Friday, 12 March 2010

முதுகு வலி குறையணுமா...?



‘பேக் பெய்ன்’ என்ற வார்த்தை இப்போது எல்லாருமே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். என்னங்க செய்ய... நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்னாடி ஆடாம, அசையாம உட்கார்ந்திருந்தா முதுகு வலி வருமா? வராதாங்க...?
வலி தாங்க முடியலை. மருத்தவரிடம் போனேன். மருந்து கொடுத்தார். ஆனா, அந்த சமயம் நல்லா ரிலீப் கிடைக்கிறது. அப்புறம் மறுபடியும் நரக வேதனைதான்.
இந்த முதுகு வலி பிரச்னையை முழுசுமா குறைக்க முடியாவிட்டாலும், ஓரளவிற்கு சரிசெய்யணுமா...? அப்ப... நீங்க கொஞ்சம் வாயை கட்டியாகணும்!
உங்களுக்கு டீ, காபி, சோடா போன்ற ஐட்டங்கள் விரும்பி குடிப்பீங்களா... அப்படீன்னா உடனடியா நிப்பாடிடுங்க. கேழ்வரகை தொட்டுக்கூட பார்க்கக்கூடாது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையால் செய்யப்பட்ட உணவுப் பண்டங்களை சாப்பிடவே கூடாது. இவ்வளவையும் நீங்க தவிர்த்தால், உங்களுக்கு முதுகு வலியிலிருந்து விடுதலை என்று பலபேரிடம் செய்த சோதனையின் மூலம் கண்டுபிடிச்சிருக்காங்க ஆராய்ச்சியாளர்கள்.

பழம் சாப்பிட்டா கல் வராது!



எல்லா சீசன்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு பழம் வாழைப்பழம்தாங்க. கிட்னி கல்லடைப்பு என்பது இப்போது சாதாரணமாகிவிட்டது. ஆனால், கல்லடைப்பு வராம தடுக்கணும்னா, தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிடுங்கன்னு சொல்றாங்க ஆராய்ச்சியாளர்கள். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் கிட்னியில் கல் வருவதை தடுக்கிறதாம்.
ஒருவாழைப்பழத்தில் 400 மி.கிராம் பொட்டாசியம், 14.8 கிராம் சர்க்கரை, புரோட்டீன் ஒரு கிராம், வைட்டமின் சி மற்றும் பி6, நார்சத்து 4 கிராமும் இருக்கிறது. ஒரு வாழைப்பழம் சாப்பிட்டா நம்ம உடம்புக்கு 110 கலோரி சக்தி கிடைக்கிறது.
கிட்னியில் ஏற்படும் கல்லைத் தவிர நரம்பு தளர்ச்சி, இதயம், எலும்பு, ரத்த சுழற்சி என்று எல்லாவற்றிற்கும் வாழைப்பழம் ஒரு அருமருந்தாம்.

நோய் தீர்க்கும் தண்ணீர்!



காலைல முழிச்சவுடனே தண்ணீர் குடிச்சா ரொம்ப நல்லதுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா, எப்படி எப்போ குடிக்கணும்னு நிறைய பேருக்கு குழப்பம்.
தண்ணீரை மட்டும் சரியா தினமும் குடிச்சிட்டு வந்தோம்னா... 30 நாளைக்குள் ரத்த அழுத்தம், 10 நாளில் வாயுத் தொல்லை, 30 நாளில் சர்க்கரை நோய், 180 நாளில் கேன்ஸர், 90 நாளில் காச நோய் என்று எல்லாமே சரியாகிவிடும் என்று சொல்கிறார்கள் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்.
படி 1: காலையில் எழுந்தவுடன் பல் துளக்குவதற்கு முன் 160 மில்லி பிடிக்கும் 4 கிளாஸ் தண்ணீர் குடிக்கணும்.
படி 2: பல் துளக்கிய உடனே சாப்பிடவோ 45 நிமிடத்துக்குள் தண்ணீரோ அருந்தக் கூடாது.
படி 3: 45 நிமிடம் கழித்து காலை உணவை முடித்துக் கொள்ளலாம்.
படி 4: காலை சிற்றுண்டியை முடித்த 15 நிமிடத்துக்குள் வேறு ஏதும் உணவு சாப்பிடக்கூடாது.

எடுத்த எடுப்பிலேயே 4 கிளாஸ் தண்ணீர் குடிக்க முடியாதவங்க... ஒரு கிளாஸ், அப்புறம் ரெண்டு கிளாஸ்னு குடிச்சுப் பழகுங்க.. அப்புறம் தானாவே பழகிடும். உடம்புலேயும் எந்த நோயும் வராது.

பொரிச்சதும் நல்லதுதான்!




