Monday 3 September 2012

தாண்டியா வளர்க்கும் கலாசாரம்


உணவு, மொழி, உடை, பேச்சுவழக்கு போன்ற பல்வேறு விஷயங்களில் மனிதர்கள் பிரிந்துபட்டுக் கிடந்தாலும், இந்தியன் என்ற ஒற்றுமை உணர்வு நம்முள் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கத்தான் செய்கிறது. இந்த உணர்வுகளை வளர்க்க மிக உறுதுணையாய் இருப்பதில் இசைக்கும், நடனத்திற்கும் எப்போதும் மிக முக்கிய பங்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.
அந்த வகையில் தாண்டியா நடனம் வட இந்தியர்களின் பாரம்பரிய நடனம் என்றாலும், அந்த நடன அமைப்பு, உடையலங்காரம், ஆடும் விதம் ஆகியவை தென் இந்தியர்களையும் கவர்ந்து உள்ளது. அதனால்தான் தற்போது தமிழகத்தில் நடைபெறும் ஆடம்பர திருமண நிகழ்ச்சிகளில் தாண்டியாவும் மிக முக்கிய அங்கமாக இருக்கிறது. தாண்டியா நடனம் குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய நடனம் ஆகும். ஆண்டுதோறும் வரும் நவராத்திரி பண்டிகையில் துர்க்கையின் புகழ்பாடி பக்தர்கள் இரண்டு கைகளிலும் குச்சிகளை வைத்துக்கொண்டு, இசைக்குத் தகுந்தவாறு ஆடுவார்கள். இப்படித்தான் தாண்டியா நடனம் மக்களிடையே பரவ ஆரம்பித்தது. ஆனால், நாளடைவில் கலாசார மாறுதல்களுக்குத் தகுந்தவாறு இந்த நடனம் மக்கள் மகிழ்வான தருணங்களில் ஒன்று கூடும் இடங்களில் இந்த நடனம் பார்வையாளர்களின் கவனத்தை கவருவதற்காகவும், மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் வகையிலும் இந்த நடனம் தற்போது ஆடப்பட்டு வருகிறது. பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சியை கொண்டாடும் வகையிலும் இந்த நடனம் தற்போது ஆடப்பட்டு வந்தாலும், அந்த நடனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் இருக்கத்தான் செய்கிறது.
வட குஜராத் மட்டுமல்லாமல் வட இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படும் இந்த தாண்டியா நடனம், தமிழகத்தின் பழங்கால கோலாட்டத்தில் இருந்து வந்ததுதான் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். தமிழக கேரள எல்லை வனப்பகுதியில் வசித்து வந்தவர்கள்தான் காணிக்காரர்கள் எனும் பழங்குடியின மக்கள். இன்னமும் இவர்கள் வனப்பகுதியில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. காணிக்காரர்கள் சமூகத்தில் தலைவரை மூட்டுக்காணி என்று அழைப்பார்கள். ஓணம் பண்டிகையின் போது, இவர்கள் ஊர் பொதுவிடத்தில் பிரம்மாண்டமான கோலாட்டத்தை நடத்துவார்கள். ஒவ்வொருவர் கையிலும் நீண்ட குச்சிகள் இருக்கும். கண்டிப்பாக இந்தக் குச்சிகள் அனைத்தும் கொரண்டி, கன்னங்கயிஞ்சி, சீதவெற்றம் ஆகிய மரங்களின் கம்புகளாகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். அடர்நத காட்டுப் பகுதிகளில்தான் இந்த மரங்கள் வளரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மரத்தில்இருந்து பெறப்பட்ட குச்சிகளை வைத்து தட்டும்போதுதான் ஒலி அளவு அதிகமாக இருக்கும் என்பது அவர்களின் எண்ணம். இந்தக் குச்சிகள் மிகவும் பளபளப்பாக இருக்கும்.
