Tuesday, 10 January 2012

அஸ்ஸாம் முகா பட்டு!





ஒரு நாட்டின் கலாசாரம் என்பது அந்த நாட்டின் பேசும் மொழி, சடங்குகள், அணியும் ஆடைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், உறவுமுறைகள், சாஸ்திரங்கள் இப்படி அனைத்துவகையான அம்சங்களின் ஒட்டுமொத்த கலவைதான்.  இந்தியாவை பொருத்தவரை விருந்தோம்பல், ஒருத்தனுக்கு ஒருத்தி எனும் விஷயங்கள்தான் இன்றுவரை கலாசார அடையாளங்களாக சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
திருநெல்வேலி என்றால் அல்வா, திண்டுக்கல் என்றால் பூட்டு, மணப்பாறை என்றால் முறுக்கு என்று மாவட்டங்களைச் சொன்னதும் அதன் அடையாளங்கள், பெயரை ஒட்டியே சொல்கிறோம் அல்லவா? அதேபோல இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும், அதை அடையாளப்படுத்தும் ஒவ்வொரு சிறப்பு விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் இந்த இதழில் நாம் பார்க்கப்போகும் மாநிலம், அஸ்ஸாம். இந்தியாவின் வட கடைக்கோடிக்கு அருகே இருக்கும் இந்த மாநிலத்தின் பெயரைச் சொன்னவுடன் நமக்கு எல்லாம் நினைவுக்கு வருவது டீ. சர்வதேச அளவில் டீ உற்பத்தியில் இந்தியா முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பதற்கு காரணம் அஸ்சாமில் உற்பத்தி செய்யப்படும் டீயை குறிப்பிடலாம். அஸ்ஸாம் என்றாலே டீ என்று சொல்லும் நமக்கு அஸ்சாமின் கலாசார அடையாளமாக இருக்கும் முகா பட்டுப்புடவையைப் பற்றி யாரும் அவ்வளவு பெரிதாக தெரிவதில்லை. ஆனால், டீ யை விட கலாசாரத்திலும், அம்மாநில மக்களின் கௌரவக் குறியீடாகவும் விளங்குவது முகா எனும் பட்டு ரகம்தான் என்று சொன்னால் பலருக்கும் வியப்பாகத்தான் இருக்கும்.
தமிழ்நாட்டில் திருமணம், அதுவும் காஸ்ட்லி திருமணம் என்றால் யாரும் காஞ்சிபுரம் பட்டுப் புடவையை  விட்டுக்கொடுப்பதில்லை. அதுபோலத்தான் அஸ்ஸாம் முகா பட்டும். சர்வதேச சந்தையில் அஸ்சாமின் முகா பட்டுக்கு ஏக டிமாண்ட் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
தகதகவென ஜொலிக்கும் தங்க நிறம்தான் முகா பட்டுக்கான அடையாளம். முகா என்றால் மஞ்சள் நிறம் என்று பொருள். இந்தப் பட்டுப் புடவை முற்றிலும் தங்க நிறத்தில் ஜிகுஜிகுவென்று ஜொலிப்பதால்தான் இந்தப் பட்டுக்கு முகா என்று பெயர் வந்ததாம். நம்ம ஊர் பெண்கள் பட்டுப்புடவைகளை துவைப்பது என்பதே அரிது. ஏனென்றால், துவைத்தால் சாயம் போய்விடும். ஜரிகை புடவையில் இருந்து  வந்துவிடும். துவைக்க துவைக்க பழைய பட்டுப்புடவை போன்று தோற்றமளிக்கும் என்று பயந்தே பல பெண்கள் பட்டுப் புடவைகளை துவைக்காமலும், அணிந்துகொள்ளாமலும் வாங்கிய பட்டுப் புடவைகளை அப்படியே பத்திரப்படுத்தியே அழகு பார்ப்பார்கள். ஆனால், இந்த மாதிரி சமாச்சாரங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதுதான் முகா. இந்தப் பட்டுப்புடவையை துவைக்க துவைக்க இதன் அழகு கூடும். அதேபோல எத்தனை முறை துவைத்து துவைத்து அணிகிறோமோ, அதற்குத் தகுந்தார்போல் புதுப் புடவை போன்று காட்சியளிக்குமாம். பட்டு நூல்களுக்கெல்லாம் ராணி என்று புகழப்படும் முகா பட்டு, இந்தியாவின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில்தான் முதன்முதலில் அடையாளப்படுத்தப்பட்டது. அதற்குப்பிறகுதான் இந்த முகா பட்டு அஸ்ஸாமின் பாரம்பரிய சின்னமாக திகழ்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 200 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை தாங்கத்தக்க இந்த பட்டு ரகம், 85 சதவீத புறஊதாக் கதிர்களை உறிஞ்சும் தன்மை கொண்டதாம். கோடைக்காலத்திற்கு மட்டுமல்லாமல், குளிர்காலத்திலும் இந்தப் பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டால், சுகமாக இருக்கும் என்கிறார்கள் அஸ்ஸாம் வாசிகள்.
முகா பட்டுப்புடவையின் முதல் தரம் வெண்மை நிறத்தில் இருக்கும். வெண்மை நிற முகா பட்டுப் புடவைக்கு சர்வதேச பட்டு சந்தையில் எப்போதும் பெரும் வரவேற்பு உண்டு.
முகா பட்டு நூல் அன்ந்திரியா அஸ்ஸாமினிஸ் என்ற பட்டுப் புழுவிலிருந்து எடுக்கப்படுகிறது. இந்த வகையான புழு அஸ்ஸாமில் மட்டும்தான் வாழ்வது குறிப்பிடத்தக்கது. இந்தப் புழுவின் முட்டைப் பருவத்திற்கு அடுத்தப் பருவத்தில் மட்டும் இரண்டு மி.மீ. அளவுக்கு பட்டு நூல் எடுக்க முடியுமாம். ஆனால், இதை சரியாக வளர்க்கும்பட்சத்தில் ஒரு பட்டுப் புழுவிடம் இருந்து மட்டும் 30 மி.மீ. நீளம் வரை பட்டு நூல் எடுக்கமுடியும். இந்த அத்தனை சமாசாரங்களும் நடப்பது வெறும் எட்டு நாட்கள்களில் என்றால் வியப்பாக இருக்கிறதுதானே.
அதுமட்டுமல்லாமல் 1000 பட்டுப் புழுவிலிருந்து 125 கிராம் பட்டு நூலை எடுக்க முடியுமாம். இதை வைத்துக்கொண்டு 750 கிராம் முதல் 1 கிலோ வரையிலான பட்டுப் புடவை தயாரிக்க முடியும் என்கிறார்கள், முகா பட்டு நெசவாளர்கள். அதுமட்டுமல்லாமல் இந்தப் பட்டு நூலும் ஜூலை - ஆகஸ்ட், செப்டம்பர் - அக்டோபர் மற்றும் நவம்பர் - டிசம்பர் உள்ளிட்ட குறிப்பிட்ட மாதங்களில் மட்டும்தான் புழு உற்பத்தி செய்யும். இதில் முதல் இரண்டு மாதங்களில் கிடைக்கும் பட்டு நூல்தான் தரத்திலும் நிறத்திலும், உயர்ந்ததாக இருக்கும். இந்த நூலுக்குத்தான் உலக பட்டுச் சந்தையில் அதிக விலை. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் முகா பட்டுப் புடவைக்கு எப்போதும் தனி மவுசுதான். ஜப்பான் நாட்டில் இப்போது வரை முகா பட்டு நூலை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் நெசவாளர்கள்.
உலக அளவில் பட்டுநூல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த உற்பத்தியில் 90 சதவீதம் அஸ்ஸாமில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் இந்தியாவில் உற்பத்தியாகும் பட்டுநூல் மட்டும் 22 ஆயிரம் டன். இவ்வளவு உற்பத்தி செய்தும் நம் நாட்டில் பட்டு நூல் தேவை இருப்பதால், தற்போது சீனாவிடம் இருந்து 8ஆயிரம் டன் பட்டு நூல் இறக்குமதி செய்தகொண்டிருக்கிறோம். சீனா மட்டுமல்லாமல், உஸ்பெகிஸ்தான், பிரேசில்,வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்தும் தற்போது பட்டுநூல் இறகக்குமதி செய்துகொண்டிருக்கிறோம். பட்டுவர்த்தகம் மூலம் மட்டும் இந்தியா கடந்த ஆண்டில் சம்பாதித்த வருமானம் ரூ.2,600 கோடி என்கிறார் முகா பட்டு நூல் உற்பத்தியாளர் மேனன்.
சாதாரண மஞ்சள் நிற பட்டுத் துணி, இந்தியாவை சர்வதேச சந்தையில் கவுரவப்படுத்துகிறது என்றால், முகாவை நினைத்து பெருமைப்பட்டுத்தானே ஆகவேண்டும்!