உடலை மிகவும் ஆரோக்கியமாய் வைத்திருப்பவர்களுக்கு எண்ணெய் பலகாரங்களை பார்த்தாலே ஒரு வித அலர்ஜி தொற்றிக்கொள்ளும்தான். ஏனென்றால், அந்த எண்ணெயில் உள்ள கொழுப்புதான் உடல் பலஹீனமாதவதற்கு காரணம் என்பது நம்மில் பலரின் எண்ணமும் கூட.
கொழுப்பில் மட்டுமா உடலுக்கு தீங்கிழைக்கக்கூடிய கொழுப்பு இருக்கிறது, பால் பொருட்களில் ஆரம்பித்து இறைச்சி வரை எல்லாவற்றிலும் கொழுப்பு இருக்கத்தானே செய்கிறது. அப்படியென்றால், இதுவும் கூட உடம்பிற்கு தீங்கிழைக்கத்தானே செய்யும். ஆனால், சில எண்ணெய்களில் பொரிக்கப்படும் உணவானது இதய பாதிப்பு ஏற்படுவதைக்கூட தடுக்கிறதாம்.
தொடர்ந்து எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் பொருள் சாப்பிடுவது கண்டிப்பாக உடலுக்கு தீங்குதான். ஆனால், எப்போதாவது எண்ணெயில் பொரித்த உணவுப்பொருட்களை சாப்பிடுவது சொல்லப்போனால் நன்மைதான். ஏனென்றால், சில நல்ல ஆரோக்கியமான கொழுப்பு நீக்கப்பட்ட எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் உணவுப்பொருட்களில் இருந்து அதிகஅளவில் நார்ச்சத்து கிடைக்கிறதாம். அப்படியென்றால் இது உடலுக்கு நல்லதுதானே.
உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு... வகையறாக்கள் எண்ணெயில் 360லிருந்து 375 டிகிரி வரை வெப்பப்படுத்தி, பின் பொரித்தெடுக்கும்போது, குறைவாகவே எண்ணெயை பண்டங்கள் உறிஞ்சுகிறதாம். இதனால், உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்கிறது ஆராய்ச்சி.
அதனால, பொரிச்ச உணவும் உடம்புக்கு நல்லதுதான்... ஆனா, நீங்க தேர்ந்தெடுக்கும் எண்ணெய் தரமான எண்ணெயாக இருக்கணும். அதுதான் முக்கியம்!

பயிற்சியோடு மனசும் வேணும்!



அந்தப் பொண்ணு பேரு மேகலை. கொஞ்ச நாளா அளவுக்கு அதிகமா வெயிட் போட்டுடுச்சு. கவலைப்பட்டுபோய் ஒரு டயட்டீசியனை போய் பார்த்திருக்கிறார். அவர் கொடுத்த அறிவுரைப்படி காலையில் எழுந்து நடைப்பயிற்சி. அப்புறம் கொஞ்சம் டீ, ரெண்டு பிஸ்கட். இரண்டு மணி நேரம் கழித்து காலை உணவாக ஒரு கிண்ணம் அளவுக்கு உப்புமா அல்லது பொங்கல். அப்புறம் சைக்கிள் ஓட்டுவது போன்ற பயிற்சி. அப்புறம் கொஞ்சம் ப்ரூட் சாலட். பின் அரைமணி நேரம் கழித்து கொஞ்சம் ஊற வைத்த சுண்டல். அடுத்த இரண்டரை மணி நேரம் கழித்து, இதே மாதிரி ஒரு கிண்ணம் அளவிற்கு பழ வகைகள். இரவு உணவு ரெண்டு சப்பாத்தி, சூப், கொஞ்சம் சாலட்.
டயட்டீசியன் சொன்ன அத்தனையும் செய்து பார்த்தார் மேகலை. ஆனா, ரிசல்ட் என்னவோ பூஜ்ஜியம். ஏனென்றால், முன்பிருந்ததைவிட இப்போது இன்னும் கொஞ்சம் புஷ்டியானாள் மேகலை. இது ஏன்? எப்படி? என்ற கேள்விகளுக்குத்தான் பதில் கூறியுள்ளார் ஆராய்ச்சியாளர்.
மேகலை செய்த உடற்பயிற்சி எல்லாமே சரிதான். ஆனால், அவர் மனப்பூர்வமாகவும், ஆத்ம திருப்தியாகவும் செய்தாரா... அப்படி செய்திருந்தால் மேகலையின் உடல் கண்டிப்பாக மெலிந்திருக்கும். ஆனால், வேகம் இருந்த அளவுக்கு ஆர்வம் இல்லை அதன் விளைவுதான் மேகலா குண்டானது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
எந்த ஒரு விஷயத்தையும் ஆர்வமாய் செய்தால்தானே அதற்குண்டான பலன் கிடைக்கும். இது உடற்பயிற்சிக்கும் பொருந்தும் என்பதுதான் ஆராய்ச்சியாளரின் பதில்.

