுத்தும் சித்துக்களின் ரகசியத்தை சிறிது ஆராய்வோம்

உலகில் எந்த நாட்டு மூலிகைக்கும் இல்லாத சிறப்புகளும் சக்திகளும் தமிழ்நாட்டு மூலிகைகளுக்கு நிறையவே உண்டு இந்த மூலிகைகளின் ரகசியங்களை நமது முன்னோர்கள் மிக நன்றாக அறிந்திருந்தார்கள். மூலிகைகளில் உள்ள ரகசிய சக்திகளை எப்படி பயன்படுத்துவது என்பது அவர்களுக்கு கைவந்த கலையாக இருந்தது. தாங்கள் கற்ற பாடுபட்டு பெற்ற ரகசியங்களை பல ஏடுகளில் ஆவணங்களாக எழுதிவைக்கவும் செய்திருக்கிறார்கள். அவற்றை படிக்கும் போது நமக்கு வியப்பு மட்டுமல்ல இப்படியெல்லாம் கூட இருக்குமா என்ற மலைப்பும் ஏற்படுகிறது.

நீங்கள் தெருவோரங்களில் மோடிமஸ்தான்கள் செய்கின்ற வித்தைகளை கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள் அந்த வித்தைகளில் மிக முக்கியமாக சிறிய கிண்ணத்தில் விதைக்கப்படும் கம்பம்புல் சில நிமிட நேரத்திலேயே வளர்ந்து கதிர்சாய்வதை பார்க்க தவறியிருக்க மாட்டீர்கள் ஒரு விதை முளைத்து பயிர் தர வேண்டுமென்றால் குறைந்தது மூன்றுமாத காலமாவது ஆகவேண்டும். ஆனால் சில நிமிட நேரங்களில் மோடிமஸ்தான்கள் பயிர் வளர வைப்பது மந்திர சக்தியால் இருக்கலாமோ? என்று எண்ண தோன்றும். ஆனால் உண்மையில் இதற்கு மந்திரம் வேண்டாம் மூலிகைகளால் தந்திரம் செய்ய கற்றிருந்தால் போதும்

மிக சாதாரணமாக கிடைக்கும் நாட்டு கோழி முட்டையில் கம்பம்புல்லை மூன்று நாட்கள் ஊறவைத்து அதை வித்தை காட்டும் மைதானத்தில் மண்ணில் புதைத்து சில ஒழுங்கு முறைப்படி வெளிச்சம் படும்மாரும் இருட்டு சூளுமாரும் மூடி மூடி திறந்தால் பருவநிலை மாற்றம் போன்ற நிகழ்வு விதைக்கு ஏற்பட்டு அது சில நிமிடங்களில் வளர்ந்து கதிர் தள்ளிவிடுகிறது இதை சோதனைக்காக நீங்கள் கூட செய்து பார்க்கலாம் இதை போலவே பச்சை தவளையின் நெய்யை எடுத்து கைகளில் பூசி கொண்டால் கொதிக்கும் எண்ணெயில் கூட கைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கையை முக்கி எடுக்கலாம்.

சில மந்திர வாதிகளும் சாமியார்களும் பஞ்சு திரி போட்டு எண்ணெய்க்கு பதிலாக பச்சை தண்ணீர் ஊற்றி விளக்கெரிப்பதை அறிந்த்ருப்பீர்கள் இந்த காலத்தில் கடைகளில் கிடைக்கும் எண்ணெய் கலப்படமாகி விட்டதனால் அவற்றை ஊற்றி கூட தீபம் ஏற்றுவது மகா சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் தண்ணீர் விட்டு தீபம் ஏற்றுவது கற்பனை கூட செய்துபார்க்க முடியாத காரியமாக தெரியலாம். சற்று பொறுமையும் கூர்மையான அறிவு இருந்தால் உங்களால் கூட தண்ணீரில் விளக்கேற்ற முடியும்.