நாய்க்கு சிலை எழுப்பிய வீர சிவாஜி!






இன்றைய செய்தி நாளைய வரலாறு என்று சொல்வார்கள். ஆனால் கடந்த காலங்களில் நம் தேசத்தில் ஆண்ட மன்னர்கள் ஆட்சி நடத்திய பகுதி, அவர்கள் வணங்கிய கோயில், அவர்கள் வசித்த கோட்டை.. இப்படி அவர்களின் வரலாற்றைச் சொல்லும் அடையாளங்கள் இன்னும் நம்மிடைய இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
அவர்கள் விட்டுச்சென்ற வரலாற்று அடையாளங்கள் இன்று கூட நமக்கு பிரமிப்பின் உச்சக்கட்டம்தான். இவ்வளவு பெரிய மாளிகையை எப்படி கட்டியிருப்பார்கள். இவ்வளவு பெரிய மாளிகையிலா குடியிருந்தார்கள். இவ்வளவு பெரிய கற்களை எல்லாம் எப்படி தூக்கியிருப்பார்கள்  என்று பார்க்கும் ஒவ்வொரு அடையாளங்களும் நமக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பாமல் இல்லை. ஆனால், ஒவ்வொரு வரலாற்று அடையாளங்களும், இன்று நமக்கு  வாழ்க்கையின் பல்வேறு சூட்சுமங்களை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறது என்பதை புத்தகத்தில் வரும் புகைப்படங்களையோ தொலைக்காட்சியில் வரும் காட்சித் தொகுப்புகளை  வைத்தோ புரிந்துகொள்ள முடியாது. அத்தகைய வரலாற்று அடையாளங்களை நேரில் போய் பார்க்க வேண்டும். நேரில் சென்று பார்வையிடுவதற்கும், அந்த வரலாற்றுப் பொக்கிஷங்கள் குறித்த கூடுதல் தகவல்களையும்தான் இந்தத் தொடரில் வரும் இதழ்களில் பார்க்கவிருக்கிறோம். எல்லாருக்கும் பரிட்சயமான, கேள்விப்பட்ட இடங்களைத்தான் நாங்கள் இந்தப் பகுதியில் சொல்லவிருக்கிறோம். ஆனால், இதுவரை நீங்கள் பார்க்காத புகைப்படங்கள், நீங்கள் கேள்விப்படாத புது தகவல்களை நாங்கள் இங்கு தொகுத்திருக்கிறோம். வாருங்கள்.. வரலாறை ருசிப்போம்.
மராட்டிய மாநிலம் என்று சொன்னவுடனேயே மகாவீரர் சத்ரபதி சிவாஜியும். அவர் சிறுவயதாக இருக்கும்போது, அவருக்கு வீரக்கதைகளை சொல்லி வளர்த்த அவர் தாய் புத்திலிபாய் பெயரும்தான் நமக்கு ஞாபகம் வரும். அப்படிப்பட்ட வீரரின் வாழ்க்கையை பறைசாற்றும் வகையில் இன்றுவரை கம்பீர தோற்றத்தில் காட்சியளிக்கிறது சிவாஜியின் தலைநகராகத் திகழ்ந்த ராய்கட் மலைக்கோட்டை. கிட்டத்தட்ட 350 ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட இந்த மலைக்கோட்டை, சீனப் பெருஞ்சுவரின் மினியேச்சர் என்று கூட சொல்லலாம்.
மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையில் இருந்து தெற்காக 210 கி.மீ., தொலைவில், சஹாயத்ரி மலைப் பகுதியில், ஈட்டி வடிவ பாறைகளின் மீது 5.12 சதுர கிலோமீட்டர் பரப்பில் விரிந்து பரந்துள்ளது ராய்கட் கோட்டை. ஆரம்பத்தில் ரெய்ரி என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப் பகுதியை கி.பி.1656ஆம் ஆண்டு கைப்பற்றிய சிவாஜி ராய்கட் என்று புதுப்பெயர் சூட்டினார். நண்பர்கள் எளிதாக வரும் வகையிலும், எதிரிகள் நுழைய முடியாதபடியும், கோட்டையை அமைக்க வேண்டும் என்று ராஜதந்திர நோக்குடன் சிவாஜி அளித்த உத்தரவுப்படி அபாஜிசோன்தேவும் ஹிரோஜி இந்துல்கரும், ஒரே ஒரு குறுகிய வழிப்பாதை கொண்ட இந்த கோட்டையை உருவாக்கினார்.
வரலாற்று சிறப்புமிக்க சத்ரபதி சிவாஜியின் பட்டாபிஷேகம் கி.பி.1674ல் இங்குதான் நடந்தது. இதே கோட்டையில்தான் 1689ல் சிவாஜி மரணமடைந்தார். சிவாஜியின் மகன் சாம்பாஜியிடம் இருந்து இந்த கோட்டையை 1689ல் முகலாயர்கள் கைப்பற்றினர். பின்னர், 1818ஆம் ஆண்டில் இதை பிரிட்டிஷார் கைப்பற்றினர்.
கோட்டைப் பகுதியில் பிரமாண்டமான சுற்றுச்சுவர்கள், அரண்மனைகள், சிவாஜி வழிபட்ட ஜகதீஸ்வரர் கோயில், தர்பார் மண்டபம், அரியணை, பெண்களுக்கான அரண்மனைகள், எதிரிகளைக் கண்காணிக்க வசதியாக 12 மாடிகள் கொண்ட கோபுரங்கள், பாதாளச் சிறைகள், சந்தைப் பகுதி கட்டடங்கள், நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றின் சிதிலங்கள் இந்திய வரலாற்றின் மகத்தான காலகட்டத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
அரசவைப் பெண்கள் வருவதற்காகவும், அரசக் குடும்பத்து பெண்கள் வருவதற்காகவும் இந்தக் கோட்டையில் சிறப்பு வழி அமைக்கப்பட்டிருக்கிறது, மீனா தர்வாஜா என்ற பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நுழைவாயிலை ஒட்டி 6 முக்கிய அறைகள் இருக்கின்றன.ஒன்று சிவாஜியின் தாயான புத்தலி பாயுக்கும் மற்றும் உள்ள ஐந்து அறைகள் அரசக் குடும்பத்து மகளிர்கள் தங்குவதற்கும் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
ராணி தர்வாஜாவின் முன் பகுதியின் பால்கி தர்வாஜா அமைந்திருக்கிறது. இது மகாராஜா சிவாஜி வந்து செல்வதற்கான நுழைவாயிலாக அமைந்திருக்கிறது. அந்த நுழைவாயிலை ஒட்டி 8 அறைகள் இருக்கின்றன. இந்த எட்டு அறைகளும் அரண்மனையின் தானியக் கிடங்குகளாக இருந்திருக்கலாம் என்கிறார்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். தானியக் கிடங்குகளுக்கு வலது புரத்தில்தான் சிவாஜி மகாராஜாவின் கோட்டை ஆரம்பிக்கிறது. ராஜ் பவன் என்று அழைக்கப்படும் இந்தப் பகுதிதான்  அன்றைய சிவாஜி மகாராஜாவின் சந்தோஷம், துக்கம், வெற்றி, தோல்விகள், சட்டம் இயற்றும் இடமாக இருந்திருக்கிறது. அதற்கான அடையாளங்கள் இன்னும் மிச்ச சொச்சத்தை நேரில் சென்றால் காணலாம்.
ராஜ்பவன் கோட்டையின் உட்புறத்தில் மிகப்பெரிய தண்ணீர் தொட்டிகள் இருக்கின்றன. சத்ரபதி சிவாஜி குளிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த அந்த தொட்டிகளின்  அருகே அன்றைய காலத்தில் அமைக்கப்பட்டிருந்த மிக  நவீன கழிவறைகளும் இருக்கின்றன. ராஜ் பவனின் கிழக்குப் பகுதியில் பாதாள அறைகள் இருக்கின்றன. இதில்தான் சிவாஜி தன் போர்த் திட்டங்களை முக்கிய தளபதிகளுடன் விவாதித்ததாகவும், தன்  இஷ்ட மாதாவான பவானி தெய்வத்தை அங்குதான்  வழிபட்டதாகவும், சூரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை இங்குதான் சிவாஜி மறைத்து வைத்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த மலைக்கோட்டையின்  சிறிது தொலைவில் உள்ள சித் தர்வாஜா கிராமத்தில் சிவாஜியின் தாய் ஜீஜாபாயின் சமாதி உள்ளது. கோட்டைக்குள் சிவாஜியின் சமாதி உள்ளது. கோட்டைக்குள் ஒரு ஆச்சர்யம். சிவாஜி வாக்யா என்ற பெயரில் ஒரு நாயை வளர்த்தார். இந்த நாய் என்றால் சிவாஜிக்கு கொள்ளைப் பிரியமாம். திடீரென்று இந்த நாய் இறந்துவிட ரொம்பவே சோர்ந்துவிட்டாராம். நாயின்  பிரிவை தாங்க முடியாதவர், தான்  தினமும் விழித்தவுடன் தன் செல்லப்பிரானியான வாக்யாவின் முகத்தில்தான் விழிக்கவேண்டும் என்பதற்காகவும், அதன் ஞாபகர்த்தமாகவும் வாக்யாவின் தத்ரூப சிலையை அரண்மனை சிற்பியின் மூலம் செய்தார். வாக்யாவின் சிலையும் இந்த மலைக்கோட்டையில் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது.


Saturday, 26 November 2011

ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இன்டீரியர் டெக்கரேஷன்!





