Thursday, 15 September 2011

புவிவெப்பமயமாதல் ஓர் அமானுஷ்யம்!






வரலாற்றை புரட்டிப் பார்க்கும்போது, தற்போது நடந்துகொண்டிருப்பது பிரமிப்பாக இருக்கும். நாம் எதுவெல்லாம் நடந்திருக்காது. இருந்திருக்காது என்று நினைக்கிறோமோ அதெல்லாம் அப்போது நடந்திருக்கிறது என்பதே பிரமிப்பான விஷயம்தான்.
அப்படி ஒரு விஷயத்தைத்தான் நீங்கள் இப்போது படிக்கப் போகிறீர்கள். சமூக ஆர்வலர்கள் ஆரம்பித்து எல்லோர் வாயும் முணுமுணுக்கும் வார்த்தை சுற்றுப்புற சீர்கேடு. அதிலும் குறிப்பாக குளோபல் வார்மிங் என்ற வார்த்தையை சொல்லாதவர்களே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். குளோபல் வார்மிங் என்றால், பூமி கட்டுங்கடாங்காத வெப்பம் சூழ்ந்திருக்கிறது என்று சொல்லலாம். சுருக்கமாக புவி வெப்பமயமாதல். குளோபல் வார்மிங் பிரச்சினையால் பச்சை வீட்டு வாயு அதிகளவில் வெளியேறுவதால் ஓசோன் படலம் ஓட்டை விழுந்து புற ஊதாக் கதிர்களும், அகச்சிவப்பு கதிர்களும் நேரடியாக பூமியைத் தாக்கும். இதனால், மனிதர்களுக்கு தோல் புற்றுநோய்கள் ஆரம்பித்து, வித்தியாசமான உயிர்க்கொள்ளி நோய்கள் எல்லாம் ஏற்படும் என்பது விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகள்.
புவி வெப்பமயமாதல் எப்படி ஏற்படுகிறது? இந்தக் கேள்விக்கு கண்டிப்பாக உங்களுக்கும் பதில் தெரியும். இருந்தாலும் கூடுதலா தெரிஞ்சு வச்சிக்கோங்க. வீடு, அலுவலகங்கள், கார், பஸ்களில் பயன்படுத்துகிற ஏ.சி., பிரிட்ஜ் சாதனங்களில் இருந்து வெளிவரும் குளோரோ புளுரோ கார்பன் என்னும் வாய்வுதான் இந்த புவி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணம்னு சொல்றாங்க. பூமியைப் பாதுகாக்கும் படலத்துடன், இந்த வாயு வினைபுரிந்து அதை ஓட்டை விழச் செய்கிறது. அதனால், கட்டுக்கடங்காத வெப்பம் பூமியைத் தாக்குகிறது. இந்த வெப்பத்தின் அளவு எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும். அப்படி அதிகரித்தால், துருவத்தில் உள்ள ஐஸ் மலைகள் உருகும். கடல் நீர்மட்டம் உயரும். இதனால், பல்வேறு கண்டங்கள் அழிந்து போகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உருவான சுனாமி கூட புவி வெப்பமயமாதலால்தான் என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
உலக நாடுகள் , மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்றவாறு மின்சாரத்தை வழங்குவதற்காக, அணு உலைகளை அமைத்து வருகிறது. இதிலிருந்து வெளியேறும் கார்பன் துகள்கள், பெட்ரோல் பயன்படுத்தும் வாகனங்கள், எந்திரங்களில் இருந்து வெளியேறும் கார்பன் துகள்களால்தான் புவிவெப்பமயமாதல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இன்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த புவி வெப்பமயமாதல் வாகனப் பெருக்கம், அணு உலைகள் பெருக்கம், குளிர்சாதன வசதிகளின் பயன்பாட்டினால்தான் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்க, அதெல்லாம் சுத்தமாய் பொய் என்று சொல்லும் அளவிற்கு ஒரு வரலாற்றுச் சம்பவம் இருக்கிறது.
1799 ஆம் ஆண்டு தாமஸ் ஜெபர்சன் என்பவர் அமெரிக்க செனட்டில், புவி வெப்பமயமாதல் குறித்த பிரச்சினையை கிளப்புகிறார். பூமியில் கட்டுக்கடாங்காத கார்பன் வாயுக்களால் பூமிப் பந்து வெப்பத்தால் கட்டுண்டு கிடக்கிறது. இதனால், துருவங்களில் இருக்கும் பனிச் சிகரங்கள் உருகி அமெரிக்காவிற்கு ஆபத்து நேர்ந்துவிடும். எனவே இந்தப் பிரச்சினையை அரசு உடனடியாக கவனத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது அமெரிக்க அதிபராய் பதவி வகித்தது, ஜான் ஆடம்ஸ். தாமஸ் ஜெபர்சன், 1779 முதல் 1781 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தின் கவர்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் மூன்றாவது அதிபரும் அவர்தான். இவ்வளவு முக்கிய நபரான தாமஸ் ஜெபர்சன் வெளியிட்ட இந்த செய்திக் குறிப்பு கண்டிப்பாக பொய்யாக இருக்க வாய்ப்பில்லை.
ஆனால், பூமி வெப்பமயமாதலுக்கு காரணம் என்று நாம் இன்றுவரை சொல்லிக்கொண்டு இருக்கிறோமே... அணு உலைகள், குளிர்சாதனங்கள், மற்றும் பெட்ரோல், டீசலால் பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் எந்திரங்கள். அவைகள் எல்லாம் 1799ஆம் ஆண்டு தாமஸ் ஜெபர்சன் அறிக்கை வெளியிடும்போது பயன்பாட்டிலேயே கிடையாது என்பது ஆச்சர்யமான விஷயம்.
ஆம்.. உண்மைதான். மின்சாரத்திற்காக மட்டும் நாட்டின் வளர்ச்சிக்காக மட்டும் உருவாக்கப்பட்ட அணு உலைகள், உலகில் முதன்முதலில் உருவாக்கப்பட்டது 1954ஆம் ஆண்டுதான். அதேபோல குளோரோ புளோரோ கார்பனை வெளியேற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் என்று சொல்வதைவிட குளிர்சாதனப் பெட்டி குறித்த யோசனையை முதன்முதலில் 1758ஆம் ஆண்டு பெஞ்சமின் பிராங்க்ளின்தான் வெளியிட்டார். அவர் அப்போது அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியராக இருந்தார். அவரும் குளிர்சாதனப் பெட்டிக்கான கொள்கைகளை வகுத்துக் கொடுத்தாரே தவிர முழுமையாக வடிவமைக்கும் பணியில் அவர் ஈடுபடவே இல்லை.
ஆனால் அதற்குப் பிறகு 1820ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் மைக்கேல் பாரடே என்னும் அறிவியல் விஞ்ஞானிதான் அம்மோனியாவை பயன்படுத்தி குளிர்விப்பானை உருவாக்கலாம் என்று யோசனையை சொன்னதுடன், அதன் வடிவமைப்புப் பணிகளிலும் முதன்முதலாக ஈடுபட்டார். இருப்பினும் குளிர்சாதனப் பெட்டி, மற்றும் குளிர்சாதனங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது என்னவோ 1880ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் என்று வரலாறு சொல்கிறது. அதேபோல 1800ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சர்வதேச அளவில் கார்கள், வாகனங்கள் எல்லாமுமே நீராவியில்தான் ஓடியிருக்கிறது. முதல் முறையாக எண்ணெயை பயன்படுத்தி நீராவியால் ஓடும் கார் 1815ஆம் ஆண்டுதான் பயன்பாட்டிற்கு வந்தது. பெட்ரோலை பயன்படுத்தி ஓடும் வாகனம் முதன்முதலில் வடிவமைக்கப்பட்டது 1838ஆம் ஆண்டுதான்.
மேற்சொன்ன கண்டுபிடிப்புகளும், அதன் காலங்களையும் வைத்துப் பார்க்கும்போது, 1790ஆம் ஆண்டுகள் என்பது பெட்ரோல், குளிர்சாதனப் பெட்டி, அணு உலைகள் எதுவுமே பயன்பாட்டிலேயே இல்லாத காலகட்டம். ஆனால், 1799ஆம் ஆண்டு புவி வெப்பமயமாதல் குறித்து மிகவும் பயங்கரமான ஒரு அறிக்கையை முன்னாள் அமெரிக்க அதிபர் தாமஸ் ஜெபர்சான் தாக்கல் செய்திருக்கிறார் என்றால், இப்போது புவிவெப்பமயமாதலுக்கு காரணமான விஷயங்களாக விஞ்ஞானிகள் சொல்லும் காரணிகள் பொய்யா? அல்லது 15ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தில் அல்லது அதற்கும் முந்தைய மக்கள் பூமிப்பந்தை தாக்கும் அளவிற்கு வெப்பத்தை கிளர்ச்சியடைய செய்யும் அளவிற்கு மாறுபட்ட கருவிகளை பயன்படுத்தி இருந்தார்களா? றஎவைதான் உண்மை... அல்லது 1700ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் விஞ்ஞானத்தில் நம்மைவிட விஞ்சியவர்களா? விந்தையான பல கேள்விகள்.. நம்மை துளைத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், இங்கு வைக்கப்பட்டிருக்கும் கேள்விகள் குறித்த ஆய்வுகள் சர்வதேச அளவில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