அத்தி பழத்தை பிய்த்து பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று ஒரு பழமொழியை நீங்கள் அடிக்கடி கேட்டிருக்கலாம் பூக்களே பூக்காமல் பழங்களை பழுக்கும் அதிசய மரம் அத்தியாகும். இந்த அத்திமர வேரில் அதிகாலை வேளையில் கத்தியால் கீறினால் ஒருவித நீர் சுரக்கும் இதை அத்திபால் என்று சொல்வார்கள். அத்திபாலில் பருத்தி திரியை ஊறவைத்து பிறகு வெயிலில் உலர்த்தி பத்திரபடுத்தி கொள்ளவும் பிறகு விளக்கில் தண்ணீரை ஊற்றி இந்த திரியை போட்டு தீபம் ஏற்றினால் மிக அருமையாக விளக்கு எரியும்.

களிமண்ணையும் செம்மண்ணையும் பிசைந்து சிவலிங்கம் செய்வதை பார்த்திருப்போம் ஆற்றுமணலில் சிவலிங்கம் செய்ய முடியும் என்று யாரவது சொன்னால் அவனை அறியாத பிள்ளை அல்லது அறிவு வளராத ஜென்மம் என்று கேலி பேசுவோம். நிஜமாகவே ஆற்றுமணலை மட்டுமல்ல கடல் மணலை கூட பிசைந்து சிவலிங்கம் செய்யலாம் அதற்கு தேவையானது தண்ணீர் விட்டான் கிழங்கு என்ற ஒரு வித மூலிகையே இப்படி எவ்வளவோ விஷயங்கள் மறைந்து போய் சிலபேருக்கு மட்டும் தெரிந்ததாக இருக்கிறது இதை பலபேரும் அறிந்துகொள்ளும் படி செய்தால் பல சங்கடங்களை விலக்கலாம் அதற்கு தேவை உழைப்பும் ஆர்வமும் பொறுமையும் இந்த மூன்றும் உங்களிடம் இருந்தால் நீங்கள் கூட அதிசயங்களை நிகழ்த்தலாம்.

Saturday 10 July 2010

வரவு செலவை கற்றுக்கொண்டால் நாடும் உயரும்!




கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலிருந்து சரியாக 13 கி.மீட்டர் தூரத்தில் இருக்கிறது அருமநல்லூர் என்ற கிராமம். ராகவன் பிள்ளை வீடு எது என்று கேட்டதுமே, மரியாதையோடு வழிகாட்டுகிறார்கள் கிராம மக்கள். அவரைப் போலவே கம்பீரமாக தோற்றமளித்தது அவருடைய வீடும். பாரம்பரியம் மாறாத அந்த வீட்டில் ஏதோ ஒன்றை டைரியில் எழுதிக் கொண்டிருந்தார் அந்த முதியவர். பெயர் ராகவன் பிள்ளை. வயது 74.
அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே இருந்த அலமாரியில் வரிசையாய் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது டைரிகள். எல்லாமுமே ஒரே வடிவில், அவர் கையிலும் அதே மாதிரியான டைரி. ஆனால், அது இந்த வருடத்திலானது.
எங்களைப் பார்த்ததும், ஒரு நிமிஷம் என்று சைகை காட்டிவிட்டு மறுபடியும் எழுத ஆரம்பித்தார். ஒரு பத்து நிமிஷம் கழிந்திருக்கும், டைரியை மூடிவிட்டு, பேச ஆரம்பித்தார் ராகவன் பிள்ளை.
இப்படி எழுத ஆரம்பிச்சு கிட்டத்தட்ட 54 வருஷம் ஆகுது. பெருசா ஒன்னும் எழுதல. வீட்டுப் பிரச்னைகள், வீட்டு வரவு செலவு கணக்கு, எங்க ஊருக்கு வந்த அரசியல் தலைவர்கள். முக்கியமான உலக நடப்புன்னு எழுதிக்கிட்டு இருக்கேன். ஒருநாள் எழுதலைன்னா அன்னிக்கு முழுசும் தூக்கமே வராது.
எப்போ எழுது ஆரம்பிச்சீங்க எப்படி எழுத ஆரம்பிச்சீங்க.
முறைப்படி டைரி எழுத ஆரம்பிச்சது 1954ம் வருஷத்துல. ஆனா, அதுக்கு முன்னாடியிருந்தே எழுதிக்கிட்டுத்தான் இருக்கேன். ஏதோ ஒரு நோட்டுல வீட்டுல உள்ள வரவு செலவு கணக்குகளை எழுத ஆரம்பிச்சேன். ஒரு மாசம் முடிஞ்சி அடுத்த மாசம் பொறக்கும்போது, முதல் மாசம் எழுதி வெச்ச வரவு செலவு கணக்குகளை பார்ப்பேன். எதுல அதிகமா செலவழிக்கிறோம். எது தேவையான செலவு? எது தேவையில்லாத செலவுன்னு யோசிக்க ஆரம்பித்தேன். அதுக்கப்புறம் தேவையில்லாத செலவுகளை குறைக்க ஆரம்பிச்சேன். மறுபடியும் எழுத ஆரம்பிச்சேன். நோட்டுல எழுதி வெச்சா காணாம போயிடும்னு அதுக்குப் பிறகு 1954ம் வருஷத்துல இருந்து டைரியில முறைப்பஐ எழுத ஆரம்பிச்சேன். முதல்ல வீட்டு வரவு செலவு கணக்கு மட்டும் எழுதுவதற்காகத்தான் டைரி எழுத ஆரம்பிச்சேன். அப்புறம் வீட்டு நடப்பு, பசங்க பொறந்தது, வளர்ந்தது இப்படி எல்லா விஷயங்களும் என் டைரியில அடக்கம். அதுவும் ஒரே மாதிரி ஒரே அளவுள்ள டைரியிலதான் எழுதிக்கிட்டு இருக்கேன்.
டைரி அளவுக்கு ஏதும் காரணம் உண்டா?
அப்படியெல்லாம் சொல்லிக்கிற மாதிரி காரணம் கிடையாது. அளவு ஒரேமாதிரி இருந்தா, அலமாரியில அடுக்கி வைக்கறதுக்கும். வருங்காலத்துல என் பேரப்பிள்ளைங்க எடுத்து படிக்கறதுக்கும் வசதியா இருக்கும் இல்லியா. தாத்தா எப்படி இருந்துருக்காருன்னு வியப்பாங்க இல்லியா? அதுக்காகத்தான். நான் நினைச்சது எல்லாம் இப்போ என் கண்முன்னாடியே நடக்கறத பார்க்கற நேரத்துல, நாம எழுதுனது வீண் போகலன்னுதான் நினைக்கத் தோணுது. முக்கியமான கல்யாண பத்திரிகை, வீட்ல வாங்கின பொருள்களுக்கான பில், ரசீதுன்னும் 50 வருஷமா சேர்த்து வச்சிருக்கேன். இது 50 வருஷத்துக்கு முன்னாடியிருந்த கலாசாரத்தையும், வரவு, செலவில் இருந்த ஏற்ற இறக்கத்தையும் நடப்புல தெரிஞ்சுக்கலாம் இல்லியா அதுக்காகத்தான் இதையும் பத்திரமா பராமரிச்சுக்கிட்டு வர்றேன்.