 ஆரம்பம் ஒன்று இருந்தால் முடிவு ஒன்று இருக்கத்தானே செய்யும். அந்த ஆரம்ப ரகசியம் என்ன என்பதுதான் இப்போதைக்கு எல்லோருடைய தேடலும். இதுதான் முடிவு என்று எதையும் சொல்லிவிடாதபடிதான் மனிதர்கள் குறித்த நம் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சொல்கின்றன. தொடக்க காலத்தில் மனிதன் எப்படிப்பட்டவனாக இருந்திருப்பான்? தற்போது பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கும் இதே இயல்புடன்தான் ஆதிமனிதன் இருந்திருப்பானா? அல்லது நம்மைவிட திறமைசாலிகளாகவும், அதி புத்திசாலிகளாகவும் இருந்திருப்பானா? என்ற தேடல்கள் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒவ்வொரு நொடியும் நடந்துகொண்டிருக்கின்றன.
 தற்போதைய மனிதனின்  ரசனைத்தன்மையும், ஆதிமனிதனின் ரசிப்புத் தன்மையும் எப்படி இருந்தது என்பது குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைதான் இது. ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் ரசனைக்குத் தகுந்தவாறு வீட்டை அமைத்திருப்போம். வரவேற்பரை ஆரம்பித்து, வீட்டு சமையல் அறை உள்பட அனைத்து அறைகளிலும், தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு அறைகளை அழகுப்படுத்தி பார்ப்பது மனிதனுடைய இயல்பு. இந்த இயல்பு நம் முன்னோர்களுக்கு இருந்திருக்குமா? இருந்திருக்கும் ஆனால், கொஞ்சம் குறைச்சலாக இருந்திருக்கும். ஏனெனில் இப்போது இருக்கும் வசதிவாய்ப்புகள் அப்போது இல்லையே! என்றுதான் நம் மனம் சொல்லும். ஆனால், நாம் நினைப்பது முற்றிலும் தவறு. நம்மைவிட வீட்டை அழகுப்படுத்துவதில் நம்மைவிட ரசனைத்தன்மையும், ரசிப்புத் தன்மையும் நம்மைவிட அதிகமாகவே இருந்திருக்கிறது. அந்த நாடு இந்த நாடு என்று ஆராய்ச்சியை நோக்கியே நாம் செல்லவேண்டாம்.
நாம் தினமும் வணங்கும் கோயிலுக்குச் சென்று பாருங்கள். நம் முன்னோர்களின் ரசிப்புத் தன்மை தெரியும். கரிகாலன் கட்டிய கல்லணை ஆரம்பித்து, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் வரை மலைக்கத்தானே செய்கிறது. இந்த அளவு தொழில்நுட்பம் அப்போது இல்லை. இந்த அளவுக்கு வாகன வசதிகளோ, நவீன கருவிகள் இல்லாதபோது, அவ்வளவு பெரிய கல்லணையும், இவ்வளவு பிரமிக்க வைக்கும் கோயிலை அவர்களால் கட்ட முடிந்திருக்கிறது. இடி, மின்னல், பல இயற்கைச் சீற்றங்களைத் தாண்டி இன்னும் அவர்களின் கட்டடக்கலையை நாம் ரசித்துக்கொண்டிருக்கிறோம் என்றால் நம்மைவிட அறிவியலில் சிறந்தவர்களாத்தானே இருக்க முடியும். ஆனால், இன்று அதைப்போல் ஒன்றுகூட நம்மவர்களால் அமைக்க முடிவதில்லையே. இந்த விஷயங்களை மட்டும் ஒப்பிட்டு பார்க்கும்போது, நம்முடைய ரசிப்புத் தன்மையுடைய நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த நம் முன்னோர்கள் ரசிப்புத் தன்மையும், அறிவியல் அறிவும் நம்மைவிட அதிகமாக பெற்றிருந்திருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.
வாழ்க்கையின் சூட்சுமத்தையும், இல்லறத்தின் ரகசியத்தையும், ஒரு சில சிற்பங்களால் காட்டத் தெரிந்திருக்கிறது என்றால் நம்மைவிட எல்லா விஷயத்திலும் அறிவுப்பூர்வமானவர்களாகத்தானே இருந்திருக்கவேண்டும். இம்மாதிரியான பல கேள்விகள்தான்  ஆராய்ச்சியாளர்களின் மண்டையையும் குடைந்துக்கொண்டிருக்கிறது. விஞ்ஞானத்திலும், அறிவியலிலும் நம்மைவிட நம் முன்னோர்கள் விஞ்சியவர்களா என்பதை தெரிந்துகொள்வதைவிட அவர்களின் ரசிப்புத் தன்மையை மட்டும் சரியாக கணித்துவிட்டால், அவர்களின் அறிவியல் அறிவை எளிமையாக கண்டுபிடித்துவிடலாம் என்பதுதான் அறிவியலாளர்களின் கருத்து. அந்த அடிப்படையில்தான்  அந்த ஆராய்ச்சியும் நடந்தது.