Tuesday, 12 February 2013

அமானுஷ்யம்

ஒரே ஒரு அமானுஷ்யம்.பயந்த சுபாவம்
உள்ளவர்கள் படிக்க வேண்டாம்.

இடம்: நாகப்பட்டினத்து லாட்ஜ் . வருடம்: 1980.
அந்த லாட்ஜில் ஒரு வசதி உண்டு. ஒரு ரூ வாடகைக்கு
லாட்ஜ் வராந்தாவில் படுத்துக்கொள்ளலாம்.
ரெகுலர் வாடிக்கையாளராக இருந்தால் பாய் ,
தலையணையும் கொடுப்பார்கள். ஆனால்
விளக்கை அனைத்து விட்டுத்தான் படுக்கை
போடவேண்டும். வெளிச்சத்தில் தலகானியைப்

பார்த்து விட்டால் வயிற்றைக் குமட்டிக் கொண்டு
வரும்.இப்படியும் சில வாரங்கள் இருந்தேன்...

ஒரு நாள் இரவில் கேரளக் காரர் ஒருவர் `சார்
நீங்கள் என் அறையில் படுக்கலாம்` என்றார்.
ஓரளவுக்கு மறுத்துவிட்டு அப்புறம் உள்ளே
போய்விட்டேன்.அவர் கட்டிலில். நான் கீழே.
அவருடைய பழைய டிரங்குப் பெட்டி என் அருகே.
விளக்கு அணைக்கப்பட்டது.மனித நடமாட்டம்
இல்லை.கடல் ஓசை மட்டும் காதில் கேட்கிறது.

தூக்கம் வரவில்லை.அந்த அறையில் இரண்டு
பேர்தான் இருக்கிறோம்.ஆனால் வேறு யாரோ
மூச்சு விடுவது போல ஒரு உணர்வு. உணர்வுதான்.
சத்தம் இல்லை.கட்டிலில் இருப்பவர் கட்டையாய்
கிடக்கிறார். கிட்டே போய் பார்த்தேன். பெருமூச்சு
அவரிடம் இருந்து வெளிப்படவில்லை. பாம்பை
அந்தப் பெட்டியில் வைத்திருப்பாரோ என்ற
சந்தேகம். பாம்பு மூச்சு விட்டு நான் பார்த்ததில்லை.
தவிர மூச்சு பெட்டியில் இருந்து வரவில்லை.
மூச்சு கட்டிலின் கால் பக்கம் இருந்து வந்தது.

பயம் என்று சொல்லமுடியாது.அசௌகரியமான
சூழ்நிலை.சந்தேகம்.குழப்பம் என்று சொல்லலாம்.
எழுந்து வெளியே போவதும் கேவலமாக இருந்தது.
இரவு முழுதும் இப்படியே போனது. ..

காலையில் கோபாலன், அதான் கேரளாக்காரர்
கிணற்றடியில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார்.
ஏழெட்டு பேர் இருந்தார்கள்.எல்லோரும் நாம்
சொல்வதை செய்யக்கூடியவர்கள். `இவனைக்
கட்டுங்கடா` என்றேன். கேள்வியே இல்லை.
தூணில் கட்டி விட்டார்கள். `லுங்கியை அவுத்துடுங்க`
என்றேன். கோபாலன் கதறிவிட்டார `சார் என்னை
விட்டுடுங்க. நான் இங்க எந்த தப்பும் செய்யல` என்றார்
அவருடைய வாக்குமூலத்தை யாரும் பதிவு செய்யவில்லை.
லுங்கியைக் கிழித்து எடுத்துவிட்டார்கள்...

கோபாலனின் இடது தொடையில் பெரிய அளவில்
நான்கு தையல்கள். அதைப் பார்த்தவுடன் நம்ம
ஆட்கள் கொஞ்சம் பின்வாங்கினார்கள். அவருடைய
நிலைமையோ பரிதாபமாக இருந்தது. தண்ணீர் கொடுக்கச்
சொன்னேன். தண்ணீரைக் குடித்துவிட்டு அவரே
சொல்லிவிட்டார். ஏதோ ஒரு இட்சினியை இறக்கி
தகட்டில் வைத்து தொடையில் தைத்துக் கொண்டிருக்கிறார்.

`கேரளாவில் மாந்திரீகம் செய்வேன்,இங்கே வியாபாரம்
செய்யத்தான் வந்தேன்` என்று சத்தியம் செய்தார்.கண்ணீர்
விட்டார். `அவிழ்த்து விடுகிறேன்.ஊருக்குப் போய்விடு`
என்றேன். அன்றே புறப்பட்டுப் போய்விட்டார். போகும்போது
சொல்லிக்கொள்ள வந்தார்.`சார் நீங்கள் என்ன வித்தை படிச்சீங்க?`
என்று கேட்டார்.நம்பளையும் மந்திரவாதி ஆக்கிவிட்டாரே என்று
எனக்கு கடுப்பு.`எனக்கு எந்த வித்தையும் தெரியாது` என்றேன்.
`சார் கயிறெல்லாம் கட்டி இருக்கீங்க`என்று சொல்லி சிரித்துவிட்டு
அவர் போய்விட்டார்.

சென்னையில் இருந்து புறப்படும்போது யாரோ ஒரு தங்கச்சி
கட்டிய ரக்ஷா பந்தன் கயிறு அது என்பதை உங்களுக்குத்
தெரிவிக்கிறேன்.

காதுகளில் பேசும் அமானுஷ்யம் !

