Friday, 13 February 2015

பழையனூர் நீலி - part 2

நீலன், நீலியின் குட்டு வெளிப்பட்டதும், அந்த பேய்க் குழந்தைகளை வீட்டில் வைத்துக் கொள்ள பயந்த பெற்றோர், அவற்றை தொட்டிலோடு கொண்டு போய் ஒரு வேல மரத்தில் கட்டி விட்டு வந்துவிட்டார்கள். உடனே இரு குழந்தைகளும் மீண்டும் பழைய உருக் கொண்டன. இனியும் ஒன்றாக இருந்தால் பழிவாங்க முடியாது என்று எண்ணி, பிரிந்து செல்ல முடிவெடுத்தன. நீலன் அந்த வேல மரத்திலேயே தங்கி இருக்க, நீலி திருச்செங்கோடு சென்றுவிட்டாள்.
ஒருநாள் பழையனூரில் உள்ள வேளாளர்கள் உழவிற்கு கலப்பை மரம் தேவைப்பட்டதால், செழிப்பான அந்த வேல மரத்தை வெட்டிக் கொண்டு போய்விட்டார்கள். இப்போது நீலனுக்கு இருந்த வீடும் போய்விட்டது. அந்த ஆத்திரத்தில் அலைந்துகொண்டிருந்த நீலன் அவ்வழியாக வந்த திருவாலங்காட்டு கோவில் குருக்களை அடி பின்னிவிட்டான். இது குறித்து குருக்கள் சிவனிடம் முறையிட, சிவன் தனது கணங்களில் ஒன்றை அனுப்பி நீலனின் கதையை முடித்துவிட்டார்.
இதை அறிந்ததும் அலறி அடித்து ஓடிவந்த நீலி, தனது சகோதரன் சாவிற்கு காரணமான வேளாளர்களையும் பழிதீர்ப்பேன் என சபதமேற்றாள். தக்க தருணத்திற்காக திருவாலங்காட்டிலேயே காத்திருந்தாள்.
இந்த சமயத்தில் தான் காஞ்சியில் இருந்த தரிசனனுக்கு திடீரென பழையனூர் சென்று வியாபாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மந்திரக் கத்தி இருக்கும் தைரியத்தில், யார் தடுத்தும் கேளாமல் கிளம்பிவிட்டான். தரிசனன் திருவாலங்காட்டை அடைந்ததும் அவனை நீலி பார்த்துவிட்டது. உடனே கால் கேர்ளாக மாறி வந்து 'சிறப்பு செஞ்சுட்டு போங்க' என்று அழைத்தாள். ஆனால் தரிசனன் இதற்கெல்லாம் மசியவில்லை. மந்திரக் கத்தி வேறு இருந்ததால் அவனை நீலியால் நெருங்கவும் முடியவில்லை.
நீலியின் அடுத்தடுத்த அட்டெம்டுகளும் தோல்வியிலேயே முடிந்தன. உடனே நீலி பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தாள். தரிசனனின் மனைவியைப் போல் உருமாறி, ஒரு பெரிய கள்ளிக் கட்டையை எடுத்து குழந்தையாக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு தலைவிரிகோலமாக பஞ்சாயத்தை கூட்டிவிட்டாள். தன் கணவர் தன்னை பிரிந்து செல்ல நினைக்கிறார், நீங்கள் தான் சேர்த்து வைக்க வேண்டும் என்று உருக்கமாக கண்ணீர் விட்டாள். தரிசனன் எவ்வளவு சொல்லியும் எடுபடவில்லை.
என் கணவர் ரொம்ப கோபக்காரர், நான் பஞ்சாயத்தை கூட்டியதால் என்னைக் கொன்றாலும் கொன்றுவிடுவார். அவர் கையில் உள்ள கத்தியையும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றாள். தரிசனனுக்கு உதறல் எடுத்தது. அய்யா, சாமி இது பேய். என்னைக் கொல்ல வந்திருக்கிறது என்று வாதாடியும் எந்த பயனும் இல்லை.
தரிசனரே, தைரியமாக போங்கள். ஒருவேளை உங்கள் உயிருக்கு ஆபத்து வந்தால், இங்கு பஞ்சாயத்தில் அமர்ந்திருக்கும் நாங்கள் 70 வேளாளர்களும் அப்போதே உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று அருகில் உள்ள சாட்சிபூதேஸ்வரர் கோவிலில் வைத்து சத்தியம் செய்துகொடுத்தனர்.
அப்புறம் என்ன, நீலி தரிசனனின் கதையை முடித்துவிட்டாள். இதை அறிந்த வேளாளர்களும் சாட்சிபூதேஸவரர் ஆலயம் முன்பு தீக்குளித்து தங்கள் வாக்கை காப்பாற்றி விட்டனர். நீலி தன் குழந்தையை காலால் மிதித்து கொன்றதாகவும் கூறப்படுகிறது. இதுதான் பழையனூர் நீலியின் கதை.
விசாரித்துப் பார்த்ததில் சாட்சிபூதேஸ்வரர் கோவில், வேளாளர்கள் தீக்குளித்த இடம் , நீலி குழந்தையை காலால் மிதித்த இடம் எல்லாம் இன்றும் இருப்பதாகச் சொன்னார்கள். விசாரித்துப் போய் சாட்சிபூதேஸ்வரரை பார்த்துவிட்டேன். பழங்கால சிறிய சிவாலயம். ஆங்காங்கே சிதலமடைந்திருக்கிறது. எதிரிலேயே தீக்குளிப்பு மண்டபம் இருக்கிறது. வேளாளர்கள் தீக்குளிப்பது போன்ற சிலையை செய்து வைத்திருக்கிறார்கள்.
அடுத்து நீலி குழந்தையை கொன்ற இடம் எங்கே என்று விசாரித்தேன். அதுதான் நீலி கோவில் என்றார்கள். ஏதோ கோவில் இருக்கும் என்று தேடி அலைந்தவனுக்கு மெயின் ரோட்டின் ஒரு ஓரத்தில் சிறிய சமாதி போன்ற தொட்டி ஒன்றைக் காட்டினார்கள். குப்பைகள் மலிந்து குப்பைத் தொட்டி போன்றே இருக்கிறது. இதற்கு காரணமானவர்களை பழையனூர் நீலி நிச்சயம் பழிவாங்காமல் விடமாட்டாள் பீ... கேர்ஃபுல்...

பழையனூர் நீலி - part 1

அன்றைய காஞ்சி மாநகரில் புவனபதி என்று ஒரு அந்தணர் இருந்தார். சிறிது காலம் இல்லறம் நடத்திய அவர் புனித யாத்திரை செல்லத் திட்டமிட்டார். அதனையடுத்து காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை வழிபட்டு கொஞ்ச காலம் அங்கேயே தங்கியிருந்தார். அங்கிருந்த சத்தியஞானி என்பவர் நம்ம புவனபதியை ஒருநாள் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார். விருந்துக்கு போன இடத்தில் நம்மாள் விருந்து கொடுத்தவரின் மகள் நவக்கியானியின் மனதை மயக்கி கல்யாணமும் செய்துகொண்டார். தனக்கு காஞ்சிபுரத்தில் ஒரு குடும்பம் இருப்பதைப் பற்றி மூச்சுகூட விடவில்லை.

சிறிது காலம் கழித்து ஊர் ஞாபகம் வரவே காஞ்சிக்கு புறப்பட்டார் புவனபதி. நவக்கியானி நானும் வர்ரேன் என அடம்பிடிக்க வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டார் புவனபதி. போதாக் குறைக்கு நவக்கியானியின் சகோதரன் சிவக்கியானியும் கூட கிளம்பிவிட்டான். சொந்த ஊர் நெருங்க நெருங்க புவனபதிக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது.

ஒரு மாலைப் பொழுது திருவாலங்காட்டை அடைந்த அவர்கள் அங்கேயே இரவு தங்க முடிவு செய்தனர். அப்போதுதான் புவனபதிக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றியது. குடிப்பதற்கு தண்ணீர் கொண்டுவருமாறு கூறி மைத்துனனை அனுப்பிவிட்டு, இரண்டாவது மனைவியின் கழுத்தை நெறித்து பரலோகம் அனுப்பிவிட்டார் நம்மாள். அடுத்து ஊரைப் பார்த்து ஓட்டம்பிடித்தார்.

தண்ணீருடன் வந்த அண்ணன், தங்கை இறந்துகிடப்பதைப் பார்த்து துடித்தான். பக்கத்தில் இருந்த புளிய மரத்தில் தூக்குப் போட்டு தானும் இறந்துவிட்டான். அவர்கள் இருவரும் நீலன், நீலி என்ற பேய்களாக அந்த ஆலங்காட்டையே சுற்றி சுற்றி வந்தனர்.

ஒரு பிறவி முடிந்தது. அடுத்த பிறவியில் புவனபதி வைசிய குலத்தில் தரிசனன் என்ற பெயரில் பிறந்தான். அவனது ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர்கள், இவனைப் பழிவாங்க வடக்கில் ஒரு பேய் காத்துக் கொண்டிருப்பதாக எச்சரித்தார்கள். அந்த பேயிடம் இருந்து தப்பிக்க மந்திரித்த கத்தி ஒன்றையும் கொடுத்தனர். முடிந்தவரை வடக்கு பக்கமாக போவதை தவிர்க்குமாறும் அறிவுரை கூறினர்.

தரிசனனுக்கு உரிய வயது வந்ததும் காஞ்சிபுரத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. தரிசனனின் அப்பா சாவதற்கு முன், அவனுக்கு இருக்கும் ஆபத்தைப் பற்றி விளக்கி அந்த மந்திரக் கத்தியையும் கொடுத்துவிட்டு மண்டையைப் போட்டார்.

இது இப்படி இருக்க நீலனும், நீலியும் திருவாலங்காட்டில் ஒரு தம்பதிக்கு குழந்தைகளாகப் பிறந்தனர். இருவரும் பகலில் தொட்டிலில் படுத்து உறங்குவார்கள். இரவானதும் பேயாகி ஆடு, மாடுகளை கொன்று ரத்தத்தைக் குடிப்பார்கள். ஊரில் இருந்து ஆடு, மாடுகள் மர்மமான முறையில் இறப்பதைக் கண்ட ஊர்காரர்கள் ஒரு நாள் இரவு மறைந்திருந்து பார்த்தபோது நீலன், நீலியின் குட்டு வெளிப்பட்டு விட்டது.....

மீதி அடுத்த பதிவில்.

சீனப் பெருஞ்சுவர் உருவான வரலாறு . . .