சவ் மிட்டாய்!

அப்போ வயசு 13. நான் எட்டாங்கிளாஸ் படிச்சிட்டு இருந்தேன். போத்திதான் என்னுடைய நெருங்கிய நண்பன். போத்தியை பொருத்தவரை நான்தான் அவனுக்கு குரு, ஆசான் எல்லாம்.
ஏன்னா, நான் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்புவான். சில நேரங்களில் பொய்க்கதைக்கூட சொல்லியிருக்கேன். அதைக்கூட அப்படியே நம்பிடுவான். எங்க ஸ்கூல்ல, வாரத்துல ரெண்டு நாள் கலர் டிரஸ் போட்டுக்கிட்டு வரலாம். நானும் போத்தியும் எப்போதும் போட்ட டிரஸ்சையேதான் மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு வருவோம். ஆனா, எங்க கிளாஸுல மாரியப்பன்னு ஒரு பையன். ‘செட்டியார் வீட்டு பையன்’னுதான் அவனைச் சொல்வாங்க. அவங்க அப்பா எங்க ஸ்கூல்ல சவ்மிட்டாய் கடை வைத்திருந்தார்.
எனக்கும் சரி; போத்திக்கும் சரி செட்டியார் மீது எப்போதும் ஒரு கண்ணு. அதுக்கும் ஒரு கதை உண்டு. எனக்கும், போத்திக்கும் பாக்கெட் மணியா வீட்ல நாலணாதான் தருவாங்க. ஆனா, இந்த மாரியப்பப் பய எப்போ பார்த்தாலும், டவுசருக்குள்ள கையப் போட்டுக்கிட்டு சில்லரை பைசாக்களை கிலுக்கிக்கிட்டே கிடப்பான்.
சவ் மிட்டாய் வித்தா நாமலும் இப்படி பை நிறைய காசு வச்சிக்கலாம்னு எனக்கும், போத்திக்கும் நினைப்பு. ஒரு கட்டத்துல செட்டியாரை மாதிரி நாமும் ஏன் நிறைய சம்பாதிக்கக்கூடாது என்ற ஆசை. யோசிச்சேன். போத்தியை கூப்பிட்டேன். ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு போற வழியில ஒரு சிதிலமடைஞ்ச ஒரு ரைஸ்மில் உண்டு. அதுதான் எங்க ரெண்டு பேருக்கும் மீட்டிங் ஹால். அங்க போய் உட்கார்ந்தோம்.
“ஏல... போத்தி, மாரிய பாத்தியால... கை நிறைய பைசா வச்சிருக்கான். இதெல்லாம் எப்படி வந்துச்சு... எல்லாம் சவ் மிட்டாய்ல போத்தி சவ்மிட்டாய்.”
“ஆமால முருகா... கரெக்ட்டா சொன்ன. பொறந்தா, மாரிய மாதிரி பொறந்திருக்கணும். எப்போ பார்த்தாலும் கையில பைசா விளையாடுதுல்லா...”
“நம்ம ரெண்டு பேருகிட்டேயும் மாரி மாதிரி காசு வரணும்னா... அதுக்கு ஒரு திட்டம் வச்சிருக்கேன்” என்றதும், “என்னல திட்டம்... சொல்லுடே!” என்று தோளை கெட்டியாய் பிடித்துக்கொண்டான் போத்தி.
“நாமலும் சவ் மிட்டாய் செஞ்சி வித்தோம்னா... மாரி மாதிரி நம்ம சேப்புலயும் பைசா நிறைய இருக்கும்.”
“அப்படியாடே... உண்மையாவா சொல்லுத...?” என்று வழக்கம்போல வாயைப் பிழந்தான் போத்தி. “ஆனா... சவ் மிட்டாய் செய்றதப் பத்திதான் நமக்கு ஒண்ணும் தெரியாத...” என்று உதட்டைச் சுழித்தான் போத்தி.
“ஏல... அது என்ன பெரிய இதுவா? வீட்ல இருக்கற மண்டவெல்லத்தை தண்ணீரை ஊத்தி காய்ச்சுனா, அது பாகாய்டும். அதுல கொஞ்சம் மாவு போட்டு பிசைஞ்சு காய வச்சுட்டா அதுதான் சவ் மிட்டாய்” என்று நான் சொல்லிய பக்குவத்தை அப்படியே நம்பிட்டான் போத்தி.
“ஏல... ஆமா... நாம பாட்டுக்கு, படிக்காம சவ் மிட்டாய் செய்யுறேன்னு வீட்ல போய் சொன்னோம்னா, எங்க ஐயா என்னை அடிச்சே கொன்னுடுவார்...” என்று அப்பாவியாய் பார்த்தான் போத்தி.
“வீட்ல ஆள் இருக்கற நேரத்துலயா பண்ணப் போறோம். கள்ளிகுளத்துல லட்சுமியக்கா கல்யாணம் அடுத்த வாரம் வருது. அதுக்கு உன் வீட்ல, என் வீட்ல எல்லாரும் போயிடுவாங்க. வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க. அன்னிக்கு வச்சுக்குவோம்ல நம்ம கச்சேரியை. ஏல போத்தி... எங்களவிட, நீங்க பணக்காரங்க! அதனால நீ நிறைய சவ் மிட்டாய் செய்யலாம். நான்தான் இருக்கற மண்டவெல்லத்தை வச்சிக்கிட்டு என்ன பண்ணப்போறேன்னே தெரியலை!”