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க்கில் அமைந்துள்ளது விட்வாட்டர்ஸ்ட்ராண்ட் எனும் பல்கலைக்கழகம் இந்த பல்லைக்கழகத்தில் மனிதனின் ரசனை குறித்த ஆராய்ச்சிக் குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்தது பேராசிரியர் கிறிஸ்டோபர் ஹென்சில்வுட் தலைமையில் அமைந்த  ஆய்வுக்குழு. மனிதன் ரசிப்புத் தன்மை நவீன காலத்தில்தான் அதிகம். ஆதி மனிதர்களுக்கு நம்மைவிட ரசிப்புத் தன்மை குறைவுதான் என்பதுதான் இவர்களின் ஆய்வுக்கான அடித்தளம். இதுசம்பந்தமான ஆய்வுக்கான பயணத்திற்கு கிறிஸ்டோபர் கிளம்பும்போதே இன்று தனக்கான விடை கிடைத்துவிடும் என்று அதிதீவிர நம்பிக்கையுடன் தன் சகாக்களுடன் பயணித்தார். தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுண் பகுதிக்கு அப்பால் காடும், மலையும் சூழ்ந்த பகுதியை அவர்கள் நெருங்கியிருந்தார்கள். இருள் சூழ ஆரம்பித்திருந்தது. அந்த அடர்ந்த காட்டின் உள்ளே உள்ள குகைகள்தான் இவர்களின் ஆராய்ச்சிக்கான பகுதி. அதைத் தேடித்தான் அவர்கள் பயணித்துக்கொண்டிருந்தார்கள். இருள் சூழ ஆரம்பித்திருந்ததால், மறுநாள் காலை பயணத்தை தொடர்ந்துகொள்ளலாம் என்று கிறிஸ்டோபர் சொல்ல  மற்றவர்களும் ஆரம்பித்தார்கள். கூடாரத்தை அமைக்க முற்படும்போது, குழுவின் இருந்த ஒருவர் தூரத்தில் ஒரு குகை தெரிவதுபோல் இருக்கிறது. இங்கு கூடாரம் அமைத்து தங்குவதற்கு அங்கு போய் ஓய்வு எடுக்கலாமே என்று சொல்ல, ஆய்வுக் குழுவினர் அந்த குகையை அடைந்தார்கள்.
கும்மென்று இருட்டு. வவ்வால்களின் சத்தம், வண்டுகளின் ரீங்காரத்தைத் தவிர நிசப்தமாக இருந்தது அந்தப் பகுதி. கொண்டு வந்த விளக்குகள் உதவியுடன் படுத்து உறங்குவதற்கான பணிகளை குழுவினர் மேற்பார்வையிட கிறிஸ்டோபர் தன்  கையில் வைத்திருந்த டார்ச் விளக்கின் ஒளியை குகையின் மேற்புறச் சுவற்றின் மேல் பாய்ச்சினார். கரடுமுரடாக இருந்த கற்களுக்கு ஊடே சிவப்பும் கறுப்புமாக நெளிவு சுளிவுகளாக கோடுகள். இது ஆதிமனிதன் விட்டுச்சென்ற மனிதர்களின் ரசனை வடிவங்கள் என்று அப்போது அவருக்கு தெரியவில்லை. அசதியில் படுத்து தூங்கிவிட்டார்கள். பொழுது புலர ஆரம்பித்தது. ஓரளவு குகைக்குள்  சூரிய வெளிச்சம் ஊடுருவ ஆரம்பித்திருந்தது. டக்கென்று விழிப்புத் தட்டியது கிறிஸ்டோபருக்கு. உடனடியாக லென்சும், பிரஷ்ஷும் சகிதமாக குகையின் மேற்புறத்தை நோட்டமிட ஆரம்பித்தார். நிச்சயமாக ஆதி மனிதனின் கைவண்ணம்தான் என்று ஊர்ஜிதப்படுத்திக்கொண்டார். குகையின் படிகத்தை எடுத்து ஆராய்ச்சிக்கு அனுப்பியபோது, அது ஒரு லட்சம் ஆண்டுக்கு முந்தையது என்பது கிறிஸ்டோபருக்கு தெரியவந்தது. ஆச்சர்யம் தாங்கவில்லை கிறிஸ்டோபருக்கு. ஒரு லட்சம் ஆண்டுக்கு  முந்தைய மனிதர்கள் இப்படி ஒரு ஓவியம் எப்படி வரைய முடிந்தது என்பதுதான் அவருக்கு ஏற்பட்ட ஆச்சர்யத்திற்கு காரணம். ஓவியத்தில் அப்படி ஒரு நுணுக்கம். இப்படி ஓவியம் வரைய தனிப்பட்டக் கருவிகள் பயன்படுத்தியிருக்கவேண்டும். ஓவியத்திற்கான கலவைகள் எப்படி தயாரித்திருப்பார்கள் என்பது போன்ற விஷயங்கள் கேள்விகளாக கிளம்பவே குகைகளைச் சுற்றி தொடர் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. விலங்குகளின் கூறிய எலும்புகள், கற்களின் கூழ் இவற்றைப் பயன்படுத்தி வரையப்பட்ட ஓவியங்கள் என்பதற்கு அகழ்வாராய்ச்சியில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் அந்த அதிசய மக்கள் எச்சம் சொச்சமாக கிடைத்தது சின்ன சின்ன அடையாளங்கள் கிடைத்தது கிறிஸ்டோபருக்கு.
ஆய்வின்  கடைசியில் கிடைத்தது, ஆதி மனிதர்கள் வாழ்ந்த பிளாம்போஸ் குகைதான் அது. அவர்கள் பல ஆண்டுகள் தன் வாரிசுகளுடன்  வாழ்ந்த பகுதியாகத்தான் அது இருந்திருக்க வேண்டும். தாங்கள் வாழ்ந்த பகுதியை கலைவண்ணத்துடன் இருக்கவேண்டும் என்று அவர்கள் செய்த இண்டீரியர் டெக்கரேஷன்தான் அந்த ஓவியங்கள் என்பதுதான் கிறிஸ்டோபரின் அளித்த ஆய்வறிக்கையின் முடிவு. நம்மைவிட சிறந்த வகையில் யோசித்திருக்கிறார்கள். இருக்கும் உபகரணங்களை எப்படி வேறு வகைகளில் பயன்படுத்தலாம் என்று அவர்களுக்கு யோசிக்கத் தெரிந்திருக்கிறது என்பதுதான் கிறிஸ்டோபரின் ஆய்வு முடிவு.
இதுவரை நாம் பார்த்த ஆராய்ச்சிகளும், ஆராய்ச்சி முடிவுகளும் சொன்ன விஷயம்தான் இந்தக் கட்டுரையும் சொல்கிறது. விஞ்ஞானமும், அறிவியலும், உச்சத்தைத் தொடாத ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்கூட்டிய அந்த ஆதிமனிதர்கள் கலைநயமும், ரசனைத்தன்மையும் மிக்கவர்களாக இருந்திருக்கும் பட்சத்தில் நம்மைவிட நிச்சயமாக அறிவுஜீவிகளாகத்தானே இருந்திருக்க முடியும். ஆனால், அவர்களை விட அறிவிலும், சிந்தனையிலும் நாம் பின்தங்கியிருப்பதற்கு காரணம் வளர்ச்சியடைந்த அறிவியலாலா? கேள்விகளுக்கான பதிலைத்தேடி ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