சீனப் பெருஞ்சுவர் உருவான வரலாறு . . .
உலக அதிசயங்களில் ஒரே ஒரு அதிசயத்திற்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. விண்ணிலிருந்து பார்த்தால்கூட அந்த அதிசயம் கண்களுக்கு தெரியும் என்பதுதான் அந்த சிறப்பு. சீன வரைபடத்தில் இயற்கையே வரைந்த கோடுபோல் சுமார் 7500 கிலோமீட்டர் பரந்து விரிந்து கிடக்கும் சீனப் பெருஞ்சுவர்தான் அந்த சிறப்பைப் பெற்ற ஒரே உலக அதிசயம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் நமக்கு பிரமிப்பூட்டும் அந்த நீள் சுவர் உருவாவதற்கு காரணமாக இருந்த சீன தேசத்துப் பெருமன்னனைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். சீனப் பெருஞ்சுவரை மட்டுமல்ல பல சிற்றரசுகளாக சிதறிக் கிடந்த சீனப் பெருநிலத்தை ஒருங்கினைத்து ஒன்றுபட்ட சீனாவாகவும் உலகுக்குத் தந்த அந்த மன்னனின் பெயர் ஷி ஹூவாங்டி (Shi Huangdi).
உலக வரலாற்றில் ஷி ஹூவாங்டி என்ற மன்னனின் முக்கியத்துவத்தை நாம் முழுமையாக அறிய வேண்டுமென்றால் சீனாவின் வரலாற்றுப் பின்னனியை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். கி.மு 259-ஆம் ஆண்டு சீனாவில் பிறந்தார் ஷி ஹூவாங்டி. அவர் பிறப்பதற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சீனாவை Zhao மன்னர்கள் ஆண்டு வந்தனர். ஆயிரம் ஆண்டு காலமாக நடந்த அந்த மன்னர்களின் ஆட்சி சிறிது சிறிதாக வலுகுன்றி சீனா நிறைய சிற்றரசுகளாக சிதறுண்டு கிடந்தது. சிற்றரசர்கள் அடிக்கடி தங்களுக்குள்ளாகவே போரிட்டு வந்தனர். அதன் காரணமாக சில சிற்றரசுகள் இருந்த இடம் தெரியாமல் போயின. அனைத்து சிற்றரசுகளிலும் பலம் பொருந்தியதாக விளங்கியது சின் (Qin) அரசு. அந்த அரச வம்சத்தில்தான் பிறந்தவர்தான் செங் (Zheng) என்ற ஷி ஹூவாங்டி.
ஷி ஹூவாங்டி பதின்மூன்றாவது வயதிலேயே அரியனை ஏறினார். ஆனால் 21-ஆவது வயதில்தான் ஆட்சியின் முழு அதிகாரமும் அவர் கைகளுக்கு வந்தது. மிகச்சிறந்த அறிவாளியாக இருந்த இளவரசர் செங் தகுதி வாய்ந்த தளபதிகளை தேர்ந்தெடுத்து தன் படை வலிமையைப் பெருக்கினார். ஏற்கனவே வலிமை குன்றியிருந்த எஞ்சிய சிற்றரசுகள் மீது படையெடுத்து அவற்றை ஒவ்வொன்றாக கைப்பற்றத் தொடங்கினார். சீனாவின் ஆக கடைசி சிற்றரசு கி.மு.221-ஆம் ஆண்டு அவர் வசமாகி ஒட்டுமொத்த சீனாவும் அவரது ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது அவருக்கு வயது 38-தான் ஆனது. அந்த சமயத்தில் அவர் தனக்கு சூட்டிக்கொண்ட பெயர்தான் ஷி ஹூவாங்டி 'முதல் பேரரசர்' என்பது அதன் பொருள். ஒட்டுமொத்த சீனாவும் தனது ஆளுமையின் கீழ் வந்ததும் அவர் உடனடியாக பல அதிரடி மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் செயல்படுத்தத் தொடங்கினார்.
ஒற்றுமையின்மைதான் சீனா சிதறுண்டு கிடந்ததற்கு காரணம் என்பதை உணர்ந்த அவர் 'பியூடல் சிஸ்டம்' எனப்படும் பிரபுத்துவ அரசு முறையை முற்றாக ஒழித்தார். சீனாவை மொத்தம் 36 மாநிலங்களாக பிரித்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநரை நியமித்தார். அதுமட்டுமல்ல ஒரே பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஆளுநராக இருந்த முறையையும் ஒழித்தார். ஆளுநர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதையும், அதிக செல்வாக்கை உருவாக்கிக் கொள்வதையும் தவிர்க்க அவர்களை சில ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு மாநிலமாக மாற்றினார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநரோடு ஓர் இராணுவ தலைவரையும் நியமித்தார். அனைவருமே மன்னரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்டவர்கள்தான்.
அவர் அறிமுகம் செய்த அந்த மாற்றங்களால் சீனா ஒற்றுமை உணர்வோடு வலுப்பெறத் தொடங்கியது. நாடு முழுவதும் நல்ல சாலைகள் அமைக்கப்பட்டன. எந்த மாநிலத்திலாவது கலகமோ, உட்பூசலோ நேர்ந்தால் உடனடியாக அந்தப் பகுதிக்கு மத்திய அரசின் இராணுவத்தை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அரசியல் மற்றும் இராணுவ மாற்றங்களோடு வர்த்தகத்திலும் மாற்றங்களை கொண்டு வந்தார் ஷி ஹூவாங்டி. பொருட்களை அளக்கும் கருவிகளையும், அளவை முறைகளையும் ஒருங்கினைத்தார். நாடு முழுவதும் பொதுவான நாணய முறையை அறிமுகப்படுத்தினார். சாலைகள் மற்றும் கால்வாய்களின் கட்டுமானத்தை நேரடியாக மேற்பார்வையிட்டார். சீனா முழுவதற்கும் ஒருங்கினைந்த சட்டத்தை அறிமுகம் செய்ததோடு எழுத்து வடிவத்தையும் சீராக்கினார்.
இவ்வுளவு சிறப்பான செயல்களை செய்தும், வரலாற்றின் பழிச்சொல்லை சம்பாதிக்கும் ஒரு செயலையும் செய்தார் ஷி ஹூவாங்டி. கி.மு 213-ஆம் ஆண்டு அவர் வேளாண்மை, மருத்துவம் போன்ற முக்கியத்துறை சம்பந்தபட்டவற்றை தவிர்த்து சீனாவில் உள்ள மற்ற நூல்கள் அனைத்தையும் எரித்துவிடும்படி கட்டளையிட்டார். அதற்கு ஒரு முக்கிய காரணம் 'கன்பூசியஸ் சித்தாந்தம்' உட்பட போட்டி சித்தாங்கள் அனைத்தையும் அவர் அழிக்க நினைத்துதான். ஆனால் எல்லா நூல்களையும் அழித்துவிடாமல் தடை செய்யப்பட்ட நூல்களின் சில பிரதிகளை அரசவை நூலகத்தில் வைக்குமாறு உத்தரவிட்டார். சீனாவின் தென்பகுதியில் படையெடுத்து பல பகுதிகளை கைப்பற்றி சீனாவுடன் இணைத்துக்கொண்டார் ஷி ஹுவாங்டி.
வடக்கிலும், மேற்கிலும் பல பகுதிகளை கைப்பற்றினாலும் அந்தப் பகுதிகளை முழுமையாக அவரது ஆட்சிக்கு கீழ் கொண்டு வர முடியவில்லை. Zhao மன்னர்கள் ஆட்சிக்காலத்திலேயே வடக்குப் பிரதேசங்களிலிருந்து சீனாவுக்குள் அடிக்கடி நுழைந்து தாக்குதல்களை நடத்தி வந்தனர் சிங் நு (Xiongnu) இன மக்கள். அந்த தாக்குதலை தடுத்து நிறுத்த சீன எல்லை நெடுகிலும் சிறிய, சிறிய சுவர்களை அமைக்கத் தொடங்கினர் சீனர்கள். அப்படி சிறு சிறு சுவர்களாக இருந்ததை இணைத்து ஷி ஹூவாங்டி அமைக்கத் தொடங்கியதுதான் மிக நீண்ட சீனப் பெருஞ்சுவர் ஆனது. சீனப் பெருஞ்சுவரை கட்டுவதற்காகவும், போர் செலவுகளுக்காகவும் பொதுமக்கள் மீது கடுமையான வரிகளை விதித்தார் ஷி ஹூவாங்டி. அதனால் அவரை மக்கள் வெறுக்கத் தொடங்கினர். அவர் மீது கொலை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் அவற்றுக்கெல்லாம் ஈடுகொடுத்து வந்த ஷி ஹூவாங்டி கி.மு.210-ஆம் ஆண்டில் தனது 49-ஆவது வயதில் இயற்கையாகவே காலமானார். அவர் கல்லைறையைச் சுற்றி மிக விமரிசையாக ஆறாயிரம் டெரகோட்டா (Terracotta Army) களிமண் வீரர்களின் சிற்பங்கள் புதைக்கப்பட்டன. மரணத்திற்கு பிறகும் அவருக்கு சேவை புரிய அந்த சிற்பங்கள் உதவும் என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்யப்பட்டது.
சீன வரலாற்றில் ஷி ஹூவாங்டி என்ற மன்னன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப்பெரியது. அவர் மறைந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் அவர் உருவாக்கித்தந்த அரசாட்சி முறையும், சட்ட முறையும்தான் நவீன சீனாவுக்கு அடிப்படையாக விளங்குகின்றன. மன்னன் ஷி ஹூவாங்டியின் 'சின்' பேரரசின் ஆட்சி பலம் பொருந்தியதாக இருந்ததால்தான் அதன் பெயரிலேயே அந்த தேசம் சீனா என்றழைக்கப்படுகிறது. புத்தகங்களை எரித்ததிலும், போட்டி சித்தாந்தங்களை அழிக்க நினைத்ததிலும் மன்னன் ஷி ஹூவாங்டி தவறு செய்திருந்தாலும், சீன வரலாற்றில் அவரது ஒட்டுமொத்த பங்களிப்பை எவராலும் மறுக்க முடியாது.
பாதுகாப்புக்காகவும், எதிரிகளை அண்ட விடாமல் தடுப்பதற்காகவும் கட்டப்படத் தொடங்கிய ஓர் உன்னத கட்டுமான அதிசயம்தான் சீனப் பெருஞ்சுவர். இன்றும் சீனாவின் செல்வாக்கை அது உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த உலக அதிசயத்தையும், அதற்கு ஒத்த ஓர் அதிசய ஆட்சி முறையையும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வழங்க மன்னன் ஷி ஹூவாங்டிற்கு உறுதுணையாக இருந்த பண்புகள் ஆராய்ந்து முடிவு எடுக்கும் அறிவும், முடிவெடுத்து அதனை அச்சமின்றி செயல்படுத்தும் திறனும், எதிரிகளை திணறடிக்கும் தைரியமும், ஒற்றுமையே பலம் என்ற அவரது நம்பிக்கையும்தான்.