“ஏல... இதுக்குப் போயா கவலைப்படுவாங்க... நான் போடுற சவ் மிட்டாயை விற்று, வரக்கூடிய காசை நாம ரெண்டு பேரும் பங்கு போட்டுக்குவோம்!” என்று ஐடியாவைச் சொன்னான் போத்தி. அவன் சொன்ன டீலிங்கிற்கு நானும் ஒத்துக்கிட்டேன்.
லட்சுமியக்கா திருமண நாள் வந்தது.
என்னையும், போத்தியையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, என் வீட்டிலும், போத்தி வீட்டிலும் கல்யாண வீட்டிற்கு போய்விட்டார்கள்.
நாங்கள் ரெண்டு பேரும் ஸ்கூலுக்குப் போவது போல் போய்விட்டு, அந்த மீட்டிங் ஹால்ல கொஞ்ச நேரம் பொழுதை போக்கிவிட்டு வீட்டுக்கு வந்துட்டோம்.
மனசுக்குள்ள, போத்திக்கு போட்டியா சவ் மிட்டாய் செய்யணும்னு எனக்கு ஆசை வந்துடுச்சு. இதை அவன்ட்ட நான் சொல்லலை.
ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்தோம்.
“ஏல... முருகா என் வீட்டுக்கு வா; நாம ரெண்டு பேரும் சேர்ந்தே சவ் மிட்டாய் செய்யலாம்”.
“இல்ல போத்தி... நானும் சவ் மிட்டாய் செய்யலாம்னு முடிவு செஞ்சிட்டேன்”னு சொன்னதும் போத்தியின் முகம் மாறிப்போச்சு.
“என்னடே... போட்டிக் கடையா போடப்போற?”ன்னு டக்குன்னு கோவப்பட்டுட்டான்.
“இல்லல... போத்தி! நாம ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்சா... நிறைய சவ் மிட்டாய் கிடைக்கும். நிறைய காசும் கிடைக்கும்...” என்று நான் சொன்னத, ஏதோ வேண்டா வெறுப்பாய் கேட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டான்.
நானும் என் வீட்டிற்குள் வந்து, ஒவ்வொரு டப்பாவாய் தேடி மண்டவெல்லத்தை எடுத்து, ஒரு சட்டியில் போட்டு ஒரு செம்பு தண்ணீரையும் ஊற்றி அடுப்பில் வைத்தேன். மண்டவெல்லம் இளக ஆரம்பித்தது. எனக்கு பயங்கர சந்தோஷம். பாட்டிலில் இருந்த தேங்காய் எண்ணெயை தரையில் ஊற்றி மெழுகினேன். அதில்தான் மண்டவெல்ல பாகையும், மாவையும் கலந்து ஊற்ற ஏற்பாடு.
மனதிற்குள் சந்தோஷம். ஆனால், நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று. மண்டவெல்லப்பாகு, கொஞ்ச கொஞ்சமாய் இறுக ஆரம்பித்து, ஒருகட்டத்தில் சட்டியில் பிடித்து பழுப்பு நிறத்தில் புகை எழ ஆரம்பித்தது. எனக்கு நெஞ்செல்லாம் படபடக்க ஆரம்பித்தது.
அதற்குள் கல்யாண வீட்டிற்கு சென்றிருந்த என் அம்மா, வீட்டிற்குள் வந்துவிட்டாள். “ஏல... அடுப்புல என்னல பண்ற? வீடு முழுசும் புகையா கீடக்கு...!” என்று சட்டியைப் பார்த்தவள் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாள்.
“ஏல... பள்ளிக்கூடத்துக்கு போன்னு சொன்னா... இங்க உக்காந்துகிட்டு வீட்டையா கொளுத்தப் பாக்கற...”னு சுள்ளி விறகால முட்டுக்குக் கீழ அம்மா அடி உறிச்சுட்டா. அதற்குள்... வெளியே திபுதிபுவென்று ஓடுகிற சத்தம். கதவை உடைக்கிற சத்தமும். அம்மாவும் பதறியடித்துக்கொண்டு வெளியே ஓட... நானும் வெளியே எட்டிப் பார்த்தேன். எல்லா கூட்டமும் போத்தி வீட்டு வாசலில் நின்று கொண்டு, கத்திக்கொண்டிருந்தனர். எனக்கும், என்னாச்சு என்று பயம் கலந்த ஆர்வம். கூட்டத்தோடு கூட்டமாய் ஓரமாய் நின்றேன்.