Friday, 25 November 2011

ஜாதகப்படி நோய் தீருமா...?

பொதுவாக ஜோதிடத்தின் நம்பிக்கை இல்லாதவர்கள் எங்கோ வெகுதொலைவில் இருக்கின்ற கிரகங்கள் மனித வாழ்க்கையை எப்படி பாதிக்கும் எதற்காக அது ஒருவனுக்கு நன்மையையும் இன்னொறுவனுக்கு தீமையும் செய்யவேண்டும் என்று கேட்பார்கள் அந்த கேள்வி சரியானதாகவும் நமக்கு தோன்றும் 

ஆனால் ஒருவிஷயத்தை மிக சுலபமாக நாம் மறந்துவிடுகிறோம் பூமி மேல்பரப்பின் மீது உயிர்கள் ஒட்டிக் கொண்டிருப்பதற்கும் அயன வெளியில் கிரகங்கள் ஒழுங்கு முறையில் சுற்றுவதற்கும் கண்ணுக்கு தெரியாத ஒரு வித ஈர்ப்பு சக்தி காரணமாக இருக்கிறது என்று விஞ்ஞானம் சொல்வதை நாம் அறிவோம் 

பூமியில் உள்ள தாவரங்கள் ஒளி சேற்கையினால் தங்களது உணவை தாங்களே சமைத்து கொள்வதை விஞ்ஞானம் ஆதார பூர்வமாக நிறுபித்து காட்டுகிறது சூரிய ஒளியை சின்னஞ்சிறிய செடிகள் எப்படி ஈர்த்து கொள்கிறதோ அதற்கு எந்தவிதமான சக்தி தாவரங்களுக்குள் மறைந்திருந்து செயலாற்றுகிறதோ அதே போன்ற சக்தி அல்லது அதை விட சற்று மேம்பட்ட சக்தி மனித சரீரத்துக்குள்ளும் மறைவாக இருந்து செயலாற்றுகிறது 

அப்படி பட்ட மறைபொருளான ஈர்ப்பு சக்தி கிரகங்களின் சுபம் மற்றும் அசுப தன்மைகளை மனிதனுக்குள் கொண்டு வந்து பல காரியங்களை செய்கிறது செய்விக்கிறது சரி அப்படி செய்வதாக இருக்கட்டும் எதனால் இந்த கிரகங்கள் மனிதனுக்கு நல்லதையும் கெட்டதையும் செய்ய வேண்டும் அதன் மூல காரணம் என்ன என்ற அடுத்த கேள்வி நம் மனதிற்குள் எழும்பும் 

இந்த இடத்தில் நமது விஞ்ஞான புத்தியை சற்று தூரவைத்து விட்டு மெய்ஞானத்தை நாட வேண்டும் உலகில் வேறு எந்த மதமும் சொல்லாத அல்லது அறியாத கர்ம கொள்கையை நமது இந்து மதம் சொல்கிறது இந்த கர்ம கொள்கைக்கு எளிமையான விளக்கம் சொல்ல வேண்டுமென்றால் ஒரு செயலுக்கான பலனை பெறுவது என்று சொல்லலாம் அதாவது நன்மை செய்தால் நன்மையான பலனும் தீமை செய்வதினால் தீமையான பலனும் அடைவது இதன் அடிப்படையாகும் 

மனிதன் தனது வாழ்நாளிலும் வாழ்வுக்கு முந்தைய நாளிலும் நல்லதும் கெட்டதுமாக பல செயல்களை செய்கிறான் அதனுடைய விளைவுகளையும் வாழ்நாளை தாண்டியும் அனுபவிக்கிறான் அப்படி என்றால் நன்மை செய்தவனுக்கு நன்மையையும் தீமை செய்தவனுக்கு தீமையும் வகையறிந்து வழங்க சக்தி மிக்க நீதிபதி வேண்டும் அந்த நீதிபதியை தான் ஆத்திகன் கடவுள் என்கிறான் நாத்திகன் இயற்க்கை என்கிறான் 

நீதிபதியின் தீர்ப்பை செயல்வடிவம் படுத்த சில புறக்கருவிகள் வேண்டும் அதே போலவே கடவுளின் தீர்ப்பையும் மனிதனுக்கு கொண்டுவந்து சேர்க்க சில புறக்கருவிகள் தேவைபடுகிறது இந்த் இடத்தில் தான் ஜோதிட சாஸ்திரம் நுழைகிறது கடவுளின் தீர்ப்பை செயல்படுத்தும் கருவிகளே கிரகங்கள் என்கிறது அதாவது கர்மாவின் பயனை மனிதனுக்கு நேரடியாக கொடுப்பது கிரகங்கள் தான் 

இதன் அடிப்படையில் பார்க்கும் போது மனிதன் அனுபவிக்கும் எல்லாவிதமான அனுபவங்களுக்கும் கிரகங்கள் என்பது கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் காரணமாக இருக்கிறது அதாவது மனிதனுக்கு நோய் வருவதற்கும் விலகுவதற்கும் கூட கிரகங்கள் காரணமாக இருப்பதை அனுபவ பூர்வமாக உணரலாம் 

சின்னஞ்சிறிய குழந்தை என்ன பாவம் செய்தது அதற்கு ஏன் இத்தகைய பிணிகள் வந்து துயரத்தை கொடுக்க வேண்டும் என்று நமது இளகிய பணம் சிந்திக்கும் இப்போது கண்ணெதிரே குழந்தையாக இருக்கும் இந்த சிறிய குழந்தை நேற்று அதாவது முற்பிறப்பில் பெரியவனாக இருந்துதான் மாண்டிருக்க வேண்டும் அந்த காலகட்டத்தில் செய்த வினைகளுக்கான பலனை இப்போது அனுபவிக்க வேண்டிய சூழல் இருக்கலாம் அதன் விளைவுதான் பல குழந்தைகள் நோய்களாலும் வறுமையாலும் துன்பப்படுவது 

திருமதி மைதிலி சுப்ரமணியன் குழந்தை அனுபவீக்க்ம் வேதனைக்கும் இது தான் காரணம் என்று ஜாதகம் சொல்கிறது குழந்தையின் ஜனன ஜாதகத்தின் சந்திரன் வலுவிழந்து மாந்தியால் பார்க்க படுகிறான் இதனால் தான் சீதள சம்பந்தமான நோய் அந்த குழந்தையை வாட்டி வதைக்கிறது மேலும் அதன் ஜாதகப்படி வரப்போகும் குரு பெயர்ச்சி நல்ல பலனை கொடுக்க இருப்பதினால் கர்மாவினால் ஏற்பட்டிருக்கும் இந்த நோய் இன்னும் மூன்று மாதத்திலிருந்து படிப்படியாக குறையத்துவங்கி விடும் 

]இருந்தாலும் குழந்தை தற்போது அனுபவிக்கும் வேதனையிலிருந்து விடுபட ஒரு எளிய வழிமுறை இருக்கிறது அந்த வழிமுறை நமது சித்தர்களால் நமக்கு சொல்லப்பட்டதாகும் அதை பின்பற்றினால் குழந்தையின் கஷ்டம் ஓரளவு குறைய ஆரம்பிக்கும் 