காணிக்காரர்களின் கோலாட்டத்தின்போது, காடுகளின் செழிப்பு, சிறப்பு, இயற்கை, விலங்குகள் அவர்களின் குல தெய்வங்கள் என்பன பாடுபொருளாக இருக்கும். இப்படித்தான் கோலாட்டம் தொடக்கக் காலத்தில் இருந்தது. காணிக்காரர்களின் சமூக மக்கள் அனைவரும் கூட்டமாக சேர்ந்து ஆடிப்பாடி மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் இந்த நிகழ்வு பல்வேறு தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்ததால், கோலாட்டம் மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது. காணிக்காரர்கள் மட்டுமே ஆடிவந்த கோலாட்டம் அடுத்ததாக பல்வேறு சமூக மக்களாலும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், பிற சமூக மக்கள் கோலாட்டத்தை புராணங்கள், இதிகாசங்களை பாடுபொருளாக வைத்து அமைத்தார்கள். தற்போது தமிழகத்தில் கிருஷ்ணர் பிறந்த நாளன்று சமயச் சடங்காகவும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இக்கலையை திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே நிகழ்த்தி வந்தனர். தொடக்கத்தில் மெதுவாக தொடங்கும் இசையும் ஆட்டமும், உச்சத்தை நெருங்கும்போது மிக வேகமான ஆட்டமும், இசையும் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இக்கலை சிற்சில வேறுபாடுகளுடன் வட மாநிலங்களில் தாண்டியா என்ற பெயரில் தற்போது நிகழ்த்தப்படுகிறது.
கோலாட்டத்தில் ஒற்றைக் கம்பால் அடித்து ஆடுவது, இரட்டை கம்பால் அடித்து ஆடுவது என கோலாட்டத்தில் இரண்டு வகைக் கலையாடல்கள் உள்ளன. அதேபோல பின்னல் கோலாட்டம், கோலாட்டக் கும்மி, கோலாட்டம் என மூன்று வகையான கலையாடல்கள் தமிழகத்தில் நிகழ்த்தப்படுகின்றன.
கோலாட்டம் வந்ததற்கு புராணக்கதை ஒன்றும் கூறப்படுகிறது. தேவர் உலகம் போர்க்களமாக மாறிக்கிடக்கிறது. தேவர்களை அழித்து ஒழிப்பது மட்டும்தான் தன் பிறப்பின் லட்சியம் என்ற உறுதியோடு போரிடுகிறான் பந்தாசுரன் என்ற கொடூர அரக்கன். பந்தாசுரனை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற நோக்கோடு களத்தில் போரிடுகிறார்கள் தேவர்கள். இந்தப் போரில் தேவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதர்காக பார்வதியம்மை ஒன்பது நாட்கள் கடும் தவம் புரிந்தாள். கடும் தவத்தால் பார்வதியின் பொலிவான முகம் அழகொழிந்து கருமை நிறமாக மாறிவிடுகிறது. அதிர்ந்துபோன சிவபெருமான் பல முயற்சிகளை மேற்கொண்டும் கருமைநிறம் களையவில்லை. பார்வதியின் தோழிகள் வருத்தமுற்று, நந்திதேவனை வணங்கி அவர் முன் கழிகளை ஆட்டியும், அடித்தும் நடனமாடினர். அவ்வாறு அவர்கள் ஆடிக்கொண்டிருக்கும்போதே பார்வதியின் முகத்தில் படர்ந்திருந்த கருமை அழிந்து பழைய பொலிவு முகத்தில் கூடி வந்ததாக கோலாட்டத்தின் பெருமை சொல்லப்படுகிறது.
இதே கதையின் பின்புலம்தான் தாண்டியா நடனத்திலும் சொல்லப்படுகிறது. மொத்தத்தில் தாண்டியா தமிழக கலையில் மறுபிம்பம் என்று சொல்வதை நாம் பெருமை பட்டுக்கொள்ளலாம். மக்களை மகிழ்விப்பதற்காகவும், உறவுகளையும், சகோதரத்துவத்தையும் ஒரு நடனம் வளர்க்கிறது என்றால், அந்த நடனத்தை நாம் கொண்டாடித்தானே ஆகவேண்டும். அந்த வகையில் தாண்டியா இந்திய கலாசார அடையாளங்களில்  என்றும் ஒரு மைல்கல்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

No comments:

Post a Comment