போத்தி வீட்டு ஓட்டுப்பிரை வழியாக பழுப்பு நிறத்தில் புகையாய் வந்துகொண்டிருந்தது. எல்லார் முகத்திலும் ஒரு கலவரம். வீட்டுக் கதவைத் தட்டிப்பார்க்கிறார்கள். தள்ளிப் பார்க்கிறார்கள் கதவு திறந்தபாடில்லை. “ஏல போத்தி... கதவைத் திறல...” என்று அவன் அப்பா கெஞ்சலோடு கத்திப் பார்த்தார். ஆனா, போத்தி கதவைத் திறக்கவேயில்லை.
அவன் அப்பா திடீரென்று என்ன யோசித்தாரோ... வீட்டு கொல்லைப்புறம் பக்கம் ஓடினார். கூட்டமும் அவர் பின்னால் ஓடியது. நானும் கூட்டத்தில் ஐக்கியமாயிருந்தேன்.
நல்ல வேளையாக வீட்டு பின் கதவு திறந்துதான் கிடந்தது. எல்லாரும் வீட்டிற்குள் நுழைந்தோம். வீடே புகைமண்டலமாய் இருந்தது. அந்த புகைக்குள் போத்தி கண்ணை கசக்கிக்கொண்டே இன்னும் தீ மூட்டிக்கொண்டிருந்தான். அவன் நிறைய சவ்மிட்டாய் செய்ய பிளான் போட்டிருப்பான் போல. அடுப்புல பெரிய அண்டா இருந்தது. எப்படித்தான் அந்த அண்டாவைத் துõக்கி அடுப்புல வச்சான்னு தெரியல. நான் பிரமிச்சுட்டுப் போயிட்டேன். எல்லாமே சவ் மிட்டாய் தந்த வெறியாத்தான் இருக்கும். நானே கற்பனை செய்துகொண்டேன்.
அவங்க அம்மா... தலையில் அடித்துக்கொண்டு, போத்தியின் அப்பா அடிக்காதவாறு அவனை அணைத்துக்கொண்டாள். “ஏட்டி ஒழுங்கு மரியாதையா அவன வுடு. இல்லாட்டி உன்னையும் கொன்னுபோட்ருவேன்” என்று போத்தி அப்பா விளக்குமாறை துõக்க, பயந்தபடி போத்தியை விட்டு விலகினாள் அவன் அம்மா.
அவ்வளவுதான்... ஒரு அஞ்சு நிமிஷம் மழை பெஞ்சமாதிரி அடி விழுந்தது. போத்தி ‘அய்யோ அப்பா’ என்று கத்தினான். பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம்... “ஏ... பிள்ளைய விடு; இப்படிப் போட்டு அடிக்கற... அவன் ஏதோ விளையாட்டுப்போக்கா ஏதோ பண்ணியிருக்கான். அதுக்குப்போட்டு இப்படியா அடிப்பாங்க...” என்று ஊர் சனம் சொல்ல, “எல்லாரும் வாய மூடிக்கிட்டு வெளியப் போங்க...” என்று கத்திக்கொண்டே மறுபடியும் அடிக்க ஆரம்பித்தார். போத்தி அழுது கூப்பாடு போட்டவாறே என்னைப் பார்த்தான். நானும் அவனை சோகமாய் பார்த்தேன். நல்லவேளை சவ்மிட்டாய்க்கு நான்தான் திட்டம் போட்டுக்கொடுத்தேன்னு ஒரு வார்த்தைக் கூட அவன் சொல்லலை.
ஒரு வழியாய் அடித்து முடித்து ஓய்ந்து போனார், போத்தியின் அப்பா.
கருக்கல் நேரம்... நான் வெளியே தனியாய் நின்று பம்பரம் விட்டுக்கொண்டிருந்தேன். “ஏல... முருகா”ன்னு பக்கத்தில் வந்து நின்றான் போத்தி!
அவனைப் பார்க்க பாவமாத்தான் இருந்தது. “முருகா... பாத்தியா... எங்க ஐயா அடிச்ச அடியில முதுகு, கை கால் எல்லாம் வீங்கி போச்சு.” என்று கை, கால் எல்லாம் காட்டினான். உண்மையாகவே வீங்கிப்போய்தான் இருந்தது.
“ஏம்ல... நம்ம செஞ்சது அவ்வளவு தப்பா? சவ் மிட்டாய் செஞ்சி துட்டு சம்பாதிச்சி நாம தனியாவா வக்கப்போறோம். வீட்லதானே கொடுக்கப்போறோம். அது தெரியாம இவங்க ஏன் இப்படி நடந்துக்கிறாங்கன்னே தெரியலை. ஆனா, ஒன்னு முருகா... நாம செஞ்சது எல்லாம் கரெக்ட்தாமுல. ஆனா, என்ன தப்பு செஞ்சோம்னுதான் தெரியல... பாகு சட்டியில புடிக்க ஆரம்பிச்சுடுச்சு; இதை மட்டும் சரிசெஞ்சிட்டோம்னு வையேன். சவ் மிட்டாய் செஞ்சே நாம பணக்காரனா ஆயிடாலாம்ல...” என்று அம்பானி மாதிரி எனக்கு யோசனை சொல்ல ஆரம்பித்தான் போத்தி.