அதாவது நூறு கிராம் ஓமத்தை லேசாக இடித்து அரை லிட்டர் தண்ணீரில் காய்ச்சவும் அது நூறு மில்லி அளவு வற்றியவுடன் வடி கட்டி அரைலிட்டர் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி பதம் வந்ததும் இறக்கி வைத்து ஐம்பது கிராம் கற்பூரத்தை பொடிசெய்து கலக்கி வைத்து கொள்ள வேண்டும் 



குழந்தைக்கு மூச்சிறைப்பு மற்றும் சளி தொல்லை ஏற்படும் போது மேலே நான் சொன்ன எண்ணெயை மார்பிலும் முதுகிலும் போட்டு நன்றாக அழுத்தாமல் அனல் பறக்க தேய்த்துவிட வேண்டும் இது உடனடியாக நல்ல பலனை தரும் மேலும் இந்த எண்ணெய் ஆஸ்துமா நெஞ்சுவலி முதுகுவலி போன்றவைகளுக்கு நல்ல நிவாரணத்தை தரக்கூடியது 

சித்தர்கள் குறிப்பிட்ட இந்த மருத்துவ முறையை பயன்படுத்தி பாருங்கள் இப்போது கிரகங்கள் நல்ல நிலையில் வர ஆரம்பித்து இருப்பதினாலும் இந்த மருந்தின் வேகத்தாலும் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

Friday, 21 October 2011

நகரத்தின் வயது 5 கோடி!




ஆசைகளுக்கும் எண்ணங்களுக்கும் எப்படி எல்லைகளை தீர்மானிக்க முடியாதோ, அதேபோல் தேடல்களுக்கும் எல்லைகள் கிடையாது. ஏதாவது ஒரு எல்லையை தொட்டுவிட மாட்டோமா.. என்ற தேடல்கள் ஒவ்வொரு அறிவியல் ஆராய்ச்சியாளர்களிடம் ஏதோ ஒரு வகையில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மனிதனை பிழைக்க வைக்க ஆயிரம் ஆயிரம் மருந்தை தேடிக்கொண்டிருக்கும் ஆராய்ச்சியாளர்களின் அடுத்த இலக்கு மனிதனுக்கு சாவு என்பதே ஒன்று இருக்கச் செய்யும் சாகா வரத்தை நோக்கித்தான். அது முடியுமா..? ஏன் முடியாது.. முனிவர்களும் சித்தர்களும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்ததாக புராணம் சொல்லியிருக்கிறதே.. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வரை இறப்பை தொடாமல் இருக்க அவர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்? அவர்கள் இப்போதுள்ள ஆராய்ச்சியாளர்களைவிட வல்லமையும், அறிவியலும் தெரிந்தவர்களா? என்ற தேடலும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
மனிதனின் சக்தி எப்படிப்பட்டது.. விண்கற்களில் இருந்து விழுந்த பூமிப்பந்தில் மனிதன் எப்போது உருவானான் என்ற தேடலின் ஒரு பகுதிதான் இது..
ஸ்காட்லாந்தின் வடக்குக் கரையருகே வட அட்லாண்டிக் பெருங்கடலின் விரிந்த பரப்பு அது. மிகப்பெரிய ஆராய்ச்சிக் கப்பல். கப்பலின் மேற்பரப்பில் பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை மூத்த ஆராய்ச்சியாளர் நிக்கி வைட் தனது சகாக்களுடன் நின்றுகொண்டிருந்தார். இந்த குழுவின் முக்கிய நோக்கம், கடலின் ஆழ்பரப்பில் உள்ள எண்ணெய் வளங்கள், பூமி அடுக்கில் ஏற்படும் மாற்றங்களை அறிந்துகொள்வதுதான். இதற்காக கப்பலின் தனி அறையில் ஆழ்கடலின் தன்மைகளை மீ ஒலி மற்றும் அதிநவீன எக்கோ ஒலிக்கருவிகளின் உதவிகளோடு ஆய்வு நடத்தி, அட்லாண்டிக் கடல் அடிப்பரப்பின் தன்மைகளை அறிக்கையாக அளிப்பதே இக்குழுவின் பணி.
அன்றும் அப்படித்தான் அவர்களின் பணி இருந்தது. பரந்து விரிந்த அட்லாண்டிக் கடல் பரப்பு இவர்கள் பயணிக்கும் கப்பலின் சத்தமும், தண்ணீர் கிழித்துச் செல்லும் சத்தத்தைத் தவிர எதுவும் இல்லை. ரம்மியமான மாலை மயங்கும் நேரம். ஆராய்ச்சிக் குழுவினர், அதிநவீன எக்கோ ஒலிக்கருவிகள் மூலம் அட்லாண்டிக் கடல் பரப்பின் ஆழத்தின் கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் ஆழத்தில் ஆய்வு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பாறைகளின் தன்மைகள், மணல் படிமங்களின் தன்மைகள் பொறுத்து எக்கோ ஒலிக் கருவிகளின் வழக்கமாக கேட்கும் ஒலியின் தன்மைகள் சற்றே வித்தியாசமாய் இருந்தது அன்று. ஒலியின் வித்தியாசம் கருவியின் கோளாறாய் இருக்கும் என்று சந்தேகித்துக்கொண்டிருக்க, கடலடியில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் எக்கோ கருவியுடன் பொருத்தியிருந்த காமிரா, கப்பல் மேல் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த திரையில் படங்களை அனுப்பிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்த ஆராய்ச்சிக் குழுவினருக்கு, தங்கள் கண்களால் பார்ப்பது கனவா அல்லது நனவா என்றே நம்ப முடியவில்லை. ஏனெனில் அவர்கள் கடல் அடியில் கண்டது மிகப்பெரிய மாநகரத்திற்கான தடயங்கள்.. கொஞ்சம் கூட தாமதிக்காமல், சில ஆராய்ச்சியாளர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கட்டிக்கொண்டு கடலுக்குள் பாய்ந்தார்கள்.