இந்த தகவலை ujiladevi.blogspot.com என்ற தளத்திலிருந்து எடுத்து இங்கு பதிந்தேன் 

ஐயா நான் சில வருடங்களுக்கு முன்பு மதுரைக்கு பக்கமுள்ள மேலூர் என்ற ஊரில் ஒரு ஜோதிடரை பார்க்க சென்றேன் அவரிடம் நான் எந்த கேள்வியும் கேட்க வில்லை ஆனால் நான் எதற்க்காக அவரை பார்க்க போனேன் என்னென்ன கேள்விகள் அவரிடம் கேட்க விரும்புகிறேன் என்பதை மிக துல்லியமாக நான் எதுவும் சொல்லாமலே அவர் முன்னால் உட்கார்ந்த மாத்திரத்திலேயே கடகடவென சொல்லிவிட்டார் எனக்கு மிகவும் ஆச்சரியமாக போய்விட்டது ஜோதிடத்தில் இப்படி கூட சொல்ல முடியுமா என்ற வியப்பு ஏற்பட்டது 

இந்த இடத்தில் நான் கேட்க விரும்புவது கேள்விகள் கேட்காமலே பதில் சொல்ல ஜோதிட அறிவு மட்டும் இருந்தால் போதுமா அல்லது அதற்க்கான மந்திர பயிற்சிகள் எதாவது உள்ளதா எச்சினிகளை வசியம் செய்து வைத்துக்கொண்டு இப்படி பட்ட வித்தைகளை சிலர் செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே அதில் உண்மை இருக்கிறதா அது சாத்தியம் தானா? 

செல்லத்துரை,இராமேஸ்வரம் 

நானிருக்கும் அரகண்டநல்லூர் பக்கத்தில் கண்டாச்சிபுரம் என்ற ஒரு சிற்றூர் உள்ளது அங்கே பத்து பதினைந்து வருடத்துக்கு முன்பு ஒருவர் இருந்தார் அவரிடம் யார் சென்றாலும் வெறுங்கையில் சிறிய சிலைகள் சந்தனம் விபூதி குங்குமம் இனிப்பு வகைகள் போன்றவைகளை வரவழைத்து கொடுப்பார் 

அவர் கையில் எதுவும் இருக்காது நிமிட நேரத்தில் எங்கிருந்தோ மாயமாக வந்து அவர் உள்ளங்கையில் இந்த பொருட்கள் உட்கார்வதை நான் என் கண்களாலேயே பார்த்திருக்கிறேன் அக்கம் பக்கத்தில் உள்ள ஊர்களில் அவர் மிகவும் பிரபலமானவர் அவரின் அமானுஷ்ய சக்தியை பற்றி கேள்வி பட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே நேரில் வந்து அவரை பார்த்திருக்கிறார் அது மட்டும் அல்ல அவருக்காக அந்த ஊரில் சிவாஜி கணேசன் தன சொந்த செலவில் முருகன் கோவில் ஒன்றையும் கட்டிக்கொடுத்திருக்கிறார் 

இப்படி ஏராளமான வித்தைகாரர்கள் நம் நாட்டில் உண்டு அவர்கள் அனைவரும் மலையாள மாந்திரிகத்தில் கூறப்படும் எச்சினி வசியம் என்ற மந்திர கலையில் நல்ல தேர்ச்சியும் அனுபவமும் பெற்றவர்களே ஆவார்கள் அவர்களில் ஒன்றிரண்டு ஏமாற்று பேர்வழிகள் உண்டு என்பதை இந்த இடத்தில் கண்டிப்பாக சொல்ல வேண்டும் எது எப்படி இருந்தாலும் எச்சினி வசியம் பல அமானுஷ்ய வித்தைகளுக்கு மூலமாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை 

இந்த எச்சினி வசியத்தில் ஒன்று கர்ண எச்சினி வசியமாகும் இந்த கர்ண எச்சினி யாரிடம் வசியபட்டு இருக்கிறதோ அவருக்கு அது கேட்கும் தகவல்கள் எல்லாவற்றையும் கொடுத்துவிடும் உதாரணமாக அத்தகைய நபரிடம் நாம் சென்றவுடன் நம்மை பற்றிய எல்லா தகவல்களையும் அந்த எச்சினி அவர் காதில் சொல்லிவிடும் அதை அவர் நம்பிடம் சொல்லி நம்மை அதிசயப்பட வைப்பார் அந்த எச்சினி சொல்லும் கடந்த கால பலன்கள் அனைத்தும் துல்லியமாக இருப்பது போல் எதிர்கால பலன்களும் இருக்கும் என்று சொல்ல முடியாது 

எச்சினி வசியத்தின் மூலம் மனிதனுக்கு கிடைக்கும் இந்த சக்தியை ஜோதிட கணிதத்தின் மூலமும் பெறலாம் மகாகவி காளிதாசனை பற்றி கேள்வி படாதவர்கள் இருக்க முடியாது அவர் சாகுந்தலம் மேகதூதம் போன்ற புகழ்பெற்ற இலக்கிய நூல்களை மட்டும் எழுதவில்லை உத்தரகாலாம்மிருதம் என்ற ஜோதிட நூலையும் எழுதியுள்ளார் அதில் கேள்வி கேட்காமலே பதில்களை கணித்துக் கூறும் ஒரு பிரசன்ன சூத்திர வகையும் அவர் சொல்லியுள்ளார் அதாவது ஜோதிடம் பார்க்க்க வருபவர் வைக்கும் தட்சனையின் எண்ணிக்கையையும் அவர்களால் வைக்கப்படும் தாம்புலத்தின் வெற்றிலையின் எண்ணிக்கையும் கணகிட்டே அவர்கள் கேட்கும் கேள்வியையும் அதற்க்கான் பதிலையும் கணித்து கூறும் வழிவகையை மிக எளிமையாக சொல்லிவுள்ளார் 