Thursday, 4 March 2010

வேட்டைக்காரன்!





‘ஏ... மாயாண்டி சுடலைய்ய்ய்யாண்டி...’ என்று கணியான் கூத்து காது சவ்வை பிய்க்காத குறையாய் கத்திக்கொண்டிருந்தது.
“மாப்ள... 8 வருஷம் கழிச்சு நம்ம சுடலைக்கு கொடை வச்சிருக்கோம். சும்மா கிளப்பிரணும்டா...”
“யோவ் மச்சான்... இப்படித்தான் அப்பவும் சொன்னோம்... ஆனா, பாத்தில்ல... என்னாச்சுன்னு பிளான் பண்ணி கொடை நடக்காம பண்ணிட்டான் அந்த பாலு மாமா.”
“ஆமா மாப்ள... தண்ணிய போட்டுக்கிட்டு அவன் சாமியாடி, சேர்ந்தமரம் மயினி கைய புடிச்சு இழுக்கலைன்னா இந்த தகராறு வந்திருக்காது. ஆனா, பாவிப்பய... அப்படியே எஸ்ஸாகி ஓடிட்டானடே... பயபுள்ள, இவன் ஓடினது பத்தாதுன்னு கூட்டத்துல நின்னுக்கிட்டு கிடந்த மிச்ச சொச்ச பேரையல்லாம் உசுப்பேத்திவிட்டு, ஊரே சண்டக்காடாயில்ல கிடந்துச்சு. எட்டு வருஷம் கொடை நடக்காம பண்ணிட்டானே” என்று கவலையில் மூஞ்சி தொங்கிப்போனது.
“ஆனா, பாரு மாப்ள... இந்த வருஷமும் அவன் ஏதாவது கொசர் பண்றதுக்காவே திமிறிக்கிட்டு அலைவான். அவன விட்றக்கூடாதுடே... என்று மாணிக்கம் சொல்ல, ஆமா மச்சான்... இந்தத் தடவை அப்படி ஏதும் வராத அளவுக்கு ஒரு ஏற்பாடு பண்ணி வச்சிருக்கேன்.”
“என்னடே ஏற்பாடு...”
“நீங்களே பாருங்க மச்சான்... சாமக்கொடை முடியறதுக்கு முன்னாடி அது என்னன்னு நீங்களே தெரிஞ்சுப்பீங்க” என்று பீடிகையோடு வேட்டியை உசத்தி மடிச்சிக்கெட்டிட்டு, “ஏல மகராசன்... சாமக்கொடைக்கு சுடலைக்கு கொடுக்க எத்தனை சேவல்டே வந்திருக்கு...!”
“பத்து வந்திருக்குண்ணே... சேர்மாதேவிலயிருந்து மாமா வந்துட்டாங்கன்னா இன்னும் மூணு நாலு கூடும். ஏய் மகராசா... சேவல் ஏதும் திருட்டுப்போயிராமடே... நல்லா பாத்துக்கோ, பக்கத்துலயே உக்காந்துக்கோடே. நைசா லவட்டிக்கிட்டுப் போயிடுவானுக. ஏய்... இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன். நம்ம பாலு மாமா பொண்டாட்டி மட்டும் இந்தப் பக்கம் வராம பார்த்துக்கோ, நாட்டு சேவல், கோயில் சேவல்னு வித்தியாசம்லாம் பாக்க மாட்டா, திருடிட்டு போய் வித்துருவாடே... ஜாக்கிரதை!”
“ஏண்ண... பாலு மாமாவலதான் எட்டு வருஷத்துக்குப் முன்னாடி பிரச்னை வந்துச்சு. பின்ன எதுக்குண்ண மறுபடியும் அவனை கூப்ட்றீங்க... பேசாம அவன ஒதுக்கி வச்சிறவேண்டியதுதானே...”
“சண்ட போட்டாலும், சொந்தம்லாடே... விட்ற முடியாதுல்லா...” சொல்லிக்கொண்டிருக்கும்போதே பாலு மனைவி தங்கம் தலைவிரி கோலமாய் நாக்கைத் துருத்திக்கொண்டு ஓடிவந்தாள்.
அவள் ஓடிவருவதைப் பார்த்ததும், தப்பு அடித்துக்கொண்டிருந்த கணியான் குழுவினர் தாளம் போடுவதை இன்னும் சுதி ஏத்தினர்.