கடலுக்குள் குதிக்கும்வரை, ஏதோ எரிமலை வெடித்து அது பாறையாக பல மீட்டர் தூரத்திற்கு பரவியிருக்கலாம் என்பதுதான் அவர்களின் கணிப்பு. ஆனால், அத்தனையும் தகர்த்தது, அவர்கள் அப்போது கண்ட காட்சி. இதுகுறித்து, நிக்கி வைட் கூறும்போது அவரின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.
எங்கள் குழு கொஞ்சம் கூட நம்பவில்லை அந்த காட்சியை. கிட்டத்தட்ட 10 ஆயிரம் சதுர கி.மீட்டர் தூரம் வரை நீண்டு கிடந்தது நாங்கள் கண்ட அந்த நிலப்பரப்பு. கண்டிப்பாக அது எரிமலையின் சாம்பல் படிவம் இல்லை. அது மிகப்பெரிய நகரம்தான். அதனுடைய சில பாகங்களை எடுத்து ஆராய்ச்சிக்கு அனுப்பினோம். நாங்கள் கணித்தது சரிதான். கார்பன் வயது கணிப்புப் பஐ, கிட்டத்தட்ட 5 கோடியே 60 லட்சம் ஆண்டுக்கு முந்தைய நகரமாக அது இருக்கும் என்று ஆராய்ச்சியில் கணித்திருக்கிறார்கள். அந்த நிலப்பரப்பு, மேற்கு ஆர்க்னே நகரத்தில் இருந்து ஷெட்லேண்ட் தீவு வரை விரிந்திருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். இதனுடைய பெரும்பகுதி ஸ்காட்லாந்தின் ஒரு பகுதியில் ஆரம்பித்து நார்வே வரையிலும் இருக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளார்கள்.
அதுமட்டுமல்லாமல் திட்டமிட்டு மிக நாகரிகமான முறையில் அமைக்கப்பட்டிருக்கும் அந்த நகரம், ஒரு வரைபடம் போலவே காட்சியளிக்கிறது. அந்த நிலப்பரப்பு படிமத்தில் கிட்டத்தட்ட 8 நதிகள் ஓடிய தடயங்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். புதைந்து கிடக்கும் நகரத்தின் எஞ்சிய சில ஆதாரங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, 5 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த ஆழ்கடலில் புதைந்து கிடக்கும் நகரத்து மக்கள் மிகவும் நாகரிகமாகவும் அதே நேரத்தில் கல்வியில் சிறந்தவர்களாகவும் இருந்திருக்கக்கூடும் என்று நம்புகிறோம். இப்போது நினைத்தாலும் புல்லரித்துப் போகிறது என்கிறார் அந்த ஆராய்ச்சியாளர் நிக்கி வைட்.
ஆயிரம் ஆயிரம் மக்களின் ஆசைகள், கனவுகள், லட்சியங்கள், கண்டுபிடிப்புகள், சில வீர வரலாறுகள் அட்லாண்டிக் கடலில் எப்படி மூழ்கி போயிருக்கும்..? ஒரே சுனாமியில் அழிந்து போயிருக்குமா..? அல்லது புவி வெப்பமயமாதல் போன்ற ஏதேனும் ஒரு பிரச்சினையால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து அழிந்து போயிருக்குமா..? ஆயிரம் ஆயிரம் கேள்விகளுக்கு விடை தேட ஆராய்ச்சிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.
5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசைகள், கனவுகளுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்த நகரம்.. 2 கி.மீ. கடல் அடிப்பரப்பில் புதைந்துபோய் இருக்கிறது என்றால், இன்னும் 5 கோடி ஆண்டுகள் கழித்து பூமிப்பந்தில் நாம் இப்போது வாழ்ந்துகொண்டிக்கும் பல்வேறு நகரங்களும் இதேபோல்தான் காணாமல் போகுமா..? இன்று புவிவெப்பமயதாலால் சர்வதேச நாடுகளே அச்சம் கொண்டு தங்களை பாதுகாக்க பல்வேறு காரணிகளைத் தேடிக்கொண்டிருப்பது பனிப்பாறைகள் உருகி.. கடல் மட்டம் உயர்ந்து மிகப்பெரிய அழிவை சந்தித்துவிடக்கூடாது என்பதற்காகத்தானா..? என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க, ஒருவேளை மனித நாகரிகமும், மனிதனின் பிறப்பு ரகசியமும் அட்லாண்டிக் கடலடி பரப்பில்தான் ஒழிந்து கிடக்குமா.. என்ற கேள்விக்கான பதிலையும் ஆராய்ச்சியாளர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். விடை கிடைக்குமா...?