டைரி மட்டுமில்ல விவசாய அக்கவுண்டும் கிட்டத்தட்ட 43 வருஷமா பராமரிச்சிக்கிட்டு இருந்தேன்.
விவசாய அக்கவுண்ட் எப்போ ஆரம்பிச்சீங்க..?
விவசாய அக்கவுண்ட் 1957வது வருஷம் ஆரம்பிச்சேன். எங்க ஊர்ல பேங்க் கிடையாது. பக்கத்துல இருக்கிற திட்டுவிளைக்குத்தான் போகணும். பெருசா எதுவும் படிக்கல. எஸ்எல்சியோட படிப்பை முடிச்சிட்டு விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். விவசாய வரவு செலவைப் பார்க்கறதுக்கும், லாப நஷ்டத்தைப் பார்க்கறதுக்கும் திட்டுவிளை ஐஓபி பேங்க்ல விவசாய அக்கவுண்ட் ஆரம்பிச்சேன். என்னோட அக்கவுண்ட் நம்பர் ஒண்ணு.
இந்த மகசூல்ல வர்ற பணத்துல, வீட்டுச் செலவுக்கான பணத்தை எடுத்துக்கிட்டு மிச்சப் பணத்தை விவசாய அக்கவுண்ட்ல போடுவேன். அந்தப் பணத்துலதான் அடுத்த வருஷத்துக்கு நடவு செலவு ஆரம்பித்து, உரம், விவசாயக்கூலி, அறுப்புச் செலவு வரைக்கும் எல்லாத்துக்கும் அந்தப் பணம்தான். நான் எல்லாச் செலவுக்கும் எடுத்துப் போக மீதிப் பணமும் சேமிப்புல இருந்துக்கிட்டே இருக்கும். நடவு செய்பவர்களுக்கு கூலி, உரம் வாங்கிய செலவு இப்படி எல்லா விஷயத்தையும் நான் டைரியில எழுதி வச்சிருக்கேன். அந்த காலத்துல விவசாயம் ரொம்ப லாபம் தந்துச்சீங்க... 1950வது வருஷத்துல ஒரு நாளைக்கு நடவுக்கு வர்றவங்களுக்கு கூலி வெறும் அஞ்சு ரூபாய்தான். ஆனா இப்போ 250 ரூபாய். அப்போ வயலுக்கு போடக்கூடிய உரத்தின் விலை 18 ரூபாய்தான். ஆனா, இப்போ 400 ரூபாய். நினைச்சுப் பார்க்க முடியாத விலையேற்றம்.
ஆனா, அப்போ வருமைக்கோட்டிற்கு கீழே இருந்தவங்க ரொம்ப பேர். ஆனா, அந்த நிலைமை இப்போ குறைஞ்சிருக்கு. அதேபோல விவசாய நிலங்களும் அழிஞ்சுப் போச்சு. நான் பார்த்து நல்ல விளைஞ்சுக்கிட்டு கிடந்த நிலங்கல்லாம் கட்டடமா நிக்குது. அப்போ வேலைக்கு தகுந்த கூலி இல்லை; இப்போ கூலிக்கு தகுந்த வேலை இல்லீங்க.
அப்போ அஞ்சு ரூபா கூலிக்கு நடவுக்கு வர்றவங்க சூரியன் அடையற வரைக்கும் வேலை பார்ப்பாங்க. ஆனா, இப்போ 400 ரூபாய் கூலி கொடுக்கிறோம். ஆனா, வேலை அந்த அளவிற்கு விசேஷம் இல்லை. எல்லாமே எதிர்மறையா இருக்கு. என் கண்ணுக்கு தெரிஞ்சு எங்கப் பகுதியில விவசாயம் அழிஞ்சிக்கிட்டு வருது. இதை உடனடியா சரிசெய்யலன்னா வருங்கால சந்ததிகளுக்கு விவசாயம்னா என்னன்னு தெரிஞ்சுக்குவாங்களான்னே சந்தேகமா இருக்குன்னு சொல்லும்போதே அவரில் கண்களில் வருத்தம் தெரிந்தது.
இப்பவும் அந்த விவசாய அக்கவுண்டை பராமரிக்கறீங்களா?
இல்ல சார் 2000 வருஷத்தோட அந்த அக்கவுண்டை குளோஸ் பண்ணிட்டேன். மனசு ரொம்பவும் வேதனையா இருந்துச்சு. விவசாயத்துல இப்போ தொடர்ந்து நஷ்டம். எவ்வளவு செவு செஞ்சாலும், விளைச்சலும் இல்லை. விளைச்சலுக்கான லாபமும் இல்லை. முந்தியெல்லாம் சேமிப்பைக் காட்டிக்கொண்டிருந்த சேமிப்புக் கணக்கு, கடன் தொகையையும், நாம் கட்ட வேண்டியத் தொகையையும்தான் காட்டிக்கொண்டிருந்தது.நஷ்டத்தையே காட்டிக்கிட்டு இருக்கற இந்த சேமிப்புக் கணக்கு எதுக்குன்னு, வேண்டாம்னு நிறுத்திட்டேன்.
இந்த விவசாய சேமிப்பு கணக்கால ஏதாவது பிரயோஜனம் இருந்துச்சா?
எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து செஞ்சோம்னா கண்டிப்பா அதற்கு நல்ல பலன் உண்டு. என்னோட வரவு செலவு என்னோட வீட்டுச் செலவை மட்டுமில்லாம, நாட்டோட விலையேற்றத்தையும் தெரிஞ்சுக்க வச்சது. விவசாயம் சம்பந்தமான வணிக ரீதியான விஷயங்கள், லாப நஷ்டங்கள் குறித்த அறிக்கை செய்திகள் அளிப்பதற்காக பத்திரிகை நிருபர்கள் முதல் விவசாய அலுவலர்கள் வரை என்னை தொடர்பு கொண்டு விஷயங்களை தெரிந்து கொள்கிறார்கள். இதைவிட இன்னொரு முக்கியமான விஷயம், நான் எழுதி வந்த டைரியும், நான் பராமரித்து வந்த விவசாய சேமிப்புக் கணக்கும், என் வீட்டு வரவு செலவை தீர்மானம் செய்தது. அதோடு, என் பிள்ளைகளும் சேமிப்பை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். இன்று அவர்கள் என்னைப்போல் வரவு செலவு கணக்குகளை எழுதி வருகிறார்கள் என்று பெருமிதப்படும் ராகவன் பிள்ளைக்கு மூன்று பிள்ளைகள். ஒருவர் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தில் கண்ட்ரோலர் ஆஃப் எக்ஸாமினராகவும், இன்னொருவர் நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் பேராசிரியராகவும், மகள் வெட்னரி மருத்துவராகவும் பணியாற்றுகிறார்கள்.
இந்த வரவு செலவு கணக்குத்தான் என் குடும்பத்தை இந்தளவிற்கு உயர்த்தி இருக்கிறது. வரவு செலவை புரிந்து வாழ கற்றுக்கொண்டால், வீடு மட்டுமல்ல நாடும் உயரும் என்பது ராகவன் பிள்ளையின் கருத்து.
இதுகுறித்து ராகவன் பிள்ளையின் மகன்களின் ஒருவரான திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பி.வி.சிவசுப்பிரமணியத்திடம் கேட்டதற்கு, அப்பாவின் இந்த கட்டுக்கோப்பான வாழ்க்கைதான் நாங்கள் கற்றுக்கொண்ட பாடம். அவர் பராமரித்து வந்த விவசாய சேமிப்பு கணக்கு அவருக்கு சாதாரணமாக தெரிந்தாலும், அது மிகப்பெரிய விஷயம். அப்பாவைப் பார்த்துதான் நானும் டைரி எழுத ஆரம்பித்தேன். இருபது வருஷமா எழுதிக்கிட்டு இருக்கேன். இன்னொரு முக்கியமான விஷயம். அப்பா இத்தனைக் காலங்கள் பராமரித்து வந்த விவசாயக் கணக்கை ஆய்வு அறிக்கையாக சமர்ப்பித்து இருவர் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார்கள் என்றார்.
வாழ்வு நடப்புக்களை டைரி எழுதும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. ஆனால், விவசாய சேமிப்புக் கணக்கு இத்தனை வருடம் பராமரித்தது, அதிசயக்கத்தகுந்த விஷயம்தான். ஆனால், விவசாய நாடான நம் நாட்டில் விவசாயம் அழிந்து வருவதும், விவசாயப் பொருள்களும், உரங்களும் விலையேற்றமும் அதற்கு எதிர்மறையாக விளைப்பொட்களுக்கான சரியான விலை விவசாயிகளுக்கப் போய் சேராததும் சாபக்கேடு என்று சாதாரணமாய் சொல்லிவிட முடியாது. அரசு உற்றுநோக்கிப் பார்க்க வேண்டிய வாழ்வாதாரப் பிரச்னை இது. பொறுத்துக்கொள்ள காலம் இல்லை. இன்னும் பொறுமை காத்தால், கண்முன்னால், இருக்கும் மிச்ச மீதி விளைநிலமும் காணாமல் போய்விடும். விவசாய நிலமும், விவசாயமும் அழிந்து போகிறதே என்பது ராகவன்பிள்ளையின் ஆதங்கமும் மட்டும் இல்லை; நாட்டில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளின் மனக்குறையும் அதுதான்.
விடியல் பிறக்குமோ விவசாயத்தில்?