“ம்ம்ம்... எட்டு வருஷம் கொட நடக்காம போச்சே; எனக்கு என்ன குறைன்னு யாராவது கேட்டீங்களா...” என்று நாக்கை துருத்திக்கொண்டு, மொத்த திருநீரையும் முகத்திலும், வாயிலும் போட்டபடி பத்ரகாளியாய் நின்றுகொண்டிருந்தாள் பாலு மனைவி தங்கம்.
“ஏய்... மகராசன் பாத்தில்ல... ஆரம்பிச்சுட்டா... இப்படியே ஆடி ஆடியே கோழி பக்கம் வந்து ஆட்டைய போட்டுருவா, ஜாக்ரதடே... நான் போய் என்ன ஏதுன்னு கேட்டுட்டு வர்றேன்”னு பம்மி பம்மி தங்கத்தை நெருங்கினான் கோபால்.
கோபால் பக்கத்தில் வருவதைப் பார்த்ததும், ஏய்... இவன் குசும்பு புடிச்சவன்லா. ஏதாவது ஏடாகூடமா கேள்வி கேட்பானேன்னு பயந்து வேறு பக்கம் பார்த்து ஆட ஆரம்பித்தாள் தங்கம். கணியான் கூத்து பார்த்துக்கொண்டிருந்த ரெண்டு மூணு பெருசுகளும், இளவட்டங்களும் தங்கம் பக்கத்தில் நின்னு உண்மையிலேயே சாமிதான் வந்திடுச்சோன்னு கண்ணத்தில் போட்டுக்கொள்ள ஆரம்பித்தனர்.
“ஏ... அத்த நில்லு... என்ன வேணும் உனக்கு?” என்று தங்கத்தை பிடித்து உலுக்கினான் கோபால்.
“ஏய்... யாரு கையடே பிடிக்க; நான் யாரு தெரியுமா... நான்தான் இசக்கி வந்திருக்கேன்...! நான் ரொம்ப மனக்கவலையா நிக்கேன்... அங்க பாரு நான் அழறது உனக்கு தெரியல?” என்று கேட்டவாறே... நேர் எதிரில் இருந்த சிலையைப் பார்த்து கையை நீட்டினாள் தங்கம்.
“அத்த முதல்ல கண்ண திறந்து பாரு... உனக்கும் உன் புருஷனுக்கும் இது ஒரு பொழப்பாவே போச்சு” என்று தலையில் அடித்துக்கொண்டான் கோபால்.
“என்னடே உளர்ற...” என்று மெதுவாய் கண்ணை திறந்து பார்த்தாள் தங்கம்.
எதிரில் உக்கிரமாய் நாக்கை துரத்துயபடி, அரிவாளும் கையுமாக சுடலை கம்பீர சிலை பயமுறுத்திக்கொண்டிருந்தது. “இது என்ன பூடம் தெரியுதா... சுடலை. அந்தப் பக்கம் இருக்கு பாரு அதுதான் இசக்கி. பூடம் தெரியாம சாமியாடாத... மொதல்ல போயி மாமாவ வரச்சொல்லு”ன்னு சொன்னதும், அவ்வளவு நேரம் பத்ரகாளியாய் ஆடிக்கொண்டிருந்த தங்கம் சட்டென்று கூந்தலை அள்ளி முடிந்துகொண்டு, “அய்யா சுடலை... மன்னிச்சுக்கோய்யா... தெரியாம உன் மக தப்பு பண்ணிட்டா” என்று கண்ணத்தில் போட்டுக்கொண்டு, என்று சாஸ்தாங்கமாய் மண்டியிட்டு வணங்கியவள், படையல் போடும் இடம் நோக்கி நடந்தாள்.
“ஏய் பாத்தியாடே மகராசன்... சொன்னம்லா... ஆட்டைய போடறதுக்கு எப்படியல்லாம் நடிக்கா பாத்தியா... சரோஜாதேவியல்லாம் மிஞ்சிருவாடே...” என்று கோபால் நக்கலடித்துக்கொண்டிருக்கும்போதே, அங்கிருந்து பாலு வந்துகொண்டிருந்தார்.
“ஏய் பொண்டாட்டி போய்ட்டா; புருஷன் வர்றான்.”