திருச்சி மலைக் கோட்டை

திருச்சி மலைக் கோட்டை இமாலய மலையைவிட அதிக பழமையானது . (Rock fort,Trichy )
திருச்சி மலைக் கோட்டை , திருச்சிராப்பள்ளியின் அடையாளமாகவே விளங்குகிறது. ஒரு மலையைச் சுற்றி கோட்டை அமைந்துள்ளதால் மலைக் கோட்டை என்று அழைக்கப்படும் இது காவிரி ஆற்றின் தென்கரையோரம் அழகிய தோற்றத்துடன் கம்பீரமாய் காட்சியளிக்கிறது. திருச்சி பல இடங்களில் இருந்து இந்தக் கோட்டையின் அழகை கண்டுகளிக்கலாம்.
இந்த மலையில் மொத்தம் மூன்று கோவில்கள் உள்ளன. மலையின் கீழே ஒரு கோவில், நடுவே ஒரு கோவில், உச்சியில் ஒரு கோவில் என மூன்று பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் கோவில், நடுவில் தாயுமானவர் கோவில், மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோவில் என்பதே அந்த மூன்று கோவில்களாகும். பல்லவர்கள் காலத்தில் தான் இந்தக் கோவில்கள் கட்டப்பட்டது, இங்கு உள்ள கோட்டை நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இந்த மூன்றைத் தவிர பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட குடவரை கோவிலும், பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட குடவரை கோவிலும் உள்ளன. பெரிய மலைகளை குடைந்து அமைக்கப்பட்ட கோவில்களே குடவரைக்கோவில்கள் எனப்படும்.
இந்த மலை மொத்தம் 83 மீ உயரம் கொண்டது, மிகவும் பழமை வாய்ந்தது. ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளின் படி இந்த மலை 3.8 மில்லியன் வருடங்கள் பழமையானது என்று கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இந்தியாவின் வடக்கே இருக்கும் இமாலய மலையைவிட அதிக பழமையானது. குவார்ட்ஸ், பெல்ஸ்பார் போன்ற அரிய வகை தாதுக்கள் இந்த மலையில் கிடைக்கின்றன. உலகத்திலேயே சுற்றுலா இடமாக கருதப்படும் மலைகளில் இதுவே மிக உயரமானதாகவும், பெரிதாகவும் கருதப்படுகிறது.
இந்த மலையின் உச்சியில் அடைய மொத்தம் 437 படிகளைக் கடக்க வேண்டும். மூச்சிறைக்க ஏறிய பின் திருச்சியின் அழகையும், காவிரி ஆற்றையும் கண்டு களிக்கலாம
17ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் கட்டப்பட்ட அரண்மனை ஒன்றும் மலை அடிவாரத்தில் காணப்படுகிறது. இப்போது அந்த அரண்மனை ராணி மங்கம்மாள் மஹால் என்று அழைக்கப்டுகிறது. இந்த அரண்மனை சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்டது. சில காலம் மதுரையை ஆண்ட நாயக்கர்களால் அரசவையாகவும் பயன்படுத்தப்பட்டது. இப்போது இந்த அரண்மனை அரசு அருங்காட்சியமாக செயல்படுகிறது.
மலை, கோட்டை, குளம், அரண்மனை, கோவில்கள் என இவை அனைத்தையும் ஒருங்கினைக்கும் வகையில் மேற்குப் பகுதியில் ஒரு பெரிய கதவு ஒன்றும் உள்ளது.
இந்தக் கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளைச் சந்தித்திருக்கிறது. இந்தக் கோட்டை நாயக்கர்கள், பிஜப்பூர், கர்னாடக மற்றும் மராட்டிய படைகளின் போரை கண்டு களித்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயருக்கும் உதவியாக இருந்துள்ளது. இது போன்று நாயக்கர்கள் காலத்திலும், நவாப்கள் காலத்திலும், ஆங்கிலேயர் ஆட்சியிலும் பல போர்களில் இந்தக் கோட்டையும் பங்கெடுத்துள்ளது.

பெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] எத்தனை மர்மங்கள்! ஏன்?

பெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] எத்தனை மர்மங்கள்!
ஏன்?
இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொன்றும் ஆச்சர்யத்தின் கட்டமைப்பில் சூழப்பட்டது தான், சிலவிசயங்கள் நமக்கு புலப்பட்டலாம், இன்னும் நம்மால் அறிய முடியாத மர்மங்கள் நம் கண் முன்னே ஏராளம் ஏராளம்!, தற்பொழுது அறியமுடியவில்லையே என்பதற்காக அது என்றுமே அறியமுடியாத விசயமாக கருத முடியாது, இன்று நம்மால் வெகு எளிமையாக விளக்கமுடியும் பல விசயங்கள் ஒரு காலத்தில் சாத்தியமேயில்லை என்று பலரால் கைவிடப்பட்டது தான், அதில் இன்றும் விவாத பொருளாக இருப்பது பெர்முடா முக்கோணம்!
வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு, அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு சூட்டியுள்ள பெயர் தான் பெர்முடா முக்கோணம். அவை இன்று தான் இப்படியா அல்லது பலநூறு ஆண்டுகளாக இப்படி தானா என ஆராய்ந்தால், அதன் செயல் பல நூறு ஆண்டுகளாக மர்மமாக தான் இருக்கின்றது என தெரிகிறது, விமானம் கண்டுபிடிப்பதற்கு முன் கடல் வழி போக்குவரத்து தான் தொலைதூர பயணத்திற்கு உதவியது!, இயற்கை சீற்றங்கள் மற்றும் கடற்கொள்ளையர்களால் அவை அழிக்கப்பட்டிருப்பின் அச்செய்தி அக்காலத்தில் யாருக்கே தெரியாமல் அந்த கப்பலுடனே புதைந்தது!, ஆனால் பெர்முடாவின் மர்மங்கள் தெரிய வந்த போது…………

கப்பல்கள் சரியாக பெர்முடா முக்கோண பகுதியில் வரும் போது மர்மமான முறையில் மூழ்குவது பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது, பல வருட ஆராய்ச்சிக்கு பின் கடலுக்கடியில் இருக்கும் எரிமலையின் வெடிப்பின் காரணமாக ஏற்படும் பூகம்பமே அதற்கு காரணம் என அறியப்பட்டது, பூமி அதிர்வால் கடலில் ஏற்படும் அலைகள் சுனாமியை போன்று ராட்சசதனமாக இருக்கும், கவனிக்க இது கரை தொடவேண்டும் என்ற அவசியமில்லை, நடுகடலிலேயே அமைதியாகி விடலாம், அதனை “ரோக் வேவ்ஸ் (rock waves)” என்று அழைக்கிறார்கள், ஒரு சிறிய அலைக்கு பின் வரும் பெரிய அலை அதனுடன் சேர்ந்து ராட்சசஅலையாக உருவாகி பெரிய கப்பலை கூட கவிழ்ந்துவிடும்!,… கப்பலிலிருந்து தளத்திற்கு எந்த செய்தியும் வராதது அவர்களுக்கு இன்னொரு ஆச்சர்யம்!
சரி, கடல் மார்க்கமாக செல்லும் கப்பல்கள் காணாமல் போக, எரிமலை, பூகம்பம், ராட்சச அலை, கடல் நீரோட்டம் என பல காரணங்கள் இருக்கின்றன, ஆனால் வான் மார்க்கமாக செல்லும் விமானங்கள் எப்படி காணாமல் போகின்றன என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் இறங்கினர் விஞ்ஞானிகள்.
1945 ஆம் வருடம் அமெரிக்காவை சேர்ந்த F19 வகை போர் விமானங்கள் ஐந்து பெர்முடா முக்கோணத்தின் மீது பறந்தன, ரோந்து பணிக்காக கிழக்கு நோக்கி 1700 கிலோமீட்டர் வரை செல்லவது அவர்களது இலக்காக இருந்தது, கிளம்பிய 2 மணி நேர அளவில், ஐந்து விமானங்களும் தள கட்டுபாட்டில் இருந்து மறைந்தது, மொத்தமாக ஐந்து விமானங்களும் காணாமல் போயின!, நேரடியாக தளத்திற்கு தொடர்பு இல்லையென்றாலும் விமானிகள் தொடர்பு கொள்ள முயற்சித்திருப்பது தெரியவந்தது, அருகில் சென்று கொண்டிருந்த பெரிய கப்பல்கள் அவர்களை சிக்னலை ரிசீவ் செய்திருக்கிறார்கள், அவர்கள் செல்ல வேண்டிய திசையில் இருந்து மாறி ஐந்து விமானங்களும் வேறு திசையில் பறந்திருப்பது தெரியவந்தது!, அவர்கள் பெர்முடா முக்கோணத்தில் விழவில்லை, அருகில் இருக்கும் தீவுகளில் எதாவது ஒரு சதுப்புநிலகாடுகளில் விழந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் சொன்னாலும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை என்பது இன்னும் ஆச்சர்யம்!
சில வருங்கள் கழித்து புரூஸ் ஹெனன் என்ற விமானி சொன்ன தகவல்கள் பெர்முடா பற்றிய ஆச்சர்யத்தை மேலும் அதிகமாக்கியது,…. புரூஸ் மியாமியிலுருந்து பஹாமா வழியாக பூர்டோ ரிகா சென்று கொண்டு இருந்தார், அப்போது தீடிரென்று அவரை சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தது, ஒரு பெரும்புயலுக்கான அறிகுறிபோல் அது தோன்றியது, திசைகாட்டும் கருவி விடாமல் சுற்றி கொண்டே இருந்தது, நிச்சயமாக அவரால் சரியான திசையை கண்டறிய முடியாது, இருப்பினும் அவரது 15 வருட விமானம் ஓட்டும் அனுபவம் அவரை விடாமல் தப்பிக்க முயற்சிக்க வைத்தது, தொலைவில் மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற வழியை கண்டார், அதில் தெரிந்த ஒளி தப்பிக்க ஒரு நம்பிக்கையை அவருக்கு அளித்தது.
வேகமாக அந்த குகைக்குள் நுழைந்த மறுநொடி அவரது விமானத்துக்கு பின் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டது, அவருக்கு முன் கரிய நிற கோடுகள் வளையமாக நிறைய தோன்றின! கிட்டதட்ட 16 கிலோமீட்டர் தூரம் அந்த குகையை கடக்க அவர் பயணித்தாக கூறிகிறார், ஆனால் அதற்கு அவர் எடுத்து கொண்ட நேரம் வெறும் 20 நொடிகள் தான், அவரது விமானம் அதை கடக்க பொதுவாக எடுத்துக்கொள்ளும் நேரம் குறைந்தது மூன்று நிமிடங்கள், அது மட்டுமல்ல அங்கிருந்து வெளியேறிய பின்னரும் அவருக்கு ஆச்சர்யங்கள் காத்திருந்தது, மேகங்கள் சாதாரணமாக இல்லாமல் மஞ்சள் மற்றும் சாம்பல் வண்ணத்தில் காணப்பட்டது, பஹாமா அடைய அவர் கடந்த தூரம் 160 கிலோமீட்டர் ஆனால் அதற்கான நேரம் வெறும் மூன்று நிமிடங்கள், ஏறத்தாழ மணிக்கு 3200 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்திருக்கிறார் ஆனால் அவரது விமானத்தின் அதிகபட்ச வேகமே 300 கீலோமீட்டர்கள் தான் மணிக்கு!
எவ்வாறு இது சாத்தியமானது?
கப்பல்கள் காணாமல் போக ராட்சச அலைகள் மற்றும் பனாமா கால்வாயின் நீரோட்டம் காரணமாக இருக்கலாம் என கண்டறிந்த போதும், விமானம் காணாமல் போக என்ன காரணம் என்று வெகுநாட்கள் விஞ்ஞானிகள் குழப்பத்தில் இருந்தார்கள், திசைகாட்டி குழம்பியதின் காரணமாக அது சூரியனின் மின்காந்த அலைகளாக இருக்கலாம் என கருதினாலும் விமானம் காலத்தை குறுக்காக வென்றது எப்படி? அதில் தோன்றியது தான் வார்ம்ஹோல் எனும் சூத்திரம், காலத்தை வெல்ல அதில் எந்தளவு சாத்தியம் உண்டு என தெரியாவிட்டாலும், வார்ம்ஹோலின் உதவியால் தூரத்தில் இருக்கும் கிரகங்களுக்கு செல்வது சாத்தியம் என சமகால விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொல்கிறார்!
வார்ம்ஹோல் என்றால் என்ன என்று எளிமையாக சொல்ல பூமியில் இருக்கும் ஒரு உதாரணத்துடன் ஆரம்பிக்கிறேன்!, புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து பறவைகள் வானில் பறக்க இறக்கைகளை பயன்படுத்துகின்றன, ஆனால் சிலநேரம் அவை இறக்கைகளை அசைக்காமல் வெகு நேரம் பறந்து கொண்டிருக்கும் அது காற்றின் விசையை பயன்படுத்துகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள், அதே பாணியை பயன்படுத்தி தான் கிளைடர்கள் பறக்கின்றன, அதாவது இயற்கையில் இருக்கும் சக்தியை பயன்படுத்தி பெரிதாக திறன் செலவழிக்காமல் பலனடைவது, அதே போல் வார்ம்ஹோலையும் பயன்ப்படுத்தமுடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து! எளிமையாக கீழிருக்கும் படம் சொல்லும்!
இந்த பிரபஞ்சம் வளைந்துள்ளது என பல விஞ்ஞானிகளின் கருத்து, ஒரு வட்டத்தின் விளிம்பில் சுற்றி வருவது சாதாரணமாக நாம் நேராக பயணம் செய்வது, அதன் குறுக்கு வெட்டில் பயணம் செய்வது காலத்தையும், தூரத்தையும் வெல்லும் தந்திரம்!, பிரபஞ்சத்தில் இருக்கும் டார்க்மேட்டர், டார்க் எனர்ஜியை பொருளின் மீது செலுத்தும் போது பொருள் பயங்கர வேகத்துடன் உந்தப்படுகிறது, ஐன்ஸ்டீன் தியரிப்படி ஒளியைவிட வேகமாக செல்ல எதுவாலும் முடியாது, ஆனால் டார்க் எனர்ஜி அது சாத்தியம் என்கிறது, காரணம் பின்னிருந்து தள்ளும் அதே நேரத்தில் முன்பக்கமாக வேகமாக உறிஞ்சும் வேலையையும் அது செய்கிறது, ஒரே நேரத்தில் இருவிசையின் பயன்பாட்டுடன், பொருள் ஒளியின் வேகத்தை மிஞ்சமுடியும் என்கிறது விஞ்ஞானம்! ஆனால் ப்ளாக்ஹோலும், வார்ம்ஹோலும் ஒன்று தானா இல்லை தனிதனியா என்று இன்னும் முடிவுக்கு வரமுடியவில்லை, ஒருவேளை ஒன்றாக இருந்தால் உள்ளே செல்லும் நாம் வெளியேற முடியாது, சிறு சிறு துகள்களாகிவிடுவோம்!
விஞ்ஞானம் இறுதி வரை ஒரு செயலின் சாத்தியகூறூகளை ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறது, நமக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ தெரிந்து கொள்வதும், அதை கேள்விகுள்ளாக்குவதும் அடுத்த கட்ட விஞ்ஞான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்!