Thursday, 20 October 2011

பேய்களுக்கு கால்கள் உண்டா?



சித்தர்கள் தத்துவப் படி மனித உடல் என்பது அன்னமயகோசம்,பிராணமயகோசம்,ஞானமய கோசம்,என்று மூன்று வகைப்படும்

கண்ணுக்கு தெரியும் ஸ்தூல சரீரம் அன்னமயமானது  அதாவது சதை,எலும்பு,ரத்தம் சம்பந்தப் பட்டது

பிராணமயமென்றால் சூட்சம். கண்ணுக்கு தெரியாத உயிர் சம்பந்தப் பட்டது

ஞானமயமென்றால் எண்ணங்கள் கர்மாக்கள் சம்பந்தப் பட்டது இதுவும் கண்ணுக்கு தெரியாத சரீரமாகும்

உயிர் பிரிந்த பிறகு அன்னமய கோசம் அழிந்து விடுவிறது மற்ற இரண்டும் தான் ஒன்றோடு ஒன்று பிரியாமல் பித்துரு லோகத்தில் வாசம் செய்கிறது

இதையே ஆவி என்றும் பேய் என்றும் அழைக்கிறார்கள்

ஆவி வடிவம் என்றாலே அது நகர்ந்து செல்ல உறுப்புகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை

அவர்கள் நினைத்தப் படி நினைத்த இடத்திற்கு நிமிட நேரத்தில் நகர்ந்தே செல்லலாம் அதாவது காற்று போல

அதனால் ஆவிகள் தாங்கள் நடமாட கால்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை

ஆனாலும் பலர் நினைக்கிறப் படி ஆவிகளுக்கு கால்கள் இல்லாமலில்லை கால்கள் உண்டு

தான் வாழ்ந்த போது பெற்றிருந்த சரீரத்தின் சாயலிலேயே பல ஆவிகள் நடமாடுவதாக அமானுஷ்ய ஆய்வுகள் சொல்கின்றன

எனவே பேய்களுக்கு கால் உண்டு

பேய்களை நம்பாதவர்களுக்கு இந்த கேள்வியும் பதிலும் வேடிக்கையாக தோன்றும்

நாம் அதைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை