Friday, 1 June 2012

இந்து மத வரலாற்று தொடர் - 6


யஜூர் வேதம் இந்த பெயர் பெறுவதற்கு வழிபடுதல் என்ற பொருளைக் கொண்ட யஜ் என்ற வினைச் சொல் மூலக் காரணமாகும்.  நான்கு வேதங்களில் இது இரண்டாவது இடத்தில் வைக்கப்படுகிறது.  இந்த வேதத்தில் அரசர்களும் குடிமக்களும் பின் பற்ற வேண்டிய சடங்கு முறைகளை பற்றியும் அந்த சடங்குகளை செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரங்களை பற்றியும் விரிவாக கூறுகிறது.

  அதனால் இது மந்திரப்பகுதி, சடங்கு பகுதி என்று இரு பகுதிகளை கொண்டதாகவும் மந்திரங்களை கூறும் பகுதி சுக்கில யஜூர் என்றும் சடங்குகளை கொண்ட பகுதி கிருஷ்ண யஜூர் என்றும் பெயர் சூட்டி அழைக்கப்படுகிறது.  யஜூர் வேதத்தில் உள்ள பாடல்களின் மொத்த எண்ணிக்கை 1946 ஆகும். 

  இந்த பாடல்கள் பெறும் பகுதி சுக்கில யஜூர் வேதத்திற்குள் அடங்கி விடுகிறது.  கிருஷ்ண யஜூர் வேதப்பகுதி உரைநடையாகவே இருக்கிறது.  பொதுவாக மற்ற வேதங்களை போலவே இதிலும் சம்ஹிதை, பிரமாணம், ஆரண்யம் என்ற மூன்று பிரதானப் பகுதிகளும் கடைசியாக தத்துவ விளக்கங்களை கூறும் உபநிஷத பகுதியும் உண்டு.  யஜூர் இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டிருப்பதால் ஆரண்யம் என்பது சுக்கில பகுதியில் மட்டுமே காணப்படுகிறது.

யஜூர் வேதம் 40 அத்யாயங்களை கொண்டது இதில் பெரிய அத்யாயங்களும் சிறிய அத்யாயங்களும் அடங்கியுள்ளது.  ஒவ்வொரு அத்யாயமும் ஒரு தனிப்பட்ட விஷயத்தை பற்றி மட்டுமே பேசவில்லை.  பலதரப்பட்ட விஷயங்களின் கலவையாகவே ஒவ்வொரு அத்யாயமும் அமைந்துள்ளது.

  இதில் உள்ள மந்திரங்கள் சடங்குகளின் போது ஒருவராலோ, பலராலோ ஓதப்படும் வண்ணம் அமைந்துள்ளது.  சடங்குகள் எதற்காக செய்யப்பட்டாலும் நெருப்பு இல்லாமல் எந்த சடங்குகளும் வேதகாலத்தில் நிகழ்த்தப்பட முடியாது.  சடங்குகளின் நெருப்பு அவசியம் என்பதனால் அந்த நெருப்பை மூட்ட சமித்துக்கள் என்ற மரக்குச்சிகள் தேவை.  எல்லா மரங்களிலுள்ள உலர்ந்த குச்சிகளை சமித்துக்கள் என்று அழைத்துவிட முடியாது.  சில குறிப்பிட்ட வகை மரக்குச்சிகளை தான் குறிப்பாக அரசு, மா, தேவதாரு, சந்தனம் போன்ற மரக்குச்சிகளை தான் வேதகால ரிஷிகள் சமித்துக்கள் என்ற தகுதியில் அழைத்தார்கள்.  அவர்கள் அன்று சமித்துக்கள் என்று தனித்தகுதி சிறபித்த மரக்குச்சிகளே இன்றளவும் யாகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சடங்குகள் என்பது ஒரு தனி மனிதனின் சுய தேவைக்காகவும் ஒரு சமுதாயத்தின் பொது நோக்கத்திற்காகவும் நடத்தப்பட்டது.  தனி மனிதனுக்குரிய சடங்குகளை செய்ய எழுப்பப்படும் அக்னி குண்டங்கள் அல்லது யாகசாலைகள் ஆகவனியம், தட்சனாக்னியம், காரக பத்தியம் என்று மூன்று வகையாக அழைக்கப்பட்டது. 

   எந்த திசையை நோக்கி யாக குண்டம் அமைக்கப்படுகிறதோ அதை பொறுத்து. அதாவது மேற்கு திசை நோக்கி யாக சாலை அமைக்கப்பட்டால் காரகபத்தியம் என்றும் கிழக்கு நோக்கி அமைந்தால் ஆகவனி என்றும் தெற்கை நோக்கி அமைந்தால் தட்சனாக்னியம் என்றும் வழங்கப்பட்டது.

இனி யஜூர் வேதத்தின் சில பகுதிகளை பார்ப்போம் இந்த வேதத்தின் முதல் பாடல் சூரிய தேவனை வணங்கி ஆரம்பிக்கிறது.  ஒளி மயமான கதிர்களுடன் கிழக்கு வானிலிருந்து புறப்பட்டு வரும் சூரிய தேவனே உன்னை மங்களமாரன வார்க்தைகள் சொல்லி வரவேற்கிறேன்.

   நீ எங்கள் பசுகூட்டத்தை பாதுகாக்கிறாய் அவைகளின் மீது மிருகங்களும் துஷ்டமனிதர்களும் பாயாதபடி வெப்பம் நிறைந்த உனது கண்களால் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.  எங்களது செல்வங்களான பசுக்களின் எண்ணிக்கை வளரும் வண்ணம் அவற்றிற்கு தாராளமாக உணவை கொடுகிறாய்

  இந்த பசு செல்வங்களை எங்களிடமிருந்து அபகரிக்க நினைக்கும் தீய மனம் கொண்ட பகைவர்களை உன் ஒளிக்கரங்களால் விரட்டுகிறாய்.  அதற்கு நன்றி செலுத்த இந்த யாகத்தில் உனக்குய பங்கினை அக்னியிடம் கொடுக்கிறேன்.  உன் பங்கு மேன் மேலும் பெருகட்டும் என்று சூரியனை வேதகால ரிஷி போற்றி வணங்குகிறான்.

  இந்த பாடல் மூலம் அடிப்படையான இரண்டு விஷயங்கள் நமக்கு தெரியவருகிறது.  நாம் நினைப்பது போல் அந்த கால மக்கள் அறிவியல் சிந்தனை அற்ற அசடர்களாக இருக்கவில்லை.  புல் பூண்டுகள் சூரிய வெளிச்சத்தினால் தான் நன்கு வளரும் வெளிச்சம் இல்லை என்றால் தாவரங்களின் வளர்ச்சி சரிவர அமையாது என்பதை போன்ற அடிப்படையான அறிவியல் அறிவையும் அவர்கள் பெற்றிருந்தார்கள். 

  அடுத்ததாக அவர்கள் மாடு மற்றும் கால் நடைகளை நம்பி வாழ்ந்தவர்களாக இருந்தமையனால் ஒரே இடத்தில் நிரந்தரமாக தங்கும் இயல்பு இல்லாதவர்களாகவும் பல இடங்களுக்கு சுற்றி திரியும் தன்மையோடு இருந்தமையாலும் பட்டறிவு என்பது அளவுக்கு அதிகமாக கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். 

மேலும் யஜூர்வேதத்தில் உள்ள மூன்றாவது பாடல் ஆழமான தத்துவக் கருத்தை வெளியிடுகிறது.  என்னை அதனுடன் இணைத்தது யார் அவன் தான்.  என்னை அதனுடன் பிணைத்தவன் யார் அதுவும் அவன் தான்.  இந்த வேலையை தொடங்கியவன் நீயே அதை முழுமையாக்கியவனும் நீயே என்ற கருத்து பட நீண்டு செல்லும் இந்த பாடலில் வரும் அது என்ற வார்த்தை வேத கால தெய்வங்கள் எதையும் பொதுவாகவோ சிறப்பாகவோ சுட்டிக் காட்டாமல் மறை முகமாக பரமாத்ம தத்துவத்தை சுட்டி நிற்பதை உணரலாம்.  இதே போக்கில் வேறு இரு பாடல்களும் முடிவாக விஷ்ணுவை பற்றிய ஒரு பாடலும் வருகிறது.  இப்பாடல்கள் அனைத்தையும் இணைத்து பார்க்கின்ற பொழுது நாராயணனை பரம் பொருளாக கருதும் கருத்து யஜூர் வேதத்திலும் இருந்திருப்பது தெரிகிறது.

சிந்து நதி கரையிலும் அதன் உபநதிகளான ஆறு நதிகளையும் இணைத்துக் குறிப்பிடும் சப்த நதி மண்டலத்தில் இந்த மக்கள் தங்களது வாழ்க்கை ஓட்டத்தை நடத்திக் கொணடிருந்த போது பல தேவதைகளை வழிபடுபவர்களாக இருந்திருக்கிறார்கள்.  அப்பொழுதெல்லாம் ஒரே கடவுள் தான் உண்டு என்ற வாதங்கள் உருவாகாமல் இருந்திருக்கிறது. 

  சிந்துவை தாண்டி யமுனையையும், கங்கையையும் கடந்து அந்நதிகரையோரம் பரந்து விரிந்த சமவெளியில் நிலையான வாழ்வைத் துவங்க குடியேறிய பின்னரே வேத மைந்தர்களுக்கு ஒரே கடவுள் தான் இருக்க வேண்டு மென்ற சிந்தனை தெளிவு ஏற்பட்டிருக்கிறது.  அதனால் தான் ரிக் வேதம் தோன்றி பல காலத்திற்கு பின்னால் தோன்றிய யஜூர் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் ஒரே கடவுள் என்ற சிந்தனை அதிக அளவில் நம்மால் காண முடிகிறது.

வேத கால வாழ்வில் சிந்தனைகளை விட சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது.  யாககுணடங்களை ஏற்படுத்தி அக்னியை வளர்த்தான் அதிலிருந்து  கிளம்பும் புகை மழையை வரவழைக்கும் சக்தியை பெற்றிருப்பதாக நம்பினர்.  அதனால் தான் நெருப்பை உருவாக்கும் சமித்துகளையும் அதனை வளர்க்கும் நெய்யையும் புனித மிக்கதாக கருதி சமித்துக்கள் அக்னி தேவனின் உணவு என்றும் நெய் அவனுக்கு ஆற்றலைக் கொடுக்கும் பொருள் என்றும் புகழ்ந்து பாடினார்கள்.

  இயற்கையோடு ஒருங்கிணைந்து வாழ்ந்ததினால் இயற்கையின் வளர்ச்சியில் தான் தங்களது சமூக வளர்ச்சியும் அடங்கியிருப்பதாக கருதி இயற்கை வளங்களை செழுமைபடுத்துவதற்கான சடங்குகளை ஏற்படுத்தி எந்த சடங்கை எப்போது செய்ய வேண்டும் என்ற நியதியையும் வகுத்தார்கள். 

  அந்த ஒழுங்கு முறைக்கு எதிராக பிற்கால சமூகம் செல்லக் கூடாது என்றும் எச்சரித்தனர்.  வேத நெறிகளை அலச்சியம் செய்யாதே அந்த நெறிப்படி தினசரி நெருப்பை வளர்த்து தேவதைகளை திருப்தி படுத்து யாகப்புகை மேலே செல்லாவிட்டால் மேகங்கள் கூடாது மழை பொழியாது மழை இல்லை என்றால் வாழவே முடியாது என்று அவர்கள் எச்சரித்தது அன்றைய  வாழ்க்கைக்கு மட்டுமல்ல இன்றைய வாழ்க்கைக்கும் பொறுத்தமாகவே இருக்கும்.

  யாகங்களிலுள்ள விஞ்ஞான பூர்வமான உண்மைகளை விவரிப்பது இந்த இடத்தில் நமது நோக்கம் இல்லையென்றாலும் யாகங்களின் சிறப்பை ஓரளவாவது நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.  முறைப்படி சப்தம் தவறாத வேத கோஷங்களுடன் செய்யப்படும் யாகங்கள் மழையை வருவிப்பதும் நச்சு புகையிலிருந்து உயிர்களை பாதுகாப்பதும் நாம் அறிந்ததே ஆகும்.

  தீயை வளர்த்து நெய்யை வார்த்து செய்யப்படும் யாகங்கள் அறியாமையின் வெளிப்பாடு அல்ல.  கண்ணுக்கு தெரியாமல் பூமியெங்கும் பரவி கிடக்கும் அணுக்களை வேதியியல் முறையில் அசைவித்து நமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் அறிவுப் பூர்வமான செயல்பாடே யாகங்கள் ஆகும்.

 அந்த யாகங்கள் சரிவர செய்யப்படாததினால் செய்யும் பண்டிதர்களும் யாகங்களை முறைதவறி செய்வதினாலையும் தான் பருவ காலங்கள் தனது கடமைகளை சரிவர செய்ய முடியாமல் இயற்கை அழிவுகளுக்கு விதை தூவுகிறது.  இதை உணர்ந்து தேசத்தில் எதாவது ஒரு மூலையில் நியமப்படி வேதகால யாகம் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்றால் பூமி பந்தின் கோபச்சூடு கொஞ்ச நேரம் குறையும்.

 நாம் பிராமணனுக்கும், சத்திரியனுக்கும், சூத்திரனுக்கும், ஆரியனுக்கும், அருகில் உள்ளவனுக்கும், அந்நியனுமாகிய அனைத்து ஜனங்களுக்கும் இம்மங்கலகரமான வேதத்தை உபதேசம் செய்கிறேன்.  காணிக்கை அளிக்கும் தேவர்களுக்கு நான் பிரியமுடனாக வேண்டும் எனது விருப்பம் பூரணமாகட்டும்.  அது எனது ஸ்வாதினம் ஆகும்.

  பிரகஸ்பதியே சத்தியத்தின் புதல்வனே சத்துரு சிறப்புக்கதிகமாயும் அறிவுள்ள ஜனங்களின் நடுவே பிரகாசமுடையதாகிய உறுதியுள்ள செல்வத்தை எமக்களிப்பாய்.  நீ ஆதரவோடு கிரகிக்கப்பட்டுள்ளாய்.

  செல்வம் மிகுந்த இந்திரனே! இங்கே வா நூறு மடங்கு சக்தி உள்ளவனே சோமனை பருகவும் சோமன் பெருமையான சாதனங்களால் நிறைந்துள்ளது.  நீ ஆதரவோடு பற்றப்பட்டுள்ளாய்.  நான் செல்வம் மிகுந்த இந்திரனை பற்றுகிறேன்.  பசுக்கள் நிறைந்த இந்திரனே இது உனது மூலஸ்தானமாகும்.  இங்கே வந்து உனது அருளை நிரப்பு.

  ஜோதியின் தலைவனாகவும் அழியாதவனாய் உள்ளவனே நாங்கள் நாடுகிறோம்.  நாங்கள் வைசுவா நரனின் நல்ல நிலையில் சாய வேண்டும் அவனே புவனங்களின் தன்னிகரற்ற தலைவன் ஆவான்.  இவனே ஜீவனாக தோன்றி விழிகளால் அனைத்தையும் காண்கின்றான்.  இவன் சூரியனுக்கு சமமாய் உள்ளவன்.  வெகு தூரத்திலுள்ள வைசுவா நரனை அக்னி எங்கள் அருகில் அழைத்து வரட்டும்.

 அக்னி பவித்திரமான ரிஷி ஆவான்.  பஞ்ச ஜனங்களின் புரோகிதன் அக்னியே.  அதிகமாக பிரகாசிக்கவும் ஜோதிவடிவாகவும் உள்ள அக்னியே நீயே செல்வமும் செழுமையும் தரும மூல முதல்வன் பருவகாலங்கள் உனது யாகத்தை விசாலப்படுத்தட்டும்.  மாதங்கள் உனது அவிர் பாகத்தை ரட்சிக்கட்டும்.  வருடங்கள் உனது பிரஜைகளை காவல் செய்யட்டும்.  மலைகள் அருகிலும் நதிகளின் சங்கமத்திலும் தோன்றிய அறிவாளி உனது புகழை பாடி பரவட்டும்.

  நாங்கள் வீரமக்கள் எங்கள் பசுக்களும் குதிரைகளும் பல்கி பெருகட்டும்.  சகல புஷ்டிகளுடன் எமது எல்லா விருப்பங்களும் ஓங்கி வளரட்டும்.  எங்களை சுற்றியுள்ள மனிதர்களும் மற்ற உயிரினங்களும் பெருகி நிரம்பட்டும்.  தேவர்கள் எங்கள் யாகத்தை பருவ காலத்தோடு வழி நடத்தி செல்லட்டும்.

  சோமனே நீ பசியை அழிப்பவன்.  அனைத்து மனிதர்களின் நண்பனும் நீ.  இன்பம் அளிக்கின்ற தாரையுடன் பெருகி நீ வழிய வேண்டும்.  தங்கத்தால் ஆன துரோனத்தில் சமமான மூலஸ்தானத்தில் வந்து அமர்ந்துக் கொள்.

இந்த பாடல்கள் யஜூர் வேதம் 26-வது அத்யாயத்தில் 392-வது அனுவாகத்தில் 2 முதல் 26 வரையிலான பாடல்வகளாகும்.  இவைகளை மீண்டும் ஒருமுறை வாசித்து பாருங்கள் பல உண்மை தெரிய வரும்.  வேதங்கள் என்பது பிராமணர்களுக்கு மட்டும் உரிமையான சொத்தாகும்.  அதை மற்ற ஜாதி ஜனங்கள் எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்து ஆழமான முறையில் பிரச்சாரம் செய்யப்பட்டு இன்றைய நாள் வரை வந்து கொண்டு இருக்கிறது. 

  அது மட்டுமல்ல வேதங்களை ஓதினால் மற்ற ஜாதிகாரர்களின் நாக்கை துண்டிக்க வேண்டும் காதுகளால் கேட்டால் செவிகளில் ஈயத்தை உருக்கி ஊற்ற வேண்டும் என்பதாகவும் மனுசாஸ்திரத்தில் எழுதப்பட்டிருக்கிறது.  இவைகளை அறிவு தெளிவுள்ள எந்த மனிதனும் படித்தாலே அருவருப்பு அடைந்து விடுவான்.  அதிர்ச்சியில் உரைந்து விடுவான்.  

  ஆனால் வேதகால கவிஞன் வேதங்களை தனிப்பட்ட சொத்தாக கருதவில்லை.  மனிதனாக பிறந்த ஒவ்வொருவனுக்குமே வேதம் சொந்தமாகும் என்று கருதுகிறான்.  வேதக் கட்டளைக்கு விரோதமாகவும் விருப்பத்திற்கு மாறாகவும் வேதங்களை தனி உடமையாக்கியது யார்?  எதற்காக?  அது ஜாதிவளைக்குள் சுருட்டப்பட்டுள்ளது என்பதை நாம் சிந்தித்து பார்த்து வாதங்களில் ஈடுபடாமல் வேதத்தை விருப்பமும் தகுதியும் உடைய அனைவருக்கும் கற்பிக்கவும் கற்றவழி நிற்கவும் முன் வரவேண்டும்.

 மேலும் புவனங்களின் தலைவனாக இருப்பவனும் மக்களின் உற்பத்திக்கும் சுகதுக்கங்களுக்கும் ஒருவனே காரணம் என்ற கருத்தும் கவனிக்க தக்கது.  தேவதைகளுக்கு பல பெயர்களை வைத்து ரிஷிகள் அழைத்தாலும் அவையாவும் ஒரே தேவதையின் மாறுபட்ட பெயர்களே என்பது தெளிவாகிறது இந்திரன், அக்னி, சோமன் என்ற பெயர்களெல்லாம் மூல பரம் பொருளை குறிப்பிடுவதற்காகத்தான் பயன்படுத்தி இருப்பார்களோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்துகிறது.  இனி உழவத் தொழிலை பற்றி வேதக் கருத்தை பார்ப்போம்.

 யஜூர் வேத சுக்கில பகுதியில் வேளாண்மையை பற்றி பல பாடல்கள் உள்ளன.  அவற்றில் மிக முக்கியமானதாக 12-வது அத்யாயத்தில் ஒரு பாடல் உள்ளது.  அதில் நிர்த் என்ற தேவதையின் பெயர் குறிப்பிடப்படுகிறது.  விவசாயத்திற்கு தேவைபடுவது மண்ணும், நீரும், ஒளியும், காற்றுமாகும்.  இந்த நான்குமே வேதங்களில் தேவதையாக வணங்கப்படுகிறது.

 நிர்த் என்ற வேதகால விவசாய தேவதை பூமியாக விரிந்து கிடக்கிறாள்.  முதலில் அவள் பச்சை வண்ண ஆடையை உடுத்தி இருக்கிறாள்.  முடிவில் பொன் வண்ணமாக காட்சி தருகிறாள்.  அவள் நீராடுவதற்காக குளிர்ந்த நீர்திவலைகளை கார்முகில் என்ற வானப்பந்தலை அமைத்து வருணதேவன் சாரலாக தெளிக்கிறான்.  நேரம் செல்லச் செல்ல முகிலினங்கள் பெரும் மழையை கொட்டுகிறது.  இதில் அந்த தேவதை முழுமையாக குளிர்ச்சி அடைகிறாள்.  அவள் உடலெங்கும் ஆறுகளும், குளங்களும், ஏரிகளும், அருவிகளும் வெள்ளியை உருக்கி விட்டது போல் பெருகி ஓடுகிறது.

   இந்த நேரத்தில் கலப்பைகள் தயார் செய்யப்படுகின்றன.  கலப்பையின் முனைகளில் கூர்மையான இரும்பு கொழுவுகள் பொறுத்தப் படுகின்றன.  நுகத்தடியில் வெள்ளை எருதுகள் பூட்டப்படுகின்றன.  நிர்த் தயாராக இருக்கிறாள்.  கலப்பைகளை பலமாக பிடித்துக் கொண்டு முன்னால் செல்கிறாள்.  அதே நேரம் ஏர் முனையை தனது உடலில் தாங்கியும் கொள்கிறாள்.

  இரும்பு முனை மண்ணை அழுத்தி கீறுகிறது மண் கீழும், மேலுமாக புரள்கிறது.  மலர்களைப் போல் விரிந்து கலப்பை என்னும் வண்டுகளுக்கு மகரந்தத்தை கூடலில் வாரிக் கொடுக்க தயாராகிறது.  உழவன் விதைகளை நாலாபுறமும் தூவுகிறான்.  நிர்த் தேவதை அதை வாங்கிக் கொள்கிறாள்.  தனக்குள் தாங்கியும் கொள்கிறாள்.  தனக்கு கிடைத்த ஒரு தானிய மணியை பல நூறு மடங்காக பெருகி தருகிறாள்.