Friday 9 July 2010

1936ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட பீல்ட்ஸ் மெடல்தான் கணிதத்திற்கான நோபல் பரிசு என்று அழைக்கப்பட்டது. அதற்குப் பிறகு 1982ம் ஆண்டு முதல் கணிப்பொறி அறிவியல் பாடத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு நவலீனா மெடல் வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு காஸ் மெடல் அப்ளைட் மேதமெட்டிக்கலிற்காக 2006ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
அதேபோல இந்தாண்டு இந்தியாவில் நடைபெறும் உலக அளவிலான கணிதவியல் மாநாட்டில் செர்ன் மெடல் விருது வழங்கப்படவிருக்கிறது. கணதத்தில் மிகத் திறமையான தனிமனித சாதனை செய்த சாதனையாளருக்கு வாழ்நாள் சாதனை விருதாக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது முதல் முறையாக ஹைதராபாத்தில் நடக்கும் உலக கணிதவியல் மாநாட்டில் வழங்கப்படுவதுதான் குறிப்பிடத்தக்கது.
இந்த விருது ஷிங் ஷென் செர்ன் என்ற சீன கணிதவியலாளர் நினைவாக வழங்கப்படவிருக்கிறது. இவர் மாடர்ன் ஜாமென்டரி, குளோபல் டிப்ரன்ஷியல் ஜியாமன்டரியில் தனி முத்திரை பதித்தவர் ஆவர். வாழ்நாள் சாதனையாளரான இவர் பெயரில் இந்த விருதை வழங்கப் பெருமைப்படுவதாக செர்ன் மெடல் பவுன்டேஷன் தெரிவித்துள்ளது.இந்த விருதின் மதிப்பு 5 லட்சம் அமெரிக்க டாலர்.
இப்படி உலகப் புகழ்பெற்ற கணிதவியல் மாநாடு முதல் முறையாக இந்தியாவில் நடைபெறுவது நமக்கு பெருமையான விஷயம்தான். ஆனால், அதே நேரத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் இந்த விருதைப் பெற்றவர்கள் பட்டியலில் விருது பெற்ற கணிதவியலாளர்களில் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவருக்குத்தான் இந்த விருது கிடைத்திருக்கிறது. ராமானுஜம் முதற்கொண்டு மிகப்பெரிய கணிதவியலாளர்கள் பிறந்த நம் நாட்டில் கணிதத்திற்கான சர்வதேச விருது தனிப்பட்ட இந்தியருக்கு இந்த விருது கிடைப்பது எப்போது?