“என்னடே கோவால் எப்படியிருக்க...? இந்த வருஷ கொடைய அசத்திபோடணும்டே... சாமத்துல வேட்டைக்கு போணும்லா. அதுக்குத்தான் கொஞ்சம் பூஜையில இருந்தேன். மேளம் யாருடே... நம்ம ராசுக்குட்டி செட்டா...!” என்று கேட்டதும், “ஆமா மாமா... அவங்கதான்” என்று பவ்யமாய் பதில் சொன்னான் கோபால்.
“என்னடே அவங்க எப்ப பார்த்தாலும், குடிச்சுப்போட்டு தகராறுல்லா பண்ணுவாங்க...” என்று பாலு சொல்லவும், “இல்ல மாமா, இந்த தடவை அப்படியெல்லாம் நடக்காது. இந்த வருஷம் பணகுடியில இருந்து கரகம் ஏற்பாடு பண்ணியிருக்கோம்”.
“ஏய்... சொல்லவே இல்ல பாத்தியா...! யாருடே நம்ம பட்டம்மா செட்டாடே...” கண்கள் என்றும் ஆர்வத்தில் விரிந்தன பாலுவுக்கு.
“ஆமா மாமா...!”
“ஏய்... பிராயத்துப் பசங்க நல்லாதாண்டே யோசிச்சு பண்றீங்க.. செய்ங்கடே செய்ங்க” என்று கடவாய் பல்வரை ஈன்னு இளித்தவர், “ஆமா... கரக செட்டு எங்கடே இருக்கு...”
“நம்ம மகாலிங்க சித்தப்பா வீடு சும்மாதானே கிடக்கு. அங்கதான் கூட்டிக்கொண்டு வச்சிருக்கோம்.”
“சரிடே... நீங்க வேலையெல்லாம் பாருங்க... மாமா ஒரு எட்டு பார்த்துட்டு வந்துட்றேன்.”
“என்ன மாமா இப்படி சொல்லீட்டிங்க... வேட்டைக்கு போற நீங்க அங்கல்லாம் போகலாமா...?”
“யேய்... ரெண்டு மூணு நாளா ஒரே காய்ச்சல். தலை வேற லேசா வலிக்கி. இன்னிக்கு சுடலை புண்ணியத்துல ஏதோ நடமாடிட்டு இருக்கேன். பிராயத்துப் பசங்க யாராவது பொருப்ப எடுத்துக்கிட்டு வேட்டைக்குப் போங்கடே... நமக்குத்தான் வயசாயிடுச்சுல்லா... பொறுப்பை யார்ட்டயாவது கொடுக்கணும்லா. சரியா... புரிஞ்சிக்கோங்கடே...” நான் ஒரு எட்டு போயிட்டு வந்துட்றேன்...” என்று இடுப்பில் கட்டியிருந்த துண்டை எடுத்து மைனர்போல் தோளில் தோங்கப்போட்டுக்கொண்டு, மகாலிங்கம் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
“மாமாவ எப்படி அனுப்புனேன் பாத்தியாடே மகராசன்.”
“என்னண்ணே ... கரகம் ஏற்பாடு பண்ணியிருக்கீங்களோ... என்ட்ட சொல்லவே இல்ல பாத்தீங்களா...?”
“இல்லடே தம்பி... எல்லாமே ஒரு டூப்பு. மகாலிங்கம் வீட்டுக்கு பக்கத்துல... நம்ம தென்காசி மாமா பசங்கள நிக்க வச்சிருக்கேன். இவரு வர சேதிய அவங்ககிட்ட போன் பண்ணி சொல்லிடுவேன். அவங்க இவரு சாமக்கொடை வரை கோயில் பக்கம் வராத மாதிரி பாத்துக்கிடுவாங்க...” என்று ஏதோ சாதிச்சது போல் சிரித்தான் கோபால்.
பதிலுக்கு சிரித்துக்கொண்டே சேவல் கிடையை பார்த்த மகராசனுக்கு அதிர்ச்சி. மூணு சேவல் மிஸ்சிங். “கோபால்ண்ணே... சேவல் போச்சுன்னே...” என்று கத்தியதும், கோபாலின் கண்கள் கோவில் முழுவதும் தேட ஆரம்பித்தது. பாலு மனைவி தங்கமும் காணாமல் போயிருந்தாள்.