Friday, 19 August 2011

முன்னோர்கள் விட்டுச்சென்ற டாட்டூஸ்!






இந்த பிரபஞ்சம் முழுவதும் விசித்திரம் நிறைந்து கிடக்கிறது. இன்று எதெல்லாம் புதுமை, கண்டுபிடிப்பு என்று தலையில் வைத்துக்கொண்டாடுகிறோமோ அதெல்லாம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நடந்திருக்கிறது. அப்படியானால், நம்மைவிட முன்னோர்கள் திறமையானவர்களா, இன்று நமக்கு கிடைக்கும் அத்தனை வசதிவாய்ப்புகளும் அவர்களுக்கும் கிடைத்திருக்குமா என்ற சந்தேகமும் நம் முன்னால் எழுந்துகொண்டுதான் இருக்கிறது.
நம் தாத்தாப் பாட்டிக் காலங்களில் பச்சைக் குத்துவது என்பது சர்வ சாதாரணம். அது அப்படியே நாகரிகம் கருதி கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்தது. ஆனால், இன்று மேற்கத்திய கலாசாரம் என்ற பெயரில் இளைஞர்களும், இளைஞிகளும் கை, கால் ஆரம்பித்து உடம்பில் சகல இடங்களிலும் டாட்டூஸ் வரைந்துகொள்கின்றனர். இன்று நம் இளைஞர்கள் எது பேஷன் என்று கலர் கலராய் உடலில் வரைந்துகொள்கிறார்களோ, அதே டாட்டூஸ் 5000 ஆண்டுகளுக்கு முன், ஒரு இனத்தின் ஒதுக்கப்பட்ட ஒரு பிரிவினரை தனியே பிரித்துக் கண்டறியும் ஒரு அடையாளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று சொன்னால்... அது வியப்புக்குரிய விஷயம்தானே!.
பிரிட்டனில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் ஜோன் பெட்ச்சர். ஜோனுக்கு மனித நாகரிகம் பற்றிய வளர்ச்சியை தெரிந்துகொள்வதில் எப்போதும் ஒரு தேடல்தான். அதனால், பல்கலைக்கழகத்துக்கு வருவது என்னவோ சொர்ப நாள்கள்தான். பெரும்பாலான நாட்கள் தன் ஆராய்ச்சி மாணவர்களுடன் ஊர் ஊராக சுற்றுவதுதான் அவருக்கு வேலை. அப்படித்தான் அன்றும் நடந்தது. 1991ஆம் ஆண்டு. இத்தாலிக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான பனிக்கொட்டும் ஆல்ப்ஸ் மலை அது. அந்த மலைதான் ஜோனுக்கு மனித நாகரிகத்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி இடமாக இருந்தது. மலைகளின் பல இடங்களில் தோண்டிப் பார்த்தாகிவிட்டது. கிடைத்தது என்னவோ, மலை ஆடுகளின் எலும்புகளும், விலங்குகளின் படிமங்களும்தான். ஆனால், அந்தப் படிமங்கள் அனைத்தும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துகிடந்த படிமங்கள்தான். இருந்தாலும் மனம் தளரவில்லை ஜோன். அந்தப் பனிப் பிரதேசத்தின் ஒரு மூலையில் விசித்திரமான ஒரு ஐஸ்கட்டி பாறைகளுக்கு இடையில் கிடந்ததைப் பார்த்தார். அந்த விசித்திர ஐஸ் கட்டியை எப்படியாவது உடைத்துப் பார்த்துவிட வேண்டும். அதில் நம் தேடலுக்கான விடை கிடைக்கலாம் என்பது ஜோனின் எண்ணம். பாறைகளுக்கு ஊடே சிக்கிக் கிடந்த அந்த விசித்திர ஐஸ் கட்டியை பெரும் பாடுகளுக்கு இடையே ஜோன் தன் மாணவர்களுடன் உதவியுடன் எடுத்தார்.
ஐஸ் பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது. அது பல ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன ஒரு மனிதன் என்று. ஜோனுக்கு ஒருபுறம் அதிர்ச்சி என்றாலும், மனிதனின் கலாசாரத்தை சொல்லப்போகும் ஒரு பொக்கிஷமாக அந்த சடலம் தெரிந்தது ஜோனுக்கு. பாதுகாப்புடன் தன் சோதனைக் கூடத்திற்கு அந்த சடலத்தை எடுத்து வந்தார். கூடிப்போனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான மனிதனின் சடலமாக இருக்கலாம் என்பதுதான் ஜோனின் கணிப்பு. கார்பன் வயது சோதனைக்கு அந்த சடலத்தை உட்படுத்தியபோது, அந்த சடலம் கிட்டத்தட்ட 5,200 ஆண்டுகளுக்கு முட்பட்டது என்பது தெரிய வந்தது.