பலர் என்னிடம் கேட்கும் ஜோதிட சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது அதற்க்கான ஆதரத்தை ஜாதக அலங்காரம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளதை வைத்து சொல்வதை பலர் அறியலாம் அந்த ஜாதக அலங்கார நூலில் ஒரு குழந்தை வீட்டில் பிறக்கிறதா மருத்துவமனையில் பிறக்கிறதா வழியில் பிறக்கிறதா என்பதை கணித்து சொல்லும் வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன 

ஒருவன் ஜாதகத்தில் லக்ண நிலையை வைத்து அவன் எந்த திசை பார்த்த வாசல் உள்ள வீட்டில் பிறந்தான் என்பதையும் அவன் வீட்டுக்கு அருகில் எந்த தெய்வத்தின் கோவில் இருக்கிறது என்பதையும் சொல்லிவிடலாம் அதற்க்கான கணித முறையும் ஜாதக அலங்காரத்தில் இருக்கிறது என் அனுபவத்தை பொறுத்தவரை அவைகள் சரியாய் இருப்பத்காகவே சொல்ல தோன்றுகிறது 

இப்படி எத்தனையோ அதிசயமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கண்டறிந்து வைத்துள்ளனர் அவைகளை நாம் தான் பயன்படுத்தாமல் வீணாக விட்டுவைத்து இருக்கிறோம்

இந்த தகவலை ujiladevi.blogspot.com என்ற தளத்திலிருந்து எடுத்து இங்கு பதிந்தேன் 

Saturday, 20 October 2012

உலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்




மர்மங்கள் என்று எடுத்துக்கொண்டால் இவ்வுலகம் முழுவதும் விதவிதமாக கொட்டிக்கிடக்கும். பல மர்மங்களில் ஒரு சில காலப்போக்கில் விடை காணப்பட்டிருக்கின்றன. ஆனால் சில மர்மங்கள் பலவிதமான ஆராய்ச்சிகளுக்குப் பின்னரும் இன்னமும் விடையின்றி தீரா மர்மங்களாகவே நீடித்துக்கொண்டிருக்கின்றன. இந்த தீரா மர்மங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று இணையத்தை அலசினால் வியத்தகு தகவல்கள் வந்து வியாபிக்கின்றன. உடனே இதைப்பற்றி பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தின் விளைவு மட்டுமே இந்தப் பதிவே தவிர மற்றபடி இதை மூடநம்பிக்கையை வளர்ப்பதாகவோ, வேறு எந்த நோக்கத்துடனோ எழுதவில்லை என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்வது எனது கடமையாகும்.

சரி... முதலில் உலகின் சில டாப் லிஸ்ட் தீரா மர்மங்களைப் பற்றி பார்க்கலாம்...
எகிப்தும் பிரமிடுகளும்
எகிப்தின் பிரமிடுகளைப்பற்றி நம்மில் சிலபேர் முன்னரும் பலபேர் மம்மி பார்ட்-1 மற்றும் பார்ட்-2 திரைப்படங்கள் பார்த்த பின்னரும் அறிந்திருப்போம். பிரமிடுகள் என்றாலே இன்றளவும் ஒரு மலைப்பும் ஆச்சர்யமும் உண்டாவது நிச்சயமாய் அவற்றின் தனிச்சிறப்பே. 

எகிப்து நாட்டில் காணப்படும் இந்தப்பிரமிடுகள் கற்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டங்கள். 2008ம் ஆண்டு வரையிலும் கிட்டத்தட்ட 138 பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.


பிரமிடுகளுக்குப் பின்னாலான மர்மங்கள் கணக்கிலடங்காதவை. பிரமிடுகள் என்றாலே சட்டென நம் நினைவில் நிழலாடும் உருவம் ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான கிரேட் பிரமிடுதான். கிங் குஃபு வின் பிரமிடு என்றும் இது அழைக்கப்படுகிறது.
இதுவரை கண்டறியப்பட்ட பிரமிடுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவிலானது. இதன் உயரம் 146 மீட்டர் (கிட்டத்தட்ட 500அடி). கிட்டத்தட்ட 4600 வருடங்களுக்கு முன்னர் இது கட்டப்பட்டதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் முதன் முதலில் கட்டப்பட்டது கிரேட் பிரமிடு அல்ல.  கிங் குஃபு வின் தந்தை கிங் ஸ்நெஃப்ரு வினால் கட்டப்பட்ட ஸ்டெப் பிரமிடுதான் முதன் முதலில் கட்டப்பட்ட பிரமிடாகும்.


கிரேட் பிரமிடு 2.3 மில்லியன் எண்ணிக்கையிலான கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. இவற்றின் மொத்த எடை 5.9 மில்லியன் டன்கள்.

பிரமிடு போலவே இன்னுமொரு தீராத மர்மம் அதன் முன்னால் இருக்கும் Sphinx சிற்பம். மிகப்பிரமாண்டமான அளவில் கட்டப்பட்டிருக்கும் இந்த சிற்பம் கிரேட் பிரமிடை பாதுகாக்கத்தான் கட்டப்பட்டிருக்கிறது என்ற வாதங்களையும் தாண்டி காலச்சிதைவுகளுடன் அமர்ந்திருக்கிறது.