‎மேன்மக்கள்_தமிழ்மக்களே‬

#‎மேன்மக்கள்_தமிழ்மக்களே‬
அண்மையில் பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட (2000) கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார்.
18-12-2002 நாளன்று தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தி.
''நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.
இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான ''மெசபடோமியா’ (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது.
கிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ''தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்’ என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.
இந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர சங்க காலத்தைச் சார்ந்தது எனக் கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன ''ட” வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது.
இத்துடன் நீரில் சுமார் 25அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85அடி நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கியிருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.
இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த கிரஹாம் ஹான் காக். தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சார்ந்த ''சானல் 4” என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த ''லர்னிங் சானல்” என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். இந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன ''சைடு ஸ்கேன் சோனார்” என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை, கிரஹாம் ஹான் காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.
இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ''ஐஸ் ஏஜ்” எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.
இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.
சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார்.
மேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ''அண்டர்வேர்ல்ட்” என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.
மேலைநாட்டு வரலாற்று மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் பூம்புகாரின் பக்கம் திரும்பியுள்ள போது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பூம்புகார் பற்றித் தெரிந்து கொள்ள எந்த விருப்பமும் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. மூழ்கிப் போனது பூம்புகார் நகரம் மட்டுமல்ல. தற்போது இருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகரமும். அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளது. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகார். பண்டைக் காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் போற்றப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் பூம்புகார் பற்றி கோயில் கல்வெட்டுகள் பலவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஹான்காக்கின் ஆராய்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இத்தகைய வசதிகள் பூம்புகாரில் அவசியம் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
‪#‎பூம்புகார்‬ அகழ்வாய்வு தரும் செய்திகள்
1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.
2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.
3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.
4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)
5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.
6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.
7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.
8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.
9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.
10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.
11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.
12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.
13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
‪#‎ஆய்வுகளின்‬ நம்பகத் தன்மை:
1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.
2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.
3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.
4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.
6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.
7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.
‪#‎ஆய்வுகள்‬ குறித்த ஐயப்பாடுகள்:
1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.
2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.
3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.
4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.
6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.
7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.
8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.
9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.
10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.
11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.
13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.
14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.
15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.
16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.
17. பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.
18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).
19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.
(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)
இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.
ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.
ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.

உள்ளுணர்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ராஜாவின் எலும்புக்கூடு..!

உள்ளுணர்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ராஜாவின் எலும்புக்கூடு..!
சமீபத்தில் ஒரு ஹிந்தி திரைப்படம் அமீர்கானின் “தலாஷ்” பார்த்தேன் இதில் ஒரு முக்கியமான கட்டம் பொலிஸ் அதிகாரியான அமீர் தன்னிடம் ஆவி பேசியது என்பதை பின்னால் ஒரு கட்டத்தில் உணர்கிறார். அந்த ஆவி கொலையை கண்டுபிடிப்பதற்காக உதவிகள் செய்கிறது ?!!. ( படத்தின் திருப்பு முனையே இதுதான்.) அவரின் உள்ளுணர்வு தூண்டுதலில் இறந்தவரின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை தன்னிலை மறந்து தோண்டுவார். எலும்புக்கூடு கிடைக்கிறது அதன் கை விரலில் ஒரு மோதிரம் இறந்தவளினுடையது என்பது ஒரு ஆதாரம் குறியீடாக காட்டப்படுகிறது…
இதே போல் அல்ல இதுமாதிரி உள்ளுணர்வினால் இறந்த ராஜாவின் எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டது…நிஜத்தில் ஒரு சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
மிஸ் லேங்லே(Miss Langley) (Richard III Society )மூன்றாம் ரிச்சர்ட் சொசைட்டியில் ஒரு உறுப்பினர் அதோடு சேனல்-நான்கிற்காக ”மூன்றாம் ரிச்சர்ட்” பற்றிய ஒரு ஆவணப்படத்திற்காக சார்ட் தயாரித்து வந்தவர்.
இவர் தான் லிசெஸ்டர் கவுன்சில் கார் நிறுத்துமிடத்தில் (Leicester city council car park )ராஜாவின்(Richard III ) எலும்புக்கூட்டை கண்டுபிடித்தவர்.
சண்டே டைம்ஸ் க்கு அளித்த பேட்டியில் இப்படி சொல்கிறார்…
ஒரு மித வெப்பமான தினத்தில் (August 2009) லிசெஸ்டர் கவுன்சில் கார் நிறுத்துமிடத்தில் கடந்து செல்லும் போது எனக்குள் ஒரு உள்உணர்வு ஏற்பட்டது. என் மயிர் கால்கள் சிலிர்த்தன சில்லென்ற உணர்வு அந்த இடத்தை கடக்கும் போது எனக்கு ஏற்பட்டது. விவரிக்க முடியாத உணர்வு அது…அந்த இடத்தில் தான் போரில் இறந்த அரசர் ரிச்சர்டின் சமாதி இருப்பதாக உணர்ந்தேன்.
“நான் ஒரு அறிவார்ந்த மனித வர்க்கம் ஆனால் என் மூலமாக உண்மை உணர்த்தப்பட்டபோது எனக்கு விவரிக்க முடியாத உணர்வு ஏற்படுகிறது”
ரிச்சர்ட் III இங்கிலாந்தின் ”ஹவுஸ் ஆப் யார்கின்” கடைசி அரசர் வாழ்ந்த காலம் (1452 – 1485) .
”ரோஜாக்களின் போர் ”(யோர்க் மற்றும் லாண்செஸ்டர் வம்சங்களுக்கிடையேயான போர்) என வர்ணிக்கப்படும் சண்டையில் ஏழாம் ஹென்றியுடனான போரில் தலை கவசம் இழந்த மூன்றாம் ரிச்சர்ட் தலையில் பலத்த வெட்டு காயங்களும் மண்டை எலும்பு உடைந்த நிலையில் போஸ்வொர்த் களத்தில் மரணம் அடைந்தார்( ம்..32 வயதிலேயே !).
நிலத்தின் மூன்றடிக்குள் கிடைத்த மண்டையோடு மற்றும் எலும்புக்கூடுகள் இறந்த அரசனுடையதுதானா? என்பதற்கான சோதனையின் முதல் கட்ட ஆய்வில்…
எலும்புக்கூட்டின் நிலை அதாவது முகம் மற்றும் தலையில் எலும்புகள் உடைந்த நிலை,சண்டையில் உடைந்து வளைந்த முதுகு எலும்பு இவற்றை கொண்டு .( MRI scan)எம் ஆர் ஐ ஸ்கேன் மூலம் உறுதி படுத்தப்பட்டது. இரண்டு வேதியல் ஆய்வுகள் செய்யப்பட்டன.
”ரேடியோ கார்பன் ஆய்வில்” எலும்பின் காலம் கணிக்கப்பட்டது(1455 லிருந்து 1540க்குள்). அடுத்து மரபியல்( டிஎன் ஏ )சோதனைக்காக அந்த அரசனுடைய வழித்தோன்றல்களிடமிருந்து பெறப்பட்ட டிஎன் ஏ உடன் ஒப்பீடு செய்யப்பட்டது.
சேக்ஸ்பியரின்(Shakespeare) ”ரிச்சர்ட் III ” என்ற நாடகம் அவரால் 1592 ல் எழுதப்பட்டிருக்கலாம். இதில் ரிச்சர்டின் இறப்பு குறித்த தகவல்கள் உண்மைதான் என்பது இந்த கண்டுபிடிப்பின் படி உறுதியாகிறது !! என்கிறார்கள்.