5200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சடலம் அப்படியே கிடைத்தது, ஜோனுக்கு ஆச்சர்யம். சடலத்தில் முதுகு, முழங்கால் மற்றும் கணுக்கால், மூட்டு பகுதிகளில் கறுப்பு நிறத்தில் புள்ளிகள் தொடர்ச்சியாய் வட்டமாகவும் கோடாகவும் தெரிந்தது. என்ன என்று தொடர் ஆராய்ச்சியில் ஜோன் ஈடுபட்டபோதுதான் அது டாட்டூஸ் என்பது தெரிய வந்தது. இந்த ஆய்வை ஜோன் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தபோது, அக்குபஞ்சர் மூலம் நோய்களை எப்படி தற்காலத்தில் குணப்படுத்துகிறார்களோ அதேபோல ஒரு வைத்தியமுறையாக டாட்டூஸை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார்கள். ஆனால், அதுவல்ல உண்மை. இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்து மம்மிக்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்தபோது, ஒரு சில பெண் சடலங்களில் இதேபோல டாட்டூஸ் ஓவியங்கள் காண முடிந்தது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுக்கோப்பான வாழ்க்கை அவர்கள் வாழ்ந்திருக்கவில்லை. அதனால், அந்த இனத்தில் சில பெண்களுக்கு பால்வினை நோய் வந்திருக்கலாம். அதனால், அந்தப் பெண்களை வித்தியாசப்படுத்தி காட்டுவதற்காகவே கைகளிலும் கால்களிலும் அவர்கள் பச்சைக் குத்தியிருக்கலாம். அதன்மூலம் மற்ற ஆண்கள் அவர்களை நெருங்காமல் இருந்திருக்கலாம் என்பது மற்றொரு தரப்பின் ஆராய்ச்சி.
பச்சைக் குத்தும்முறை முற்றிலும் எகிப்திய காலத்தில்தான் உருவானது. எகிப்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது மம்மிக்களுடன் கிடைத்த சில நுண்ணிய ஊசிப் போன்ற பொருள்கள், முற்றிலும் டாட்டூஸ் வரைவதற்கான கருவிதான் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் வரைந்து வைத்திருந்த பெண் ஓவியங்களில் கூட டாட்டூஸ் வரையாமல் விட்டுவைக்கவில்லை. மருத்துவ வசதியில்லாத அந்தக் காலத்தில் கர்ப்பம் தரித்த பெண்கள் பிரசவ காலத்தில் பிரசவ வலியை குறைப்பதற்காகத்தான் இந்த டாட்டூஸ் வரையும் கலாசாரத்தை பின்பற்றியிருக்க வேண்டும். ஏனெனில் கிடைத்த மம்மிக்கள் சடலங்களில் தொடை மற்றும் அடிவயிறு, மற்றும் மார்பகங்களிலேயே அதிகளவில் டாட்டூஸ் வரையப்பட்டிருக்கிறது என்று இன்னொறு ஆராய்ச்சி சொல்ல, இல்லவே இல்லை பெண்கள் மட்டுமல்ல... ஆண்களும் எகிப்திய காலத்தில் டாட்டூஸ் வரையும் கலாசாரத்தை பின்பற்றியிருக்கிறார்கள். அவர்கள் ஓவியம், சிற்பம் வடிப்பதில் கைத் தேர்ந்தவர்கள், அவர்களின் கலை ரசனைக்கான ஒரு அடையாளம் மட்டுமே இந்த டாட்டூஸ் என்கிறது இன்னொரு ஆராய்ச்சித் தரப்பு.
எகிப்து ஆரம்பித்து அதன்பின் கிரீன்லாந்து, சைபீரியா மற்றும் நியூசிலாந்து போன்ற அகழ்வாராய்ச்சியிலும் 1000 ஆண்டுகளுக்கு முன் டாட்டூஸ் வரையப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1700 ஆம் ஆண்டுகள் வாக்கில் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக மக்கள் அடிமைகளாகவும், நாடோடிகளாகவும், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் மூலமாகவே டாட்டூஸ் கலை பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. அதுமட்டுமல்லாமல், இரண்டாம் உலகப்போர் முடிந்த சமயம் அது. தெற்கு சைபீரியாவில் உள்ள அல்டி மலைகளில் ஏராளமான கல்லறைகள். அந்தக் கல்லறையில் சடலங்களாக அடைப்பட்டுக் கிடந்தது மன்னர் குலத்து தளபதிகள். கல்லறைகள் முழுவதும் உறைந்த பணியால் முழுவதும் மூடிக்கிடந்தன. அவற்றையெல்லாம் அகற்றிவிட்டு கல்லறைகளை தோண்டினார்கள் அகல்வாராய்ச்சியாளர்கள். அந்த சடலங்களில் பெரும்பாலான சடலங்களில் விளையாட்டு மற்றும் விலங்குகளைக் குறிக்கும் டாட்டூஸ் வரையப்பட்டிருந்தது என்கிறது வரலாறு.
வாணிபம், போர், உள்நாட்டுக் கலவரம் ஏதோ ஒரு ரூபத்தில் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இன்று நாம் கொண்டாடும் டாட்டூஸ் வரையும் பழக்கம் பரவியுள்ளது. ஒவ்வொரு ஆராய்ச்சித் தரப்பும் டாட்டூஸிற்கு ஒவ்வொரு காரணங்களை முன்வைத்தாலும், டாட்டூஸ் தோன்றியது எகிப்தில்தான் என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளாமல் இல்லை. அப்படியானால், மனித இனத்தின் நவீன ம், பொழுதுபோக்கு, கலைகள் எல்லாவற்றுக்குமே எகிப்துதான் முன்னோடியா...? ஆராய்ச்சிகள் நீள்கிறது!


Tuesday, 2 August 2011

விசித்திர குள்ள மனிதர்கள்!



விடைதெரியாத விஷயங்கள் இந்த பிரபஞ்சம் முழுவதும் கொட்டிக் கிடக்கிறது. மனிதர்கள் இப்பூமியில் வாழ்ந்ததற்கான அளவுகோலாக ராமர், யேசு, முகமது நபி, புத்தர் காலங்களை வைத்தே கணக்கிட்டு வருகிறோம். அதனால்தானோ என்னவோ, நம் எண்ணங்கள் குறைந்தபட்சம் 2500 லிருந்து 3000 ஆண்டுகளுக்கு மனிதர்கள் வாழ்ந்திருப்பார்களா என்ற உண்மையை நம்ப மறுக்கிறது. அப்படி நம்பினாலும் அதை ஏதோ கட்டுக்கதையாகவோ, ஒரு அமானுஷ்யமாகவோதான் பார்க்கத் தோன்றுகிறது.
பல லட்சம் ஆண்டுகளாக இந்த பூமி சுழன்று கொண்டு இருக்கிறது. இன்று மனிதர்கள் வாழும் அமைப்பாக இருக்கும் நகரங்கள் அனைத்தும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடல் பரப்பாகவும், நதியாகவும் இருந்திருக்கிறது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் பெரிய நகரங்களாக இருந்த பரப்பு இன்று கடல் பரப்பாகவும் மாறி இருக்கிறது. பூமி வரைபடத்தை மாற்றி எழுதும் ஆழிப் பேரலையான சுனாமி பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வந்துகொண்டுதான் இருந்திருக்கிறது. அந்த அலைகள் மூலம் கண்டம் விட்டு கண்டம் கூட மனிதர்கள் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் ஒரு கண்டத்தில் இருக்கும் மனிதர்கள் குட்டையாகவும், மற்றொரு கண்டத்தில் இருக்கும் மனிதர்கள் நெட்டையாகவும் இருக்கிறார்கள் என்று கூட ஆராய்ச்சிகள் கூறுகிறது. விஞ்ஞானம் ஆராய்ச்சிகளை நம்புபவர்கள்தானே நாம். அப்படியென்றால் மேற்சொன்ன விஷயங்களையும் நம்பித்தான் ஆக வேண்டும். இனி சொல்லப்போகும் விஷயங்களையும் நம்பித்தான் ஆக வேண்டும்.
இந்தோனேஷியக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் புளோரஸ் எரிமலைத் தீவில் கூட 35 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 3 அடியில் மனிதர்கள் வாழ்ந்ததர்கான ஆதாரங்களை இப்போது ஆராய்ச்சிகள் கண்டுபிடித்து கூறியிருக்கின்றன.
இந்தோனேஷியா கிழக்குப் பகுதியில் புளோரஸ் என்ற ஒரு தீவு. இந்த தீவு மலைகளும் காடுகளும் எரிமலைகளும் நிறைந்த ஒன்று. இங்குள்ள கிராமத்தில் வயது முதிர்ந்த பெரியவர்தான் நெல்லிஸ் குயா. இவர் தன் சந்ததிகளுக்கு தனது மூதாதையர்கள் கூறியதாய் சொன்ன விசித்திர கதை இதுதான்.
புளோரஸ் மலைகளுக்குப் பின்னால் விசித்திர குள்ளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கண்கள் பெரிதாகவும் உடல் முழுவதும் ரோமம் மூடியும், மற்றவர்கள் புரியாத மொழியும் பேசுவார்கள். இவர்கள் கிராமத்திற்குள் அடிக்கடி புகுந்து, பயிர்கள், உணவுப் பொருள்கள், பழங்களை திருடிக்கொண்டு ஓடிவிடுவார்கள். எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். இந்தக் குள்ளர்களை எபுகோகோ என்று அழைப்பார்கள் என்றும் கதை சொல்வார். இது போன்ற கதை இந்தோனேஷியா கிராமங்களில் ஏராளமாய் உண்டு என்பதால் ஆய்வாளர்கள் இக்கதைகளை கற்பனை என ஒதுக்கித் தள்ளினர். ஆனால் 2003ம் ஆண்டு புளோரஸ் தீவில் நெல்லிஸ் குயா வாழ்ந்த கிராமத்திலிருந்து 75 மைல் தொலைவில் ஒரு குகையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு எலும்புக்கூடு, மேற்கண்ட கதைகள் கற்பனையல்ல உண்மைதான் என அறிவித்து உலகத்தை வியக்க வைத்தது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா தொல் பொருள் ஆய்வுக் குழுவினர் டாக்டர் ரிச்சர்ட் ராபர்ட் தலைமையில் இவ் எலும்புக் கூட்டுடன் பல மிருகங்களின் எலும்புகளையும் 19 அடி ஆழத்தில் கண்டு பிடித்தனர். முதலில் இந்த எலும்புக் கூடு ஒரு சிறிய குழந்தையின் எலும்பாக இருக்கும் என்று நம்பினர். ஏனெனில் மொத்த உயரமே மூன்று அடிதான். இறுதியில் விரிவாக ஆராய்ந்த பொழுது, இது வரை யாரும் அறியாத புதிய மானிட இனம் என்பதை அறிந்தனர். கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு சுமார் 30 வயதுடைய பெண்ணின் எலும்பு.
இவர்களின் மொத்த உயரமே சராசரி 3 அடிதான். அதாவது 3 வயது குழந்தையின் உயரம்தான். இவர்களின் மொத்த உடல் எடை 25 கிலோதான். மூளை அமைப்பு மிகச்சிறியதாகவும் சிக்கல் நிரம்பியதாகவும் இருந்திருக்கிறது. இக்கண்டு பிடிப்பின் மூலம் மனித பரிணாம வளர்ச்சி கொள்கை தலைகீழாக புரண்டு விட்டது. பெரிய மூளையுடைய மனிதர்கள் மட்டுமே நுட்பமான அறிவு நிறம்பியவர்கள் என்ற கருத்துக்கு மாறாக சிறிய அளவுள்ள மூளையை உடைய இந்த சித்திரக்குள்ளர்கள் வேட்டையாடுதல் வேட்டை கருவிகளை கூர்மையாக உருவாக்கும் நுட்பம் அறிந்தவர்கள் என்று ஆய்வு கூறுகிறது. இந்த 3 அடி பெண் எலும்புக்கூடு சுமார் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இது பற்றி டாக்டர் ரிச்சட் ராபர்ட் கூறும் பொழுது மானிட வரலாற்றில் 18 ஆயிரம் என்பது சமீபமாக ஒன்று. இந்த புதிய இன குள்ள மனிதர்கள் இன்றும் கூட அடர்த்தியான காடுகளில் வாழ்ந்து வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் விரிவாக ஆய்வு நடத்தினால் இப்புதிய இனத்தைப் பற்றி மேலும் அறியலாம் என்று கூறும் அதே சமயத்தில், புளோரஸ் தீவு நாலாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியில் அமைந்திருக்கின்றன. முக்கியமாக பாலி தீவில் இருந்து லம்போக் தீவு, முப்பது கீலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. மேலும் இந்த இரண்டு தீவுகளுக்கும் இடையே “சேப்” என்று அழைக்கப்படும் ஆபத்தான கடல் நீரோட்டமும் ஓடுகிறது. எனவே பாய்மரக் கப்பல் அல்லது இயந்திரப் படகு மூலமாகவே இக்கடல் பகுதியைக் கடக்க முடியும். எனவே கற்கால மனிதர்கள் எப்படி இந்த ஆபத்தான கடல் பகுதியைக் கடந்து புளோரஸ், திமோர் ஆகிய தீவுகளுக்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் சென்றார்கள் என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு இடையே குழப்பம் நீடிக்கிறது.
ஆனால், அறுநூறு அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப்பட்டிருக்கும் இந்தியாவிலும் இலங்கையிலும் கூட கற்கால மனிதர்களின் எலும்புகளும், கற்கருவிகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் அறுநூறு அடி வரை தாழ்வாக இருந்த பொழுது கற்கால மனிதர்கள், இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்றிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதன் பிறகு கடல் மட்டம் அறுநூறு அடி உயர்ந்ததற்கு நிலத்தின் மேல் இருந்த பனி உருகிக் கடலில் கலந்ததே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆனால் நாலாயிரம் அடி வரை ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப்பட்டிருக்கும் புளோரஸ் திமோர் ஆகிய தீவுகளுக்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் கற்கால மனிதர்கள் எப்படி சென்றார்கள் என்ற கேள்விக்கு புளோரஸ் தீவிற்கு கற்காலக் குள்ள மனிதர்கள் பாலி தீவில் இருந்து சுனாமி அலைகளால் அடித்துக் கொண்டு வரப்பட்ட மரக் கிளைகள் மூலம் வந்திருக்கலாம் என்கிறார் டிம்வைட் என்ற ஆராய்ச்சியாளர்.
ஆனால், ஆசியக் கண்டத்திலிருந்து நாலாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலியக் கண்டத்தில், இருக்கும் புளோரஸ் தீவிற்கு குள்ள மனிதர்கள் எப்படி சென்றிருப்பார்கள் என்ற கேள்விக்கு, நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியப் பகுதியில் கடல்மட்டம் நாலாயிரம் அடி வரை தாழ்வாக இருந்திருக்கும். ஆசியக் கண்டத்திற்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்திருக்கும்.அதன் வழியாகவே கற்கால மனிதர்கள் ஆசியக் கண்டத்திலிருந்து ஆஸ்திரேலியக் கண்டத்திற்கு நடந்தே தான் சென்றிருப்பார்கள். அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்திருக்கும்.அதே நேரத்தில் நிலப் பகுதியும் ஆங்காங்கே உயர்ந்ததால், தொடர்ச்சியாக இருந்த நிலப் பகுதி பல துண்டுகளாக உடைந்ததுடன், கடல் மட்டமும் உயர்ந்ததால் பல தீவுகளாக உருவானது. அதனால் கற்கால மனிதர்களால் தீவை விட்டு வெளியேற இயலாமல் தீவுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இறந்துபோயிருப்பார்கள். என்று குள்ள மனிதர்கள் குறித்து யூகமாக ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார்கள், ளிவில்லாத ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தக் கதைக்கான முழுவடிவம் இன்னும் ஆராய்ச்சிக்குள்தான் இருக்கிறது. விடை கிடைக்குமா?

Friday, 8 July 2011

கிசா பிரமிடு - மறைந்து கிடக்கும் வரலாறு!





புராதனச் சின்னங்களும், அதில் மறைந்து கிடக்கும் வரலாறும் எப்போதும் திகைப்போடு கலந்த ஓர் அமானுஷ்யம்தான். அப்படி ஓர் அமானுஷ்ய வரலாறு புதைந்துகிடக்கும் இடம்தான் எகிப்து.
எகிப்து... இந்தப் பெயரைக் கேட்டவுடனேயே குழந்தைகள் வரை உதட்டில் முனுமுனுக்கும் வார்த்தை மம்மிக்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட மனித உடல் இன்று வரைக்கும் அழுகாமல் அப்படியே இருப்பதன் தொழில்நுட்பம் இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிர்தான். இந்தப் புரியாதப் புதிர் சினிமாக்காரர்களையும் விட்டுவைக்கவில்லை. மம்மி, அதைத் தொடர்ந்து மம்மி ரிட்டர்ன்ஸ் பார்ட் ஒன், டூ என்று பாகம் வாரியாக வசூலில் உலகம் முழுவதும் சாதனைப் படைக்க வைத்த இந்த பிரமிடுகளின் வரலாறு இன்றுவரை புதைப் பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு விளங்காத சிம்ம சொப்பணம்தான் என்று சொன்னால் மிகையாகாது.
எகிப்து நகரத்தின் மேற்கு நைல் நதிக் கரையோரம் அமைந்திருக்கும் மயான அமைதியுடன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தொலைத்த வரலாற்றுச் சுவட்டை தன் மடியில் பிரமிடு வடிவில் தாங்கி நிற்கும் அந்த நகரம்தான் கிசா. இங்குதான் ஏழு உலக அதிசயங்களின் ஒன்றாகக் கருதப்படும் பிரமிடுக்கள் சிறிதாகவும் பெரிதாகவும், மனித உருவிலும் வரலாற்றைத் தாங்கி நிற்கிறது.
எகிப்தை ஆண்ட அரச குடும்பத்தினர் இங்குதான் புதைக்கப்பட்டிருக்கிறான். அவர்கள் மீண்டும் உயிர் பெற்று வருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களுக்கு தேவையான பொருட்களுடன் இந்தப் பிரமிட்டில் இறந்தவர்கள் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்று எகிப்து பிரமிடு குறித்த கதைகளின் பட்டியல் நீள்கிறது. இந்தக் கதைகளில் பல விஷயங்கள் உண்மைதானா? என்று கேட்கும் அதே நேரத்தில் பிரமிட்டை உடைத்துப் பார்த்தால், நாட்டுக்கு நல்லதல்ல என்ற மூட நம்பிக்கை கதைகளும் உலவத்தான் செய்கிறது. கட்டுக்கதைகள், கற்பனைகள் இவற்றிற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கி.மு. 2566ஆம் ஆண்டில் எகிப்திய வம்சத்தின் நான்காவது அரசரான பாரோ குஃபூ, ஜிசாவில் அமைத்த மிகப்பிரம்மாண்டமான பிரமீட்டில்தான் 4500 ஆண்டுகள் கழித்து, பிரமிட்டின் மறைந்துகிடக்கும் ரகசியத்தை முழுமையாக அறிவதற்காக லண்டன் ஆராய்ச்சியாளர் வடிவமைத்த மைக்ரோ ஸ்நேக் என்ற அதிநுட்ப காமிராவுடன் மிகச்சிறிய ரோபோட் ஒன்று பிரமிட்டில் ஒரு சிறுதுளையிட்டு உள்ளே விடப்பட்டிருக்கிறது.
ரோபோவை அனுப்பி பிரமீட்டை ஆய்வு செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன் ஆய்வு செய்தது 1993ஆம் ஆண்டு. அப்போது உள்ளே சென்ற ரோபோ பிரமிட்டில் ஒரு கதவு இருப்பதை கண்டுபிடித்தது. அந்தக் கதவு உலோகங்களான ஒரு ஊக்கு மூலம் மாட்டப்பட்டதை கண்டுபிடித்தது. அந்த உலோகம் கதவை திறப்பதற்கு அல்லது மூடுவதற்கு சாவியாக இருக்கலாம் என்பதை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள். இதன்மூலம் 2500 ஆண்டுகளுக்கு முன் எகிப்திய மக்கள் உலோகங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தார்கள்.
அதற்குப் பிறகு 2002ஆம் ஆண்டு, மற்றுமொரு ரோபோட் பிரமிட்டை படம் எடுத்து அனுப்பியது. அந்தப் படத்தில் பிரமிட்டின் உள்ளே ஒரு அறை இருப்பது போலவும், அந்த அறை ஒரு கல்லினால் அடைத்திருப்பதை உறுதி செய்தது. ஆனால், இந்த இரண்டு ரோபோக்களாலும், உறுதியாக உள்ளே இருப்பன பற்றி தெளிவாக படம் பிடிக்க முடியவில்லை.
ஆனால், கடந்த மாதம் பிரமிட்டின் உள்ளே அனுப்பப்பட்ட இந்த மைக்ரோ ரோபோ முதலில் அளித்த புகைப்படம் தொல்பொருள் ஆய்வாளர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. சிவப்பு நிறத்தில் எகிப்திய எழுத்துக்கள் பிரமிட்டின் சுவற்றில் எழுதப்பட்டிருந்தன. அந்த எழுத்துக்கள் மூலம் பிரமிட்டில் மறைந்துகிடக்கும் ரகசிய முடிச்சுகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கொண்டிருக்க, மிகச் சிறிய அளவில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களில் என்ன விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை சரியாக கணிக்க முடியவில்லை. அந்த எழுத்துக்கள் மட்டும் புரிந்திருந்தால், பிரமிட்டின் முழு ரகசியமும் உலககுக்கு தெரிந்திருக்கும் என்கிறார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள். எப்படியிருந்தபோதிலும் அந்த மைக்ரோ ரோபோ அனுப்பிய புகைப்படங்களால், பிரமிட்டின் வடிவத்தை ஓரளவிற்கு கணிக்க முடிந்திருக்கிறது.