ஒரு சராசரி பிரமிடின் எடையென்று எடுத்துக்கொண்டால் அது 54 இலட்சம் டன்னாகும். பிரமிடுகள் கட்ட உபயோகித்திருக்கும் ஒரு கல்லின் சராசரி எடை இரண்டரை டன்னாகும். மிஸிரினஸ் பிரமிடில் உபயோகித்திருக்கும் ஒரேயொரு கல்லின் எடை மட்டும் 285 டன் என்பதும், சக்கரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் இவ்வளவு எடையுள்ள கல்லை எப்படி கையாண்டிருப்பார்கள் என்பதும் ஆராயமுடியாத மர்மமாகவே நீடிக்கிறது. சில ஆராய்ச்சியாளர்கள் கிரேட் பிரமிடு நாலு இலட்சம் மனிதர்களைக்கொண்டு சுமார் 20 ஆண்டுகள் கட்டப்பட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். (சிலர் பிரமிடுகளை கட்டியது மனித சக்தியே அல்ல… நிச்சயமாய் ஏதோவொரு சூப்பர் பவரோ... இல்லை... வேற்றுக்கிரக வாசிகளோதான் கட்டியிருக்கவேண்டும் என்றும் வாதிக்கின்றனர். ஏனென்றால் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட மனிதர்களால் கிரேட் பிரமிடு போன்ற ஒன்றை உருவாக்குவது சாத்தியமில்லாதபோது 5000 வருடங்களுக்கு முன் இது எப்படி மனித சக்தியால் கட்டப்பட்டிருக்கும் என்ற கேள்வியும் வாதத்திற்கு வலு சேர்ப்பதாய்த்தான் இருக்கிறது)
பிரமிடுகள் கட்டப்பட்ட கற்களின் அளவை இந்தப்படத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்...

பிரமிடுகள் கட்டப்பட்ட விதமும் கட்டப்பட்டதற்கான காரணங்களும் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளுடன் தொடர்ந்து கொண்டேயிருக்கும் மர்மங்கள். இறந்து போன மன்னர், மகாராணி ஆகியோரின் சடலங்கள் பதப்படுத்தப்பட்டு அவர்கள் உபயோகிக்கும் பொருட்களுடன் பிரமிடுக்குள் அமைக்கப்பட்டிருப்பது இறப்பிற்கு பின்னாலான வாழ்க்கை குறித்த மர்மமாகவே ஆராயப்படுகிறது.

எகிப்தின் மர்மங்கள் வெறும் பிரமிடுகளுடன் முடிந்து விடுவதல்ல. மம்மிகள் எனப்படும் பதப்படுத்தப்பட்ட உடல்கள், பிரமிடுக்குள் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே ஃபிளையிங் மெஷின் மற்றும் பல்பு போல செதுக்கப்பட்டிருக்கும் உருவங்கள், மனித உடலும் விலங்கு தலையுமான உருவங்கள் என நீளும் விஷயங்கள் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் தீர்க்க முடியாத எகிப்தின் மர்மங்களே!!!

பயிர் வட்டங்கள்

2012 வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த பயிர் வட்டங்கள் ஒரு சுவாரசியமான மர்மங்கள். விளைந்திருக்கும் பயிரில் ஒரே இரவில் ஏதோவொரு அமானுஷ்ய சக்தி இதுபோன்ற உருவங்களை உருவாக்கிச் செல்வதாய் கதைகள் நீள்கின்றன. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இந்த பயிர் வட்டங்கள் தோன்றியிருக்கும் போதும் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் அதிகம் பதியப்பட்டிருப்பது இங்கிலாந்தில்தான். 

பெரும்பாலான உருவங்கள் ஒரே இரவில் மனிதர்கள் உருவாக்க சாத்தியமேயில்லாத முறையில் உருவாக்கப்பட்டிருப்பது இதன் மர்மத்தை மேலும் கூட்டுகிறது. இரவுப்பொழுதில் வெளிச்சம் இல்லாமல் சுற்றியிருக்கும் பயிருக்கு எந்தவொரு சிறு சேதமும் இல்லாமல் எந்தவொரு வாகனமோ, மனிதக்காலடியோ, இல்லை இயந்திரத்தின் தடயமோ இல்லாமல் இப்படிப்பட்ட படைப்புகள் உருவாக்கப்படுவது மர்மத்திலும் மர்மமே. அதுவும் சில ஆராய்ச்சிகளில் இந்த பயிர்வட்டங்கள் உருவாக்கப்பட்ட இடத்தின் மண் மட்டும் பாறைப்படிவம் போல மாறியிருப்பது மர்மத்தின் உச்சம். ஏனென்றால் ஒரு சாதாரண மண் இறுகிப் பாறைபடிவம் போல மாறவேண்டுமென்றால் அதற்கு இயற்கையாய் 1000 ஆண்டுகளுக்குமேல் தேவைப்படும். இப்படி ஒரேயிரவில் பாறைப்படிவம் போல மாறவேண்டுமானால் கிட்டத்தட்ட 8000 டிகிரி வெப்பத்தில் மண்ணை சூடுபடுத்தவேண்டும். அவ்வாறு வெப்பம் உண்டாக்கப்படும் பட்சத்தில் அந்த இடமே சின்ன புல் பூண்டு கூட இல்லாமல் பஸ்பமாகிவிடும். மேலும் இதேப்போன்ற பயிர் வட்டங்களை மனிதர்களைக்கொண்டு உருவாக்க நடந்த ஆராய்ச்சிகளின் முடிவில் ஒரு சாதாரண உருவத்தை பகல் வெளிச்சத்தில் உருவாக்கவே 5நாட்களுக்கும் மேல் ஆகியிருக்கிறது. அதைவிட முக்கிய விஷயம் மனிதர்களைக்கொண்டு இந்த முயற்சியைச் செய்தபோது பயிர்கள் நிறைய உடைபட்டிருக்கின்றன. மனிதர்களின் சேற்றுக்காலடித்தடங்கள் பயிர்களில் பதிந்திருக்கின்றன. ஆனால் உண்மையான பயிர்வட்டங்களில் பயிர்கள் மடக்கப்பட்டிருந்தாலும், வளைக்கப்பட்டிருந்தாலும் இதுவரை ஒரு பயிர்கூட சேதப்பட்டிருக்கவில்லை என்பது கூடுதல் ஆச்சர்யம். 

இந்தப் பயிர் வட்டங்கள் இரவு நேரத்தில் வானத்திலிருந்து வரும் ஒரு ஒளிக்கற்றையால் உருவாக்கப்படுவதாகவும், வேற்றுக்கிரக வாசிகளின் வாகனம் இறங்கிச் சென்ற தடையங்களே இந்தப்பயிர் வட்டங்கள் என்றும், இந்தப்பயிர் வட்டங்களுக்குள் செல்லும் மிருகங்கள் மிரண்டு ஓடுவதாகவும், இந்தப்பயிர் வட்டங்களுக்குள் கடிகாரம் வேகமாகவும், மெதுவாகவும் மாறி மாறிச்சுற்றுவதாகவும், சில மனிதர்களுக்கு இந்தப்பயிர் வட்டங்களுக்குள் நுழையும்போது தலைச்சுற்றல் வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றுவதாகவும், சில மனிதர்களுக்கு இந்தப்பயிர் வட்டத்துக்குள் நுழைந்ததும் தங்கள் உடம்பிலிருந்த நோய்கள் சரியானதாகவும் வித விதமான மர்மக்கதைகள் நமக்கு மயக்கத்தையே வர வைக்கின்றன. 

எனினும் வெறும் காகிதத்திலேயே வரையச் சிரமப்படும் பல டிசைன்கள், பயிர்களில் சேதமில்லாமல் உருவாகியிருப்பது மர்மமான ஆச்சர்யம்தான்.










பயிர் வட்டங்கள் பற்றிய மேலும் பல சுவாரசியத்தகவல்களுக்கும், புகைப்படங்களுக்கும் இந்த வெப்சைட்டில் பார்க்கவும்...
ஸ்டோன் ஹென்ஜ்

உலகின் தீரா மர்மங்களில் ஸ்டோன் ஹென்ஜ் முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. தோராயமாக இதன் வயதை 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கணித்திருக்கிறார்கள். இன்றைய பிரிட்டனின் மிகப்பழமையான புராதனச்சின்னங்களில் இதுதான் முதலிடம் என்பது கூடுதல் சிறப்பு.

ஸ்டோன் ஹென்ஜ் பார்க்க எண்ணி பயணீத்தீர்களேயானால், ஒரு சில மலைகளைத் தாண்டிச் செல்லும் பயணத்தில் திடீரென இந்த அமானுஷ்ய இடத்துக்குள் நுழைவீர்கள். இந்த இடத்தின் மயான அமைதியும், வீசும் வித்தியாசமான காற்றும் உங்களுக்குள் ஒரு மர்மத்தாக்கத்தை நிச்சயம் உண்டாக்கும்.  

இது உருவாக்கப்பட்ட விதமாக ஆராய்ச்சியாளர்களால் கணிக்கப்பட்ட தகவல்கள் இதுதான்...

1)   முதலில் கி.மு.3100ம் ஆண்டில் மதச்சடங்குகளுக்காக தொடர் பள்ளங்கள் தோண்டப்பட்டிருக்கின்றன.

2)   அதன் பின்னர் ஆயிரம் ஆண்டுகள் கழித்துதான் இந்த கல் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. வேல்ஸ் மலையிலிருந்து பெரிய பெரிய கருங்கற்கள் கிட்டத்தட்ட 240மைல் தொலைவுக்கு எடுத்துவரப்பட்டிருக்கிறது. சக்கரம் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில் எதற்காக, யாரால், எப்படி இந்தக் கற்கள் இவ்வளவு தூரம் எடுத்து வரப்பட்டிருக்கும் என்பது மர்மமே. இவ்வாறு எடுத்து வரப்பட்ட கற்கள் முற்றுபெறாத ஒரு இரட்டை வட்ட வடிவில் மிட்சம்மர் சூரிய உதயத்திற்கு அலைன்மெண்ட் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கிறது.

3)   இதன் முன்னர் மூன்றாவது நிலையாக கி.மு.2000வது ஆண்டில் மேலும் சில கற்கள் 25மைல்களுக்கு அப்பால் உள்ள இடத்திலிருந்து எடுத்துவரப்பட்டிருக்கிறது.

4)   இதன் பின்னர் மேலும் 500 ஆண்டுகளுக்குப் பிறகு யாரோ ஒரு சிலரால் இன்றைய குதிரைக் குளம்பு போன்ற வட்ட வடிவத்தில் இந்தக்கற்கள் மறுஒழுங்கு செய்யப்பட்டு அடுக்கப்பட்டிருக்கிறது.

இன்று வரையிலும் இந்தக்கற்கள் அடுக்கப்பட்டிருப்பதன் அர்த்தம் எந்தவொரு முடிவையும் எட்டவில்லை. இது ஒரு வழிபாட்டுத்தலம், வானவெளி சம்பந்தப்பட்ட காலண்டர், சுடுகாட்டு மயானம் என்று விதவிதமான கதைகள் திரிந்தாலும் இது இன்னமும் தீர்க்கப்படாத ஒரு மர்மம்தான்!!!

நகரும் கற்கள்
செயிலிங் ஸ்டோன் என்றழைக்கப்படும் இந்த கற்கள் விலங்குகளோ இல்லை மனிதர்களோ இல்லாமல் தானாகவே நகர்ந்து நீண்டதொரு பாதையில் பயணித்துக்கொண்டேயிருக்கின்றன. இவைகளைப் பற்றிய தகவல்கள் பலவிதமான எண்ணிக்கையில் அமேரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ரேஸ் ட்ராக் பிளேயா, டெத் வேலி என்ற இடத்தில் ஆராயப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தக் கற்கள் வெறும் நேர் கோட்டில் மட்டுமே நகராமல் வளைவுகளுடன் நகர்வது மேலும் மர்மமே. இவற்றில் ஒரு சில கற்கள் 700 பவுண்டு வரை எடை உள்ளவை என்பது கூடுதல் தகவல். இவைகளின் நகர்வுக்கு பின்னால் உள்ள சக்தி இன்னமும் கண்டுபிடிக்கப்பட முடியாமல் ஆராய்ச்சிக்குரியதாகவே நீடித்துக் கொண்டிருப்பது தீராத மர்மமே!



இரும்புத்தூண் – டெல்லி

ஆச்சர்யத்திற்குரிய விஷயமிது. உலகின் தீரா மர்மங்களைப்பற்றி அலசிக்கொண்டிருந்தபோது அதில் இடம் பெற்றிருக்கும் நமது இந்தியாவின் இரும்புத்தூண் நான் எதிர் பார்க்காத... என்னை வியக்க வைத்த விஷயம்.


டெல்லியில் இருக்கும் குதுப்மினார் பற்றி நம்மில் பலபேர் அறிந்திருப்போம். அதன் அருகில்தான் இந்த இரும்புத்தூணும் அமைந்திருக்கிறது. 2000 வருடங்களுக்கும் மேலாக பழமையானதாக கருதப்படும் இந்தத்தூண் 98% சுத்தமான இரும்பினால் செய்யப்பட்டு எவ்வித பாதுகாப்பு பூச்சுகளுமின்றி திறந்தவெளியில் துளியளவும் துருப்பிடிக்காமல் இருப்பது இன்றளவும் தீர்க்கப்படாத மர்மமே !.

இரும்புத்தூணையும், ஃஈபிள் டவரையும் பற்றிய ஒரு சிறிய ஒப்பீடு உங்கள் பார்வைக்கு...


பிமினி ரோடு

பிமினி ரோடு அல்லது பிமினி சுவர் என்றழைக்கப்படும் இந்த விஷயம் பஹாமா மாகாணத்தின் வடக்கு பிமினித்தீவில் தண்ணீருக்கடியில் கண்டறியப்பட்ட ஒரு பாறைப்படிவமாகும். 0.8 கி.மீ நீளமுடன் கூடிய இந்தச்சுண்ணாம்பு பாறை படிவத்தில் காணப்படும் சதுரமான பாறைகளாலான ரோடு போன்ற அமைப்பும், படிக்கட்டுகள் போன்ற அமைப்பும், தூண்கள் போன்ற அமைப்பும் இதைச்சுற்றிய ஏராளமான மர்மக்கதைகளுக்கு காரணமானதாய் அமைந்திருக்கிறது.

அட்லாண்டிஸ் என்ற புராதன நகரம் காணாமல் போனதான வரலாறுகள் மேலைநாட்டில் திரைப்படங்களிலும், நாவல்களிலும் பிரசித்தபெற்றவை. கதைகளில் இருக்கும் புராதன அட்லாண்டிஸ் நகரம்தான் பிமினியின் தண்ணீருக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட படிவங்கள் என்ற கதையும், இது இயற்கையாக உருவான படிவமா... இல்லை மனிதர்களால் உருவாக்கப்பட்டு கடலுக்குள் புதையுண்ட நகரமா என்பது இன்றளவும் ஆராய்ச்சிகளுக்கு உட்பட்ட தீரா மர்மமாகவே நீடிக்கிறது.

இந்தியாவிலும் இதேப் போல துவாரகா என்ற புராதன நகரம் கடலுக்கடியில் மூழ்கியிருப்பதாய் நிலவும் கதைகள் உங்களுக்கான கூடுதல் தகவல்!

இன்கா தங்கப்புதையல்

 லத்தின் அமெரிக்காவில் மத்திய ஈகுவடாரில் அமைந்திருக்கும் அடர்ந்த மலைப்பிரதேசத்தின் குகைகளில் டன் கணக்கில் தங்கப்புதையல் இருப்பதான கதைகளின் பின்னனி சுவாரசியமான வரலாறு.


1532ம் ஆண்டு ஃபிரான்சிஸ்கோ பிஸ்ஸாரோ என்பவரின் தலைமையில் ஸ்பானீஷ் படையொன்று இன்கா பேரரசரை சிறைபிடிக்கும் முயற்சியில் முன்னேறியது. ஏற்கனவே இன்கா பேரரசில் அப்போதுதான் சகோதர யுத்தம் நடந்து தனது சகோதரர் குயாஸ்கரை வீழ்த்தி அரியணையில் அமர்ந்திருக்கிறார் அதூல்பா. ஏற்கனவே நடந்த உள்நாட்டு யுத்தத்தில் களைப்படைந்து போயிருந்த இன்கா படைகள் ஸ்பானீஷ் படைகளிடம் எளிதாய் வீழ்ந்திருக்கிறது. அதூல்பா இன்கா தலைநகரான கஜமார்காவில் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்.

தன்னை விடுவித்தால் அதற்கு ஈடாக மலை மலையாக தங்கம் தருவதாக பிஸ்ஸாரோவிடம் பேரம் முடித்திருக்கிறார் அதூல்பா. அதன்படி தங்கள் அரசரை விடுவிப்பதற்காக இன்கா பேரரசு முழுவதுதிலுமுள்ள மக்களிடமிருந்து தங்கமும் வெள்ளியுமாய் பெறப்பட்டு அவை இரண்டு தவணையாக பிஸ்ஸாரோவிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. விதவிதமான தங்க கைவினைப்பொருட்கள் முதல் தவணையில் ஒப்படைக்கப்பட்டவுடன் பிஸ்ஸாரோ அந்த அழகிய தங்க வைவினைப்பொருட்கள் அனைத்தையும் உருக்கி தங்கக்கட்டிகளாய் ஸ்பெயினுக்கு அனுப்பி விட்டு இரண்டாவது தவணையைப் பற்றி அறியாமல் தனது வாக்குறுதியைக் மீறி இன்கா பேரரசர் அதூல்பாவை ஆகஸ்ட்-29, 1533 அன்று இன்கா தலைநகரான கஜமார்காவிலேயே கொன்று தீயிலிட்டு கொளுத்தியிருக்கிறான்.

கிட்டத்தட்ட 60,000 பணியாட்கள் மூலம் 750 டன் தங்க கைவினைப்பொருட்களை இன்கா தலைநகரை நோக்கி சுமந்து வந்து கொண்டிருந்த இன்கா ஜெனரல் ருமினாஹீய், இன்கா பேரரசர் கொல்லப்பட்ட செய்தியை அறிந்ததும் தங்கம் மொத்தத்தையும் ல்லங்கானேட்ஸ் என்ற  ஈகுவடாரின் மலைப்பிரதேசத்துக்கு எடுத்துச்சென்று மறைத்துவிட்டார். அதற்குப் பின்னர் இன்கா ஜெனரல், ஸ்பானீஷ் படைகளுடன் தொடர்ந்து போரிட்டு, சிறைபிடிக்கப்பட்டு, பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டும் இன்கா தங்கத்தை வைத்த இடம் பற்றி எவ்விதத் தகவலையும் கூறாமல் அந்த மர்மப்புதையலை தனது மரணத்தோடு சேர்த்தே மறைத்து கொண்டார்.

தொடர்ந்து வந்த காலங்களில் இன்று வரையிலும் தங்க வேட்டைக்காக பலவிதமான தேடல்கள் நடந்து கொண்டேயிருந்தாலும் எல்லாமே வெறுங்கையாகவே முடிந்த கதைகள் இன்கா தங்கப்புதையலை இன்னமும் தீரா மர்மமாகவே நீட்டித்திருக்கிறது.

நாஸ்கா கோடுகள்

 புராதன உலகத்தின் முக்கிய மர்மங்களுள் ஒன்றாக விளங்கும் நாஸ்கா கோடுகள் தெற்கு பெருவில் உள்ள நாஸ்கா சமவெளியில் காணப்படுகின்றன. இந்தக்கோடுகள் முதன்முதலில் உலகுக்குத்தெரிய வந்தது கமெர்ஷியல் ஏர்லைன்ஸ் சேவைகள் பெரு சமவெளியின் மீது பறக்கத்தொடங்கிய 1920ம் ஆண்டில்தான். இந்தக்கோடுகள் கி.பி.400 லிருந்து 600ம் ஆண்டுக்கு மத்தியில் வரையப்பட்டதாய் கணக்கிடப்பட்டிருக்கிறது. உலகில் இதுபோல இங்கொன்றும் அங்கொன்றுமாய் சில வரைபடங்கள் காணப்பட்டாலும் முன்னூறுக்கும் அதிகமாய் ஒரேயிடத்தில் மிகப்பெரிய அளவில் வரையப்பட்ட காரணம்தான் நாஸ்காவின் முக்கியத்துவத்துக்கு அடிப்படையாகும். வானத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே புலப்படக்கூடிய அளவுக்கு சில வரைபடங்கள் 1000அடி நீளத்திற்கும் மேல் வரையப்பட்டிருப்பது அறிவியல் கண்டுபிடிப்புகளற்ற 400ம் வருடத்தில் என்பதுதான் நம்ப முடியாத ஆச்சரியம்.

இதே காரணம்தான் இதைப்பற்றிய பல மர்மகதைகளுக்கும் வித்தாகிப்போனது. பலர் இதை வேற்று கிரகவாசிகளின் விமானத்தளம் என்றே வாதிக்கின்றனர். அதற்கு காரணம் இதன் ஒருசில வரைபடங்கள் மாடர்ன் விமானநிலையத்தின் பார்க்கிங் அமைப்பை ஒத்திருப்பதாய் அமைந்திருப்பதேயாகும்.

ஒரு சிலர் இதை நாஸ்கா மக்கள் தண்ணீருக்காக கடவுளிடம் வழிபாட்டு நடத்துவதற்காக உருவாக்கிக்கொண்ட வரைபடம் என்கிறார்கள். ஒருசிலர் இதை ஈமச்சடங்குகளுக்கான ஏரியாவாக வாதிக்கின்றனர்.

ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் இதை வானவெளி பற்றிய காலண்டர் என்று வாதிக்கின்றனர்.

எது எப்படியிருந்தாலும் வெறும் மணல்வெளியில் வரையப்பட்டிருக்கும் இந்த கோடு வரைபடங்கள் காலங்கள் பல கடந்தும் அழியாமல், முழுக்காரணமும், வரையப்பட்ட விதமும் தெரியாமல் வீற்றிருப்பது நிச்சயமாய் மர்மமே!