சர்வதேச கணித மாநாடு

ஒவ்வொரு துறைக்கும் உலகளாவிய விருதுகளை சர்வதேச சமூகம் வழங்கி வருகிறது. கலைத்துறைக்கு ஆஸ்கார் விருதுகள், அறிவியல், கண்டுபிடிப்புகளுக்கு நோபல் பரிசு, எழுத்துக்கு புட்கர் பரிசு இப்பஐ சர்வதேச அங்கீகாரத்தின் பட்டியலில் கணிதத்தில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்க சர்வதேச அளவில் விருதுகளை வழங்கி வருகிறது.
இன்டர்நேஷனல் மேதமெட்டிக்கல் காங்கிரஸ் என்ற அமைப்பு நான்கு வருடத்திற்கு ஒருமுறை சர்வதேச அளவில் நடைபெறும் கணித மாநாட்டில் உலகளவில் கணிதத்தில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. இந்த விருது கணிதப் பாடத்திற்கான நோபல் விருது என்று வர்ணிக்கப்படுகிறது.
இப்படி உலக அளவில் பிரபலமான இந்த சர்வதேச கணித மாநாடு முதல் முறையாக இந்தியாவில் ஹைதராபாத்தில் ஆகஸ்ட் மாதம் 19ம் தேதியிலிருந்து 27ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. 113 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த கணித மாநாடு, முதல் முறையாக இந்தியாவில் நடக்கவிருப்பதால், சர்வதேச கணித சமூகத்தின் பார்வை தற்போது இந்தியாவின் மீது இருக்கிறது.
இப்படி கணிதப் பாடத்திற்காகவே வடிவமைக்கப்பட்ட இந்த விருது வந்த வரலாறே சுவராஸ்யமானதுதான்.
1890ம் ஆண்டு கணிதவியலாளர்களுக்கான மாநாடு ஒன்று சிகாகோ நகரில் நடைபெற்றது. அப்போது அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜெர்மன் கணிதவியலாளர்கள் பெலிக்ஸ் கெலின் மற்றும் ஜார்ஜ் கேண்டர் என்பவர்கள், கணிதத்தில் சிறந்து விளங்கும் நபர்களை கௌரவிக்க விருதுகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்கள். அந்தக் கோரிக்கை 1893ம் ஆண்டு நடைபெற்ற கணிதவியலாளர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த விருதுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து உலகளவிலான கணிதவியலாளர்களை ஒன்றினைத்து சர்வதேச கணித மாநாடு சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரில் 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. உலகளவில் கணிதத்திற்காக நடைபெற்ற முதல் மாநாட்டில் 16 பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 208 கணிவியலாளர்கள் கலந்துகொண்டார்கள். இதில் 12 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 7 பேர். மற்றவர்கள் வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இந்த மாநாட்டின் போது பல்வேறு கணித சமன்பாடுகளில் உள்ள சர்ச்சைகள், சந்தேகங்கள் தீர்க்கப்படும். அந்த மாநாடு ஒப்புதல் கொடுத்த எளிய கணித முறைப் பாடங்கள் இன்றும் நம் கணிதப் பாடத்தில் படித்து வருகிறோம்.
பின்னர் இரண்டாவது சர்வதேச கணித மாநாடு 1900ம் ஆண்டு பாரீஸில் நடைபெற்றத. இந்த மாநாட்டின்போது டேவிட் ஹில்பர்ட் என்ற ஜெர்மன் நாட்டு கணிதவியலாளர் புகழ்பெற்ற தீர்க்கப்படாத 3 கணக்குகளுக்கு தீர்வு சொன்னார். அவர் சொன்ன தீர்வுகள்தான் நாம் இப்போது ஹில்பர்ட் சமன்பாடுகள் என்று படிக்கிறோம்.
கணிதத்தில் உலகளவில் சிறந்து விளங்கும் நபருக்கு இந்த மாநாடு பீல்ட்ஸ் மெடல் என்ற விருதை வழங்குகிறது.இப்பரிசுதான் கணிதத்தின் நோபல் என்று கருதப்படுகிறது. நாற்பது வயதுக்கு உட்பட்ட, இரண்டு, மூன்று அல்லது நான்கு கணிதவியலாளர்களுக்கு அளிக்கப்படும் இந்த விருது கனேடியக் கணிதவியலாளரான ஜோன் சாள்ஸ் பீல்ட்ஸ் என்பவரால் 1924ம் ஆண்டு முன்மொழியப்பட்டதாகும். கனடாவிலுள்ள டொராண்டோவில் 1924ல் பன்னாட்டு கணித மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் தலைவராக இருந்தவர் பீல்ட்ஸ். மாநாட்டை நடத்துவதற்காக சேகரிக்கப்பட்ட பணத்தில் செலவு போக மீதமிருந்ததை கணிதத்தில் உலகம் போற்றும் சாதனை செய்தவர்களுக்கு ஒரு பரிசு கொடுப்பதற்காக இருக்கட்டும் என்று நன்கொடையாக கொடுத்தார். அவர் இறந்த பிறகு 1932ம் ஆண்டு ஜூரிக்கில் கூடிய மாநாட்டில் அந்த நன்கொடை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
முதல் இரண்டு மெடல்கள் 1936ம் ஆண்டு ஆஸ்லோ மாநாட்டில் கொடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு <உலகப்போரினால், மாநாடு நடத்த முடியாமல் போனது. அதற்கடுத்த மாநாடு 1950ம் ஆண்டுதான் நடந்தது. அதற்குப் பிறகு இந்த கணித மாநாடு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த விருதில் உள்ள இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், உலகக் கணிதவியலாளர்களெல்லாம் சேர்ந்து செயல்பட்டுக் கொடுக்கப்படும் பரிசு இது.
பீல்ட்ஸ் மெடல் என்ற பெயரில் இந்த விருது கொடுக்கப்பட்டாலும், மெடலில் பீல்ட்ஸ் என்ற பெயர் பொறிக்கப்படுவதில்லை.
உலகளவிலான மாநாடு 1897ம் ஆண்டு ஆரம்பித்தாலும், சிறந்த கணிதவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டார்களே தவிர, அவர்களுக்கு விருது மற்றும் மெடல் 1936ம் ஆண்டில் இருந்துதான் வழங்கப்பட்டு வந்தன.