  தேவதையின் உடலில் உழவன் ஏறி விளையாடுகிறான்.  அரிவாள்களைக் கொண்டு முற்றி தலை சாய்ந்த கதிரை அறுவடை செய்கிறான்.  தன்னை ஏர் கொண்டு பிளப்பதினாலோ வாள் கொண்டு வெட்டுவதாளோ பூமி தேவதை மனிதர்களை கோபத்துடன் முறைப்பது இல்லை

  ஏனென்றால் அவள் உயர்களுக்கெல்லாம் தாயை போன்றவள் முலைக்காம்பை குழந்தை கடித்தால் தாய் அதன் வாயை கிழித்து விடவா போகிறாள் வாரி அணைத்து தானே கொள்வாள்.  அத்தகைய தாயான தானியங்களை கொடுக்கும் நிர்த் தேவதையை வணங்குவோம்.  அவள் பசியை போக்கும் அன்னை சக்தியை கொடுக்கும் வெண்ணை.  நமது மகிழ்ச்சி தீபத்தை சுடர்விட்டு பிரகாசிக்க செய்யும் எண்ணெய்.  அவளை மீண்டும் மீண்டும் வழிபடுவோம்.

  பூமியின் தாகத்தை தனித்தவன் வருணன்.  தானியங்களை தருபவன் வருணன்.  வருணனின் செங்குருதியே மழை நீராகும்.  அந்த குருதியை நீராக பெற்றுக் கொள்ளும் பூமித்தாய் தானியபாலாக நமக்கு புகட்டுகிறாள்.  அக்னியின் வடிவமான சூரிய தேவனும் ஆகாயத்திலிருந்து இறங்கி வந்த வாயு தேவனும் நிர்த்க்கு உதவி செய்கிறார்கள்.  அவர்களை நாம் வணங்குவோம்.  நமது வீட்டு களஞ்சியங்களில் தானியங்களை நிரம்பி வழிய செய்த இந்த நான்கு தேவதைகளும் நமது கருவூலங்கள் ஆவார்கள்.  அதனால் தங்கநிற தானியங்களை அக்னியிடம் வழங்குவோம்.  அவன் அவைகளை தேவதைகளுக்கு நிச்சயம் கொண்டு கொடுப்பான். 

  இந்த சடங்கு பாடல் தேவகால மக்களின் வாழ்க்கையை நமக்கு படம் பிடித்து காட்டுகிறது.  ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு நாடோடியாக திரிந்த ஆரம்பகால மக்கள் யஜூர் வேத காலத்தில் நிலையாக ஒரு இடத்தில் தங்கி விவசாயம் முதலியன செய்ய ஆரம்பித்து இருப்பது இந்த பாடல்களால் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. 

  அது மட்டுமல்ல விவசாயத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு உடல் உழைப்பு அதிகம் தேவை.  உடலால் உழைப்பவர்களை சூத்திரர்களை என்று வேதம் வகைபடுத்தி காட்டுகிறது.  சூத்திரர்கள் தாழ்ந்தவர்களாக இழிகுல மக்களாக கருதப்பட்டு ஒதுக்கப்பட்டு இருந்தால் வேதங்கள் அவர்களையும் அவர்களது தொழில்களையும் சிறப்பித்து கூறப்பட்டிருக்குமா இருக்கவே முடியாது.  எனவே வேதகாலத்தில் எவனும் எந்த தொழிலிலும் இழிந்தவனாக கருதப்படவில்லை என்பது நன்றாக விளங்குகிறது.

  இனி சடங்குகள் என்பது அந்தகால மக்களுக்கு எந்த வகையில் உதவி புரிந்தன என்பதை பார்ப்போம்.  யஜூர் வேதம் 18-வது அத்யாயத்தில் 77 பாடல்கள் இருக்கிறது.  இதில் 29 பாடல்கள் சடங்குகளை பற்றியும் அவைகளால் ஏற்படும் நன்மைகளை பற்றியும் விவரித்து கூறுகிறது.

  கிரிகைகள் எனக்கு கொடுப்பது எது?  அவற்றை செய்வதினால் தெய்வங்களிடமிருந்து எதை நான் பெறுகிறேன். எல்லாம் எல்லாவற்றையும் நான் பெறுகிறேன்.  கிரிகையினால் பலத்தை நான் அடைகிறேன்.  ஆதாயம் அடைகிறேன்.  என் மனது ஆற்றல் அடைகிறது.  உடல் பலம் அடைகிறது.  எனது எண்ணங்கள் தெளிவடைகின்றன.  எனக்கு புகழும் பாராட்டும் கிடைகிறது.  ஒளிமயமான சொர்க்க கதவுகள் எனக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

  இதோ நான் நன்மையும் நன்மைக்கு மேல் நன்மையும் பெற்றுக் கொண்டே இருக்கிறேன்.  எனது மூச்சு காற்று தடங்கல் இன்றி உள்ளே செல்கிறது.  சிரமப்படாடல் வெளியேயும் வருகிறது.  அதன் பாதைகளில் அது தங்கும் இடங்களின் எந்த துன்பத்தையும் அனுபவிக்கவில்லை.

   எனது கண்கள் தெளிவாக இருக்கிறது.  நெருப்புத் துண்டுகள் போல் அவைகள் ஜொலிக்கவும் செய்கின்றன.  வில்லிலிருந்து புறப்படும் அம்புகளை போல் எனது பார்வை எல்லா இடங்களிலும் கூர்மையுடன் பாய்கின்றன.  எனது காதுகளும் அப்படியே இருக்கின்றது.

  இந்திரனின் கட்டளையால்  மேகங்கள் மோதி உண்டாகும் இடி முழக்கங்களால் எனது செவிகள் துன்பப்படவில்லை.  மிருதுவான இனிமையான புல்லாங்குழலின் ஓசை எனது காதுகளை குளிர்விக்கின்றன.  எனது நாவும் நல்லதையே பேசுகிறது.  தீய சொற்களை உருவாக்கும் வயலாக அது என்றும் மாறியது இல்லை.

   இத்தகைய நன்மையெல்லாம் பெற எனக்கு உதவியது எது.  இந்த சடங்குகளும் இந்த யாகங்களும் தான்.  இதில் எரியும் நெருப்பு எல்லா இடத்திலும் இதமான வெப்பத்தை பரப்பட்டும்.  இதன் புகை நாலா புறமும் பரவி நறுமணமாக கமழட்டும்.

இன்னும் என்னவெல்லாம் எனக்கு கிடைக்கிறது தெரியுமா?  அவைகளை எல்லாம் இதோ பட்டியலிட்டு சொல்கிறேன்.  இவைகள் உண்மைக்கு புறம்பான பொய்கள் அல்ல.  உண்மையை போல் தோன்றும் கற்பனைகள் அல்ல.  பயமும் தயக்கமும் இல்லாமல் இதை நான் சொல்லுவதினால் இவை அனைத்துமே உண்மைகள்.  என்றும் நிலைத்து இருக்கும் சத்தியங்கள்.

யாகங்களால் நான் உண்மையென்னும் பேருலகில் நிலைத்து இருக்கிறேன்.  அது அசத்தியத்தில் இருந்து என்னை எப்போதும் பாதுகாவல் செய்கிறது.  எனது சொற்களில் சத்தியம் மட்டுமே ஒலிப்பதனால் நான் எப்போதும் நாணயத்திடமிருந்து பிரியாமல் இருக்கிறேன்.

  தர்மத்தை மட்டுமே எனது கண்கள் பார்ப்பதனால் நேர்மை என்ற காவல் படை என்னை சுற்றி எப்போதும் அரணாக இருக்கிறது.  வெற்றியை தருவது சத்தியம் மட்டும் தான் என்பதனால் நான் அடைகின்ற ஒவ்வொரு வெற்றியுமே சத்தியத்தின் வடிவங்களாக மின்னுகிறது.

 எனது பசுக் கூட்டத்தின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.  அதனால் எனது செல்வம் மிகுதியாகிறது.  எனது சொத்துக்கள் பல மடங்கு பெருகுகிறது.  எனது பொருட்கள் குவிவதனாலும் பெருகுவதானலும் நான் அதை அனைவரிடத்திலும் பகிர்ந்து கொள்கிறேன்.  அந்த பகிர்வு எனக்கு மகிழ்ச்சி பேரை தந்த வண்ணமே உள்ளது.

 இந்த மகிழ்ச்சியினால் அதிகமான குழந்தைகள் எனது வீட்டில் பிறக்கின்றன.  குழந்தைகளின் மழலை நாதம் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.  மதுவை விட அதிகமான போதையும் பெண்ணை விட அதிகமான சுகத்தையும் வாரி தருவது குழந்தைகளின் அருகாமையும் மழலை மொழிகளும் தானே.  குழந்தைகளே மனிதர்களின் சொர்க்கமாவார்கள்.

 யாகங்களால் எந்த நோயும் என்னை அனுகாது அதனால் நான் பிணி என்ற பெரும் துன்பத்தை அனுபவிக்கவே மாட்டேன்.  எனது உடல் வலுவாக இருப்பதனால் எனது வலது கையில் இருக்கும் ஏர்முனை தானியங்களை உற்பத்தி செய்கிறது.  இடது கையில் இருக்கும் கூர்மையான ஈட்டி எனது மக்களை பாதுகாக்கிறது.

 எனது ஆயுள் பரிபூரணமாக இருக்கும்.  மரணம் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறேன்.  ஏனென்றால் அது வாழ்வில் ஒருமுறை மட்டுமே வரக்கூடியது.  தவிர்க்க முடியாத அதை எண்ணி நான் ஏன் வருத்தப்பட வேண்டும் எப்போதுமே நான் சுதந்திர காற்றை சுவாசிப்பவனாக இருக்கிறேன்.

    நான் எவராலும வெல்ல முடியாதவன் என்னை அடிமையாக்கும் தகுதி எவருக்குமே இல்லை.  எனக்குரிய பசுக்கள் மட்டுமல்ல எல்லாமே பெருகும்.  கல்லும், களி மண்ணும், குன்றுகள், பாறைகளும், தங்கமும், பித்தளையும், இரும்பும் இதர உலோகங்களும் நீரும், நெருப்பும் எப்போதுமே குறையாமல் எனக்காக பெருகிக் கொண்டே இருக்கும்.

இதே மாதிரியான பல விஷயங்களை பேசி கொண்டு செல்லும் யஜூர் வேதம் கடைசி பகுதிகளில் தெய்வத்துடனான சிந்தனையை ஒருமுகப்படுத்துகிறது.  இறைவனுடன் ஆத்மாவானது இரண்டற கலந்தால் தான் நிரந்தரமான அமைதியும் சந்தோஷமும் கிடைக்குமென்று சொல்கிறது அப்படி பேசும் யஜூர் வேத பாடல் ஒன்றை சிந்தித்து பார்ப்போம்.

இந்த பூமியிலுள்ள எல்லாமே இறைவனின் படைப்புகள் தான் ஒரு சிறு மண் துகள்கள் கூட மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல.  அவன் படைத்தவற்றை வைத்து நாம் மகிழ்ச்சியை பெருக்கி கொள்கிறோம்.  அவன் படைப்பை நாம் அனுபவிக்க அயராது உழைக்க வேண்டும்.  உழைத்தால் தான் ஆயுள் கூடும்.  ஆரோக்கியம் பெருகும் உழைக்காமல் கிடந்தால் கல்லைப் போல் வாழ்ந்து காலனின் கைகளில் அகப்பட்டு அழிய வேண்டியது தான்.

மரணத்திற்கு பிறகு நாம் என்னவாக மாறுகிறோம் நமக்கு என்ன நேருகிறது.  நாம் எங்கே போகிறோம்.  நமது பயனத்தின் விவரம என்ன என்ற கேள்விகள் அனைத்திற்கும் மர்ம முடிச்சுகளே பதிலாக கிடைக்கிறது.  இந்த பதில்களை பற்றி கவலைபடாமல் இறைவனின் திருவடியே அடைவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.  

   அவனை போய் அடைவது மட்டுமே நமது பயணத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.  அவன் இருக்கும் இடத்திலேயே நமது பயணம் முடியும்.  அவன் எப்படி பட்டவன் எத்தகைய குண இயல்பு கொண்டவன் எதுவும் நமக்கு தெரியாது அவன் அசைவற்றவன்.  அதே நேரம் எல்லாவற்றையும் அசைத்து கொண்டிருப்பவன்.  அவன் நம்மிடமிருந்து தொலைவிலும் இருக்கிறான் அருகிலும் இருக்கிறான்.  அவன் எங்கும் நிறைந்தவனாக இருக்கிறான்.  அவன் இல்லாத இடம் என்று பூமியிலும் ஆகாயத்திலும் எதுவுமே இல்லை.

இதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும்.  அந்த புரிதல் தான் அறிவு அது தான் ஞானம்.  இந்த ஞானம் பிறந்து விட்டால் ஐயம் இல்லை, எண்ணம் இல்லை, குழப்பம் இல்லை எல்லாவற்றிற்குமே முற்று புள்ளி ஏற்பட்டுவிடும்.  அவனை பற்றிக்கொண்டால் அடைந்து விட்டால் உடல் என்ற கூடு நமக்கு இல்லை உடல் வேதனைகளும் ஆசைகளும் அவஸ்தைகளும் ஏற்படப்போவது இல்லை.  ஏன் என்றால் பிறக்க வேண்டிய அவசியமே நமக்கு இல்லை.  பிறப்பும் இறப்பும் இறப்பும் பிறப்பும் முற்றிலுமாக அழிந்தே விடுகிறது.  நாம் ஒளிமயம் ஆகிவிடுவோம்.  மிகத்தூயதாக மாறிவிடுவோம்.

அதோ அந்த பொன் மயமான உலகத்தில் அவன் அமர்ந்து இருக்கிறான்.  அவனுக்கு அருகில் மிகப் பெரும் சிம்மாசனம் போடப்பட்டிருக்கிறது.  அதில் நாமும் அவனும் சமமாக அமரலாம்.  அவனது இந்த உலகம் தான் சொர்க்கம்.  அவன் தான் அனைத்துமாய் ஆன பிரம்மம்.  அவனை அடைந்த பின் நமக்கு கிடைப்பது அழிவற்ற குழப்பமில்லாத அன்பு மயமான சாந்தி! சாந்தி! சாந்தி! மட்டுமே.

யஜூர் வேத பாடல்கள் அனைத்தும் கங்கை கரையில் மக்கள் பரவி வாழ்ந்த பிறகு உருவானவைகளாக இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்ற கருத்தை இந்த பாடல் வகள் மெய்பிக்கின்றன.  சிந்து நதி ஓரம் வாழ்ந்த போது 33 தேவதைகளை வழிபட்ட இவர்கள் யஜூர் வேத காலத்தில் சிந்தனை கூர்மைபட்டவர்களாக காணப்படுகிறார்கள். 

  இவர்கள் வாழ்க்கையில் அபாயங்கள் குறைந்து அமைதி நிலவிய காலமாக இது இருந்திருப்பதினால் தான் மனம் இறைவனை பற்றி அவன் ஒருமையை பற்றி சிந்திக்க வழி ஏற்பட்டிருக்கிறது.  அதன் விளைவுகளையே இந்த பாடல்களின் மூலக் கருத்தாக அமைந்திருப்பதை நாம் காணலாம்.  இந்த யஜூர் வேத கருத்துக்கள் தான் நாளடைவில் ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள் உலகம் ஓர் இன்பகேணி என்ற கருத்துக்களின் விரிவாக்கமாக அமைந்திருக்கிறது.  இனி நாம் சாம வேதத்தை பற்றி சிந்திப்போம்.

இந்து மத வரலாற்று தொடர் - 5


வேதங்களை பற்றி பலர் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். அப்பொழுதெல்லாம் வேதங்களின் கருத்துகளை நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லையே என்று வருத்தப்பட்டிருக்கிறோம். அப்படி வருந்தியவர்களில் வருத்தங்களை போக்குவது நமது கடமையாகும். எனவே நான்கு வேதங்களும் எதை பற்றி பேசுகிறது என்பதை எடுத்து சொல்வது அவசியமாகிறது.  அதனால் இந்த அத்யாயத்தில் ரிக் வேதத்தின் முழுமையான வடிவத்தை சுருக்கி காட்டுவது மிகவும் முக்கியமாகும்.  காரணம் என்னவென்றால் வேதங்களை புரிந்து கொண்டால்தான் இந்து மதத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

வேதங்களில் முதன்மையானது ரிக் வேதம் ஆகும்.  இது மட்டும் இந்த வேதத்திற்கு தனிப்பட்ட பெருமை அல்ல.  மனித சிந்தனையானது நூல் வடிவாக முதன்முதலில் கொண்டு வரப்பட்டது இந்த வேதத்தின் மூலமாகத்தான் அதாவது உலகின் முதல் நூல் ரிக் வேதம் தான்.

  நான்கு வேதங்களிலும் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை 1,82,211 ஆகும்.   இதில் 1,52,222 பாடல்கள் ரிக் வேதத்திலேயே இருக்கிறது அதாவது நான்கு வேதங்களில் முக்கால் பங்கு பாடல்கள் ரிக் வேதத்திற்கு சொந்தமாகும்.  இந்த வேதம் பத்து மண்டலங்களாக அதாவது பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.  இந்த பத்து பாகங்களும் 1028 சூத்தகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சூத்தகமும் தனிதனியான விஷயங்களை எடுத்து சிறப்பாக பேசுகிறது.  ரிக் வேதம் தனிமனிதனாலோ குழுக்களாகலோ உருவாக்கப்பட்டது அல்ல.  சிந்து நதி தொடங்கி கங்கை நதி வரையிலும் பரவி கிடந்த பல ஞான புருஷர்களால் கண்டறியப்பட்டு பல தலை முறைகளால் உருவாக்கப்பட்டதே  ஆகும். ரிக் வேதத்தில் முதல் பாகத்தையும் கடைசி பாகமான பத்தாவது பாகத்தையும் உருவாக்கியது யார் என்று இதுவரை தெரியவில்லை.  மற்ற எட்டு பாகத்தையும் உருவாக்கியவர்களை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.  இரண்டாவது பாகத்தை கிறிதமாதாவும் அவரது சீடர்களும் உருவாக்கியிருக்கிறார்கள்.  மூன்றாவது பாகத்தை விஸ்வாமித்திரரும், நான்காவது பாகத்தை வாமதேவரும் ஐந்தாவது பாகத்தை அந்திரியும், ஆறாவது பாகத்தை பரத்வாஜரும், ஏழாவது பாகத்தை வஸிஷ்டரும், எட்டாவது பாகத்தை ஆங்கிரகரும், ஒன்பதாவது பாகத்தை கன்வரும் கண்டறிந்து வெளிபடுத்தியதாக கருதப்படுகிறது.

  லட்சத்திற்கு மேல் பாடல்கள் ரிக் வேதத்தில் இருந்தாலும் அவைகள் சமயப் பாடல்கள், வாழ்க்கை பாடல்கள், தத்துவப் பாடல்கள் என்று மூன்று வகையாக பிரித்துவிடலாம்.  இருப்பினும் இந்த பாடல்களில் வழிபாட்டு பாடல்களான சமய பாடல்கள் தான் அதிகமாக இருக்கிறது உடம்பும் மனதும் தனிதனியானவைகள் அல்ல.  ஒன்றாகவே ஆனது என்று ஆதிமனிதர்கள் நம்பினார்கள்.  வாழ்வில் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையை கண்டறிந்த பிறகு பண்பட்ட சிந்தனை வளர்ச்சி அதிகரித்த பிறகு உடல் வேறு உள்ளம் வேறு என்ற தெளிவை பெற்றார்கள்.  இந்த தெளிவான அறிவு மக்களிடம் எப்படி இருந்தது என்பதை ரிக் வேத தத்துவப் பாடல்கள் தெளிவுபடுத்துகிறது.  அலை வீசும் கடலுக்கடியில் சில முத்துக்கள் தான் கிடைக்கும் என்பதை போல் சமயப் பாடல்கள் என்ற அலைகளுக்கிடையில் தத்துவப்பாடல்கள் என்ற சில முத்துக்கள் தான் ரிக் வேதத்தில் பின்னிக் கொண்டிருக்கின்றன.

  இனி ரிக் வேதத்தின் ராஜபாட்டைக்குள் பிரவேசித்து வேதக் கருத்துகளை தரிசனம் செய்வோம்.  மனிதன் என்பவன் யார் என்ற கேள்வியை ரிக்வேதம் முன் வைத்து மனிதன் உயிர், உடம்பு, ஆத்மா ஆகிய மூன்றின் கலவை என்ற பதிலை தருகிறது. இந்த மூன்றும் இல்லாத மனிதனை கற்பனையில் கூட பார்க்க முடியாதல்லவா.  உயிர் தன்னை வெளிப்படுத்த உடம்பு என்பது அவசியம் அந்த உடம்பில் தான் ஆத்மா கொலுவிருக்க முடியும்.  அழகிய இந்த மூன்றையும் மனிதனுக்கு கொடுப்பது யார்?

  அழகான சரீரம் அமைய கருமுட்டையை கொடுப்பவள் தாய்.  அந்த சரீரம் உருவாக விந்துவான உயிரைக் கொடுப்பவன் தகப்பன்.  உயிரையும் உடலையும் இயக்கும் சக்தியாகிய ஆத்மாவை கொடுப்பவன் இறைவன்.  உடலும் உயிரும் தந்த தாய் தந்தையை கண்களால் காணமுடியும்.  அறிவுப் பொருளான ஆத்மாவை கொடுத்த இறைவனை வெறும் கண்களால் காணமுடியாது.  அவனை தரிசிக்க ஞானக் கண் வேண்டும்.  ஞானக்கண் பெற்று இறைவனை தரிசித்து விட்டால் ஆனந்தம் என்பது அன்றாட வாழ்வின் அனுபவமாகி விடும்.

  ரிக் வேதத்திற்கு சொந்தமானதை அறிய உபநிஷதம் மனிதன் என்பவன் அன்னநிலை, பிரான நிலை, மனோநிலை, விஞ்ஞான நிலை, ஆனந்த நிலை என்று ஐந்து வகையான  ஆக்கப்பட்டதாக சொல்கிறது.  இந்த ஐந்தில் அன்னநிலை என்பது உடம்பை குறிக்கும், பிரான நிலை உயிரை குறிக்கும், மனோ நிலை ஆத்மாவாகும், விஞ்ஞான நிலை அறிவாகிய ஞானமாகும், ஆனந்த நிலை என்பது இறைவனோடு கலப்பதால் ஏற்படும் பெருங்களிப்பாகும்.  இதை மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வகையிலும் நாம் எடுத்து கொள்ளலாம்.  அதாவது கருவிலே உருவாகிய தாய் நம்மை தகப்பனிடம் தருகிறாள்.  தகப்பன் ஞானம் பெறுவதற்காக நம்மை குருவிடம் அனுப்புகிறார்.  ஞானத்தை தரும் குருவோ நம்மை அழியாத ஆனந்தத்தை தரும் ஆண்டவனிடத்தில் கொண்டு சேர்க்கிறான்.  எனவே மனிதனின் இறுதி லட்சியம் இறைவனின் திருவடிகளை சேர்வதே ஆகும் என்று ரிக் வேதம் வலியுறுத்துகிறது.

  ரிக் வேதத்தில் புகழ்பெற்ற பருஷசூத்தகம் பத்தாவது மண்டலத்தில் அடங்கியுள்ளது.  இந்த சூத்தகத்திலுள்ள மந்திரங்கள் மிகவும் அர்த்த புஷ்டியானது ஆகும்.  அந்த சூத்தகத்தின் கருத்தை சுருக்கமாக விளக்கி சொல்ல முயற்சிப்போம்.  விராட் புருஷனான கடவுள் நாம்காணும் இடத்திலும் கானாத இடத்திலும் பரவிகிடக்கிறான்.  ஏனென்றால் அவனது உருவம் கண்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு பிரம்மாண்டமானது.  அவனுக்கு ஆயிரம் தலைகளும் பல்லாயிரம் கைகளும் பல நூறு கோடி கால்களும் உள்ளன.  பூமியின் எல்லா திசைகளையும் அண்டசராசரத்தின் ஒவ்வொரு துகள்களையும் அவனது கைகள் தாங்கி கொண்டிருக்கின்றது.

  இந்த சூத்தகத்தின் மூலம் கண்ணுக்கு தெரியாமல் நுணுக்கரிய நுண்ணியனாகவும் பிரமாண்டமாகவும் இருக்கும் இறைவனுக்கு மனித உடல்கள் இருப்பது போன்ற கற்பனையை வேத ரிஷி வர்ணனை தருகிறார் கடவுளை மனித வடிவாக்கியது சரிதானா முறைதானா என்ற  வாதங்கள் வேத உரையாசியர்களால் இன்று வரை எழுப்பட்டு கொண்டிருக்கிறது.  பதில் தான் இன்னும் கிடைத்த பாடில்லை.  ஏன் இந்த கேள்வி புருஷ சூத்தகத்தை பார்த்து கேட்கபடுகிறது என்றால் 33 வகையான பெயர்களைக் கொண்டு கடவுள் வர்ணனை செய்யப்பட்டாலும் வேத கால கவிஞர்களான ரிஷிகள் காட்டியது தேவதைகள் இயற்கையின் வடிவங்களாக இருக்கிறது என்பது தானே தவிர மனிதர்களாக இருப்பதாக அவர்கள் உறவில்லை.

  மின்னலை ஆயுதமாகக் கொண்ட இந்திரன் தான் வேதப் பாடல்களில் முழுமுதற்கடவுளாக கருதப்படுகிறான்.  மக்களின் அபிமனாத்திற்குய கடவுளாகவும் நான்கில் ஒரு பகுதி இந்திரனை பற்றி மட்டுமே பேசுகிறது அதற்கு அடுத்த படியாக அக்னியும் மூன்றாவதாக மழையை தரும் வருணனும் நான்காவதாக காற்றுக் கடவுளான வாயுவும் சூரிய சந்திரர்களும் வணங்கப்படுகிறார்கள்.  பருவக்காலங்களில் வரும் மந்த மாருதமும் சண்டமாருதமும் காலை பொழுதின் நாயகியான உஷாவும் கோபத்தோடு இருக்கும் ருத்திரனும், விஷ்ணுவும், அஷ்வினி தேவர்களும், பிரகஸ்பதி, பிரஜாபதி, அதிதி என்று இன்னும் பல தேவதைகளும் வேத ரிஷிகளின் பாடல்களால் ஆராதிக்கபடுகிறார்கள்.  இந்த பாடல்களில் எந்த தேவதையும் மனித வடிவமாக சித்தரிக்கப்படவில்லை.  மாறாக புருஷ சூத்தகம் மட்டுமே கடவுளை மனித வடிவில் வர்ணனை செய்கிறது.  அது ஏன்?

  மிக முக்கியமாக இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  இறைவனை மனித வடிவில் காட்ட முயற்சிக்கும் புருஷ சூத்தக பாடல் ரிக் வேதத்தின் கடைசி பகுதியாகத்தான் வருகிறதே தவிர முதற்பகுதியிலோ நடுப்பகுதிலோ வரவில்லை.  எனவே சென்ற அத்யாயத்தில் நாம் சிந்தித்த படி பூர்வ குடிமக்கள் தான் கடவுளை மனித வடிவில் வணங்கினார்கள் அவர்களின் கொள்கைகளை பிறகு வேதங்களோடு இணைக்கப்பட்டன என்ற வாதத்திற்கு இது வலுசேர்க்கிறதல்லவா.

  ரிக் வேத காலத்தில் ஜாதி பிரிவுகள் இல்லை.  வர்ணம் என்ற வார்த்தை மனித நிறங்களை குறிக்க பயன்படுத்தப்பட்டதே தவிர சாதியை குறிக்க பயன்படவில்லை.  வெள்ளை நிறம் கொண்டவர்கள் ஆரியர்கள் என்றும் தேவர்கள் என்றும் கருதப்பட்டார்கள்.  கருப்பு நிற மக்கள் தாசர்கள் என்றும் அசுரர்கள் என்றும் கருதப்பட்டார்கள்.  தேவாசுர யுத்தம் என்று ரிக்வேதம் பேசுவது எல்லாம் வெள்ளை நிற மக்களுக்கும் கருப்பு நிற மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல்களே ஆகும்.  இந்த பூசல்கள் முடிவு வெற்றி தோல்வியை தராமல் இரண்டு இனக் குழுக்களும் ஒன்றிற்குள் ஒன்று கலந்து போய் விட்டதாகவே ரிக் வேதம் கூறுகிறது.

 ரிக் வேதக் கருத்துபடி பிராமணர், சத்திரியர், வைசீகர், சூத்திரர் என்னும் நான்கு வகையான மக்கள் அனைவரும் ஒரே வர்ணத்தை சேர்ந்தவர்களே அவார்கள்.  ஜன நெருக்கடியும் இடநெருக்கடியும் ஏற்பட்டபொழுது சமூக தேவைகளுக்காக தொழிலின் அடிப்படையில் மனிதர்கள் பிரிக்கப்பட்டார்களே தவிர அவர்களிடத்தில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் கருதப்படவில்லை.  அதாவது பிறப்பின் அடிப்படையில் நான்கு தொழில்களும் பிரித்து வைக்கப்படாமல் சர்வ சுதந்திரமாக யார் வேண்டுமென்றாலும் கல்வி போதிக்கும் பிராமணனாகவோ உடல் உழைப்பு செய்யும் சூத்திரனாகவோ இருக்க அனுமதிக்கபட்டார்கள் அதே நேரம் ஒரு தொழிலை செய்பவன் சாகும் வரை அதே தொழிலை தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் அப்போது இல்லை.  சூத்திரனாக இருந்து உடல் உழைப்பு செய்யும் ஒருவன் தான் விரும்பினால் கல்வி கற்று பிராமணனாக மாறிவிடலாம்.

  இந்த கருத்திற்கு வேதங்களிலேயே வலுவான ஆதாரங்கள் இருக்கிறது ரிக் வேதத்தின் இரண்டாவது மண்டலத்தை உருவாக்கிய விஷ்வா மித்திரர் மகரிஷி அடிப்படையில் கௌசீகன் என்ற சத்ரியன் ஆவான்.  இவர் தனது ஆர்வத்தால் தனது மக்களை காக்கும் அரசியல் தொழிலை விட்டுவிட்டு தவம் செய்து மந்திரங்களை உருவாக்கும் பிராமணனாக மாறிவிடுகிறான்.  வேதங்களால் இவர் சிறந்த அந்தணராகவும் போற்றப்படுகிறார்.  பிறப்பின் அடிப்படையில் வர்ணங்கள் உருவாக்கப்பட்டு இருந்தால் ஒரு சத்ரியன் எப்படி பிராமணனாக மாறி இருக்க முடியும்.

  இன்று மற்ற சாதியினர் சமைத்த உணவை பிராமணர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் சாப்பிட மறுக்கிறார்கள்.  நாகரீக சமூகம் வளர்ந்து விட்ட இன்றைய காலத்தில் இந்த பழக்கம் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் கூட மறைமுகமாக வலுவாக இருப்பதை பலர் அறிவார்கள்.  ஆனால் வேதகாலத்தில் உணவை தயாரிப்பதிலும் உண்பதிலும் எந்த பாகுபாடும் இருந்ததாக தெரியவில்லை.  ரிக் வேதத்திலுள்ள பல பாடல்களில் சூத்திரர்கள் சமைத்த உணவை பிராமணர்கள் உண்டதற்கான பல ஆதாரங்கள் காட்டப்பட்டுள்ளன.  உணவு விஷயத்தில் மட்டுமல்ல திருமண விஷயத்திலும் பாகுபாடுகள் வேதகாலத்தில் இல்லை.  சத்திரிய பெண்ணை பிராமணனும், பிராமணப் பெண்ணை சூத்திரனும் மணந்து கொண்டதாக பலத் தகவல்கள் கிடைக்கின்றன.  இதை எயாதி, ருஷ்யசுருந்தர் ஆகியோர் கதைமூலம் நம்மால் அறிந்து கொள்ளமுடிகிறது.

 கடவுள்தான் மனிதனை படைத்தான் என்று ரிக் வேதம் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.  ரிக் வேதத்திலுள்ள தைந்திரிய உபநிஷதம் இதை தெளிவுபட காட்டுகிறது.  மனிதன் எங்கிருந்து வந்தான் எங்கே இருக்கிறான் இறுதியில் எங்கே போகிறான் என்பதை இந்த உபநிஷதம் ஒரு பாடல் மூலம் அழகுபட விளக்குகிறது.

  பிரம்மம் என்னும் கடவுளை பற்றி அறிந்து கொள்ள ஆசைப்பட்ட பிறகு முனிவர் தமது தந்தையான வருண தேவனிடம் கேள்விகள் கேட்கிறான் அதற்கு வருணதேவன் பல பதில்களை சொல்லி கடைசியாக எதிலிருந்து எல்லாப் பொருட்களும் வெளியேறுகிறதோ எதனால் எல்லாப் பொருட்களும் காக்கப்படுகிறதோ எதில் எல்லாப் பொருட்களும் ஒரு நாள் திரும்பி வந்து அடங்குகிறதோ அதுதான் பிரம்மம் என்று வருணதேவன் குறிப்பிடுகிறான்.  இந்த சொற்றொடரில் வருகின்ற பொருள்கள் என்னபதம் மனிதன் உட்பட சகல ஜீவ ராசிகளையும் ஜடப் பொருட்களையும் குறிக்கிறது.  இப்படி மனிதனையும் மற்ற பொருட்களையும் படைத்த இறைவனுக்கு எப்படிபட்ட உருவத்தை கொடுக்கலாம் என்று வேத ரிஷி சிந்திக்கிறார்.  இறைவனை மிருகமாகவோ பறவையாகவோ சிந்தித்து பார்ப்பதை விட மனிதனாக சிந்தனை செய்வதே சிறந்ததாக இருக்கும் என்று அவர்கருதுகிறார்.  ஏனென்றால் அவர் பறவைக்காகவோ மிருகத்திற்காகவோ இறைவனை பற்றிய தகவலை தரவில்லை அல்லவா.

  மனித வடிவில் இறைவனை உருவப்படுத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது.  ஒரு தலையும் இரண்டு கால்களும், கைகளும் கொடுத்தால் அவனும் சாதாரண மனிதனாக கருதப்பட வாய்பிருக்கிறதே தவிர சர்வசக்தி வாய்ந்த ஆண்டவனாக கருதமுடியாது.  அதனால் வேதக் கவிஞன் இறைவனுக்கு ஆயிரம் தலைகளும், ஆயிரம் கைகளும் கொடுத்து உருவகப்படுத்துகிறான்.

  தன்னைக் காட்டிலும் சக்தி மிகுந்த வேறு ஒன்று இருந்தால்தான் மனிதன் அதை பயத்துடனும் வியப்புடனும் மதிப்பான்.  இந்தக் கருத்தை கொண்டுதான் ரிக் வேதத்தில் புருஷ சூத்தகத்தில் பிரமாண்டமான வடிவத்தை இறைவனுக்கு கொடுத்து வேதகால கவிஞன் போற்றிபாடுகிறான்.  அத்தகைய பிரமாண்ட வடிவுடைய ஈஸ்வரனுக்கு விராட் புருஷன் என்ற பெயரையும் சூட்டுகிறான்.  விராட் புருஷனை பற்றி பகவத் கீதையும் பேசுகிறது.

  விராட் புருஷனின் தன்மைகளை பற்றி புருஷ சூத்தகம் விளக்கம் கொடுப்பதை பார்ப்போம்.  விராட் புருஷன் தனியாகவே இருக்கிறான் இதே நிலையில் தான் முன்பும் இருந்தான் இப்போதும் இருக்கிறான் இனி எப்போதும் அப்படியே இருப்பான்.  அவன் அழிவு என்பதை அறியாதவன் உணவை எடுத்துக் கொள்ளும் எல்லா உயிர்களும் இவனிடமிருந்தே வருகின்றது.  உயிரை உற்பத்தி செய்யும் அவன் ஒவ்வொரு ஜீவனுக்கு உணவையும் உற்பத்தி செய்கிறான்.  உணவு என்பது உடலை வளர்ப்பது அன்று.  உயிரை வளர்ப்பதாகும்.

 விராட் புருஷன் எல்லா தெய்வங்களை விட மேம்பட்டவன்.  இவனுக்கு இணையாக எந்த கடவுளும் இல்லை.  ஏனென்றால் இவனே எல்லா கடவுளுமாக இருக்கிறான்.  இவனது மனதிலிருந்துதான் சந்திரன் தோன்றினான் இவன் கண்களிலிருந்து சூரியன் தோன்றினான்.  இந்திரனும் அக்னியும் இவனது வாயிலிருந்து தோன்றியவர்களே.  இவன் சுவாசம் தான் வாயுவாகும்.  உலகத்தில் காணுகின்ற யாவும் காணாத எல்லாமும் இவனன்றி வேறில்லை.  உலகப் பொருளாகவும் இருக்கிறான் அந்த பொருட்களுக்கு அப்பாலும் இருக்கிறான்.

  இப்படி 16 பாடல்களாக புருஷ சூத்தகம் பிரம்மத்தை பற்றியும் அதன் உருவம் ஆற்றல் குறித்து விளக்கி கொண்டு போகிறது.  இந்த விளக்கங்களுக்கு இடையில் மனித சிருஷ்டியை பற்றியும் பேசுகிறது.  இனி ரிக் வேதத்தின் அக்னி என்ற இரண்டாவது மண்டலத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை பார்ப்போம்.

 அக்னியை அழியக்கூடிய பிறவிகொண்ட மனிதனான எங்களுக்கு நாள்தோறும் சக்தியை கொடு அதேநேரம் அழிவற்ற நிலையை நோக்கி செல்லும் பாதையை காட்டி அருள் கொடு இப்போதும் இனி எப்போதும் குறைவில்லாத வளம் கொழிக்கும் வாழ்க்கையையே அறிவாளி வேண்டுகிறான்.  அந்த குறைவற்ற நிறைவான வாழ்வை எப்போதும் கொடுத்துக் கொண்டே இரு இப்படி அக்னி தேவனை நம்பிக்கையுடன் வழிபடும் வேத ரிஷி உரிமை நிறைந்த உறவுடன் அக்னியின் அருகில் நெருக்கமாக சென்று

 அக்னியே எங்களிடம் அன்பு கொண்டவனாகவே நீ எப்போதும் இருக்கிறாய்.  நீ தான் எங்களுக்கு உயிர் கொடுத்த தந்தை என்பதை நாங்கள் அறிகிறோம்.  நீ எவராலும் வெல்ல முடியாத வல்லமை படைத்தவன் எனவே உனது குழந்தைகளை பலசாலிகாளக பார்க்கவே நீ விரும்புவாய்.  உன்னை வணங்கும் எங்களுக்கு நீயே பாதுகாவலன் நாங்கள் கேட்பதெல்லாம் எங்களை நூறு நூறாகவும் ஆயிரம் ஆயிரமாகவும் பெருக்கு.  உன்னிடம் நாங்கள் சரணடைகிறோம்.

  இந்த ரிக் வேத பாடல் ஒரு தோத்திர பாடலாக மட்டுமல்லாது அந்தகால மக்களின் நிலையை படம் பிடித்து காட்டும் காலக் கண்ணாடியாகவும் இருக்கிறது.  வேதப் பாடல்களை வடித்தெடுத்த இந்த மக்கள் தாங்கள் வாழும் பகுதியில் வாழ்ந்த மற்ற மனித கூட்டத்தோடு ஒற்றுமையாக இல்லை.  அவர்களுடன் போராடிக் கொண்டே இருந்தனர் மனித எண்ணிக்கையும் அடிப்படையில் அன்றைய யுத்தத்தில் வெற்றி தோல்விகள் தீர்மாணிக்கப்பட்டதால்  ஆள் பலம் தங்களுக்கு வேண்டுமென்று நெருப்பு தேவியிடம் பிரார்த்தனை செய்கிறான்.  இதில் இன்னொறு உண்மையும் மறைந்திருக்கிறது.  நெருப்பு என்பது விரகுகளை மட்டுமே பற்றிக் கொண்டு எரியும் ஒரு பொருள்ளல்ல எல்லா உயிர்களிடத்திலும் உடம்பிற்குள் அக்னி மறைந்திருக்கிறது.  ஜனனத்தை அதிகப்படுத்தும் காமமும் ஒரு வகையில் நெருப்புதான் பித்த உடம்பு அதாவது சூடான உடம்பும் படைத்த மனிதனால் உடனுக்குடன் பிள்ளைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவே இந்த பாடல் அக்னியை போற்றும் பாடலாக மட்டும் அல்லாது இதை முறையிலான சந்தலயங்களோடு ஓதினால் மனித உடம்பில் வெப்பத்தை அதிகபடுத்தும் அதிர்வுகளும் நிறைந்துள்ளதை அனுபவத்தில் உணரலாம்.

  இதனால்தான் வேத ரிஷி அக்னியை தந்தை என்று உணர்வு பூர்வமாக பாடுகிறான்.  அதனுடைய உறவையும் நெருக்கத்தையும் வேண்டுகிறான்.  எல்லா வெளிச்சங்களிலேயும் அக்னியை காண்கிறான்.  சூரியனும் சந்திரனும், நட்சத்திரங்களும், மின்னலும் அவனுக்கு அக்னி வடிவாகவே தெரிந்தது.  அக்னியை பற்றி வேத பாடல் ஆசிரியர் கூறுவதை உபநிஷத ஞானி தத்துவ நோக்கில் நமக்கு  காட்டுகிறான்.  இருட்டிலிருந்து உண்மைக்கு  என்னை கூட்டிசெல்வாயாக பொய்யிலிருந்து என்னை மீட்டு செல்வாயாக அழிவிலிருந்து அழிவற்ற அமிர்த நிலைக்கு என்னை அழைத்து செல்வாயாக என்று அக்னி தேவனிடம் முறையிடும் உபநிஷத வாக்கியம் அக்னியை ஞான வடிவாக நமக்கு காட்டுகிறது.

 ரிக் வேதத்தின் இரண்டாம் மண்டலம் இந்திரனையும் மூன்றாவது பகுதி வருணனையும் நான்காவது வாயுவையும் பற்றி பேசுகிறது.  அவையாவும் ஏறக்குறைய முதல் மண்டல கருத்துகளை போலவே இருப்பதனால் இனி ஐந்தாம் மண்டலத்தில் சூரியனை பற்றி சொல்லப்பட்டிருப்பதை பார்ப்போம்.

 வேத ரிஷி சூரியனை துதிக்கும் போது அவனுக்கு பல பெயர்களை சூட்டி மகிழ்கிறான்.  சூரியனை இருட்டின்  பகைவன் என்றும் மனிதச் சோம்பலின் எதிரி என்றும் பாராட்டுகிறான்.  சூரியனை சோம்பலின் எதிரியாக காட்டுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.  வேதகால மனிதன் சோம்பி இருக்க முடியாத நிலையில் இருந்தான்.  பகைவர்களிடமிருந்தோ கொடிய மிருகங்களிடமிருந்தோ சதாகாலமும் அவனை அபாயம் துரத்திக் கொண்டே இருந்தது.  சூரியன் மறைந்து விட்டால் அவனது அச்ச உணவு அதிகபட்டது பாதுகாப்புணர்வு இன்னும் அதிகமாக தேவைப்பட்டது அதனால் அவன் இருட்டை வெறுத்தான் இருட்டை கிழித்தெரியும் பகலவனை வரவேற்றான்.  ஒளி தருகின்ற அனைத்து பொருட்களையுமே தனது நண்பனாக கருதி அன்பு செலுத்தினான் ஆராதனை செய்தான்.  இந்த உணர்வுகளை சூரியனை பற்றிய ரிக் வேதப் பாடல்கள் தெளிவாக காட்டுகிறது.

 சூரிய தேவன் எல்லாம் தெரிந்தவன் சகல சக்திகளும் வாய்க்கப் பெற்றவன் பலவாறு வடிவம் கொண்ட உயிர்கள் அனைத்திற்கும் போதனை செய்யும் ஆசியரை போன்றவன் மனிதனுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கும் அவன் உணவளிப்பவன்.  வைகரை பொழுதின் இவன் தலை உயர்த்தி பார்த்து விட்டாலே மனித மனங்கள் இன்பத்தின் எல்லையை தொட்டுவிடுகிறது.  பசியை நீக்கும் நேரத்தை மட்டும் சூரியன் தருவதில்லை.  ஞானமும் அறிவும் ஆற்றலும் பெறுகின்ற பொழுதையும் சூரியன் தருகிறான்.  சூரியனின் ஞானக் கதிர்கள் மனநிலத்தை ஆழ உழுது அறிவு பயிர்களை விதைக்கிறது.  இதனால் புத்திசாலிகள் சூரியனை ஆராதிக்கிறார்கள்.  தெய்வீகமான எண்ணங்களை வளர செய்பவன் மனச்சோர்வுகளை போக்க செய்பவனும் தானியங்களை செழிக்க செய்பவனும் சூரியனே ஆவான் என்று சூரியனை போற்றும் இந்த பாடல் மேலோட்டமாக பார்க்கும் பொழுது சாதாரணமாக நமக்கு தெரியும் ஆழமான சிந்தனையை செலுத்தினால் ஆதிகால இந்து எத்தகைய நுட்பம் வாய்ந்தவனாக இருந்தான் என்பது புலப்படும்.

 வைகரையில் சூரிய தரிசனத்தை பெறும்படி வேத ரிஷி ஏன் வற்புறுத்துகிறான்.  அந்த நேரம் மனிதனின் உடலும் மனமும் பிரபஞ்ச சக்தியை உள்வாங்கக் கூடியதாக இருக்கிறது.  சூரிய கதிர்கள் கண்களிலும் உடல் முழுவதும் அந்த நேரம் பரவினால் மனிதனின் அறிவாற்றல் பலமடங்கு கூடும்.  சிந்தனையின் வேகம் செழுமைபடும்.  எதையும் துணிந்து செய்யக் கூடிய மன தைரியம் அதிகரிக்கும்.  உடலிலுள்ள மாசுகள் அழிந்து ஆரோக்கியம் பெருகும்.  இந்த உண்மையை அவன் அறிந்து பாடினானா அறியாமல் பாடினானா என்பது முக்கியமல்ல.  இந்த பாடல் வரிகள் சூரிய சக்தியை நமக்கு அதிகபடுத்தி தருவதாக இருப்பது அறிவியல் உண்மையாகும்.

 இனி சமுதாய சிந்தனைகளை கொண்ட ரிக் வேதத்தின் ஆறாவது மண்டலத்தை பார்ப்போம்.  சமூகம் என்பது ஆண்களையும் பெண்களையும் கொண்டது மட்டுமல்ல குழந்தைகளையும், முதியவர்களையும், பல மற்றவர்களையும், நோயாளிகளையும் கொண்டதே ஆகும்.  பலசாலிகள் அப்படி பட்ட பலஹீனர்களை காப்பாற்ற வேண்டும் உணவளித்து பாதுகாக்க வேண்டும் என்று ரிக் வேதம் வலியுறுத்துகிறது.

 ஆறாவது மண்டலம் 75-வது சூத்தகம் சமூகத்தை நேசி அதற்கு மதிப்பு கொடு, பசியால் வாடுவோருக்கு ஆகாரம் கொடு, சிரமத்தில் சிக்கியோன் துன்பத்தை போக்க போராடு, அதற்காக உனது சக்தியை பெருக்கிகொள், ஆற்றலை வளர்த்துக் கொள், உனது கௌரவத்தை திரட்டிக்கொள், உயர்ந்த செயலுக்காக உன்னிடமுள்ள துணிச்சல் உச்ச நிலையை அடையட்டும்.  உனது கைகளிலுள்ள ஆயுதங்கள் எதிகளை மட்டுமல்ல அதர்மத்தையும் சாய்க்கும் ஆற்றலை பெறும் வண்ணம் பயிற்சி எடுத்துக்கொள்.  தர்மத்திற்கு மாறானவைகளிடமும் எதிகளிடமும் நிமிர்ந்து நிற்க்கும் சுபாவத்தை வளர்த்துக் கொள்.  மக்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பண்பை பெறுக்கி கொள் என்றெல்லாம் மனிதனுக்கு அறிவுரை தருகிறது.

   அடுத்ததாக முழுமுதற்கடவுளான விஷ்ணுவை பற்றி குறிப்பிடும் ரிக் வேதத்தின் ஏழாவது மண்டலத்தை பார்ப்போம்.  இந்த இடத்தில் ஒரு உண்மையை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.  வேத பாடங்களில் எந்த இடத்திலேயும் விஷ்ணுதான் மூலப்பரம் பொருள் என்று குறிப்பிடப்படவில்லை.  இந்திரன் வருணன் போன்ற தெய்வங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற முக்கியத்துவம் கூட கொடுக்கப்படவில்லை.  விஷ்ணு என்று அழைக்கப்படும் திருமால்தான் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம் என்ற கருத்து வேதகாலத்திற்கு பின்பு வந்ததே ஆகும்.  உபநிஷதங்களின் சாரமாக கருதப்படும் வேதாந்தம் என்பது நடைமுறைக்கு வந்த பிறகுதான் விஷ்ணு பரம்பொருளாகக் கருதப்பட்டு வைணவ சம்பிரதாயத்தில் முதல் தெய்வமாக உயர்த்தப்படுகிறார்.  இப்படி வேதத்தில் விஷ்ணுவை பிரதானபடுத்தாமைக்கு வேறொரு காரணத்தையும் கூறலாம்.  வேத பாடல்கள் அனைத்துமே ஒருவரால் உருவாக்கப்படவில்லை ஒரே காலகட்டத்திலும் ஆக்கப்படவில்லை பல ரிஷிகளால் பல காலத்தில் அறியபட்டதே வேதபாடல்களின் தொகுப்பாகும்.  எனவே ஒவ்வொரு பாடலும் தான் போற்றும் தெய்வமே சிறந்தது உயர்ந்தது இணையற்றது என்று கருதுகிறது.  அதனால் மற்ற தெய்வங்களை பாடிய ரிஷிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் விஷ்ணுவை பாடிய ரிஷிகளின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதனால் வேதத்தில் விஷ்ணுவின் தரம் தாழ்த்தபட்டிருப்பதாக கருதமுடியாது.  இந்திய தத்துவங்கள் சிந்தனை மரபுகள் மதக் கோட்பாடுகள் உருவாக வேதங்கள் பாதைகளை மட்டுமே அமைத்து கொடுத்து இருக்கிறது மற்றபடி உள்ள வளர்சிகள் அனைத்துமே உபநிஷதங்களாலும் இதிகாச புராணங்களாலும் ஏற்படுத்தப்பட்டிக்கிறது என்பதை உணர்ந்து கொண்டால் எந்த குழப்பம் ஏற்படாது.  இனி விஷ்ணுவை பற்றிய வேத வரிகளை பார்ப்போம்.

  விஷ்ணுவே நீ தான் அனைத்திலும் உயர்ந்தவன்.  மிகச் சிறந்த அரியாசனத்தில் அமர்ந்திருப்பவன் ஏனென்றால் இந்த மண்ணில் பிறந்த நாங்கள் பூமியின் அனைத்து பகுதிகளையும் அறிந்து கொள்ள முடியாத அர்பர்களாக இருக்கிறோம்.  ஆனால் நீ எல்லா இடங்களை அறிந்தவனாகவும் எங்கும் இருப்பவனாகவும் எல்லா இடங்களிலும் வியாபித்துள்ளாய்.  நீ விஸ்வரூபம் எடுத்து உயரும் போது எல்லாமே உனக்குள் அடங்கி விடுகிறது.  உனது விஸ்வ ரூபத்திற்கு எல்லைகளை வகுக்கும் ஆற்றல் எங்களுக்கு இல்லை.  அதனால் உனது பெருமையில் சந்தேகப்படும் தகுதி எந்த மனிதனுக்கும் இல்லவே இல்லை.  நீ தான் உயர்ந்தவன் சிறந்தவன் என்று உன்னை துதிக்கும் எனக்கு ஆதாரமாக இருப்பதுவும் நீயே ஆகும்.  நீ பெரு வடிவம் எடுத்து நிர்க்கும் பொழுது உனது சிரசு சொர்க்கத்தையும் தாண்டி மேலே நிற்க்கிறது.  உன் பலம் பொருந்திய பாதங்கள் பாதாளத்தையும் தாண்டி கண்ணுக்கு புலப்படாமல் இருக்கின்றன.  திசைகள் அனைத்தும் உனது கைகளுக்குள் சிறைபட்டு கிடக்கிறது.  மனித சமூகம் தனது சக்திகள் அனைத்தையும் திரட்டிக் கொண்டாலும் உனது பெருமையின் ஒரு துளியை மட்டுமே கணித்து பார்க்க முடியும்.  இது இப்போது இருக்கும் எங்களின் கருத்துமட்டுமல்ல.  எங்களுக்கு முன்னால் இருந்தவர்களும் இப்படித்தான் கருதினார்கள் இனி வரப்போகிறவர்களும் இப்படிதான் கருதுவார்கள்.

  விஷ்ணுவை பற்றி இன்னும் சில குறிப்புகள் ரிக் வேதத்தில் உள்ளது.  அவற்றில் முக்கியமானதாக இந்த பகுதியை நான் சுட்டி காட்டுவதற்கு வேறொரு காரணம் உண்டு.  நமது புராணங்களை பற்றி குறிப்பிடும் பொழுது அவைகள் வேதங்களுக்கான விளக்க உரைகளே என்று பொதுவான கருத்துகள் சொல்லப்படுவது உண்டு.

  வேதங்களை புராணங்கள் எந்த வகையில் விளக்குகின்றன என்பதை எல்லோரும் அறிந்து கொள்ளவே இந்த பகுதியை மட்டும் தொட்டேன்.  விஷ்ணுபுராணத்தில் நாராயணன் வாமன அவதாரமும், திருவிக்ரம் அவதாரமும் எடுத்த விதத்தை வர்ணனை செய்யப்பட்டிருப்பதை எல்லோரும் அறிவீர்கள்.  அந்த வர்ணனையோடு ரிக் வேத கருத்துகளை பொறுத்தி பார்த்தால் வேத விஷயங்கள் புராணங்களில் எந்த வகையில் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்பது நன்கு புலனாகும்.

மேலும் ரிக் வேதத்தில் வேதத்தின் பெருமையை பற்றி எட்டாவது மண்டலமும் விடியலை பற்றி ஒன்பதாவது மண்டலமும் சதுரங்கம் முதலான அறிவு சார்ந்த விளையாட்டுகளை பற்றி பத்தாவது மண்டலமும் பேசுகிறது.  அவைகள் முக்கியம் வாய்ந்தவைகள் என்று கருதினாலும் கூட நாம் எடுத்திருக்கின்ற மதம் சார்ந்த சிந்தனை ஓட்டத்திற்கு அவைகள் தற்போது தேவைபடாது என்பதனால் அடுத்த வேதமான யஜீர் வேதத்தை பற்றி சிந்திப்போம்.

இந்து மத வரலாற்று தொடர் - 4


இந்து மதத்திற்கு மட்டுமல்ல ஆசியப்பகுதி சிந்தனை மரபுகளுக்கே மூலகாரணமாக இருப்பது வேதங்கள் என்பது நாமறிந்த விஷயம் தான்.  நம்மில் பலருக்கு வேதங்களின் பெயர்கள் தெரிந்தளவிற்கு அவற்றில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் என்னவென்று முழுமையாக இன்று வரை தெரியாது.  அதற்கு வேதங்கள் வடமொழியில் எழுதப்பட்டுள்ள விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட சாதியார் தவிர மற்றவர்களுக்கு படிக்க அனுமதி இல்லை என்று பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் கூட அவைகள் முற்றிலும் உண்மை என்று கருத இயலாது.  வடமொழி அறிந்தவர் கூட வேதம் படிக்கும் தகுதியை பெற்றவர் கூட வேதத்தின் உண்மை பொருளை உணர்ந்தவர்களாக இல்லை என்பது தான் உண்மை.

வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களே இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளபடாமலிருக்கும் போது வேதகால மக்களின் வாழ்க்கை தரம், வாழ்க்கை முறை எப்படியிருந்தது என அறிந்து கொள்வதும் கடினம்.  அறிய முயற்ச்சிப்பவர்களும் மிக குறைவு.  அப்படியே தப்பி தவறி முயற்சி செய்பவர்கள் ஒன்று வேதங்களை திட்டுபவர்களாகவோ அல்லது அதீதமாக போற்றி புகழ்பவர்களாகவோ இருந்து விடுகிறார்கள்.  இதனால் உண்மையான நிலவரத்தை அறிய ஆர்வமுடையவர்கள் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.  எனவே இந்து மத வரலாற்றை முழுமையாக இல்லையென்றாலும் ஓரளவாவது அறிந்து கொள்ள வேதகால சமுதாயம் எப்படியிருந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.  அப்படி அறிந்தால் தான் வேத கருத்துக்களையும் இந்து மத சிந்தனைகளையும் நம்மால் புரிந்து கொள்ள ஓரளவு முடியும்.

   வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை குறிப்பிடும் போது அது இப்போது தோன்றி இந்த காலத்தில் முடிந்தது என காலவரையறை சொன்னால் தான் கேட்பவர்களுக்கு சரியான முறையில் கிரகித்து கொள்ள வசதியாக இருக்கும்.  ஆனால் வேத காலத்தை பற்றி சொல்லும் போது அது எப்போது துவங்கியது.  எப்போது முடிவுக்கு வந்தது என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.  வரலாற்று ஆய்வாளர்கள் எட்டிபார்க்க முடியாத மிக நீண்ட நெடிய காலத்திற்கு முன்பே வேதங்களின் காலம் துவங்கிவிட்டது என்று சொல்லலாம்.  இருப்பினும் ஒரு கணக்கு குறியீட்டுக்காக கி.மு.  ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தை வேதகாலம் என்று சொல்கிறார்கள்.  நான்கு வேதங்களில் முதன்மையானது ரிக்வேதம் என்று நமக்கு தெரியும்.  ரிக்வேதம் தோன்றி பல நூற்றாண்டுகளுக்கு பிறகு தான் மற்ற மூன்று வேதங்களும் தோன்றியிருக்கிறது.  ஆனாலும் ஆச்சர்யம் என்னவென்றால் பல நூற்றாண்டுகளின் இடைவெளியில் வேதங்கள் தோன்றியிருந்தாலும் கூட  அவற்றுகிடையில் மெல்லிய தொடர்ச்சி அவற்றை தனிதனியாக போகாமல் ஒருங்கிணைக்கிறது.

   பொதுவாக வேதகால சமுதாயத்தை ஆர்ய நாகரீகம் என்ற பெயரிலேயே பலர் அழைக்கிறார்கள்.  நாமும் அப்படி அழைத்தால் ஒன்றும் குடி மூழ்கி போய்விடாது.  ஆர்ய என்ற சொல்லிற்கு உயர்ந்த சிறந்த என்ற பொருட்கள் உண்டு.  பொதுவாக சமஸ்கிருதத்தையும் அதை சார்ந்த மொழிகளையும் பேசும் மக்களை இந்தோ ஆரியர் என்று அழைப்பது வழக்கம்.  ஆரியர்கள் இந்தியாவிற்குள் எங்கிருந்து வந்தார்கள்.  எப்போது வந்தார்கள் என்ற குழப்பம் பல காலமாக இருந்து வருகிறது.  காதல் கடவுளான மன்மதனை சிவபெருமான் நெற்றிகண் கொண்டு எரித்தாரா இல்லையாயென்று தொன்று தொட்டு லாவணி பாடல் இருந்து வருவது போல ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் என்று ஒரு  சாராரும் அல்ல அல்ல அவர்கள் இந்த நாட்டின் வந்தேரிகள் என்று வேறொரு சாராரும் தொடர்ந்து வாதம் செய்து வருகிறார்கள்.  இந்தவாத பிரதிவாத சிக்கலுக்குள் மூக்கை நுழைத்து கொண்டு அவதிப்பட வேண்டிய அவசியம் இப்போது நமக்கு இல்லை.  நாம் நேரடியாக அக்கால மக்களின் வாழ்க்கை எப்படியிருந்தது என ஆராய போய்விடலாம்.

  வேதகால குடும்பங்களின் தலைவராக தந்தையே இருந்தார்.  ஒரு குடும்பத்தின் வரம்பற்ற அதிகாரம் அவருக்கே இருந்தது.  திருமணம் முடிந்து குழந்தை குட்டிகள் பெற்ற பிறகும் ஒரு மகன் தந்தைக்கு அடங்கியனாகவே இருக்க வேண்டும்.  சமுதாயத்திற்கு  தீங்கிழைத்த ஒரு மகனை தந்தை குருடாக்கியதாக ரிக் வேதத்தில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.  அதே போல சூதாடியான ஒருவனை குடும்பமே வெறுத்து ஒதுக்கியதாகவும் அந்த வேதம் சொல்கிறது.  இக்கருத்துக்களின் அடிபடையில் பார்க்கும் போது அக்கால சமுகத்தில் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் இணக்கமான உறவு முறை இல்லையென்று சொல்ல முடியாது.  

 தந்தைக்கு பணிந்து நடப்பதை மரியாதை குறைவாக யாரும் கருதவில்லை.  மேலும் குடும்பத்தில் ஏற்படும் நல்லது கெட்டதுகளை சமாளிக்க தலைக்கு தலை முடிவு எடுத்தால் சிக்கல்களே ஏற்படுமென்று ஒருவரையே முடிவு எடுக்க விட்டுவிட்டு மற்றவர்கள் சுற்று வேலைகளை கவனித்ததினால் குடும்பத்தின் நிலை என்பது குறைவில்லாத வண்ணமே இருந்தது.  குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் செய்போவரையும் கௌரவ குறைவாக நடப்பவர்களையும் தண்டிக்கும் நிலை இருந்ததே தவிர மற்றப்படி குடும்ப ஒற்றுமையில் பாச பிணைப்புகளே அதிகம் இருந்தற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.  தகப்பனாரின் மறைவுக்கு பின்பு அவரின் அடுத்த சகோதரரோ அல்லது மூத்த மகனோ குடும்ப தலைவனாக ஆக்கப்பட்டிருக்கிறார்.  மிகபெரிய கூட்டு குடும்பங்களாகவே அக்காலத்தில் இருந்ததினால் நிலத்தின் மூலம் கிடைக்கும் வருவாயும் எல்லோருக்கும் சமமாகவே பங்கிடப்பட்டுள்ளது.

  பருவ வயதை அடைந்த பிறகே பெண்களுக்கு திருமணம் நடந்திருக்கிறது.  இக்காலத்தை போலவே அப்போதும் ஆண் குழந்தைகளையே அதிகம் விரும்பியிருக்கிறார்கள்.  ஆனால் பெண் குழந்தைகள் பிறந்துவிட்டால் கள்ளிபால் கொடுத்து சாகடிக்கும் கொடுமை அப்போது சுத்தமாக இல்லை என்றே சொல்லலாம்.  பிறந்த பெண் குழந்தைகள் பரிவும் பாசமும் காட்டி வளர்க்கப்பட்டு இருக்கிறார்கள். 

  ஆணுக்கு நிகரான கல்வி பெண்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது.  வேதகால கல்வி முறை கவிதை புணைபவர்களை மதிக்க தக்க முறையில் நடத்தி இருக்கிறது.  சில வேத பாடல்களை ஆணுக்கு இணையாக பெண் கவிஞர்களும்  புணைந்து இருக்கிறார்கள்.  ஆண் பெண் இருவருக்குமே போர்கலை கற்று கொடுக்கப்பட்டிருக்கிறது.  ரிக்வேத காலத்தில் சமுகத்தில் ஆணுக்கு என்ன மரியாதை உண்டோ அதே மரியாதை பெண்ணுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.  பெண் அடிமைதனம் இருந்ததற்கான ஆதாரம் ரிக்வேதத்தில் இல்லை.

 ஆரிய பெண்கள் மிக கட்டாயமாக ஆரிய இளைஞர்களை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நியதி இருந்ததே தவிர பெற்றோர்கள் பார்க்கும் மணமகனை தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை காதல் திருமணத்திற்கு பெரிய எதிர்ப்புகள் இருந்ததற்கான சுவடுகள் இல்லை.  தந்தைவழி உறவினர் சகோதர்களாக கருதப்பட்டதினால் உறவு முறைக்குள் திருமணம் செய்து கொள்வதை அவர்கள் விரும்பவில்லை.

 பலதார மணமும் அப்போது வழக்கத்தில் இருந்தது தெரிகிறது.  இருப்பினும் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஒழுக்க முறையே பலராலும் பின்பற்றப்பட்டது.  ஆண்களுக்கு வழங்கப்பட்டிருந்த பலதார சலுகை பெண்களுக்கு இப்போது போலவே அப்போதும் வழங்கப்படவில்லை.  ஆனாலும் கணவனை இழந்த இளம் பெண் கணவனின் சகோதரனோடு கூடி வாழ்வதை யாரும் குற்றமென கருதவில்லை.  உடன்கட்டையேறும் பழக்கம் ரிக்வேத காலத்தில் எங்கும் காணப்படவில்லை.  

 வரதட்சனை கொடுக்க வேண்டிய அவசியம் அக்கால பெண்களுக்கு இல்லை.  மணமகனே அதாவது வரனே முன் வந்து தட்சணை கொடுத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.  மாப்பிள்ளை பணம் கொடுப்பதினால் தான் வரதட்சனை என்ற வார்த்தையே உருவாகி இருக்கிறது என்று பல அறிஞர்கள் சொல்கின்றன விருப்பம் இல்லாத பெண்ணை வலுகட்டாயமாக தூக்கி சென்று மண முடிக்கும் நிலையும் அப்போது இருந்திருக்கிறது.  விமாதா என்பவன் பொருமித்ரா என்பவரின் மகளை இப்படி தூக்கி சென்று திருமணம் செய்ததாக ரிக்வேதம் சொல்கிறது.  இத்தகைய திருமண முறைக்கு காந்தர்வ ராட்சஸ திருமணம் என்று ரிக்வேதம் பெயர் சூட்டுகிறது.

 ரிக்வேதம் பத்தாம் அத்தியாயம் எண்பத்தி ஐந்தாவது பாடல் ஒரு மண விழாவை அழகுற வர்ணிப்பதை சற்று பார்ப்போம்.  மணமகன் வீட்டார் ஊர்வலமாக கிளம்பி மணப்பெண்ணின் வீட்டை சென்றடைகிறார்கள்.  அங்கு அலங்கரிக்கப்பட்டு புதிய கணவனின் வருகைக்காக பெண் காத்து இருக்கிறாள்.  பெண் வீட்டார் பிள்ளைவீட்டாரை வரவேற்று உபசரித்து உட்கார வைக்கிறார்கள் அனைவருக்கும் விருந்து பரிமாரப்படுகிறது.  விருந்து முடிந்த பிறகே திருமண சடங்குகள் ஆரம்பிக்கின்றன.  மணமகனின் கைகளில் வயதில் மூத்தவர் பெண்ணின் கையை பிடித்து ஒப்படைக்கிறார்.  மணமக்கள் நெருப்பை வலம் வந்து அனைவரிடமும் ஆசிர்வாதம் பெறுகிறார்கள்.  இத்தோடு சடங்குகள் முடிவுக்கு வருகிறது.

 இங்கு மிக முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.  திருமணம் முடித்து வைக்க புரோகிதர்கள் யாரும் இருப்பதாகவோ மந்திர முழக்கம் செய்வதாகவோ வேதத்தில் குறிப்பு இல்லை.  இது மட்டுமல்ல மணமகன் மணமகளுக்கு திருமாங்கல்யாணம் பூட்டுவதாக கூட வேதம் சொல்லவில்லை.  எனவே வேதகால திருமணம் என்பது இப்போதைய வைதீக திருமணங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு எளிமையாகவே இருந்து இருக்கிறது.  காலபோக்கில் தான் திருமண சடங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.  திருமண சடங்குகளை போலவே உபநயனம் விஷயத்திலும் அக்காலத்தில் மாறுபட்ட நடைமுறையே இருந்திருக்கிறது.  தாலிகட்டும் முறை எப்படி பிற்காலத்தில் ஏற்பட்டதோ அப்படியே உபநயன சடங்கும் பிற்காலத்தில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு வேதங்களில் வலுவான ஆதாரங்கள் உண்டு.

 வேதகால மக்கள் எழுத்துக்களை பற்றிய அறிவை பெற்றிருந்தனரா என்பது விவாதத்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது ஒருவர் சொல்ல கேட்டு இன்னொருவர் மனபாடம் செய்து கொள்வது தான் அக்கால வேத கல்வி முறை என்பதினால் எழுத்துகளை அவர்கள் அறிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவுயென சிலர் சொல்கின்றனர்.  இந்தியாவில் ஆரிய நாகரிகம் ஏற்படுவதற்கு முன்பாக இருந்த திராவிடர்களின் சிந்து சமவெளி நாகரிக படிவங்களில் பல வகையான எழுத்து உருவங்களை காண்கிறோம்.  திராவிடர்களுக்கு பிறகு தான் ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள் என்றாலும் அவர்களும் திராவிடர்களை போலவே பழமையான மரபை சார்ந்தவர்கள் என்பதினால் ஆரியர்களின் பூர்வீகம் வழிநடை பாதை என்று சொல்லப்படுகின்ற இடங்களில் பழமையான எழுத்து வடிவங்கள் கிடைத்திருப்பதினால் அவர்களும் எழுத்துக்களை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள்.  இதில் எது சரி, எது தவறு என்று நமக்கு தெரியவில்லை.  சரியான ஆதாரங்கள் கிடைக்கும் வரை வேத காலத்தில் எழுத்துக்கள் இருந்தன என்பது சர்ச்சைக்குரிய விஷயமாகவே தொடரும்.

 இதே போலவே ரிக்வேத கால பண்பாட்டில் ஜாதி முறையானது நடைமுறையில் இருந்ததா?  இல்லையா?  என்றும் நம்மால் உறுதியாக அறிந்த கொள்ள முடியவில்லை. ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூத்தகம் விராட் புருஷனின் அங்கங்களில் இருந்து பிராமண, ஷத்ரிய, வைசீக, சூத்திர ஜாதியினர் தோன்றினர் என சொல்லப்பட்டு இருப்பதினால் அக்கால சமூகத்தில் நிச்சயம் ஜாதி பாகுபாடு இருந்திருக்க வேண்டும் என்று ஒரு சாரார் வலியுறுத்தி வருகிறார்கள்.  

  அப்படி இருப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை.  ரிக்வேதம் உட்பட மற்ற வேதங்களிலும் இது சகல மனிதருக்கும் பொதுவானது என்ற கருத்துக்கள் தான் கூறப்பட்டிருக்கிறதே தவிர மனிதர்களை பற்றிய ஏற்றதாழ்வு மிக்க கருத்துக்கள் எதுவும் இல்லை.  மேலும் ரிக் வேதத்தின் முழுமையான மொழி நடைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது.  எனவே ரிக்வேதத்தில் புருஷ சூத்தகம் இடைசெருகலாக தான் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்வதோடு வேதகால சமூகத்தில் ஜாதி பாகுபாடு இல்லையென அழுத்தமாக சிலரும் சொல்கிறார்கள்.

மேலும் வேதகாலத்தில் ஜாதிகள் உண்டு என வாதிடுபவர்கள் தொழிலின் அடிபடையில் நிச்சயம் ஜாதிகள் இருந்திருக்க வேண்டும்.  அதவாது வேளாண்மை செய்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள், போர் தொழில் புரிபவர்கள், சமய சடங்குகளை நடத்தி வைப்பவர்கள் என்ற பிரிவினர் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.  இதற்கு ஜாதியின்  அடிப்படையில் வேதகால தொழில்கள் இல்லை.  உதாரணமாக பிராமணர் என்ற சொல் கடவுளை துதிபாடல்களால் மகிழ்விப்பவர்கள் என்ற பொருளில் தான் வழங்கப்பட்டதே தவிர தொழிலின் அடிப்படையில் அல்ல என்று மறுப்பும் சொல்லப்படுகிறது.

  பொதுவாக ஆரியர்களின் பண்டையகால வாழ்க்கை முறையை சற்று உன்னிப்பாக கவனித்தால் அவர்கள் நிரந்தரமாக ஒரே இடத்தில் வாழ்பவர்கள் அல்ல.  கால்நடைகளை மேய்பதற்காக புல் உள்ள பகுதிகளை நோக்கி பயணப்பட்டு கொண்டிருப்பவர்கள் என்பது தெரியவரும்.  நாடோடிகளாக இருக்கும் மக்கள் கூட்டத்தில் உடல் உழைப்பு செய்பவர்களுக்கும் காவல் காக்கும் வீரர்களுக்கும் தான் மதிப்பு மரியாதை இருக்குமே தவிர சடங்குகள் புரியும் உடல் உழைப்பு இல்லாத மனிதர்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இராது.  அதாவது அவர்கள் விரும்பதகாத சுமையாகவே கருதப்படுவார்கள்.  ஆரியர்கள் கால்நடைகளை நம்பி வாழ்க்கை ஓட்டியவர்கள் என்பதினால் நிரந்தரமான வேளாண்மையை நிச்சயம் அவர்கள் செய்திருக்க வாய்ப்பு இல்லை.  எனவே குறைந்த பட்சம் ரிக்வேத காலத்தில் மட்டுமாவது ஜாதி வேற்றுமைகள் பாராட்டப்பட நடைமுறை சாத்தியமில்லை.  என்பதை ஆழ்ந்து சிந்திக்கும் போது உணர முடிகிறது.

 கால்நடைகளை நம்பியே வாழ்க்கையை ஓட்டிய ரிக்வேத கால மக்கள் அதிகப்படியான மாமிச உணவுகளையே கொண்டவர்களாக இருந்தார்கள்.  ரிக்வேத ஆதாரப்படி திருமண சடங்குகள் யாகங்கள் போன்ற வழிபாட்டு நிகழ்வுகளின் மாமிச விருந்துகளே அதிகம் இருந்ததை அறியமுடிகிறது.  செல்வத்தின் இருப்பிடமான பசுவை கொல்வது பாவம் என்ற பொருளில் அகணியா என்ற வார்த்தை ரிக்வேதத்தில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் மாட்டு இறச்சியானது அக்காலத்தில் ஒதுக்கப்பட இல்லை என்று பல இடங்களில் அறிய முடிகிறது.  மாமிசம் தவிர பார்லி, அரிசி, யவம் போன்ற தானியங்கள் பிராதன உணவாகவும் இருந்து இருக்கிறது.  பால், தயிர், வெண்ணெய், காய்கறிகள், பழங்கள் போன்றவைகளும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு உள்ளது.  போதை தருகின்ற சோம பானம், சுறா பானம் போன்றவைகள் விருந்து காலங்களில் ஏகமாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

  நகைகள் அணிவதில் இந்தியர்களுக்கு எப்போதுமே அலாதியான ஆர்வம் உண்டு.  இந்திய மண்ணின் தன்மையே பொன்னின் மீது ஆசையை வரவழைத்து விடும் போல.  இதற்கு ஆரியர்கள் மட்டும் விதிவிலக்காக முடியுமா  என்ன?  ஆரிய ஆண்களும் பெண்களும் கழுத்திலும், காதிலும் கையிலும், மூக்கிலும் ஏன் தலைமுடியிலும் கூட தங்க ஆபரணங்களை அணிந்து அழகு பார்த்திருக்கிறார்கள்.  தாடி, மீசை வைத்த ஆண்களும், மழுங்க சிரைத்த ஆண்களும் இப்போது போலவே அப்போதும் இருந்திருக்கிறார்கள்.  பெண்கள் மலர்களால் தங்களை அழகுப்படுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.  மெல்லிய ஆடைகளும், கம்பளி ஆடைகளும் அவர்களின் உடையாக இருந்திருக்கிறது.  ரிக்வேதகால ஆண்களும், பெண்களும் நடனமாடுவதில் வல்லவர்கள்.  வீணை, புல்லாங்குழல், முரசு போன்ற இசை கருவிகள் அவர்களின் இனிமையான வாய்பாட்டிற்கு மெருகூட்டி இருக்கின்றன.  தேரோட்டம், குதிரை சவாரி அவர்களின் பொழுது போக்கு.

  ரிக்வேதகால மக்கள் சிறந்த மருத்துவ அறிவு பெற்றவர்கள்.  விஸ்பலா என்பவன் கால்கள் துண்டிக்கப் பெற்றபிறகு செயற்கை கால்கள் பொருத்தியதாக ரிக்வேத பாடல் ஒன்று சொல்வதை வைத்து பார்க்கும் போது நமக்கே ஆச்சர்யம் வருகிறது.  அறுவை சிகிச்சை செய்வதில் அவர்கள் நிபுணத்துவம் பெற்றிருக்காவிட்டால்  நிச்சயம் செயற்கை கால் பொருத்த முடியாது.  மருத்துவ தேவதைகளான அஸ்வினி குமாரர்கள் பல நோய்களுக்கான அரிய மருந்து வகைகளை அடுக்கடுக்காக சொல்லியிருக்கிறார்கள்.  யசஷ்மா என்ற நோய் பற்றி வேதம் அடிக்கடி சொன்னாலும் அந்த நோயின் பாதிப்பு என்பது நமக்கு முழுமையாக தெரியவில்லை.  அவர்களின் மருத்துவத்தை பற்றி பேசப் போனால் ஏராளமான பக்கங்கள் செலவாகும்.

 வழி நடை பயணத்திலேயே வாழ்க்கையின் பெரும்பகுதியையும் ஆரியர்கள் செலவிட்டாலும், ரிக்வேத காலத்தில் சில இடங்களில் தங்க நேரிடும் போது வேளாண்மை தொழிலையும் அவர்கள் செய்திருக்கிறார்கள்.  நிஷ்கா என்ற நாணயம் அவர்கள் பயன்படுத்தினாலும் கூட பெருவாரியான வியாபாரம் பண்டமாற்று முறையில் தான் நடந்திருக்கிறது.  நங்கூரம், பாய்மரம் போன்ற சொற்களை அவர்கள் அதிகம் பயன்படுத்தவில்லை என்பதினால் கடல் வாணிபம் அவர்கள் இடத்தில் இல்லை என்று சிலர் சொல்கிறார்கள்.  ஆனால் கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தை பற்றி ரிக்வேதம் பேசுவதால் கடல் பயணத்திற்காக அல்ல என்றாலும் நதிகளில் பயணப்படவும் அதன் மூலம் அவர்கள் பொருட்களை ஈட்டவும் அதிக வாய்ப்பு இருந்தது என்று சொல்லலாம்.

  ரிக்வேதகால கிராமங்கள் அதிகப்படியான தூரத்தில் அமையாமல் பாதுகாப்பிற்காக அருகருகிலேயே அமைந்திருந்தன.  பொதுவாக வீடுகள் மண்ணால் கட்டப்பட்டு தாவர உப பொருட்களால் கூரை வேயப்பட்டாலும் கூட மரத்தால் ஆன மச்சு வீடுகளும் மூங்கில் வீடுகளும் இருந்திருக்கின்றன.

   ரிக்வேத காலத்தில் இறைவழிபாடு என்பது இயற்கை வழிபாடாகவே இருந்தது.  கடவுகளுக்கு அவர்கள் எந்த தனிப்பட்ட உருவத்தையும் கொடுத்தது இல்லை.  இயற்கை சக்திகளை வருணன், அக்னி, வாயு, பிருத்வி என்று பல்வேறு பெயர்களில் துதி செய்து வழிபட்டனர்.  அப்படி வழிபட்ட தெய்வங்களில் ரிக்வேதத்தில் மட்டும் இருபத்தி மூன்று சக்திகளாகும்.  ஆரம்ப காலத்தில் வேதகால மக்களால் தீயஸ் என்னும் கடவுளும், பிருத்வி என்ற கடவுளும் பெரிதும் வழிப்படபட்டனர்.  காலம் செல்ல செல்ல இத்தெய்வங்கள் சிறப்பாக கொண்டாடப்படவில்லை.  அதற்கான காரணம் என்னவென்று சரிவர தெரியலில்லை.  இடி இடித்து மழை பெய்விக்கும் வருணணும், மேக கடவுளான இந்திரனுமே நான்கு வேத காலங்களிலும் முதலிடம் பெற்றிருந்தனர்.  அதிலும் வருணனுக்கு தனி இடம் கொடுக்கப்பட்டது.  திராவிடர்களிடமிருந்து திருமாலை பற்றிய  அறிவை பெற்ற பிறகு எப்படி திருமாலானவன் பாவங்களை மன்னிப்பவனாக கருதப்பட்டானோ அப்படியே வருணனும் வேதகாலத்தில் கருதப்பட்டான்.

  வருணன் இந்திரன் ஆகிய கடவுள்களை தவிர மருத்துகள் புயல் கடவுளாகவும் ருத்திரன் மின்னல் கடவுளாகவும் வணங்கப்பட்டான்.  சிவன், திருமால், விநாயகன், முருகன், பார்வதி மகாலஷ்மி போன்ற கடவுள்களைப் பற்றிய நேரடியான குறிப்புகள் வேதங்களில் இல்லையென்றாலும் கூட அவர்களை பற்றிய மறைமுகமான குறியீடுகள் வேதத்தில் உள்ளன.  மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவை விதாத்,ஹிரன்யகர்ப்பன், பிரஜாபதி பிராமணஸ்பதி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

 இவைகளையெல்லாம் பார்க்கும் போது வேதகாலத்தில் பல கடவுள் வழிபாடு இருந்ததாக நமக்கு தோன்றும்.  நான் பல சமயங்களில் இந்து மத சிறப்புகளை சொல்லுகின்ற போது சில பகுத்தறிவாத நண்பர்களும் மாற்றுமத சகோதர்களும் இந்து மத வேதங்கள் கடவுள் பல என சொல்லி தவறான பாதையை காட்டுகிறது என்று குறைபட்டவர்களும் உண்டு.  குற்றம் சாட்டியவர்களும் உண்டு.  அவர்களுக்கெல்லாம் எனது ஒரே பதில் இந்து மதத்தில் பல கடவுள் பெயர்கள் உண்டு.  அவைகள் கடவுளின் ஒவ்வொரு செயலிலும் அவருக்கு உள்ள பெயரே தவிர அவரே பல அல்ல, என்பது தான்.  உதாரணமாக இயற்கை மழையாக கொட்டுகின்ற போது இந்திரன் என்று அழைக்கப்படுகிறது.  மழை தண்ணீரே வெள்ளமாக பாயும் போது வருணன் என்று அழைக்கப்படுகிறது.  ஆனாலும் இயற்கை ஒன்றே தான்.  இந்து மத தத்துவப்படி கடவுள் இயற்கையாகவும் இருக்கிறார்.  இயற்கைக்கு அப்பாற்பட்டும் இருக்கிறார்.  இயற்கையை வழிநடத்துபவராகவும் இருக்கிறார்.  இதற்கு என்ன ஆதாரம் என்று சிலர் கேட்கலாம்.  அவர்களுக்காக ரிக் வேதத்தில் உள்ள ஒரு பாடலை கீழே தருகிறேன்.

 ‘இந்திரனென்றும், மித்திரனென்றும், வருணனென்றும்,
அக்கினியென்றும், தெய்விகம் பொருந்திய கருடமதன்
என்றும் உன்னை வழங்குவர்.’

‘ஒரு பொருளாம் உனக்குக்
கவிஞர் பல பெயர்கள் அளிப்பார்
அக்கினியும், யமனும் மாதிசுவனும்
நீயே அன்றோ?’

இதை விட சிறந்த ஆதாரம் வேறு எதையும் தர இயலாது.  இன்னும் ஒருபடி மேலே சொல்ல வேண்டுமென்றால் இன்று கடவுள் ஒருவரே என்று சொல்லுகின்ற மதங்கள் கூட இந்திய வேதத்தில் இருந்து தான் ஒரு தெய்வ வழிபாட்டை பெற்றிருக்கின்றன என்று சொல்லலாம்.  அதாவது பாரசீகத்தில் தோன்றிய சொராஸ்தியர் என்பவர் உபநிஷத ஞானியொருவரின் உபதேசத்தை கேட்ட பிறகே அஸ்சரமஸ்தா என்ற முழுமுதற் கடவுளை அறிந்து சொராஸ்திய மதத்தை ஸ்தாபித்தார்.  அவரின் அஸ்ரமஸ்தா தான் யுத மதத்தின் ஜெகோவா கடவுளானார்.  ஜெகோவா கடவுளே கிறிஸ்துவத்தில் பரிசுத்த ஆவியானார்.  இந்த பரிசுத்த ஆவிதான் இஸ்லாம் சொல்லும் அல்லா.  எனவே உலகிலுள்ள எல்லா மதங்களுக்கும் ஆதார தத்துவத்தை கொடுத்தது இந்து மத வேதங்கள் தான்.  

இந்து மத வரலாற்று தொடர் - 3


இதுவரை சிந்து சமவெளி நாகரீகத்தில் இந்து மதத்தின் மூலக் கூறுகள் பதிந்திருப்பதை விரிவாக சொல்லியதற்கு மிக முக்கியமான காரணங்கள் உண்டு.  அதாவது சிந்துவெளி நாகரீகமும் வேதகால நாகரீகமும் வேறு வேறானது இரண்டுக்கும் சம்பந்தம் இல்லாதது என்பதை தெளிவுபடுத்துவதே முக்கிய நோக்கமாகும்.  இதில் சிந்து வெளி நாகரீகம் வேதகாலத்திற்கு முந்தியதா பிந்தியதா என்ற முடிவை இதுவரை எந்த ஆராய்ச்சியாளனும் எட்டவில்லை என்றாலும் சிந்து மக்கள் பயன்படுத்திய சமய சின்னங்கள் வேதங்களுக்கு முற்பட்டவை என்பதில் எந்த மாற்றமும் இல்லை.  இதற்கு வேதங்களிலேயே பல ஆதாரங்கள் கிடைக்கின்றன.  நான்கு வேதங்களை மிக நுணுக்கமாக ஆராயும்பொழுது இந்த உண்மை நமக்கு தெரியவருகிறது.

  இந்தியாவின் பூர்வகுடிகள் ஆரியர்களா, திராவிடர்களா என்பதை இதுவரை யாரும் அறுதியிட்டு கூறமுடியவில்லை என்றாலும் இந்த இரு இனங்களுக்கு முன்பே மனித சமூகம் இந்தியாவில் நல்ல முறையில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் பல உள்ளன. அந்த மனித சமூகத்திடமிருந்து திராடவிடர்களோ ஆரியர்களோ நாகரீகத்தை பெற்றிருக்கிறார்கள் என்பது மிகவும் உறுதியாகும்.  அதாவது நாகரீகத்தை பெயர் தெரியாத இந்திய பூர்வ குடிகள் இவ்விரு இனத்தாருக்கு வழுங்கியிறுக்கிறார்கள்.  அத்தகைய நாகரீக தானத்தை முதன் முதலில் பெற்றவர்கள் திராவிடர்களாகவே இருக்க வேண்டுமென்று பரவலான கருத்து உள்ளது.  அதை மறுப்பதற்கு போதிய ஆதாரம் இன்று வரை இல்லை என்பதனால் திராவிடர்களே வேதகாலத்திற்கு முற்பட்டவர்கள் என்பதை ஏற்று கொள்வதை தவிர இன்று நமக்கு வேறு வழியில்லை.  இதன் அடிப்படையில் இந்து மதம் வேதங்களுக்கு முன்பு எப்படி இருந்தது அது எப்படி வேதங்களோடு இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை விரிவாக பார்ப்போம்.

 வேதங்களுக்கு முற்பட்டதாக கருதப்படும் திராவிட நாகரீகத்தில் வேதக் கருத்தக்களின் சேர்க்கையால் இந்து மதக் கருத்துக்கள் உருவானதா அல்லது வேத நாகரீகத்தில் திராவிடக் கருத்துகளின் சேர்க்கையால் அவை உண்டானவைகளா என்ற குழப்பங்கள் வலுவாக இருந்தாலும் இந்து மதக் கருத்துக்கள் என்பது வேத நாகரீகத்திலிருந்து வளர்ந்த எளிய வளர்ச்சி அல்ல என்பதை உறுதியாக நம்ப முடிகிறது.  வேத சார்பில்லாத மூலக் கருத்துக்கள் இந்து மதத்தில் பரவி கிடப்பதனால் இந்த நம்பிக்கை நமக்கு ஏற்படுகிறது.

 திராவிடன் என்ற சொல் குறிப்பாக எந்த பொருளை சுட்டிக் காட்டுகிறது என்று தெளிவாக கூறமுடியாது.  இச்சொல் மொழிவாரியான இனத்தை குறிக்க ஒரு மக்கள் குழுவை குறிக்க அல்லது ஒரு நாகரீக தொகுதியை குறிக்க பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.  வட மொழியின் தாக்கம் திராவிட மொழிகளில் வலுவாக இருந்தாலும் கூட அவைகள் தனது தனிதன்மையை முற்றிலுமாக இழந்துவிடவில்லை.  நமது நாட்டில் ஏற்பட்ட இனக்கலப்புகள் இன்று எவரையும் ஆரியன் என்றோ திராவிடன் என்றோ பிரித்து கூற இயலாவிட்டாலும் வடமொழியில் கலந்துள்ள திராவிடச் சொற்களை இன்று கூட மிக எளிதாக பிரித்துக் காட்டிவிடலாம்.  அதாவது மனித இனங்கள் கலப்பினால் தனது சுயத் தன்மையை இழந்து விட்டாலும் மொழிகள் தனது தற்சார்பை இழக்கவில்லை இதனால் வேத இலக்கியங்களில் கலந்துள்ள மாறுபட்ட தன்மைகளை நம்மால் சுலபமாக பிரித்தரிய முடிகிறது.  இதனால் வேதத்தில் மூலப்பாடத்தில் உள்ளவைகளோடு சம்பந்தப்படாத கருத்துகளை வேதத்திற்கு முற்பட்டக் கருத்துகள் அதில் காலம் தாழ்ந்து இணைந்த கருத்துகள் என்று கருதமுடிகிறது.

 நமது நாட்டு கருத்துகளின் வளர்ச்சியில் காடுகள் பெரும்பங்கு ஆற்றியுள்ளன.  முனிவர்களின் தவச்சாலைகளே அக்காலத்திய கருத்து கருவூலங்களாக இருந்திருக்கின்றன.  அத்தகைய தவச்சாலைகள் காடுகளிலேயே பெருவாயாக இருந்திருப்பதினால் இந்திய கருத்துக்கும் காட்டிற்கும் உள்ள தொடர்பை தாய், மகன் தொடர்போடு ஒப்பிட்டு சொல்லலாம்.  ஆனால் இத்தகைய காடுகளின் சமூக பங்கு உபநிஷத காலத்திலிருந்தே தொடங்குவதாக பலர் சொல்லுகிறார்கள்.  அதாவது வேதகால நாகரீக சிந்தனைகளுக்கும் காடுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கருதப்படுகிறது.

   முதல் வேதமான ரிக் வேதத்தின் ரிஷிகள் ஊர்களிலும் நகரப்பகுதிகளிலும் வாழ்ந்தவர்களே ஆவார்கள் இவர்கள் ஆழமாக சிந்திப்பதற்கு தியானம் செய்வதற்கும் காடுகளை நாடியது இல்லை.  வேதத்தின் பிற்பகுதியான பிரமாணங்களும் காட்டு புற நாகரீகத்தை சார்ந்து இருக்கவில்லை.  ஆனால் ஊரைவிட்டும் வீட்டைவிட்டும் ஒதுங்கி இருந்து கல்வி கற்கவேண்டும் என்ற கருத்தை முதன் முதலில் மைத்ரேய ஆரண்யத்தில் காண்கிறோம்.  அதாவது ஒரு இந்துவின் வாழ்க்கை முறையில் கல்வி கற்பதை தனித்திருந்து கற்க வேண்டும் என்ற கருத்தை வேதங்களோ பிரமாணங்களோ கூறாமல் பிற்காலத்தில் எழுந்த ஆரண்யங்கள் மட்டுமே வற்புறுத்துவதினால் தவச்சாலைகள் என்பது காடுகளில் ஏற்படுத்தப்பட வேண்டும்.  என்ற கருத்து வேதகாலத்திற்கு பிறகே ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நம்பத் தோன்றுகிறது.  இதற்கு வேறு சில ஆதாரங்களையும் குறிப்பிடலாம்.

  வேதவர்ணனைகளில் படம்பிடித்து காட்டப்படும் தெய்வங்கள் அக்கால நாகரீக சின்னங்களாக கருதப்பட்ட குதிரைகள் பூட்டிய தேர்களிலேயே பவனி வருவதை காணமுடிகிறது.  காடு சார்ந்த வாழ்க்கையில் மிக முக்கிய தொழிலாக கருதப்படும் வேட்டையாடுதலை இந்த வேத தெய்வங்கள் மேற்கொண்டதாக தெரியவில்லை.  மாறாக வேதங்களில் அதி தேவதைகளாக கருதப்படாத மற்ற தெய்வங்களை குறிப்பிடும் பொழுது வேட்டையாடுதல் என்பது இணைத்து பேசப்படுகிறது.  ஏறக்குறைய இந்து மதத்தின் மிக முக்கிய பிரிவுகளில் ஒன்றான சைவ சமய தெய்வங்களை பற்றி பேசப்படும் பொழுது அவைகளோடு வேட்டையாடுதலும் பேசப்படுகிறது.

 இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தை சிந்தித்து பார்க்க வேண்டும்.  மனித சமூகம் தான் தோன்றிய காலத்திலேயே விலங்குகளை பழக்கப்படுத்தி தங்களது தேவைகளுக்கு துணை புரிவதாக ஆக்கி கொள்ளவில்லை ஆரம்ப கால மனிதன் விலங்குகளை வேட்டையாடி அதன் மாமிசங்களை உண்பதற்கு தெரிந்து வைத்திருந்தானே தவிர அவைகளை வேளாண்மைக்கும் பயணத்திற்கும் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து வைத்திருக்கவில்லை.  எனவே ஆதிகால மனிதன் தனது சிந்தனையில் தன்னை போலவே கடவுள்களும் வேட்டையாடுதலை தொழிலாக கொண்டிருக்கும் என்று கருதுவானே தவிர தேர்களை ஓட்டுவது பற்றி சிந்தித்திருக்க மாட்டான்.  எனவே வேட்டையாடும் தொழிலை மேற்கொள்ளும் தெய்வங்கள் சைவ சமய சார்பில் வேதங்கள் காட்டுவதால் வேதகாலத்திற்கு முன்பே இந்தியாவில் இருந்த சமயம் சைவ சமயம் என்றும் அது பிற்காலத்தில் வேதங்களோடு இணைக்கப் பெற்று செழுமை பெற்றிருக்க வேண்டும் என்றும் சிந்திக்க முடிகிறது.

  மேலும் வேதத்தில் பெருவாரியாக குறிப்பிடபடாமல் இந்து மதத்தில் முக்கியமாக கருதப்படும் தெய்வங்கள் அனைத்துமே காடுகளோடும் வேட்டையாடுவதோடும் தொடர்புடையதாக இருக்கிறது. அதே நேரம் சைவ சமய பிவுகளில் காட்டப்படும் முக்கிய தெய்வங்கள் அனைத்தும் வேத தெய்வங்களோடு சம்பந்தப்படாதவைகளாக இருக்கிறது அதனால் இத்தகைய தெய்வங்கள் இந்தியாவின் ஆதி குடிகளின் தெய்வமென்றும் அவைகளை பிற்காலத்தில் வேத சமூகம் தமதாக்கி கொண்டிருக்கின்றன என்பதும் தெளிவாகிறது.  அத்தகைய ஆதி தேவதைகளில் மிக முக்கியமானது காளி அல்லது துர்க்கை, ஐயப்பன் அல்லது சாஸ்தா என்ற இரண்டு தேவதைகளையும் தனித்து சுட்டிக்காட்டலாம்.

 சாஸ்தா எனும் ஐயப்பன் சிவனுக்கும் திருபாற்கடலை கடைந்த போது உருவான அமிர்தத்தை பகிர்ந்த போது உருவான மாயை என்ற விஷ்ணுவுக்கும் பிறந்ததாக கருதப்படுகிறது.  தென்னிந்தியாவில் சாஸ்தா தெய்வங்கள் இருக்கும் பகுதிகளை காவு என்ற பெயரில் இன்றும் அழைக்கப்படுவதை காணலாம்.  காவு என்ற வார்த்தைக்கு காடுகள் அல்லது சோலைகள் என்ற பொருளை சொல்லலாம்.  அதாவது காட்டுப் புறத்திலும் சோலை வனங்களிலும் சாஸ்தா வணங்கப்பட்டதாக சொல்லலாம்.  இன்று கூட திருநெல்வேலியின் எல்லை கிரமமாக இருக்கும் காரிக்கோயில் என்ற ஊரில் பூமிக்கு அடியில் கடலோரத்தில் உள்ள சாஸ்தா கோயில் காரி சாஸ்தா அல்லது காவு சாஸ்தா என்று அழைக்கப்படுவதை காணலாம்.

   புலிப்பால் கொண்டு வர சாஸ்தா அனுப்பப்பட்டதும் எருது முக அரக்கனோடு காளி தேவி சண்டையிட்டதும் சாஸ்தா, காளி ஆகிய இரு தெய்வங்கள் காடுசார்ந்த சமய வளர்ச்சியால் உருவானவைகள் என்பதை நமக்கு சொல்லாமல் சொல்லும்.  இந்த இரு தெய்வங்களும் வேதங்களால் ஆரம்பத்தில் சிறப்பித்து கூறப்படவில்லை என்பதிலிருந்தும் இவைகள் தென்னிந்திய சாயலில் வர்ணிக்கபடுவதிலிருந்தும் வேதங்களுக்கு முற்பட்டே இத்தெய்வ வழிபாடுகள் நமது நாட்டில் இருந்திருப்பது நன்கு புலனாகும்.

  இத்தகைய வேதம் சாராத அல்லது வேதங்களுக்கு முற்பட்ட சமய வளர்ச்சியின் கூறுகள் வேத சிந்தனைகளுக்கு  செரிவூட்டி இருப்பதை யாரும் மறுக்க முடியாது.  இத்தகைய சமய பங்களிப்பு வேதங்களில் புரட்சிகரமான மாறுதலை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.  வேத நாகரீகம் என்பது வைதீக சடங்குகளையும் யாகங்களில் சோமரசத்தை அளிப்பதையுமே முக்கியமானதாக இருந்தது.  வேதத்தின் மூலப்பாடங்கள் இம்மாதிரி சடங்குகளில் மிக நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தாலும் கடவுளை ஆத்மாவை சீர்தூக்கி சிந்தித்து பார்க்கும் தன்மையை முற்றிலுமாக கருத்தில் கொள்ளவில்லை என்று சொல்லி விட முடியாது. ரிக் வேத ரிஷிகளில் பலர் கடவுளோடு ஒன்றுபடும் உணர்வுகளை துல்லியமாக பெற்றிருந்தனர் என்பது தெரிகிறது.  ஆனால் புலன் கடந்த உணர்வுகளை யோக மார்க்கத்தில் பெறுவதை வேதங்கள் தனக்கு முன்பிருந்த மக்களிடமிருந்தே பெற்றிருக்க வேண்டும்.

 கடவுளுக்கு உருவம் கொடுத்து வழிபடுவது என்பதே மனதை ஒரு நிலை படுத்தும் யோக மார்க்கத்திற்கு ஒரு எளிய வழியாகும்.  இந்த உருவ வழிபாட்டு முறையை வேதங்கள் சிறப்பித்து கூறவில்லை.  யாகங்கள் செய்வதையும் வேறு சில சடங்கு முறை செய்வதையுமே வேதங்கள் வலியுறுத்தி கூறுகின்றன.  ஆனால் வேதகாலத்திற்கு முற்பட்ட இந்திய சமூகம் உருவ வழிபாட்டை குறிப்பாக லிங்க வழிபாடு சிவ வழிபாடு ஆகியவைகளை ஆழமாக கொண்டிருந்தனர்.  இந்த ஆழமான உருவ வழிபாடு வேதங்களில் அவ்வளவாக வற்புறுத்த படாததை பார்க்கின்ற போது அது மிகவும் காலம் தாழ்ந்து வேதங்களில் சேர்க்கபட்டிருப்பது புலனாகும்.  இதனாலும் உருவ வழிபாடுடைய இந்து மதம் வேதகாலத்திற்கு முற்பட்டது என்பது உறுதியாகும்.

  பராக்கிரம் பொறுந்திய செயற்கய செயல்களை புரிந்த மனிதர்களை தெய்வ நிலைக்கு உயர்த்தி வழிபடும் வழக்கம் வேதகாலத்தில் இல்லை.  ஆனால் சிந்து வெளியில் கிடைகின்ற சில முத்திரை சித்திரங்களில் மனிதனை தெய்வமாக வழிபடும் தன்மை இருந்திருப்பதாக அறிய முடிகிறது.  இந்த தன்மையே பிற்காலத்தில் மக்களை காப்பாற்ற கடவுள் மனிதனாக இறங்கி வரும் அவதாரக் கொள்கையாக வேதங்களில் பேசப்படுகிறது.  இதற்கு உதாரணமாக அங்கிரஸ் என்ற மகரிஷியின் வாழ்க்கை விபரம் வேதத்தில் கூறப்பட்டதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.  பகவான் விஸ்ணு அவதாரங்கள் பல எடுத்திருந்தாலும் அந்த அவதாரங்கள் எல்லாமே வேதங்களில் விவரிக்கப் படவில்லை.  அண்ட சராசரங்கள் அனைத்தையும் மூன்று அடிகளால் அளந்த வாமன அவதாரத்தை பற்றிய சிறு குறிப்பும் வராக அவதாரத்தை பற்றிய சிறு குறிப்புகளுமே வேதத்தில் காணப்படுகிறது.  ஆகவே இந்து மதத்திலுள்ள அவதாரக் கொள்கை என்பது வேதகாலத்திற்கு முற்பட்டதாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 வேதத்தில் குறிப்பிடப்படும் தெய்வங்களுக்கு தனித்தன்மையும் தனி உருவமும் இல்லை.  அதாவது தேவதைகளை அருவமாக வழிபடுவதே  வேத மரபாகும்.  அதனால் வேதக் கடவுளான இந்திரன், வருணன், வாயு, அக்னி இவைகளுக்கு தனிப்பட்ட வகையில் எந்த உருவமும் ஆதியில் கொடுக்கப்படவில்லை.  இன்று சிலை வடிவங்களால் காட்சி அளிக்கும் அந்த தெய்வ உருவங்கள் மிக சமீப காலத்திலேயே உருவாக்கப்பட்டது ஆகும்.  ஆனால் சிவனுக்கும் அம்பிகைக்கும் கொடுக்கப்பட்டுள்ள உருவங்கள் வேதத்திற்கு மிகவும் முற்பட்ட உருவங்கள் ஆகும்.  அது மட்டுமல்ல வேதங்கள் ஆலைய வழிபாட்டை வலியுறுத்தவே இல்லை.  தனிதனி குழுக்களாகவோ அல்லது சமுதாய கூட்டங்களாகவோ மனிதர்கள் ஒருங்கிணைந்து வேள்விச் சடங்கை செய்யச் சொல்லி தான் வேதங்கள் வற்புறுத்துகின்றன.  ஆனால் பூர்வ கால இந்திய மக்கள் உருவ வழிபாட்டை முதன்மையாக கொண்டவர்களாகவும் வழிபாட்டுக்கு என்று தனி இடத்தை  தேர்ந்தெடுத்து செய்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

 ஆதிகால மக்கள் ஆலய வழிபாட்டை மேற் கொண்டவர்களாக இருந்தாலும் கூட பின்னர் வந்த வேதகால கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர்கள் ஆலய வழிபாட்டை கைவிட்டு விட்டனர் என்றே தோன்றுகிறது.  இதனால் தான் ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் மற்றுமுள்ள பழைய புராணங்களிலும் ஆலயங்களை மன்னர்கள் புதிதாக உருவாக்கியதாகவோ மக்கள் அதில் சென்று வழிபாடு நடத்தியதாகவோ எந்த குறிப்பும் இடம் பெறவில்லை.

 இதை விட முக்கியமான இன்னொரு ஆதாரம் உள்ளது.  அது சிந்து நதி பள்ளத்தாக்கு நாகரீகத்தில் மிகத் தெளிவாகக் காணும் வேதத் தொடர்பில்லாத தன்மையை நமக்கு உள்ளங்கை நெல்லிக் கனிபோல் எடுத்து காட்டுகிறது.  அதாவது இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறையாகும்.  இந்தியாவின் பூர்வ குடிகள் தெற்கே வாழ்ந்த போதும் சரி வடக்கே நகர்ந்த போதும் சரி இறந்தவர்களை தாழிகளில் வைத்து புதைக்கும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தனர்.  எப்பொழுதுமே அவர்கள் இறந்த உடல்களை எரித்துவிடவில்லை.  புதைத்தே வைத்தனர்.  ஏன் அப்படி அவர்கள் செய்தார்கள் என்பதில் ஒரு உண்மை தெளிவாக ஒளி ந்து கிடக்கிறது.

  ஆதிகால மக்கள் உடலைவிட்டு உயிர் பிரிந்ததும்  உயிரின் வேலை முடிந்து விடுவதாக கருதவில்லை.  உலகை விட்டு சென்ற உயிர் மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் என்று அவர்கள் நம்பினார்கள்.  அப்படி வருகின்ற போது உயிர்கள் வாழ்வதற்கு உடல்கள் தேவை என்பதினால் அந்த உடலை எரிக்காமல் புதைத்து வைப்பதே சிறந்த வழி என்று கருதினார்கள்.  இன்று கூட ஆன்மீக உயர் நிலையை அடைந்த ஞானிகளின் உடலை எரிக்காமல் புதைப்பதும் அந்த நம்பிக்கையினால் தான்.  வேதங்களை நெறியாகக் கொண்ட மக்கள் உடல்களை புதைப்பது இல்லை எரித்து விடுவார்கள்.  ஏன் என்றால் வேதங்கள் உயிர்களின் மறு வருகையை பற்றி எதுவும் கூறவில்லை.

 வேதங்கள் மறுபிறப்பை பற்றி எதுவும் சொல்லவில்லை என்றாலும் இந்து மதத்தின் ஆதாரக் கொள்கையாக இருப்பது மறுபிறப்பு கொள்கையாகும்.  வேத காலத்திற்கு முற்பட்டகாலத்திலிருந்தே மறு பிறப்பு பற்றிய சிந்தனைகள் இந்து மக்களிடையே ஆழமாக வேறூன்றி இருப்பதனால் இந்து மதம் வேதக் கொள்கைகளை தனக்கு ஆதாரமாக கொண்டிருந்தாலும் கூட வேதம் சாராத கொள்கைகளையும் தனக்குள் அடக்கி இன்று வரை நிலைத்து வருகிறது. 

 இங்கு நாம் வேதத்தில் இல்லாத கருத்துக்களும் நடை முறைகளும் இந்து மதத்தில் இருக்கிறது என்று சொல்வது வேதம் வேறு இந்து மதம் வேறு என்று சொல்வதற்காகவோ வேதங்களை குறைத்து மதிப்பிடுவதற்காகவோ அல்ல.  இந்து மதம் என்பது வேதத்தை விட தொன்மையானது மனித சமூகத்தன் முதல் மதமாக இருப்பது என்பதை நிலை நிறுத்தி காட்டுவதற்காகத் தான்.  சரித்திர ஆசியர்கள் குறிப்பிடுவது போல் வேதகால மக்கள் வெளியிலிருந்து உள்ளுக்குள் வந்தவர்களாக இருந்தாலும் திருமண பந்தங்கள் மூலமாக உள்ளூர் மக்களோடு இரண்டற கலந்து விட்டதனால் எப்படி அவர்களும் இந்தியாவின் பூர்வ குடிகளாக இருக்கிறார்களோ அதே போன்றே பூர்வ குடிகளின் கருத்துக்கள் வேதங்களில் கலந்து வேதங்களை இந்து மதத்தின் ஆதாரங்களாக ஆக்கி கொண்டது.  பூர்வ சிந்தனைகளும் வேத சிந்தனைகளும் கலந்து காலங்கள் பல கடந்து விட்டதனால் வேத காலத்திலிருந்து தான் இந்து மதம் தோன்றியிருக்கலாம் என்று நாம் தவறுதலாக கருதிவருகிறோம் உண்மை நிலை முன்பே இருந்த மதத்தில் வேதங்கள் கலந்து அதை செழுமை உடையதாக்கியது என்பதாகும்.

இந்து மத வரலாற்று தொடர் - 2


எந்த ஒரு மனிதனை பார்த்தாலும் அவனைப் பற்றி உடனடியாக நமக்குள் எழும்பும் கேள்வி இவன் வயது என்னவாக இருக்கும் என்பதுதான்.  சாதாரணமான மனிதனின் வயதையே அறிந்து கொள்ளும் ஆர்வம் வரும் போது மதங்கள் போன்ற பெரிய பெரிய விஷயங்களை அறிந்து கொள்ளும் பொழுது இது எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் என்ற சிந்தனை வருவது தவிர்க்க முடியாததே ஆகும்.

 5,000 வருடங்களுக்கு முன்பு பாரசீகத்தில் தோன்றிய ஸ்ராஸ்திய மதத்திலிருந்து யூதர் ஹீபுரு மதம் தோன்றி அதிலிருந்து கிறிஸ்துவ மதம் தோன்றி கிறிஸ்துவத்தின் பெருவாரியான கொள்கைகளை சித்தாந்தங்களை உள்ளடக்கி இஸ்லாம் மதம் உருவாகி இன்று 1500 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.  இம்மதங்களுக்கு முன்னரே நமது இந்து மதம் தோன்றிவிட்டது.  அதாவது ஸ்ராஸ்திய மதம் தோன்றுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது மதம் உருவாகிவிட்டது என்று சொல்லலாம்.

  பொதுவாக இந்து மதத்தின் தோற்றத்தை வேத காலத்திலிருந்து ஆரம்பிப்பதுதான் நம்முடைய வழக்கமான மரபு.  ஆனால் இந்து மதம் உண்மையில் வேதகாலத்தில் தான் தோன்றியதா அல்லது அதற்கு முன்னரே தோன்றிவிட்டதா என்று நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் சிந்திப்பது இல்லை.  காரணம் நமக்கு வேதகாலம் என்பதே எத்தனை வருடங்களுக்கு முற்பட்டது என்பது சரிவர தெரியாத போது அதற்கு முன்பே உள்ள காலத்தை எப்படி கணித்து பார்க்க முடியும்.  அப்படி முடியாது என்பதினால் காலங்களை அறிந்து கொள்ளும் நமது ஆர்வத்தையும் முயற்சிகளையும் கைவிட்டு விடமுடியுமா எனவே வேதகாலத்திற்கு முற்பட்ட காலத்தை அறிந்து கொள்ள நம்மால் முடிந்தவரை முயற்சி செய்து பார்ப்போம்.  அப்படி பார்த்தால் தான் இந்து மதத்தின் தொன்மையை நாம் உணர முடியும்.

 புவியியல் அறிஞர்கள் உலகத்தில் மனித இனம் தோன்றியது தென்னிந்தியாவில் தான் என்று சொல்கிறார்கள்.  இவர்களின் இந்த கூற்றுக்கு சில யூகங்கள் மட்டுமே ஆதாரமாக இருக்கிறதே தவிர அறிவியல் சார்ந்த அசைக்க முடியாத சான்றுகள் எதுவும் இது வரை கிடைக்கவில்லை இருந்தாலும் கூட நமது இந்திய நாட்டை பொறுத்த வரையில் மனித இனம் தோன்றியது தெற்கில் தான் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் நமக்கு கிடைத்து உள்ளன.

 பல கோடி ஆண்டுகள் வயதுடைய முதுமையான கற்பாறை படிவுகள் தென்னிந்தியாவில் காணப்படுகிறது.  அப்பாறை படிவுகள் இருக்கும் பகுதிகள் காடுகளும் மலைகளும் சார்ந்த பகுதிகளாக இருப்பதினால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மனித சமூகம் வாழ்ந்திருக்க வேண்டும்.  எப்படியென்றால் இங்குதான் அதிக சிரமப்படாமல் மனிதர்கள் வேட்டையாடி மிருகங்களை உணவாக்கிக் கொள்ளவும் காய் கனிகளை பெற்றுக் கொள்ளவும் வாய்பிருந்திருக்கிறது.  மேலும் விந்திய மலை தொடருக்கு வடக்கே இன்று பரந்து கிடக்கும் கங்கை சமவெளியும் இமயமலை தொடரும் ஒரு காலத்தில் கடலுக்குள் மூழ்கி கிடந்திருக்கிறது. 

     இன்று கூட இமயமலை சிகரங்களின் உச்சியில் கடல்வாழ் உயிரனங்களின் படிமங்கள் படிந்திருப்பதை பார்க்கும் பொழுது இமயம் கடலுக்குள் தான் இருந்திருக்க வேண்டும் என்ற உறுதி ஏற்படுகிறது.  வட இந்திய பகுதி கடலுக்குள் மூழ்கி கிடந்த காலத்தில் தென்னிந்தியா தான் உயரமாகவும் காடுகளும் மலைகளும் சூழ்ந்ததாகவும் இருந்திருக்க வேண்டும் அதனால்தான் மனித இனம் இந்தியாவை பொறுத்த வரை தெற்கில் தான் தோன்றியிறுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.  புவியியல் கணக்கு படி சுமார் ஐந்துகோடி ஆண்டுகளுக்கு முன்புதான் இமயமும், கங்கை சமவெளியும் கடலுக்குள்ளிருந்து வெளிவந்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

 ஆக ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கன்யாகுமரியிலிருந்து தெற்கே நெடுந்தொலைவிற்கு நிலப்பரப்பு பரந்து கிடந்ததாகவும் அந்த பகுதிதான் லெமுரியா கண்டம் என்று ஒரு சில வல்லுநர்கள் கூறுகிறார்கள்.  முதன் முதலில் மக்களினம் லெமுரியா கண்டத்தில் தான் தோன்றியதாகவும் இன்று இலங்கையிலும் மேற்கிந்திய தீவுகளிலும் தென்னிந்தியாவில்  வாழக்கூடிய மக்கள் அந்த ஆதிமனிதர்களின் வாரிசுகள் என்று கருதப்படுகிறது.  அப்படி கருதுவதற்கு காரணமும் இருக்கிறது.  இந்த பகுதிகளின் நில அமைப்பு வாழும் மக்களின் உடலமைப்பு தோலின் நிறம் ஆகியவைகள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக காணப்படுகிறது.  இதுமட்டுமல்ல நியுஜிலாந்தில் வாழும் மேவா என்ற ஆதிமக்களின் மொழியமைப்பில் தமிழ்சொற்கள் பல இருக்கின்றன.  மேலும் மேற்கிந்திய தீவு மக்களின் சில பழக்க வழக்கங்களும் வழிபாட்டு முறைகளும் சின்னங்களும் சற்றேரக்குறைய தமிழ் மரபோடு ஒத்து அமைந்திருக்கிறது.

  போர்னியாவில் உள்ள ஆதி குடிமக்களான டயாப்புகளும் நமது ஆனைமலை பகுதியில் வாழும் காடர்கள் என்ற மலை சாதியினரும் ஒரே மாதிரியான வகையில் மரம் ஏறும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.  இது தவிர தென்னாப்பிரிக்காவில் உள்ள நீக்ரோக்களுக்கும் தமிழ்நாட்டு வனவாசிகளுக்கும் உருவத்திலும் நடை உடை பாவனையிலும் சமயச் சடங்குகளிலும் ஒற்றுமையிருப்பதை இன்றும் காணலாம்.  இலங்கை தமிழ் மக்களுக்கும் நமக்கும் உள்ள ஒருமைப் பாட்டை சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. 

   இவைகளையெல்லாம் வைத்துப்பார்க்கும் பொழுது விந்திய மலைத் தொடங்கி ஆப்ரிக்கா வரையில் ஒரே நிலப்பரப்பாக இருந்திருக்க வேண்டும் என்பதை நம்பாமல் இருக்க முடியாது.  நமது பழந்தமிழ் இலக்கியங்கள் மிகப்பெரும் கடல்கோள் ஒன்று ஏற்பட்டு தமிழ்நிலப் பகுதிகள் பலக்கூறுகளாக பிரிந்து போய்விட்டதாக பதிவு செய்து வைத்திருக்கிறது.  இந்த கடல் கோளினால் லெமோரியா கண்டம் இந்திய நிலப்பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டு விட்டது அல்லது அழிந்துபோய் விட்டது என்று சொன்னால் மிகையாகாது.

 கடல் சீற்றத்தால் லெமோரியா கண்டம் அழிந்த பொழுதுதான் இமயமலையும் கங்கைச் சமவெளியும் நிலப்பரப்பிற்கு வந்திருக்க வேண்டும்.  இந்த காலகட்டத்தில் கடல் தாக்கத்திலிருந்து தப்பி பிழைத்த மக்கள் வடக்கு நோக்கி குடிபெயர்ந்திருக்க வேண்டும்.  அப்படி குடிபெயர்ந்து வாழ்ந்த மக்களின் நாகரீக சுவடுகள் தான் சிந்து சமவெளி நாகரீகம் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.  வரலாற்று அறிஞர்களை வியப்பிலும் திகப்பிலும் ஆழ்த்தக்கூடிய பல பொருட்கள் சிந்து சமவெளி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.   

   பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து வழி முழுவதும் பரவி இருந்த ஒரு பெரும் நாகரீகத்தின் சின்னங்களாக அவைகள் இன்று நமக்கு காட்சி தருகின்றன.  மொகஞ்சதரோ, ஹராப்பா ஆகிய இரு புதை நகரங்களிலும் காணப்படும் கட்டடங்களின் அமைப்பும் நகரங்களின் வடிவமைப்பும் ஒரே மாதிரியாக இருக்கிறது.  அந்த காலத்தில் மொகஞ்சதரோ வளமையான நகரமாக விளங்கியதாகவும் பெரும் வெள்ளத்தினால் அந்நகரம் ஏழுமுறை தாக்கப்பட்டு மண்மூடிப் போனதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

  மொகஞ்சதரோவிலும் ஹராப்பாவிலும் ஊருக்கு வெளியே கோட்டை கொத்தளங்கள் கட்டப்பட்டிருக்கின்றன அக்கோட்டைகள் மன்னர்களின் அரண்மனைகளாகவும் படைவீரர்களின் பாடிவீடுகளாகவும் பயிற்சி கூடங்களாகவும் இருந்திருக்க வேண்டும்.  அவைகளில் பெரிய பெரிய நீச்சல் குளங்களும் நேரான சாலைகளும், நெற்களஞ்சியங்களும் அமைக்கப்பட்டிருந்தன.  மத குருமார்களுக்கு தனிதனி குடியிறுப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.  அந்நகர மக்கள் அழகான மண்பாண்டங்களும் பொம்மைகளும் வெண்கல சிலைகளும் செய்ய கற்றிருந்திருக்கின்றனர். 

  செப்பேடுகள் எழுதும் பழக்கமும் அவர்களிடம் இருந்திருக்கின்றனர்.  அவர்கள் பயன்படுத்திய நாணயங்களிலும் சில பட்டையங்களிலும் சில பாத்திரங்களிலும் இந்து கடவுள்களின் உருவங்கள் செதுக்கப்பட்ட முத்திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  மேலும் சிந்து வழி எழுத்துக்களில் அடிக்கடி ஒரு குறி வருகிறது மூடியில்லாத மண்பாண்டத்தை போன்று அந்த குறி வரையப்பட்டுள்ளது.  அது அரசமரத்தை குறிப்பிடுவதாக சில அறிஞர்கள் குறிப்பாக ரஷ்யாவை சேர்ந்த ஆய்வு குழவினர் கூறுகிறார்கள்.  இது அரசமரத்தை காட்டும் குறியல்ல மரக்கலத்தை அதாவது படகை சுட்டிக்காட்டும் குறியென்று பின்லாந்து நாட்டை சேர்ந்த அறிஞர்கள் கருதுகிறார்கள்.  அந்த குறியீட்டை நாம் நேரடியாக பார்க்கும் பொழுது அரச மரத்தை காட்டும் குறியாகவே அது இருக்க வேண்டும் என்று தோன்றுகிறதே தவிர மரக்கலத்தை காட்டுவதாக தோன்றவில்லை.

  சிந்து வழி நாகரீகத்தில் முன்னூறு வகையான எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது.  அதில் ஒரு எழுத்துக்கு கூட இன்று வரை அர்த்தம் கண்டுபிடிக்கபடவில்லை இந்த எழுத்துகள் தவிர பல வித சித்திரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.  அந்த சித்திரங்களில் பெருவாரியானவைகள் விலங்குகளும் ஆயுதங்களும் தெய்வங்களும் மனிதர்களும் ஆகும்.  அந்த விலங்கு சித்திரங்களை பார்ப்பவர்கள் வேதத்தில் குறிப்பிடும் யாகங்களில் பலியிடப்படும் விலங்குகளை காட்டுவதாக சொல்கிறார்கள்.  ஆனால் அந்த கூற்றில் உண்மை இருப்பதாக தெரியவில்லை.

  காரணம் என்னவென்றால் யானைகளும் காண்டாமிருகங்களும் அந்த ஓவியங்களில் காட்டப்பட்டுள்ளன.  எந்த சூழலிலும் இத்தகைய மிருகங்களை வேள்விகளில் பலியிடப்பட்டதாக வேதத்தில் எந்த குறிப்பும் கிடையாது எனவே இந்த முத்திரை சித்திரங்கள் நிச்சயமாக வேதங்களை சார்ந்தது அல்ல என்று துணிந்து கூறலாம்.  இது மட்டும் அல்ல இந்த சித்தரங்களில் வேதங்களில் குறிப்பிடப்படும் தெய்வ உருவங்கள் எதுவுமே வரையப்படவில்லை. 

  மேலும் அந்நகர சுவடுகளில் கிடைக்கும் எல்லாவகையான சமயச்சார்புடைய ஆதாரங்களை திரட்டி பார்க்கும் பொழுது சிந்துவெளி மக்களின் சமய வாழ்க்கைகும் வேதங்களில் குறிப்பிடப்படும் சமய வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதாக கருதமுடியாது.  ஒன்று அந்த மக்கள் வேதம் சாராத வழிபாட்டை கொண்டவர்களாக இருக்க வேண்டும் அல்லது வேதகாலத்திற்கு முற்பட்ட சமயநெறியை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

  ஆரியர்கள் இந்தியாவிற்குள் குடியேறி வந்ததாக ஒரு சாராரும் இல்லை அவர்களும் இந்நாட்டின் பூர்வ குடிகள் தான் என்று ஒரு சாராரும் முடிவே இல்லாமல் வாதாடி வருகிறார்கள்.  இன்னொரு சாரார் திராவிடர்கள் கூட இந்தியாவில் குடியேறியவர்களே தவிர பூர்வ குடிகள் அல்ல என்று கூறுகிறார்கள் எல்லோருமே தங்களது வாதங்களுக்கு வலுசேர்க்கும் ஆதாரங்களை தருகிறார்கள்.  அவற்றில் எது சரி எது தவறு என்ற முடிவிற்கு நம்மால் வரமுடியவில்லை காரணம் அனைவரின் தரப்பிலும் கொஞ்சமாவது உண்மையிறுப்பதை நம்மால் உணரமுடிகிறது. 

  ஆனால் இந்த வாதபிரதி வாதங்களில் இந்த மதத்தை பொறுத்த வரையில் அசைக்கமுடியாத ஒரு உண்மையை நாம் பெற முடிகிறது.  அந்த உண்மை என்னவென்றால் வேதங்களுக்கு முன்பே இந்து மதம் இந்த நாட்டின் தாய் மதமாக இருந்திருக்கிறது.  என்பது தான் அது.  எதைவைத்து இந்த முடிவை நான் சொல்கிறேனென்றால் சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய கடவுள் உருவங்களில் பல வேதங்களில் குறிப்பிடப்படாதவைகள் இருக்கின்றன.  அது மட்டுமல்லாது அந்த மக்களின் வழிபாட்டு முறைகள் பல வேதக்கருத்துகளுக்கு மாறுபாடுடையதாக இருந்திருக்கின்றது.  அதற்கு பல ஆதாரங்களை நம்மால் கூறஇயலும்.

 சிந்து சமவெளியில் பல இடங்களில் லிங்க உருவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இதனால் இந்த மக்கள் லிங்க வழிபாட்டை மேற்கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று துணிந்து கூறலாம்.  ஆனால் வேதங்களில் லிங்க வழிபாடு என்பது சிறப்பித்து கூறப்படவில்லை.  மாறாக கேலி செய்யும் பாணியிலேயே சில வேத ஸ்லோகங்கள் அமைந்துள்ளன.  இவைகளை வைத்து பார்க்கும் பொழுது வழிபட்டவர்களும்  கேலிசெய்பவர்களும் ஒருவராகவே இருப்பார்கள் என்று கூறமுடியாது.  வேதகால மக்கள் சிந்து வழியில் வாழ்ந்தவராக இருந்து பிறகு கங்கை வெளியில் பரவி குடியேறி இருப்பார்கள் ஆனால் சிந்துவெளி சின்னங்களாக எழுத்து முத்திரைகளும் செப்பேடுகளை பொறிக்கும் வழக்கத்தையும் தம்முடனே கொண்டு சென்றிருக்க வேண்டும்.  ஆனால் வேதகால நாகரீகத்தில் இவைகள் முற்றிலுமாகவே இல்லை என்று சொல்லலாம்.

  வேதகால மக்களின் மனித சித்திரத்தையும் சிந்துவெளி மக்களின் மனித சித்திரத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது மிகப்பெரும் வித்யாசம் இருப்பது தெரிகிறது.   சிந்துவெளி மனிதனின் உதடுகள் தடித்து பிதுங்கி உள்ளதையும் வேதகால மனித உருவம் அதற்கு மாறுபட்ட வடிவில் நேர்த்தியாகவும் அமைந்திருக்கிறது.  மொகஞ்சதரோ பகுதியில் கிடைக்கும் களிமண் முத்திரைகளை பசுபதி வடிவிலுள்ள சிவபெருமான் அமைதியான யோக முத்திரையுடன் காணப்படுகிறார்.  ஆனால் வேதத்தில் குறிப்பிடப்படும் ஸ்ரீ ருத்ரன் ரௌத்ர காலத்தில் அதாவது கோபாவேச மூர்த்தியாக காட்டப்படுகிறது.  இது மட்டுமல்லாது பெண் தெய்வ வழிபாடு சிந்துமக்களிடம் போற்றத்தக்க அளவில் இருந்திருக்கின்றது.  ஆனால் வேதங்களில் பெண் தெய்வங்களுக்கு உரிய முக்கியத்துவம் ஆரம்பத்தில் கொடுக்கப்படவில்லை என்றே சொல்லவேண்டும்.

 சிந்துவெளி மக்கள் தங்களது இறை வழிபாட்டில் கோள்கள், விண்மீன்கள் ஆகிய வான மண்டலங்களுடன் மிக நெருங்கிய தொடர்பை வைத்திருந்தார்கள்.  வான சாஸ்திரத்திலும் ஜோதிட சாஸ்திரத்திலும் சிறந்தவர்களாக அம்மக்கள் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் பல கிடைகின்றனர்.  இந்த இரு சாஸ்திரங்கள் அவர்களது வாழ்க்கையில் பின்னி பினைந்திருப்பதை அவர்களுடைய மனித பெயர்களுடன் நட்சத்திரங்களின் பெயர்களை இணைந்து வைத்திருப்பதனால்  நாம் அறிந்து கொள்ளலாம்.  இந்த கூறுகள் அனைத்துமே ஆரம்பகால வேதங்களிள் இல்லையென்றே சொல்ல வேண்டும்.  பிற்காலத்திலேயே வானவியலும் ஜோதிடவியலும் வேதங்களோடு இணைக்கப்பட்டிருக்கிறது.

 மேலே சொன்ன காரணங்களை பின்னர் விரிவாக நாம் பேசினாலும் இன்னும் இருக்கின்ற சில வேறுபாடுகளை இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவதினால் இந்துமதம் வேதகாலத்திற்கு முற்பட்டது என்பதை இன்னும் தெளிவாக நாம் உணர வழி ஏற்படும்.

  வேதங்களில் பறவைகளையும், விலங்குகளையும் தெய்வத்தன்மை வாய்ந்ததாக சொல்லும் கருத்துகள் ஆரம்ப காலத்தில் இல்லை.  வேதகாலமானது முடிவுக்கு வரும் நேரத்திலேயே அவைகளை புனிதமானதாக கருதும் நிலை எற்பட்டுள்ளது.  அதாவது ஆரம்பகால வேத பாடல்களில் பசுவை புனிதமாக கருதக்கூடிய எந்த குறிப்பும் இல்லாததை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.  சிவனுக்கு எருதுவும் துர்க்கைக்கு சிங்கமும் விஷ்ணுவுக்கு கருடனும் பிரம்மனுக்கு அன்னமும் பிற்காலத்திலேயே வாகனங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.  இது எப்படி ஏற்பட்டது என்பதை நாம் ஆராய வேண்டும்.

 மனிதன் தவிர மற்ற உயிரனங்களும் தெய்வ தன்மையை தங்களோடு வைத்திருப்பதை சிந்து வழி மக்கள் நம்பி பறவைகளையும் விலங்குகளையும் வழிபட்டு இருக்கிறார்கள்.  இந்த வழிபாடானது திடீரென்று அவர்களுக்கு தோன்றியதாக இருக்க வாய்பில்லை.  பல நூறு ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக நம்பி வந்ததையே தங்களது பழக்கத்தில் அவர்கள் வைத்திருக்க வேண்டும். 

  சிந்து பகுதி மண் மேடான பிறகு அதிலிருந்து தப்பி பிழைத்த சில மக்கள் கங்கையோரத்தில் குடியேறியிருக்க வேண்டும்.  பிற்காலத்தில் கங்கை நதி புறத்தில் வேத நாகரீகம் பரவிய போது இந்த மக்களின் வழிபாட்டிலுள்ள கவர்சி மிக்க இந்த அம்சம் வேத விற்பன்னர்களை ஈர்த்து வேதங்களில் இவைகளை பற்றிய குறிப்புகளை ஏற்றியிருக்க வேண்டும்.  அப்படித்தான் வேதத்தின் கடைசி காலத்தில் இவைகள் வந்திருக்க வேண்டுமே தவிர ஆதியிலிருந்து இம்முறை இருந்ததற்கான வாய்ப்பில்லை.  

   வேதங்களில் பானிகள் என்று ஒரு புலத்தினர் குறிப்பிடப்படுகிறார்கள் இவர்கள் வணிகர்கள் என்று காட்டப்படுகிறார்கள்.  இப்பானி மக்கள் வட்டி தொழிலை மேற்கொண்டதாகவும் வேதங்கள் கூறுகின்றன.  மேலும் இவர்கள் புதிதான ஒரு வழிபாட்டு முறையை கடைபிடித்ததாகவும் அந்த முறை வேதமுறைக்கு முரணானதாக இருந்ததாகவும் இதனால் வேத நெறி நிற்பவர்களுக்கும் இந்த புலத்தாரருக்கும் அடிகடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டதாகவும் க் வேதம் தெளிவாகச் சொல்லுகிறது.  இந்த பானிமக்களே சிந்து வழி மக்களாக இருக்க வாய்ப்புள்ளது.  இவர்களுடன் ஏற்பட்ட பகைமையை பெரிதாகக் கொள்ளாமல் இவர்களிடம் உள்ள நல்ல அம்சங்கள் பொருந்திய வழிபாட்டு முறைகளை வேதங்கள் சுவிகாரம் எடுத்து கொண்டிருக்க வேண்டும்.

 சிந்துவெளி நாகரீகத்தில் மட்டுமல்ல அதற்கும் முந்தைய காலத்திலும் இந்துமதம் இந்த நாட்டில் இருந்துள்ளது பல சர்ச்சைகள் இருந்தாலும் சிந்து நாகரீக காலத்தை கி.மு. 5000 க்கு முற்பட்டது என ஆய்வாளர்கள் ஒத்துக் கொள்கிறார்கள் ஆனால் அதற்கு முன்பே அதாவது கி.மு. 90000 ஆண்டிலேயே விநாயகரை வழிபடும் வளக்கம் மக்கள் மத்தியில் இருந்துள்ளது சிந்துமாநிலத்திற்கு அறுகிலுள்ள நௌஸர் என்னும்இடத்தில் சுட்டமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலை 1992 ஆண்டு கண்டெடுக்கப்பட்டது இந்த சிலைக்கு இன்றைய வயது 11 ஆயிரம் வருஷம் மட்டும் தான் இபிகே7712 என பெயர் சுட்டப்பட்ட இந்த விநாயகர் உருவம் தற்போது பாகிஸ்த்தான் அருங்காட்சியகத்தில் இன்றும் உள்ளது

  வேதங்களில் உள்ள சிறப்பான அம்சமே எந்த வகையிலாவது நல்லவற்றை எடுத்து கொள்வதே ஆகும்.  ஆரம்பகால வேத ஸ்லோகங்கள் ருத்ரனை மூலமூர்த்தியாக கருதியது கிடையாது ஆனால் சிந்து வழி மக்களிடமிருந்து பசுபதியை சுவிகரித்துக் கொண்டவுடன் வேதக்கடவுளான ருத்ரனின் நிலையை விட பல மடங்கு உயர்ந்த நிலையில் வேதங்களால் பசுபதி போற்றப்படுகிறார்.  யோக முத்திரைகளும் பெண் தெய்வ வழிபாடும் மரம், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றின் மேன்மைகளும் அப்படியே வெளியிலிருந்துதான் வேதத்திற்குள் அழைத்துவரப் பட்டிருக்கின்றன அவைகள் தான் இந்து மதத்தின் ஆதிகூறுகள் ஆகும். அதன் விரிவாக்கத்தை அடுத்த அத்யாயத்தில் தெளிவாக பார்ப்போம்.

இந்து மத வரலாற்று தொடர் - 1


 அன்பை நிலை நாட்டுவதற்கு உருவானது தான் மதங்களாகும்.  எந்த மதமும் வன்கொடுமையை வலியுறுத்தவில்லை.  ஆனால் மதங்களின் பெயரால் தான் வன்முறைகள் இன்று பரவலாக நடந்து வருகிறது.  அதற்கு காரணம் என்ன?  அன்பை போதிக்கும் மதங்களால் அராஜகங்கள் நிகழ்வது ஏன்?  என்று ஆயிரம் ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் கிடைக்கும் பதில் ஒன்றுதான்.  மதங்களை தவறுதலாக புரிந்து கொள்வதும் என்மதம் தான் உயர்ந்தது என்று மற்ற மதங்களை ஊதாசினப்படுத்தும் மனப்போக்கும் தான் மத வன்முறைகளின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறது என்ற பதில் கிடைக்கும்.

மத வெறியையும் மத அறியாமையையும் நீக்குவதற்கு என்ன வழி என்று மக்களை நேசிக்கும் மனித நேயமிக்க சிந்தனையாளர்கள் பலரும் தங்களது அறிவாற்றலைக் கொண்டு ஆராய்ந்து வருகிறார்கள்.  அவர்களின் சிந்தனைக்கு உரமாகவும் சீர்திருத்தத்திற்கு வழியாகவும் எனக்கொரு யோசனை தோன்றியது அந்த யோசனையின் விளைவுதான் இந்த தொடர் பதிவாகும் 

 மதப்பிரச்சாரம் என்பது நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் நடைபெற்று வரும் ஒரு விஷயமாகும்.  ஆனால் அந்த பிரச்சாரம் எந்த நோக்கில் அமைந்திருக்கிறது என்றால் ஒன்றை தாக்கியும் இன்னொன்றை போற்றியும் தான் அமைந்திருக்கிறது.  இதில் தான் சிக்கல்களும் பிரச்சனைகளும் முளைவிடுகின்றன.  எனவே அந்த மதப்பிரச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது.  இதில் இன்னொரு விஷயத்தையும் மிக முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  பொதுவாக இன்றைய மதப்பிரச்சாரம் என்பது சுய மதத்தினரிடம் அல்லாமல் மாற்று மதத்தினரிடம் தான் அதிகப்படியாக நடத்தப்படுகிறது.

 எனவே காழ்புணர்ச்சி அற்ற வகையிலும் சுய மதத்தினரே தங்களது மதக் கருத்துகளை நன்கு புரிந்துணரும் வகையிலும் நமது நோக்கம் அமைந்திருக்க வேண்டும்.  அப்பொழுதுதான் மதங்களில் புகுந்திருக்கும் வெறியுணர்ச்சியை கட்டுப்படுத்த முடியும்.  ஆகவே அந்தந்த மத அறிஞர்கள் தங்கள் மக்களுக்கு தம்தமது மதக்கருத்துகளை புரியும் வண்ணம் போதித்து மாற்று மதத்தினரையும் நேசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.  அப்பொழுதுதான் மதங்களின் மீது பதிந்திருக்கும் வன்முறை என்ற கொடிய பாவம் கழுவப்படும்.

 சில நாட்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்தை சார்ந்த ஒரு அன்பரை நான் சந்திக்க நேட்டது.  அவர் பல விஷயங்களைப் பற்றி என்னிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கடைசியாக மதசம்பந்தப்பட்ட சில கேள்விகளை என்னிடம் கேட்டார்.  அந்த கேள்விகளில் மிகவும் முக்கியமானது இந்துக்களாகிய நீங்கள் சிலைகளை வழிபடுவது ஏன்?  பல கடவுள்களை நம்புவது ஏன்?  என்பதாகும்.  அவருக்கு நான் இந்துக்கள் உருவ வழிபாட்டை கடைபிடிப்பதன் காரணத்தையும் கடவுள் கொள்கைகளையும் விளக்கமாக எடுத்துச் சொன்னேன்.  அந்த விளக்கங்களில் அவர் எந்த வகையிலும் திருப்தி அடையவில்லை.  பொத்தாம் பொதுவாக கல்லை வணங்குவது தவறு என்பதில் பிடிவாதமாக இருந்தாரே தவிர நான் சொன்ன கருத்துகளை புரிந்து கொள்ள எந்த முயற்சியுமே எடுக்காமல் கண்மூடித்தனமாக தான் பேசுவதையே பிடித்துக் கொண்டு நின்றார்.  இத்தகைய பிடிவாதக் காரர்களிடம் வாதம் செய்வது என்பது மலையின் முன்னால் பேசுவதற்கு ஒப்பானதாகும்.  நமது பேச்சு நம் காதில் விழுமே தவிர மலையை எந்த வகையிலும் பாதிக்காது அதனால் அவரிடம் வேறு சில காரியங்களை பேசி அனுப்பி வைத்து விட்டேன்.  இப்படி மற்றவர்களின் கருத்துகளை காது கொடுத்து கேட்காதவாறு பல மனிதர்கள் உருவாக்கப்பட்டு நடமாட விடப்பட்டிருக்கிறார்கள்.  அவர்கள் மற்றவர்களின் கருத்துகளை மட்டுமல்ல மன உணர்வுகளையும் புரிந்து கொள்வது இல்லை.

  சரி ஒரு இஸ்லாமியன் இந்து மதத்தை புரிந்து கொண்டு விடுவதினால் பல நன்மைகள் உண்டு என்றாலும் கூட புரிந்து கொள்ளாமல் போவதனால் பெரும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்பட்டு விடப்போவதில்லை.  ஆனால் ஒரு இந்து தனது மதத்தை தெரிந்து கொள்ளாமல் போவதனால் நிச்சயம் பல பாதிப்புகள் ஏற்பட்டே தீரும் அந்த பாதிப்புகள் நமது நாட்டின் ஆத்மாவை அழிப்பதாகவே அமைந்து விடும்.

 மிக வேதனையான ஒரு விஷயத்தை நாம் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.  இந்துக்கள் என்று கூறிக்கொள்ளும் எத்தனை பேருக்கு தங்களது மதத்தைப் பற்றிய அறிவும் தெளிவும் இருக்கிறது.  என்னால் சர்வ நிச்சயமாக அறுதியிட்டு கூறமுடியும் நம்மில் நூற்றுக்கு பத்து பேருக்கு கூட நம் மதத்தைப் பற்றி துளி அளவும் ஞானமில்லை என்று.  சரி நம்மவர்கள் ஞானம் இல்லாமல் போனதற்கு அவர்கள் மட்டும் தான் காரணமா என்று கேட்டால் நிச்சயம் அவர்களை மட்டுமே குற்றவாளிகள் என்று கூறி விட முடியாது.  சமயத்தை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டிய ஆச்சாயர்களே தங்களது பணிகளை திறம்பட செய்யாத குற்றவாளிகள் என்று கருத வேண்டும்.

 புவியியல், பொறியியல் என்று படிப்பதனால் வேலை கிடைக்கிறது.  வருவாய் வருகிறது.  வயறும் நிறைகிறது.  மதத்தை பற்றிய அறிவை பெறுவதினால் என்ன கிடைத்து விடப்போகிறது உலக வாழ்க்கைக்கு உதவாத மத அறிவு தேவையே இல்லை.  என்று சிலர் நினைக்கிறார்கள் இவர்கள் நிச்சயமாக புத்திசாலிகளாக இருக்க மாட்டார்கள் என்பதே எனது கருத்தாகும்.  ஒரு மனிதன் வாழ்வதற்கு ஆகாரம் மட்டுமே போதுமானது என்றால் மனிதனையும், மிருகத்தையும் சமமான தரத்திலேயே வைத்துவிடலாம்.  மிருகத்திலிருந்து மனிதனை வேறுபடுத்தி உயர்த்தி காட்டுவது பகுத்தறிவோடு கூடிய பண்பாட்டு செறிவாகும்.  பண்பாடு தெரியாத எந்த மனிதனும் அமைதியாக வாழ்ந்து விடமுடியாது.  மதம் என்பதும் மனிதனை பண்படுத்தும் பண்பாடு தான்.  இன்னும் சொல்வதென்றால் மதத்திலிருந்து தான் பண்பாடே தோன்றியது எனலாம்.

  கடிவாளம் இல்லாத குதிரை நாலா திசையும் ஓடி ஆடி வீணாக அலைவது போல் ஒழுக்க நெறியில்லாத மனிதனும் தனது வாழ்நாளை வீனாக்கி கொள்கிறான்.  எனவே மனிதன் தான் அமைதியாக வாழவேண்டும் என்ற சுயநல காரணத்திற்காவது மத அறிவை பெற்றே ஆகவேண்டும்.  அப்படி பெற மறுத்தால் காற்று போன போக்கில் காற்றாடி பறந்து கிழிந்து கிடப்பது போல் நமது வாழ்க்கையும் கிழிந்து போய்விடும்.

 நமது ஜனங்கள் மத அறிவை பெறாமல் இருப்பதற்கு அவர்களின் அசட்டை மட்டும் காரணமல்ல ஆச்சாயர்களின் கவனக் குறைவும் காரணம் என்று முன்பே சொன்னேன்.  அது நான் வேடிக்கைகாக கூறியது அல்ல வேதனையோடு கூறியது ஆகும்.  நமது சங்கராச்சாயர்களும், ஜீயர்களும், பட்டர்களும் தங்களது பார்வைகளை விசாலப்படுத்தாமல் ஒரு சிறு குழுக்களின் மீது கவனம் செலுத்தி பெருவாரியான ஜனங்களை தங்களது ஞானத்தால் வழிநடத்தாமல் போனதே மிகப்பெய குற்றமாகும்.  மடாதிபதிகள் என்பவர்கள் மக்களின் பணியாளர்களே தவிர இறைவனின் அவதாரங்கள் அல்ல.  இவர்கள் தங்களை அவதார புருஷர்களாக கருதிகொண்டதனால் ஏற்பட்ட சோகமே நம்மக்களின் தோல்விகளாகும்.  மன்னர்களின் மானியங்களை திருமடங்களின் கருவறைக்குள் பாதுகாத்து வைக்கும் சிறத்தையை விட்டுவிட்டு மதக்கருத்துகளை மன்னவனுக்கு மாடு மேய்க்கும் சின்னவனுக்கும் சொல்லியிருப்பார்களே யென்றால் இன்றைய அவல நிலை ஏற்பட்டிருக்காது.

 கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற மத அமைப்புகளில் ஒரு நடைமுறை இருக்கிறது.  அது என்ன வென்றால் தங்களது மதத்தைச் சார்ந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வயது வரை மதக்கல்வி  அளிப்பது ஆகும்.  அந்த நடைமுறை நமது இந்து மதத்தில் எந்த பகுதியிலும் இல்லை அதனால் தான் நம் மதத்தின் புனித நூல் எது என்று கூட அறியாத பலர் இன்றும் இருக்கிறார்கள்.  இந்த நிலைமை இன்னும் தொடர்ந்தால் வருங்காலத்தில் நம் மதத்தின் அறிவுக் கருவூலங்கள் எது என்பதே தெரியாத வன்னம் அழிந்து போகக் கூடிய துயர நிலை ஏற்பட்டுவிடும்.  இதை மாற்ற உடனடியாக நடவடிக்கைகள் எடுத்தே ஆகவேண்டும்.

  சிலர் கேட்கலாம் நமது நாடு முழுவதும் இந்து கோவில்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.  திருப்பதி, சபரிமலை, வைஷ்ணவி, காசி போன்ற புனித ஸ்தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  நகரங்கள் மட்டுமல்லாது கிராமபுறங்களில் கூட ஆன்மீக கருத்தரங்கங்கள், சொற்பொழிவுகள் போன்றவைகள் அதிகத்திருக்கிறது.  நிலைமை இத்தகைய வளர்சி பாதையில் செல்லும் பொழுது மத அறிவு வளர்ந்து தானே இருக்க வேண்டும்.  நூற்றுக்கு பத்துபேருக்கு கூட மத ஞானம் இல்லை என்பது எந்த வகையில் சரியாகும் என்று.

  இவர்கள் கேட்பதில் தவறுகள் இருப்பதாக நான் கருதவில்லை.  ஆனால் இவைகளால் மட்டுமே மதஞானம் பெருகி உள்ளது என்று கூறி விட இயலாது.  ஆலயங்களுக்கு செல்வதும் யாத்திரைகள் மேற்கொள்வதும் கருத்தரங்கங்களை கேட்பதும் ஒரு மனிதனின் சமய அறிவை பெருக்கிவிடும் என்றால் பட்டி தொட்டியெங்கும் பகவத் கீதை பரவியிறுக்கும் பெருவாயான கிறிஸ்துவர்கள் கையில் பைபுளை வைத்துக் கொள்வது கௌரவம் என்று கருதுவது போலானது பகவத் கீதையை வைத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை கூடியிருக்கும்.

  ஆனால் நிலைமை என்னவென்று நமக்கு தெரியும் மக்கள் இன்று அலகு குத்துவதும், காவடி எடுப்பதும் நெருப்பில் நடப்பதும் தான் சமய வாழ்க்கை என்று கருதும் அறியாமை நிலை மாறியிருக்கும்.  பல கிராமங்களில் சில காட்சிகளை நேரடியாகவே நான் பார்த்திருக்கிறேன் கிறிஸ்துவ மத போதகர்கள் நம் மக்களை பார்த்து நீங்கள் கல்லையும், மண்ணையும் வணங்குகிறீர்கள் அது சாத்தானின் வழிபாடாகும் என்று கேலியும் கிண்டலுமாக பேசுகின்ற பொழுது நம் மக்களில் பலர் அதற்கு பதில் சொல்ல முடியாமல் தவிப்பதையும் கோபத்தால் துடிப்பதையும் பார்த்திருக்கிறேன்.  அவர்களிடம் மட்டும் சரியான சமய அறிவு இருந்திருந்தால் கேலி செய்யும் பாதிரிகளை பார்த்து கத்தோலிக்கே ஆலயங்களிலிருக்கும் சிலைகள் மட்டும் கடவுளா முதலில் உங்களது சிலை வழிபாடுகளை நிறுத்தி விட்டு எங்களை பற்றி பேசுங்கள் என்று காரசாரமாக பதில் சொல்லியிருப்பார்கள்.  ஆனால் பாவம் அவர்கள் அப்படி பயிற்றுவிக்கப்படவில்யே நமது மடாதிபதிகள் அவர்களை பல்லாக்கு தூக்குபவர்களாகத்தானே வைத்திருக்கிறார்கள்.

 இந்த மாதிரியான சிந்தனைகள் எனக்குள் எழுந்து கொண்டு இருந்த பொழுது எனது சீடர்களில் ஒருவரான சிவானந்தத்தின் குழந்தை சிவசங்கரி என்னிடம் ஒரு கேள்வி கேட்டாள். “ குருஜி இந்து மதம்னா என்ன”?  என்பதே அந்த கேள்வியாகும்.  இது சாதாரணமான ஒரு குழந்தையின் விளையாட்டு தனமான கேள்வியாகக் கூட இருக்கலாம்.  ஆனால் அந்த கேள்வியை என்னால் விளையாட்டு தனமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.  காரணம் நமது மதத்தை பற்றிய அறிவு மக்களிடம் இல்லை மத வல்லுநர்கள் அதை மக்களுக்கு தரவில்லை என்று குறைபட்டுக் கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது இந்து மதம் என்றால் என்ன என்று மக்கள் அறிந்து கொள்ள இதுவரை நாம் செய்தது என்ன என்றெல்லாம் எனக்குள் எத்தனையோ கேள்விகள் எழும்பியது.

 மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சொல்லுவது மிக எளியது.  ஆனால் அப்படி குற்றம் கண்டுபிடிப்பதில் மட்டுமே ஒருவனின் சமூகப்பணி முடிந்து விடுகிறதா என்றால் இல்லையென்றே சொல்லவேண்டும்.  குறைகளை பற்றி பேசிக்கொண்டிராமல் அவைகளை நிறைகளாக்க முயற்சிப்பவனே சிறந்த மனிதன் என்று எப்போதுமே நான் கருதுவது உண்டு.  அதனால் என்னால் முடிந்த வரை நமது மதத்தை பற்றி எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்து சொல்வது என்று முடிவு செய்ததின் விளைவே இந்த பதிவாகும் .

 எந்த ஒரு புத்தகத்தையும் எழுதுவதற்கு முன்னால் அதை எப்படி ஆரம்பிப்பது என்பது சிக்கலான ஒரு விஷயமாகும் அந்த சிக்கலை நிவர்த்தி செய்து விட்டோம் என்றால் எந்த சிக்கலையும் எதிர்கொண்டு சமாளித்து விடலாம்.  எனவே இந்த தொடரை குழந்தை சிவசங்கரி கேட்ட இந்து மதம் என்றால் என்ன என்ற கேள்வியிலிருந்தே ஆரம்பிக்கலாம்.

  நாம் அனைவரும் இந்துக்கள் நமது மதம் இந்து மதம் என்பது எப்படி நமக்கு தெளிவாகத் தெரியுமோ அதை விட தெளிவாக இந்து மதம் என்ற பெயர் நமக்கு நாம் சூட்டிக் கொண்டது அல்ல.  அந்நியர்கள் நமக்கு தந்த பெயராகும் என்று தெரியும்.  நமது நாட்டிலுள்ள பழைய கால நூல்கள் எதுவும் நமது மதத்தை இந்து மதம் என்ற பெயரில் அழைக்கவே இல்லை.  அவைகள் நமது மதத்தை சனாதன தர்மம் என்ற பெயரிலேயே அழைக்கிறது.  கி.பி. 5-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தத்த சாஸ்திர நூல் ஒன்றே இந்து மதம் என்ற வார்த்தையை முதல் முதலில் பயன்படுத்துகிறது.  அதற்கு முன்பு உள்ள அனைத்து நூல்களும் என்றும் அழியாது நிலைத்திற்கும் வழிமுறை என்ற பொருள் கொண்ட சனாதன தர்மம் என்ற பெயரையே மதத்தை குறிப்பிட பயன்படுத்துகிறது.  நிலைமை இப்படி இருக்க இந்து மதம் என்ற பெயர் எப்போது யாரால் நமக்கு கொடுக்கப்பட்டது என்ற வினா எழும்புவது இயற்கையே ஆகும்.

   சிந்து நதிக்கு கிழக்கு பக்கத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரையும் கிரேக்கர்கள் இந்துக்கள் என்று அழைத்தார்கள்.  சிந்து நதியோர மக்கள் என்றால் அவர்களை சிந்துக்கள் என்று தானே அழைக்க வேண்டும்.  இந்துக்கள் என்று எப்படி அழைக்கலாம் என்று கேட்டால் அதற்கொரு வேடிக்கையான பதில் இருக்கிறது.  பழைய பாரசீக மொழியில் சீ என்ற எழுத்தே கிடையாது.  அவர்கள் சீ என்று துவங்கும் பதங்களை ஹீ என்ற எழுத்திலேயே அழைப்பார்கள் அதனால் தான் சிந்துக்கள் ஹிந்துக்களானார்கள்.

  உலகிலுள்ள பிற மதங்கள் அனைத்திலேயும் ஒரு குறிப்பிட்ட கொள்கை மட்டும் தான் இருக்கும்.  அந்தக் கொள்கையை மட்டுமே சுட்டிக்காட்டி அந்த மதங்களை விவரித்து விடலாம்.  ஆனால் இந்து மதம் என்பது ஒரு குறிப்பிட்ட அம்சத்தை மட்டும் கொண்டது அல்ல.  அதனால் நமது மதத்தை வேற்றுமைகளின் உரைவிடம் என்று கூறிவிடவும் முடியாது.

   நமது ஒருமைபாடு கொள்கை அடிப்படையிலேயோ அமைப்புருவாலோ இல்லை.  அதே நேரம் நம் மதம் ஒரு இறையியல் கோட்பாடுமாகாது.  கடவுள் என்பது இது தான் இப்படித்தான் என்று பிடிவாதம் செய்யும் சுபாவமும் நம் மதத்திற்கு இல்லை.  குருட்டாம்போக்கிலான நம்பிக்கைகளுக்கும் சடங்குகளுக்கும் ஆட்பட்டது அல்ல.  இன்னென்னவற்றை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று அடம் பிடிப்பதும் நமது மதமாகாது.  குறிப்பிட்ட வரையறைகளோ எல்லைகளோ நமக்கு இல்லை.  கடவுளை இல்லை என்பவனும் இந்து தான்.  அவர் உள்ளார் என்று தூக்கி வைத்து ஆடுபவனும் இந்துதான்.  வேதங்களை மறுத்தாலும் ஏற்றுக் கொண்டாலும் அவன் இந்து தான்.  உருவ வழிபாடு மடத்தனமானது என்பவனும் சிலைகளின் கலைகளில் இறைவனை கானுகிறேன் என்பவனும் நமது மதத்தை சார்ந்தவனாகத் தான் கருதப்படுகிறான்.

 இந்து மதம் எந்த மதத்திலேயும் குற்றம் குறைகளை கண்டுபிடித்து கேலி பேசும் சுபாவம் கொண்டது அல்ல.  விண்ணிலிருந்து விழுகின்ற ஒவ்வொரு மழைதுளியும் எப்படி தூய்மையானதோ, நதிகள் எல்லாம் பல இடங்களில் தோன்றினாலும் எப்படி அனைத்தும் கடலில் போய் சங்கமிக்கிறதோ அதே போலவே எல்லா மதங்களும் புனிதமானவைகள் தான்.  அனைத்து மதங்களும் இறைவனிடம் மனிதனைக் கொண்டு சேர்ப்பவைகள் தான் என்று உயரிய கோட்பாடுகளை கொண்டது தான் இந்து மதம்.

எவனாவது தன்னை வெட்ட வந்தவனை சாகடிக்க முயற்சி செய்தவனை மார்போடு அனைத்து நீயும் என் சகோதரன் தான் என்று கூறுவானா அப்படி கூறுகிறவன் எவனாக இருந்தாலும் மனித நிலையிலிருந்து புனித நிலையில் இருப்பவனாகவே கருதப்படுவான் அல்லவா.  இந்து மதமும் அப்படித் தான் தன்னை அழிக்க வந்த தனது அஸ்தி வாரத்தையே ஆட்டம் காட்ட வந்த புத்த மதத்தை தனது ஒரு பிரிவாகவே கருதி கௌதம புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக ஏற்று தமதாக்கிக் கொண்ட பெருந்தன்மை நம் மதத்திற்கு மட்டும் தான் உண்டு.

  நம் மதம் எப்போதும் தான்தான் உயர்ந்தது என்று பெருமையடித்து கொண்டது இல்லை.  தனது குருமார்கள் மட்டும் தான் இறைவனின் தூதர்கள் என்று வீண் ஜம்பம் பேசியது இல்லை.  தனது கொள்கைகளை கடைபிடிப்பவர்கள் மட்டும் தான் இறைவனின் குழந்தைகள் மற்றவர்கள் சாத்தானின் பிள்ளைகள் என்று பேதம் காட்டியது கிடையாது.  பொதுவாக இந்து மதத்தை பற்றி சுருக்கமாக சொல்லுவது என்றால் இது வெறும் மதம் மட்டுமல்ல பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியாக உள்ளது என்றே சொல்லவேண்டும்.

 மற்ற மதங்கள் இன்ன இடத்தில் இன்னாரால் தோற்றுவிக்கப்பட்டது என்று சொல்லிவிடலாம்.  ஆனால் இந்து மதம் தானாகவே மெல்ல மெல்ல வளர்ந்து பரவி நிற்கும் ஜீவசக்தியாகும்.  மற்ற மதங்களை தார்சலைக்கு ஒப்பிட்டால் நம் மதத்தை ஒற்றையடி பாதைக்கு ஒப்பிடலாம்.  தார்சாலையை எந்த அளவு மக்கள் பயன்படுத்துகிறார்களோ அந்த அளவு அது பழுதடைந்து காலத்தால் மறைந்துபோய் விடும்.  ஒற்றையடி பாதை நாம் எந்த அளவு பயன்படுத்துகிறோமோ அந்த அளவு பண்படும் உறுதிபடும் காலத்தால் இயற்கை மாற்றங்களால் கூட அழியாமல் நிலைத்து நிற்கும்.