பெர்முடா முக்கோணம் 

பெரும்பாலும் இதைப் பற்றிய தகவல் தெரியாதவர் யாரும் இருக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். நார்த் அட்லாண்டிக் கடலின் மேற்கு பகுதியில் இருக்கும் இந்த கடற்பரப்பில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்களும், விமானங்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும்  மர்மமான முறையில் காணாமல் போயிருக்கின்றன. குறிப்பிட்ட இந்த முக்கோணப்பகுதிக்குள் நுழையும் கப்பல்களோ... இல்லை இதற்கு நேர் மேற்பரப்பில் பறந்த விமானங்களோ இதுவரை என்னவாயிற்று என்றே தெரியாமல் ஆராயப்பட்டுக்கொண்டிருக்கிறது.


பலவித ஆராய்ச்சிகளுக்குப்பிறகும் பெர்முடா முக்கோணம் அறிவியல் சம்பந்தப்பட்ட காரணமா... இல்லை அமானுஷ்ய சக்திகளின் காரணமா என்பது இன்னமும் புரிபடாமல் நீடிப்பது கண்டிப்பாய் தீராத மர்மம்தான் !


மாயன் காலண்டர் 

மாயன் காலண்டர்... 2012ம் ஆண்டை பற்றிய மர்மத்தை தாங்கி நிற்கும் கல்வெட்டு இது. ஒரு சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி மாயன் என்ற இனத்தால் கடைபிடிக்கப்பட்டு வந்த காலண்டர் இது என்றும், இந்த காலண்டர் டிசம்பர் 21, 2012 அன்றோடு முடிவதாகவும் அதுதான் உலகம் அழியும் நாளாக மாயன் இனத்தவரால் கணிக்கப்பட்ட நாள் என்றும் பரவிய செய்திதான் இன்று இந்த விஷயத்தை உலகின் டாப் லிஸ்ட் மர்மங்களில் ஒன்றாக்கியிருக்கிறது.


இருந்தாலும் பல அறிவியலாளர்களால் மாயன் காலண்டர் சமாச்சாரம் உண்மையில்லை என்று மறுக்கப்பட்டிருக்கிறது. நமது காலண்டர் எப்படி டிசம்பர்-31 ல் முடிகிறதோ அதேப்போல இந்த காலண்டருக்கும் இருக்கும் முடிவுதான் இது. மற்றப்படி டிசம்பர்-21, 2012ல் உலகம் அழிவதற்கான எவ்வித அறிவியல் கூறுகளும் இல்லை என்று திட்டவட்டமாக மறுக்கப்பட்டிருக்கிறது.

எனினும் 2012 திரைப்படம் உலகம் முழுக்க வசூலை அள்ளிக் குவித்த காரணமே மக்கள் மனதில் மாயன் காலண்டர் விதைத்த மர்மம்தான் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை...

பறக்கும் தட்டுகள்

உலகின் தீர்க்கப்படாத மர்மங்களின் டாப் லிஸ்ட்டில் இந்தப் பறக்கும் தட்டுகள் பற்றிய செய்தியும் இடம் பெறுவதற்கு இதைப் பற்றிய கதைகளும், மக்களுக்கு வேற்று கிரகவாசிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களின் மீதிருக்கும் ஈர்ப்புமே முக்கியக்காரணம்.
பறக்கும் தட்டை பார்த்ததாய் பதியப்பட்ட முதல் செய்தி 1878ம் ஆண்டுதான். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் விவசாயி ஒருவர் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது வட்டவடிவில் ஏதோவொன்று மிக அதிவேகத்தில் பறந்து சென்றதை பார்த்ததாகக் கூறினார். அதன் பின்னர் 1916ம் ஆண்டு இங்கிலாந்தின் ஃபைலட் ஒருவர் தான் விமானம் ஓட்டிக்கொண்டிருந்தபோது நெருப்பு பந்து போன்ற ஏதோவொன்று பயங்கர வெளிச்சத்துடன் பறந்ததை பார்த்ததாகத் தெரிவித்தார்.

1950களுக்குப் பிறகு சயின்ஸ் ஃபிக்சன் கதைகளின் மூலம் இந்தப்பறக்கும் தட்டுகள் மேலும் பிரபலமடைந்தன. பறக்கும் தட்டுகள் அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட உளவு விமானம் என்றும், ரஷ்யாவினால் ஏவப்பட்ட உளவு விமானம் என்றும் எதிர்வாதங்களும் கிளம்பின.
இந்தியாவிலும் பறக்கும் தட்டை பார்த்ததாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்...
டெல்லியில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள்...


தமிழ்நாட்டில் பொள்ளாச்சி அருகே எடுக்கப்பட்ட புகைப்படம் இது...

என்னதான் ஆராய்ச்சிகளும், மறுப்புகளும் தொடர்ந்து உருவானாலும் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதாய் நம்பும் பூமிக்கிரகவாசிகளின் மனதில்  பறக்கும் தட்டுகள் பற்றிய செய்திகளும், படங்களும் இன்னமும் அவிழாத மர்ம முடிச்சாகவே நீடித்திருக்கிறது.

இதுவரை பார்த்தவை உலகின் வெறும் ஹிட் லிஸ்ட் தீரா மர்மங்கள் மட்டுமே... மற்றபடி உலகின் மொத்த மர்மங்களையும் பற்றி அறிய நினைத்தால் அது கணக்கிலடங்கா கதைகளுடன் நமது தெரு எல்லை வரைகூட வரலாம்... உண்மையிலேயே இவை மர்மங்களோ... இல்லையோ... ஆனால் இவற்றைப்பற்றிய செய்திகளும், படங்களும் ஒரு சிறந்த மர்மப் பொழுதுபோக்குகள் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் ஏதுமிருக்காது என்று நம்புகிறேன்...