Tuesday, 12 February 2013

அமானுஷ்யம்

ஒரே ஒரு அமானுஷ்யம்.பயந்த சுபாவம்
உள்ளவர்கள் படிக்க வேண்டாம்.

இடம்: நாகப்பட்டினத்து லாட்ஜ் . வருடம்: 1980.
அந்த லாட்ஜில் ஒரு வசதி உண்டு. ஒரு ரூ வாடகைக்கு
லாட்ஜ் வராந்தாவில் படுத்துக்கொள்ளலாம்.
ரெகுலர் வாடிக்கையாளராக இருந்தால் பாய் ,
தலையணையும் கொடுப்பார்கள். ஆனால்
விளக்கை அனைத்து விட்டுத்தான் படுக்கை
போடவேண்டும். வெளிச்சத்தில் தலகானியைப்

பார்த்து விட்டால் வயிற்றைக் குமட்டிக் கொண்டு
வரும்.இப்படியும் சில வாரங்கள் இருந்தேன்...

ஒரு நாள் இரவில் கேரளக் காரர் ஒருவர் `சார்
நீங்கள் என் அறையில் படுக்கலாம்` என்றார்.
ஓரளவுக்கு மறுத்துவிட்டு அப்புறம் உள்ளே
போய்விட்டேன்.அவர் கட்டிலில். நான் கீழே.
அவருடைய பழைய டிரங்குப் பெட்டி என் அருகே.
விளக்கு அணைக்கப்பட்டது.மனித நடமாட்டம்
இல்லை.கடல் ஓசை மட்டும் காதில் கேட்கிறது.

தூக்கம் வரவில்லை.அந்த அறையில் இரண்டு
பேர்தான் இருக்கிறோம்.ஆனால் வேறு யாரோ
மூச்சு விடுவது போல ஒரு உணர்வு. உணர்வுதான்.
சத்தம் இல்லை.கட்டிலில் இருப்பவர் கட்டையாய்
கிடக்கிறார். கிட்டே போய் பார்த்தேன். பெருமூச்சு
அவரிடம் இருந்து வெளிப்படவில்லை. பாம்பை
அந்தப் பெட்டியில் வைத்திருப்பாரோ என்ற
சந்தேகம். பாம்பு மூச்சு விட்டு நான் பார்த்ததில்லை.
தவிர மூச்சு பெட்டியில் இருந்து வரவில்லை.
மூச்சு கட்டிலின் கால் பக்கம் இருந்து வந்தது.

பயம் என்று சொல்லமுடியாது.அசௌகரியமான
சூழ்நிலை.சந்தேகம்.குழப்பம் என்று சொல்லலாம்.
எழுந்து வெளியே போவதும் கேவலமாக இருந்தது.
இரவு முழுதும் இப்படியே போனது. ..

காலையில் கோபாலன், அதான் கேரளாக்காரர்
கிணற்றடியில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார்.
ஏழெட்டு பேர் இருந்தார்கள்.எல்லோரும் நாம்
சொல்வதை செய்யக்கூடியவர்கள். `இவனைக்
கட்டுங்கடா` என்றேன். கேள்வியே இல்லை.
தூணில் கட்டி விட்டார்கள். `லுங்கியை அவுத்துடுங்க`
என்றேன். கோபாலன் கதறிவிட்டார `சார் என்னை
விட்டுடுங்க. நான் இங்க எந்த தப்பும் செய்யல` என்றார்
அவருடைய வாக்குமூலத்தை யாரும் பதிவு செய்யவில்லை.
லுங்கியைக் கிழித்து எடுத்துவிட்டார்கள்...

கோபாலனின் இடது தொடையில் பெரிய அளவில்
நான்கு தையல்கள். அதைப் பார்த்தவுடன் நம்ம
ஆட்கள் கொஞ்சம் பின்வாங்கினார்கள். அவருடைய
நிலைமையோ பரிதாபமாக இருந்தது. தண்ணீர் கொடுக்கச்
சொன்னேன். தண்ணீரைக் குடித்துவிட்டு அவரே
சொல்லிவிட்டார். ஏதோ ஒரு இட்சினியை இறக்கி
தகட்டில் வைத்து தொடையில் தைத்துக் கொண்டிருக்கிறார்.

`கேரளாவில் மாந்திரீகம் செய்வேன்,இங்கே வியாபாரம்
செய்யத்தான் வந்தேன்` என்று சத்தியம் செய்தார்.கண்ணீர்
விட்டார். `அவிழ்த்து விடுகிறேன்.ஊருக்குப் போய்விடு`
என்றேன். அன்றே புறப்பட்டுப் போய்விட்டார். போகும்போது
சொல்லிக்கொள்ள வந்தார்.`சார் நீங்கள் என்ன வித்தை படிச்சீங்க?`
என்று கேட்டார்.நம்பளையும் மந்திரவாதி ஆக்கிவிட்டாரே என்று
எனக்கு கடுப்பு.`எனக்கு எந்த வித்தையும் தெரியாது` என்றேன்.
`சார் கயிறெல்லாம் கட்டி இருக்கீங்க`என்று சொல்லி சிரித்துவிட்டு
அவர் போய்விட்டார்.

சென்னையில் இருந்து புறப்படும்போது யாரோ ஒரு தங்கச்சி
கட்டிய ரக்ஷா பந்தன் கயிறு அது என்பதை உங்களுக்குத்
தெரிவிக்கிறேன்.

காதுகளில் பேசும் அமானுஷ்யம் !

இந்த தகவலை ujiladevi.blogspot.com என்ற தளத்திலிருந்து எடுத்து இங்கு பதிந்தேன் 

ஐயா நான் சில வருடங்களுக்கு முன்பு மதுரைக்கு பக்கமுள்ள மேலூர் என்ற ஊரில் ஒரு ஜோதிடரை பார்க்க சென்றேன் அவரிடம் நான் எந்த கேள்வியும் கேட்க வில்லை ஆனால் நான் எதற்க்காக அவரை பார்க்க போனேன் என்னென்ன கேள்விகள் அவரிடம் கேட்க விரும்புகிறேன் என்பதை மிக துல்லியமாக நான் எதுவும் சொல்லாமலே அவர் முன்னால் உட்கார்ந்த மாத்திரத்திலேயே கடகடவென சொல்லிவிட்டார் எனக்கு மிகவும் ஆச்சரியமாக போய்விட்டது ஜோதிடத்தில் இப்படி கூட சொல்ல முடியுமா என்ற வியப்பு ஏற்பட்டது 

இந்த இடத்தில் நான் கேட்க விரும்புவது கேள்விகள் கேட்காமலே பதில் சொல்ல ஜோதிட அறிவு மட்டும் இருந்தால் போதுமா அல்லது அதற்க்கான மந்திர பயிற்சிகள் எதாவது உள்ளதா எச்சினிகளை வசியம் செய்து வைத்துக்கொண்டு இப்படி பட்ட வித்தைகளை சிலர் செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே அதில் உண்மை இருக்கிறதா அது சாத்தியம் தானா? 

செல்லத்துரை,இராமேஸ்வரம் 

நானிருக்கும் அரகண்டநல்லூர் பக்கத்தில் கண்டாச்சிபுரம் என்ற ஒரு சிற்றூர் உள்ளது அங்கே பத்து பதினைந்து வருடத்துக்கு முன்பு ஒருவர் இருந்தார் அவரிடம் யார் சென்றாலும் வெறுங்கையில் சிறிய சிலைகள் சந்தனம் விபூதி குங்குமம் இனிப்பு வகைகள் போன்றவைகளை வரவழைத்து கொடுப்பார் 

அவர் கையில் எதுவும் இருக்காது நிமிட நேரத்தில் எங்கிருந்தோ மாயமாக வந்து அவர் உள்ளங்கையில் இந்த பொருட்கள் உட்கார்வதை நான் என் கண்களாலேயே பார்த்திருக்கிறேன் அக்கம் பக்கத்தில் உள்ள ஊர்களில் அவர் மிகவும் பிரபலமானவர் அவரின் அமானுஷ்ய சக்தியை பற்றி கேள்வி பட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே நேரில் வந்து அவரை பார்த்திருக்கிறார் அது மட்டும் அல்ல அவருக்காக அந்த ஊரில் சிவாஜி கணேசன் தன சொந்த செலவில் முருகன் கோவில் ஒன்றையும் கட்டிக்கொடுத்திருக்கிறார் 

இப்படி ஏராளமான வித்தைகாரர்கள் நம் நாட்டில் உண்டு அவர்கள் அனைவரும் மலையாள மாந்திரிகத்தில் கூறப்படும் எச்சினி வசியம் என்ற மந்திர கலையில் நல்ல தேர்ச்சியும் அனுபவமும் பெற்றவர்களே ஆவார்கள் அவர்களில் ஒன்றிரண்டு ஏமாற்று பேர்வழிகள் உண்டு என்பதை இந்த இடத்தில் கண்டிப்பாக சொல்ல வேண்டும் எது எப்படி இருந்தாலும் எச்சினி வசியம் பல அமானுஷ்ய வித்தைகளுக்கு மூலமாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை 

இந்த எச்சினி வசியத்தில் ஒன்று கர்ண எச்சினி வசியமாகும் இந்த கர்ண எச்சினி யாரிடம் வசியபட்டு இருக்கிறதோ அவருக்கு அது கேட்கும் தகவல்கள் எல்லாவற்றையும் கொடுத்துவிடும் உதாரணமாக அத்தகைய நபரிடம் நாம் சென்றவுடன் நம்மை பற்றிய எல்லா தகவல்களையும் அந்த எச்சினி அவர் காதில் சொல்லிவிடும் அதை அவர் நம்பிடம் சொல்லி நம்மை அதிசயப்பட வைப்பார் அந்த எச்சினி சொல்லும் கடந்த கால பலன்கள் அனைத்தும் துல்லியமாக இருப்பது போல் எதிர்கால பலன்களும் இருக்கும் என்று சொல்ல முடியாது 

எச்சினி வசியத்தின் மூலம் மனிதனுக்கு கிடைக்கும் இந்த சக்தியை ஜோதிட கணிதத்தின் மூலமும் பெறலாம் மகாகவி காளிதாசனை பற்றி கேள்வி படாதவர்கள் இருக்க முடியாது அவர் சாகுந்தலம் மேகதூதம் போன்ற புகழ்பெற்ற இலக்கிய நூல்களை மட்டும் எழுதவில்லை உத்தரகாலாம்மிருதம் என்ற ஜோதிட நூலையும் எழுதியுள்ளார் அதில் கேள்வி கேட்காமலே பதில்களை கணித்துக் கூறும் ஒரு பிரசன்ன சூத்திர வகையும் அவர் சொல்லியுள்ளார் அதாவது ஜோதிடம் பார்க்க்க வருபவர் வைக்கும் தட்சனையின் எண்ணிக்கையையும் அவர்களால் வைக்கப்படும் தாம்புலத்தின் வெற்றிலையின் எண்ணிக்கையும் கணகிட்டே அவர்கள் கேட்கும் கேள்வியையும் அதற்க்கான் பதிலையும் கணித்து கூறும் வழிவகையை மிக எளிமையாக சொல்லிவுள்ளார் 

பலர் என்னிடம் கேட்கும் ஜோதிட சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது அதற்க்கான ஆதரத்தை ஜாதக அலங்காரம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளதை வைத்து சொல்வதை பலர் அறியலாம் அந்த ஜாதக அலங்கார நூலில் ஒரு குழந்தை வீட்டில் பிறக்கிறதா மருத்துவமனையில் பிறக்கிறதா வழியில் பிறக்கிறதா என்பதை கணித்து சொல்லும் வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன 

ஒருவன் ஜாதகத்தில் லக்ண நிலையை வைத்து அவன் எந்த திசை பார்த்த வாசல் உள்ள வீட்டில் பிறந்தான் என்பதையும் அவன் வீட்டுக்கு அருகில் எந்த தெய்வத்தின் கோவில் இருக்கிறது என்பதையும் சொல்லிவிடலாம் அதற்க்கான கணித முறையும் ஜாதக அலங்காரத்தில் இருக்கிறது என் அனுபவத்தை பொறுத்தவரை அவைகள் சரியாய் இருப்பத்காகவே சொல்ல தோன்றுகிறது 

இப்படி எத்தனையோ அதிசயமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கண்டறிந்து வைத்துள்ளனர் அவைகளை நாம் தான் பயன்படுத்தாமல் வீணாக விட்டுவைத்து இருக்கிறோம்

இந்த தகவலை ujiladevi.blogspot.com என்ற தளத்திலிருந்து எடுத்து இங்கு பதிந்தேன் 

Saturday, 20 October 2012

உலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்




மர்மங்கள் என்று எடுத்துக்கொண்டால் இவ்வுலகம் முழுவதும் விதவிதமாக கொட்டிக்கிடக்கும். பல மர்மங்களில் ஒரு சில காலப்போக்கில் விடை காணப்பட்டிருக்கின்றன. ஆனால் சில மர்மங்கள் பலவிதமான ஆராய்ச்சிகளுக்குப் பின்னரும் இன்னமும் விடையின்றி தீரா மர்மங்களாகவே நீடித்துக்கொண்டிருக்கின்றன. இந்த தீரா மர்மங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று இணையத்தை அலசினால் வியத்தகு தகவல்கள் வந்து வியாபிக்கின்றன. உடனே இதைப்பற்றி பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தின் விளைவு மட்டுமே இந்தப் பதிவே தவிர மற்றபடி இதை மூடநம்பிக்கையை வளர்ப்பதாகவோ, வேறு எந்த நோக்கத்துடனோ எழுதவில்லை என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்வது எனது கடமையாகும்.

சரி... முதலில் உலகின் சில டாப் லிஸ்ட் தீரா மர்மங்களைப் பற்றி பார்க்கலாம்...
எகிப்தும் பிரமிடுகளும்
எகிப்தின் பிரமிடுகளைப்பற்றி நம்மில் சிலபேர் முன்னரும் பலபேர் மம்மி பார்ட்-1 மற்றும் பார்ட்-2 திரைப்படங்கள் பார்த்த பின்னரும் அறிந்திருப்போம். பிரமிடுகள் என்றாலே இன்றளவும் ஒரு மலைப்பும் ஆச்சர்யமும் உண்டாவது நிச்சயமாய் அவற்றின் தனிச்சிறப்பே. 

எகிப்து நாட்டில் காணப்படும் இந்தப்பிரமிடுகள் கற்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டங்கள். 2008ம் ஆண்டு வரையிலும் கிட்டத்தட்ட 138 பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.


பிரமிடுகளுக்குப் பின்னாலான மர்மங்கள் கணக்கிலடங்காதவை. பிரமிடுகள் என்றாலே சட்டென நம் நினைவில் நிழலாடும் உருவம் ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான கிரேட் பிரமிடுதான். கிங் குஃபு வின் பிரமிடு என்றும் இது அழைக்கப்படுகிறது.
இதுவரை கண்டறியப்பட்ட பிரமிடுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவிலானது. இதன் உயரம் 146 மீட்டர் (கிட்டத்தட்ட 500அடி). கிட்டத்தட்ட 4600 வருடங்களுக்கு முன்னர் இது கட்டப்பட்டதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் முதன் முதலில் கட்டப்பட்டது கிரேட் பிரமிடு அல்ல.  கிங் குஃபு வின் தந்தை கிங் ஸ்நெஃப்ரு வினால் கட்டப்பட்ட ஸ்டெப் பிரமிடுதான் முதன் முதலில் கட்டப்பட்ட பிரமிடாகும்.


கிரேட் பிரமிடு 2.3 மில்லியன் எண்ணிக்கையிலான கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. இவற்றின் மொத்த எடை 5.9 மில்லியன் டன்கள்.

பிரமிடு போலவே இன்னுமொரு தீராத மர்மம் அதன் முன்னால் இருக்கும் Sphinx சிற்பம். மிகப்பிரமாண்டமான அளவில் கட்டப்பட்டிருக்கும் இந்த சிற்பம் கிரேட் பிரமிடை பாதுகாக்கத்தான் கட்டப்பட்டிருக்கிறது என்ற வாதங்களையும் தாண்டி காலச்சிதைவுகளுடன் அமர்ந்திருக்கிறது.

ஒரு சராசரி பிரமிடின் எடையென்று எடுத்துக்கொண்டால் அது 54 இலட்சம் டன்னாகும். பிரமிடுகள் கட்ட உபயோகித்திருக்கும் ஒரு கல்லின் சராசரி எடை இரண்டரை டன்னாகும். மிஸிரினஸ் பிரமிடில் உபயோகித்திருக்கும் ஒரேயொரு கல்லின் எடை மட்டும் 285 டன் என்பதும், சக்கரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் இவ்வளவு எடையுள்ள கல்லை எப்படி கையாண்டிருப்பார்கள் என்பதும் ஆராயமுடியாத மர்மமாகவே நீடிக்கிறது. சில ஆராய்ச்சியாளர்கள் கிரேட் பிரமிடு நாலு இலட்சம் மனிதர்களைக்கொண்டு சுமார் 20 ஆண்டுகள் கட்டப்பட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். (சிலர் பிரமிடுகளை கட்டியது மனித சக்தியே அல்ல… நிச்சயமாய் ஏதோவொரு சூப்பர் பவரோ... இல்லை... வேற்றுக்கிரக வாசிகளோதான் கட்டியிருக்கவேண்டும் என்றும் வாதிக்கின்றனர். ஏனென்றால் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட மனிதர்களால் கிரேட் பிரமிடு போன்ற ஒன்றை உருவாக்குவது சாத்தியமில்லாதபோது 5000 வருடங்களுக்கு முன் இது எப்படி மனித சக்தியால் கட்டப்பட்டிருக்கும் என்ற கேள்வியும் வாதத்திற்கு வலு சேர்ப்பதாய்த்தான் இருக்கிறது)
பிரமிடுகள் கட்டப்பட்ட கற்களின் அளவை இந்தப்படத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்...

பிரமிடுகள் கட்டப்பட்ட விதமும் கட்டப்பட்டதற்கான காரணங்களும் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளுடன் தொடர்ந்து கொண்டேயிருக்கும் மர்மங்கள். இறந்து போன மன்னர், மகாராணி ஆகியோரின் சடலங்கள் பதப்படுத்தப்பட்டு அவர்கள் உபயோகிக்கும் பொருட்களுடன் பிரமிடுக்குள் அமைக்கப்பட்டிருப்பது இறப்பிற்கு பின்னாலான வாழ்க்கை குறித்த மர்மமாகவே ஆராயப்படுகிறது.

எகிப்தின் மர்மங்கள் வெறும் பிரமிடுகளுடன் முடிந்து விடுவதல்ல. மம்மிகள் எனப்படும் பதப்படுத்தப்பட்ட உடல்கள், பிரமிடுக்குள் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே ஃபிளையிங் மெஷின் மற்றும் பல்பு போல செதுக்கப்பட்டிருக்கும் உருவங்கள், மனித உடலும் விலங்கு தலையுமான உருவங்கள் என நீளும் விஷயங்கள் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் தீர்க்க முடியாத எகிப்தின் மர்மங்களே!!!

பயிர் வட்டங்கள்

2012 வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த பயிர் வட்டங்கள் ஒரு சுவாரசியமான மர்மங்கள். விளைந்திருக்கும் பயிரில் ஒரே இரவில் ஏதோவொரு அமானுஷ்ய சக்தி இதுபோன்ற உருவங்களை உருவாக்கிச் செல்வதாய் கதைகள் நீள்கின்றன. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இந்த பயிர் வட்டங்கள் தோன்றியிருக்கும் போதும் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் அதிகம் பதியப்பட்டிருப்பது இங்கிலாந்தில்தான். 

பெரும்பாலான உருவங்கள் ஒரே இரவில் மனிதர்கள் உருவாக்க சாத்தியமேயில்லாத முறையில் உருவாக்கப்பட்டிருப்பது இதன் மர்மத்தை மேலும் கூட்டுகிறது. இரவுப்பொழுதில் வெளிச்சம் இல்லாமல் சுற்றியிருக்கும் பயிருக்கு எந்தவொரு சிறு சேதமும் இல்லாமல் எந்தவொரு வாகனமோ, மனிதக்காலடியோ, இல்லை இயந்திரத்தின் தடயமோ இல்லாமல் இப்படிப்பட்ட படைப்புகள் உருவாக்கப்படுவது மர்மத்திலும் மர்மமே. அதுவும் சில ஆராய்ச்சிகளில் இந்த பயிர்வட்டங்கள் உருவாக்கப்பட்ட இடத்தின் மண் மட்டும் பாறைப்படிவம் போல மாறியிருப்பது மர்மத்தின் உச்சம். ஏனென்றால் ஒரு சாதாரண மண் இறுகிப் பாறைபடிவம் போல மாறவேண்டுமென்றால் அதற்கு இயற்கையாய் 1000 ஆண்டுகளுக்குமேல் தேவைப்படும். இப்படி ஒரேயிரவில் பாறைப்படிவம் போல மாறவேண்டுமானால் கிட்டத்தட்ட 8000 டிகிரி வெப்பத்தில் மண்ணை சூடுபடுத்தவேண்டும். அவ்வாறு வெப்பம் உண்டாக்கப்படும் பட்சத்தில் அந்த இடமே சின்ன புல் பூண்டு கூட இல்லாமல் பஸ்பமாகிவிடும். மேலும் இதேப்போன்ற பயிர் வட்டங்களை மனிதர்களைக்கொண்டு உருவாக்க நடந்த ஆராய்ச்சிகளின் முடிவில் ஒரு சாதாரண உருவத்தை பகல் வெளிச்சத்தில் உருவாக்கவே 5நாட்களுக்கும் மேல் ஆகியிருக்கிறது. அதைவிட முக்கிய விஷயம் மனிதர்களைக்கொண்டு இந்த முயற்சியைச் செய்தபோது பயிர்கள் நிறைய உடைபட்டிருக்கின்றன. மனிதர்களின் சேற்றுக்காலடித்தடங்கள் பயிர்களில் பதிந்திருக்கின்றன. ஆனால் உண்மையான பயிர்வட்டங்களில் பயிர்கள் மடக்கப்பட்டிருந்தாலும், வளைக்கப்பட்டிருந்தாலும் இதுவரை ஒரு பயிர்கூட சேதப்பட்டிருக்கவில்லை என்பது கூடுதல் ஆச்சர்யம். 

இந்தப் பயிர் வட்டங்கள் இரவு நேரத்தில் வானத்திலிருந்து வரும் ஒரு ஒளிக்கற்றையால் உருவாக்கப்படுவதாகவும், வேற்றுக்கிரக வாசிகளின் வாகனம் இறங்கிச் சென்ற தடையங்களே இந்தப்பயிர் வட்டங்கள் என்றும், இந்தப்பயிர் வட்டங்களுக்குள் செல்லும் மிருகங்கள் மிரண்டு ஓடுவதாகவும், இந்தப்பயிர் வட்டங்களுக்குள் கடிகாரம் வேகமாகவும், மெதுவாகவும் மாறி மாறிச்சுற்றுவதாகவும், சில மனிதர்களுக்கு இந்தப்பயிர் வட்டங்களுக்குள் நுழையும்போது தலைச்சுற்றல் வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றுவதாகவும், சில மனிதர்களுக்கு இந்தப்பயிர் வட்டத்துக்குள் நுழைந்ததும் தங்கள் உடம்பிலிருந்த நோய்கள் சரியானதாகவும் வித விதமான மர்மக்கதைகள் நமக்கு மயக்கத்தையே வர வைக்கின்றன. 

எனினும் வெறும் காகிதத்திலேயே வரையச் சிரமப்படும் பல டிசைன்கள், பயிர்களில் சேதமில்லாமல் உருவாகியிருப்பது மர்மமான ஆச்சர்யம்தான்.










பயிர் வட்டங்கள் பற்றிய மேலும் பல சுவாரசியத்தகவல்களுக்கும், புகைப்படங்களுக்கும் இந்த வெப்சைட்டில் பார்க்கவும்...
ஸ்டோன் ஹென்ஜ்

உலகின் தீரா மர்மங்களில் ஸ்டோன் ஹென்ஜ் முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. தோராயமாக இதன் வயதை 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கணித்திருக்கிறார்கள். இன்றைய பிரிட்டனின் மிகப்பழமையான புராதனச்சின்னங்களில் இதுதான் முதலிடம் என்பது கூடுதல் சிறப்பு.

ஸ்டோன் ஹென்ஜ் பார்க்க எண்ணி பயணீத்தீர்களேயானால், ஒரு சில மலைகளைத் தாண்டிச் செல்லும் பயணத்தில் திடீரென இந்த அமானுஷ்ய இடத்துக்குள் நுழைவீர்கள். இந்த இடத்தின் மயான அமைதியும், வீசும் வித்தியாசமான காற்றும் உங்களுக்குள் ஒரு மர்மத்தாக்கத்தை நிச்சயம் உண்டாக்கும்.  

இது உருவாக்கப்பட்ட விதமாக ஆராய்ச்சியாளர்களால் கணிக்கப்பட்ட தகவல்கள் இதுதான்...

1)   முதலில் கி.மு.3100ம் ஆண்டில் மதச்சடங்குகளுக்காக தொடர் பள்ளங்கள் தோண்டப்பட்டிருக்கின்றன.

2)   அதன் பின்னர் ஆயிரம் ஆண்டுகள் கழித்துதான் இந்த கல் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. வேல்ஸ் மலையிலிருந்து பெரிய பெரிய கருங்கற்கள் கிட்டத்தட்ட 240மைல் தொலைவுக்கு எடுத்துவரப்பட்டிருக்கிறது. சக்கரம் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில் எதற்காக, யாரால், எப்படி இந்தக் கற்கள் இவ்வளவு தூரம் எடுத்து வரப்பட்டிருக்கும் என்பது மர்மமே. இவ்வாறு எடுத்து வரப்பட்ட கற்கள் முற்றுபெறாத ஒரு இரட்டை வட்ட வடிவில் மிட்சம்மர் சூரிய உதயத்திற்கு அலைன்மெண்ட் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கிறது.

3)   இதன் முன்னர் மூன்றாவது நிலையாக கி.மு.2000வது ஆண்டில் மேலும் சில கற்கள் 25மைல்களுக்கு அப்பால் உள்ள இடத்திலிருந்து எடுத்துவரப்பட்டிருக்கிறது.

4)   இதன் பின்னர் மேலும் 500 ஆண்டுகளுக்குப் பிறகு யாரோ ஒரு சிலரால் இன்றைய குதிரைக் குளம்பு போன்ற வட்ட வடிவத்தில் இந்தக்கற்கள் மறுஒழுங்கு செய்யப்பட்டு அடுக்கப்பட்டிருக்கிறது.

இன்று வரையிலும் இந்தக்கற்கள் அடுக்கப்பட்டிருப்பதன் அர்த்தம் எந்தவொரு முடிவையும் எட்டவில்லை. இது ஒரு வழிபாட்டுத்தலம், வானவெளி சம்பந்தப்பட்ட காலண்டர், சுடுகாட்டு மயானம் என்று விதவிதமான கதைகள் திரிந்தாலும் இது இன்னமும் தீர்க்கப்படாத ஒரு மர்மம்தான்!!!

நகரும் கற்கள்
செயிலிங் ஸ்டோன் என்றழைக்கப்படும் இந்த கற்கள் விலங்குகளோ இல்லை மனிதர்களோ இல்லாமல் தானாகவே நகர்ந்து நீண்டதொரு பாதையில் பயணித்துக்கொண்டேயிருக்கின்றன. இவைகளைப் பற்றிய தகவல்கள் பலவிதமான எண்ணிக்கையில் அமேரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ரேஸ் ட்ராக் பிளேயா, டெத் வேலி என்ற இடத்தில் ஆராயப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தக் கற்கள் வெறும் நேர் கோட்டில் மட்டுமே நகராமல் வளைவுகளுடன் நகர்வது மேலும் மர்மமே. இவற்றில் ஒரு சில கற்கள் 700 பவுண்டு வரை எடை உள்ளவை என்பது கூடுதல் தகவல். இவைகளின் நகர்வுக்கு பின்னால் உள்ள சக்தி இன்னமும் கண்டுபிடிக்கப்பட முடியாமல் ஆராய்ச்சிக்குரியதாகவே நீடித்துக் கொண்டிருப்பது தீராத மர்மமே!



இரும்புத்தூண் – டெல்லி

ஆச்சர்யத்திற்குரிய விஷயமிது. உலகின் தீரா மர்மங்களைப்பற்றி அலசிக்கொண்டிருந்தபோது அதில் இடம் பெற்றிருக்கும் நமது இந்தியாவின் இரும்புத்தூண் நான் எதிர் பார்க்காத... என்னை வியக்க வைத்த விஷயம்.


டெல்லியில் இருக்கும் குதுப்மினார் பற்றி நம்மில் பலபேர் அறிந்திருப்போம். அதன் அருகில்தான் இந்த இரும்புத்தூணும் அமைந்திருக்கிறது. 2000 வருடங்களுக்கும் மேலாக பழமையானதாக கருதப்படும் இந்தத்தூண் 98% சுத்தமான இரும்பினால் செய்யப்பட்டு எவ்வித பாதுகாப்பு பூச்சுகளுமின்றி திறந்தவெளியில் துளியளவும் துருப்பிடிக்காமல் இருப்பது இன்றளவும் தீர்க்கப்படாத மர்மமே !.

இரும்புத்தூணையும், ஃஈபிள் டவரையும் பற்றிய ஒரு சிறிய ஒப்பீடு உங்கள் பார்வைக்கு...


பிமினி ரோடு

பிமினி ரோடு அல்லது பிமினி சுவர் என்றழைக்கப்படும் இந்த விஷயம் பஹாமா மாகாணத்தின் வடக்கு பிமினித்தீவில் தண்ணீருக்கடியில் கண்டறியப்பட்ட ஒரு பாறைப்படிவமாகும். 0.8 கி.மீ நீளமுடன் கூடிய இந்தச்சுண்ணாம்பு பாறை படிவத்தில் காணப்படும் சதுரமான பாறைகளாலான ரோடு போன்ற அமைப்பும், படிக்கட்டுகள் போன்ற அமைப்பும், தூண்கள் போன்ற அமைப்பும் இதைச்சுற்றிய ஏராளமான மர்மக்கதைகளுக்கு காரணமானதாய் அமைந்திருக்கிறது.

அட்லாண்டிஸ் என்ற புராதன நகரம் காணாமல் போனதான வரலாறுகள் மேலைநாட்டில் திரைப்படங்களிலும், நாவல்களிலும் பிரசித்தபெற்றவை. கதைகளில் இருக்கும் புராதன அட்லாண்டிஸ் நகரம்தான் பிமினியின் தண்ணீருக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட படிவங்கள் என்ற கதையும், இது இயற்கையாக உருவான படிவமா... இல்லை மனிதர்களால் உருவாக்கப்பட்டு கடலுக்குள் புதையுண்ட நகரமா என்பது இன்றளவும் ஆராய்ச்சிகளுக்கு உட்பட்ட தீரா மர்மமாகவே நீடிக்கிறது.

இந்தியாவிலும் இதேப் போல துவாரகா என்ற புராதன நகரம் கடலுக்கடியில் மூழ்கியிருப்பதாய் நிலவும் கதைகள் உங்களுக்கான கூடுதல் தகவல்!

இன்கா தங்கப்புதையல்

 லத்தின் அமெரிக்காவில் மத்திய ஈகுவடாரில் அமைந்திருக்கும் அடர்ந்த மலைப்பிரதேசத்தின் குகைகளில் டன் கணக்கில் தங்கப்புதையல் இருப்பதான கதைகளின் பின்னனி சுவாரசியமான வரலாறு.


1532ம் ஆண்டு ஃபிரான்சிஸ்கோ பிஸ்ஸாரோ என்பவரின் தலைமையில் ஸ்பானீஷ் படையொன்று இன்கா பேரரசரை சிறைபிடிக்கும் முயற்சியில் முன்னேறியது. ஏற்கனவே இன்கா பேரரசில் அப்போதுதான் சகோதர யுத்தம் நடந்து தனது சகோதரர் குயாஸ்கரை வீழ்த்தி அரியணையில் அமர்ந்திருக்கிறார் அதூல்பா. ஏற்கனவே நடந்த உள்நாட்டு யுத்தத்தில் களைப்படைந்து போயிருந்த இன்கா படைகள் ஸ்பானீஷ் படைகளிடம் எளிதாய் வீழ்ந்திருக்கிறது. அதூல்பா இன்கா தலைநகரான கஜமார்காவில் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்.

தன்னை விடுவித்தால் அதற்கு ஈடாக மலை மலையாக தங்கம் தருவதாக பிஸ்ஸாரோவிடம் பேரம் முடித்திருக்கிறார் அதூல்பா. அதன்படி தங்கள் அரசரை விடுவிப்பதற்காக இன்கா பேரரசு முழுவதுதிலுமுள்ள மக்களிடமிருந்து தங்கமும் வெள்ளியுமாய் பெறப்பட்டு அவை இரண்டு தவணையாக பிஸ்ஸாரோவிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. விதவிதமான தங்க கைவினைப்பொருட்கள் முதல் தவணையில் ஒப்படைக்கப்பட்டவுடன் பிஸ்ஸாரோ அந்த அழகிய தங்க வைவினைப்பொருட்கள் அனைத்தையும் உருக்கி தங்கக்கட்டிகளாய் ஸ்பெயினுக்கு அனுப்பி விட்டு இரண்டாவது தவணையைப் பற்றி அறியாமல் தனது வாக்குறுதியைக் மீறி இன்கா பேரரசர் அதூல்பாவை ஆகஸ்ட்-29, 1533 அன்று இன்கா தலைநகரான கஜமார்காவிலேயே கொன்று தீயிலிட்டு கொளுத்தியிருக்கிறான்.

கிட்டத்தட்ட 60,000 பணியாட்கள் மூலம் 750 டன் தங்க கைவினைப்பொருட்களை இன்கா தலைநகரை நோக்கி சுமந்து வந்து கொண்டிருந்த இன்கா ஜெனரல் ருமினாஹீய், இன்கா பேரரசர் கொல்லப்பட்ட செய்தியை அறிந்ததும் தங்கம் மொத்தத்தையும் ல்லங்கானேட்ஸ் என்ற  ஈகுவடாரின் மலைப்பிரதேசத்துக்கு எடுத்துச்சென்று மறைத்துவிட்டார். அதற்குப் பின்னர் இன்கா ஜெனரல், ஸ்பானீஷ் படைகளுடன் தொடர்ந்து போரிட்டு, சிறைபிடிக்கப்பட்டு, பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டும் இன்கா தங்கத்தை வைத்த இடம் பற்றி எவ்விதத் தகவலையும் கூறாமல் அந்த மர்மப்புதையலை தனது மரணத்தோடு சேர்த்தே மறைத்து கொண்டார்.

தொடர்ந்து வந்த காலங்களில் இன்று வரையிலும் தங்க வேட்டைக்காக பலவிதமான தேடல்கள் நடந்து கொண்டேயிருந்தாலும் எல்லாமே வெறுங்கையாகவே முடிந்த கதைகள் இன்கா தங்கப்புதையலை இன்னமும் தீரா மர்மமாகவே நீட்டித்திருக்கிறது.

நாஸ்கா கோடுகள்

 புராதன உலகத்தின் முக்கிய மர்மங்களுள் ஒன்றாக விளங்கும் நாஸ்கா கோடுகள் தெற்கு பெருவில் உள்ள நாஸ்கா சமவெளியில் காணப்படுகின்றன. இந்தக்கோடுகள் முதன்முதலில் உலகுக்குத்தெரிய வந்தது கமெர்ஷியல் ஏர்லைன்ஸ் சேவைகள் பெரு சமவெளியின் மீது பறக்கத்தொடங்கிய 1920ம் ஆண்டில்தான். இந்தக்கோடுகள் கி.பி.400 லிருந்து 600ம் ஆண்டுக்கு மத்தியில் வரையப்பட்டதாய் கணக்கிடப்பட்டிருக்கிறது. உலகில் இதுபோல இங்கொன்றும் அங்கொன்றுமாய் சில வரைபடங்கள் காணப்பட்டாலும் முன்னூறுக்கும் அதிகமாய் ஒரேயிடத்தில் மிகப்பெரிய அளவில் வரையப்பட்ட காரணம்தான் நாஸ்காவின் முக்கியத்துவத்துக்கு அடிப்படையாகும். வானத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே புலப்படக்கூடிய அளவுக்கு சில வரைபடங்கள் 1000அடி நீளத்திற்கும் மேல் வரையப்பட்டிருப்பது அறிவியல் கண்டுபிடிப்புகளற்ற 400ம் வருடத்தில் என்பதுதான் நம்ப முடியாத ஆச்சரியம்.

இதே காரணம்தான் இதைப்பற்றிய பல மர்மகதைகளுக்கும் வித்தாகிப்போனது. பலர் இதை வேற்று கிரகவாசிகளின் விமானத்தளம் என்றே வாதிக்கின்றனர். அதற்கு காரணம் இதன் ஒருசில வரைபடங்கள் மாடர்ன் விமானநிலையத்தின் பார்க்கிங் அமைப்பை ஒத்திருப்பதாய் அமைந்திருப்பதேயாகும்.

ஒரு சிலர் இதை நாஸ்கா மக்கள் தண்ணீருக்காக கடவுளிடம் வழிபாட்டு நடத்துவதற்காக உருவாக்கிக்கொண்ட வரைபடம் என்கிறார்கள். ஒருசிலர் இதை ஈமச்சடங்குகளுக்கான ஏரியாவாக வாதிக்கின்றனர்.

ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் இதை வானவெளி பற்றிய காலண்டர் என்று வாதிக்கின்றனர்.

எது எப்படியிருந்தாலும் வெறும் மணல்வெளியில் வரையப்பட்டிருக்கும் இந்த கோடு வரைபடங்கள் காலங்கள் பல கடந்தும் அழியாமல், முழுக்காரணமும், வரையப்பட்ட விதமும் தெரியாமல் வீற்றிருப்பது நிச்சயமாய் மர்மமே!


பெர்முடா முக்கோணம் 

பெரும்பாலும் இதைப் பற்றிய தகவல் தெரியாதவர் யாரும் இருக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். நார்த் அட்லாண்டிக் கடலின் மேற்கு பகுதியில் இருக்கும் இந்த கடற்பரப்பில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்களும், விமானங்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும்  மர்மமான முறையில் காணாமல் போயிருக்கின்றன. குறிப்பிட்ட இந்த முக்கோணப்பகுதிக்குள் நுழையும் கப்பல்களோ... இல்லை இதற்கு நேர் மேற்பரப்பில் பறந்த விமானங்களோ இதுவரை என்னவாயிற்று என்றே தெரியாமல் ஆராயப்பட்டுக்கொண்டிருக்கிறது.


பலவித ஆராய்ச்சிகளுக்குப்பிறகும் பெர்முடா முக்கோணம் அறிவியல் சம்பந்தப்பட்ட காரணமா... இல்லை அமானுஷ்ய சக்திகளின் காரணமா என்பது இன்னமும் புரிபடாமல் நீடிப்பது கண்டிப்பாய் தீராத மர்மம்தான் !


மாயன் காலண்டர் 

மாயன் காலண்டர்... 2012ம் ஆண்டை பற்றிய மர்மத்தை தாங்கி நிற்கும் கல்வெட்டு இது. ஒரு சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி மாயன் என்ற இனத்தால் கடைபிடிக்கப்பட்டு வந்த காலண்டர் இது என்றும், இந்த காலண்டர் டிசம்பர் 21, 2012 அன்றோடு முடிவதாகவும் அதுதான் உலகம் அழியும் நாளாக மாயன் இனத்தவரால் கணிக்கப்பட்ட நாள் என்றும் பரவிய செய்திதான் இன்று இந்த விஷயத்தை உலகின் டாப் லிஸ்ட் மர்மங்களில் ஒன்றாக்கியிருக்கிறது.


இருந்தாலும் பல அறிவியலாளர்களால் மாயன் காலண்டர் சமாச்சாரம் உண்மையில்லை என்று மறுக்கப்பட்டிருக்கிறது. நமது காலண்டர் எப்படி டிசம்பர்-31 ல் முடிகிறதோ அதேப்போல இந்த காலண்டருக்கும் இருக்கும் முடிவுதான் இது. மற்றப்படி டிசம்பர்-21, 2012ல் உலகம் அழிவதற்கான எவ்வித அறிவியல் கூறுகளும் இல்லை என்று திட்டவட்டமாக மறுக்கப்பட்டிருக்கிறது.

எனினும் 2012 திரைப்படம் உலகம் முழுக்க வசூலை அள்ளிக் குவித்த காரணமே மக்கள் மனதில் மாயன் காலண்டர் விதைத்த மர்மம்தான் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை...

பறக்கும் தட்டுகள்

உலகின் தீர்க்கப்படாத மர்மங்களின் டாப் லிஸ்ட்டில் இந்தப் பறக்கும் தட்டுகள் பற்றிய செய்தியும் இடம் பெறுவதற்கு இதைப் பற்றிய கதைகளும், மக்களுக்கு வேற்று கிரகவாசிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களின் மீதிருக்கும் ஈர்ப்புமே முக்கியக்காரணம்.
பறக்கும் தட்டை பார்த்ததாய் பதியப்பட்ட முதல் செய்தி 1878ம் ஆண்டுதான். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் விவசாயி ஒருவர் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது வட்டவடிவில் ஏதோவொன்று மிக அதிவேகத்தில் பறந்து சென்றதை பார்த்ததாகக் கூறினார். அதன் பின்னர் 1916ம் ஆண்டு இங்கிலாந்தின் ஃபைலட் ஒருவர் தான் விமானம் ஓட்டிக்கொண்டிருந்தபோது நெருப்பு பந்து போன்ற ஏதோவொன்று பயங்கர வெளிச்சத்துடன் பறந்ததை பார்த்ததாகத் தெரிவித்தார்.

1950களுக்குப் பிறகு சயின்ஸ் ஃபிக்சன் கதைகளின் மூலம் இந்தப்பறக்கும் தட்டுகள் மேலும் பிரபலமடைந்தன. பறக்கும் தட்டுகள் அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட உளவு விமானம் என்றும், ரஷ்யாவினால் ஏவப்பட்ட உளவு விமானம் என்றும் எதிர்வாதங்களும் கிளம்பின.
இந்தியாவிலும் பறக்கும் தட்டை பார்த்ததாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்...
டெல்லியில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள்...


தமிழ்நாட்டில் பொள்ளாச்சி அருகே எடுக்கப்பட்ட புகைப்படம் இது...

என்னதான் ஆராய்ச்சிகளும், மறுப்புகளும் தொடர்ந்து உருவானாலும் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதாய் நம்பும் பூமிக்கிரகவாசிகளின் மனதில்  பறக்கும் தட்டுகள் பற்றிய செய்திகளும், படங்களும் இன்னமும் அவிழாத மர்ம முடிச்சாகவே நீடித்திருக்கிறது.

இதுவரை பார்த்தவை உலகின் வெறும் ஹிட் லிஸ்ட் தீரா மர்மங்கள் மட்டுமே... மற்றபடி உலகின் மொத்த மர்மங்களையும் பற்றி அறிய நினைத்தால் அது கணக்கிலடங்கா கதைகளுடன் நமது தெரு எல்லை வரைகூட வரலாம்... உண்மையிலேயே இவை மர்மங்களோ... இல்லையோ... ஆனால் இவற்றைப்பற்றிய செய்திகளும், படங்களும் ஒரு சிறந்த மர்மப் பொழுதுபோக்குகள் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் ஏதுமிருக்காது என்று நம்புகிறேன்...