பிரமிட்டில் ராஜாவுக்கு தனி அடுக்கு காணப்படுகிறது இதில் இருந்து வெளிவரும் இரண்டு இணைப்பு பிரமிட்டின் வெளி வரை நீட்டிக்கொண்டிருக்கிறது. ஒருவேளை காற்று செல்வதற்கான வழியாக இது இருந்திருக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ராணிக்கு என்று தனியாக ஒரு அடுக்கும் இந்த பிரமிட்டுக்குள் அமைந்துள்ளது. இந்த அடுக்கில் இரண்டு சுரங்கப்பாதைகள் இணைக்கப்பட்டு, அதை இரண்டு கல் கதவுகளால் மூடப்பட்டுள்ளது. ஆய்வுகள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆய்வு சரியான கோணத்திலும், ரோபோ பழுதாகாத பட்சத்தில் கண்டிப்பாக பிரமிடு எந்த ஆண்டு கட்டப்பட்டது, கற்களின் தன்மை, எவ்வளவு நாட்களில் இந்த பிரமிடு கட்டப்பட்டிருக்கலாம் போன்ற உறுதியான தகவல்கள் கிடைக்கும். தற்போது, பிரமிட்டின் அமைப்பு ஓரளவிற்கு ரோபோவின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல புதிர்கள் நிறைந்திருக்கும் இந்த பிரமிட்டின் வரலாற்றுக் கதவை திறப்பதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள்.
எகிப்தின் பண்டைய பொருட்கள் விவகாரத் துறை அமைச்சர் சாகி ஹவாஸ் புகைப்படங்களை பார்த்தபோது, ராணியின் அறைக்குச் செல்லும் சுரங்கங்களின் அமைப்பை பார்க்கும்போது, இந்தச் சுரங்கம் வேறொரு வெளி உலகிற்குத் தெரியாத, மற்றுமொரு பிரமீட்டிற்கு இட்டுச் செல்லுமோ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். ஆனால், அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எகிப்திய ஆராய்ச்சியாளர், கேட் ஸ்பென்ஸ் பிரமிட்டில் உள்ள சுரங்கங்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவை என்றிருக்கிறார்.
பிரமிடு குறித்து ஆராய்ச்சியாளர்களிலிருந்து ஆள்பவர்கள் வரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை. உண்மையில் பிரமிட்டில் மறைந்து கிடக்கும் உண்மை என்ன?... ஒருவேளை அந்தக் கேள்விக்கான விடை இன்னும் ஒருசில வாரங்களிலோ, அல்லது ஒரு சில மாதங்களிலோ கிடைக்கும்போது, அந்த உண்மை ஆதிமக்களின் கலாசாரத்தை பறைசாற்றுமா? அல்லது ஒரு இனமே கூண்டோடு அழிந்துபோன வரலாற்றை வெளிக்கொணருமா.. அல்லது கோடி கோடிக்கணக்கான தங்கப் புதையலை வெளிக்கொணருமா? இந்த எல்லாக் கேள்விகளுக்கும், விடை பிரமிட்டின் அந்த மர்மக் கதவுக்குப் பின்னால்தான் மறைந்துகிடக்கிறது. எப்போது திறக்கும் கதவு?

Friday, 17 June 2011

அய்யாசாமி ரிட்டர்ன்!

“ தம்பியோவ்.. சைக்காலஜில்லாம் படிச்சிருக்கீரு, உங்க சைக்காலஜிய வச்சிக்கிட்டு என்னுடைய ஞாபக மறதிக்கு ஏதாவது தீர்வு சொல்ல முடியுமாவோய்...” என்று அய்யாசாமி என்னிடம் கேட்டதும், “என்ன அண்ணாச்சி இப்புடி கேட்டுப்புட்டியே... கண்டிப்பா சொல்றேன். ஆனா, எனக்கு ஒரு வாரம் டைம் வேணும்”னு சொன்னேன். ஒரு வார்த்தை ஏன் எதுக்குன்னு கேட்கல அய்யாசாமி. ஒருவேளை கேட்கறதுக்கு மறந்துபோயிருப்பாறோன்னு நினைச்சிக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.
சின்சியர் சிகாமணியாய் காலையில 3 மணிக்கெல்லாம் தூங்கி முழுச்சி, என்னுடைய பழைய புக்கையெல்லாம் புரட்டி புரட்டி படிச்சதுல அய்யாசாமி கண்ணுமாதிரி, எனக்கும் கண்ணு ரெண்டும் வீங்கிப்போச்சு. காலையில அம்மா என் கண்ணை பாத்துட்டு, “ஏல.. கிறுக்குப்பயல அதான் படிப்பு முடிஞ்சு போச்சே.. இன்னும் அதை வச்சி என்ன பண்ணிக்கிட்டு கிடக்க” என்று அம்மா கேட்டதும் அவமானமா போச்சு. இருந்தாலும் அய்யாசாமியின் ஞாபகமறதிய மனசுல வச்சிக்கிட்டு, வழக்கமா எதிர்த்துப் பேசற அம்மாகிட்ட ஒரு வார்த்தை பேசாம விருட்டுன்னு அய்யாசாமி வீட்டுக்கு போயிட்டேன்.
“அண்ணே.. அண்ணே.. ” என்று வீட்டு வாசலில் நின்னுக்கிட்டு கூவினேன். “தம்பி வாடே.. என்ன வெளிய நின்னுக்கிட்டு கத்திக்கிட்டு கிடக்க...” என்று குரலை மட்டும் வெளியில் அனுப்பி வைத்தார் அய்யாசாமி. “அண்ணே நீங்களே கூப்பிடுவியன்னு எதிர்பார்த்தேன். ரெண்டு நாள் ரோட்டுல எதிர்த்தால பார்த்தும் ஒரு வார்த்தை பேசலையே...!.”
“என்னடே சொல்ற.. என்ன கேட்கணும்னு எதிர்பார்த்த என்று அய்யாசாமி கேட்டதும், என்னண்ணே மறந்துபோச்சா.. ஞாபக சக்தி சம்பந்தமா என்கிட்டக்கூட கேட்டுருந்தீங்களே.. ”
“ஏ..ஏ.. ஆ..ஆமா.. சுத்தமா மறந்தே போயிட்டேண்டே” என்று அய்யாசாமி சொன்னதும்தான் அவரின் ஞாபகமறதியின் அளவீட்டை புரிந்துகொண்டேன். “அண்ணே ரொம்ப சின்ன விஷயம்.. நான் சொல்றதை குறிச்சு வச்சிக்கிட்டு அதுபடியே நடந்தீங்கண்ணா கண்டிப்பா ஞாபக சக்தி வளர்ந்திடும்” என்று சொல்ல ஆரம்பிக்கும் நேரத்தில் இடையூராக.. “சின்ராசு கொஞ்சம் நில்லுடே, நான் ஒண்ணும் அவ்வளவு ஸ்பீடா எழுதிக்கிட மாட்டேன். அதனால செல்போன்ல ரெக்கார்ட் பண்ணிக்கிடறேன்” என்று அய்யாசாமி சொன்னதும் கம்பீரமா காலரை தூக்கிவிட்டுக்கிட்டு, சேர்ல நிமிர்ந்து உட்கார்ந்தேன். “அண்ணே காலையில செய்யற விஷயம் என்னான்னு மதியம் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.. மதியம் நடக்கறத சாயங்காலம் யோசிச்சுப் பாருங்க.. இதை இப்படியே பத்து நாளைக்கு செஞ்சிக்கிட்டு வந்தீங்கன்னா உங்களுக்கு ஞாபக சக்தி இம்ப்ரூவ் ஆயிடும்”னு நான் சொன்ன ஒவ்வொரு விளக்கத்தையும் அப்படியே செல்போன்ல ரெக்கார்ட் பண்ணிக்கிட்டாரு அய்யாசாமி. எனக்கோ பயங்கர சந்தோஷம்.. மேல் எல்லாம் புல் அறித்தவாறே வீட்டுக்கு நடந்து சென்றேன், நான் கொண்டு வந்த சைக்கிளை மறந்துவிட்டு.
பத்து நாள் கடந்திருக்கும். பஜாருக்கு நடந்து போய்கிட்டு இருந்தேன். எதிர்த்தமாதிரி அய்யாசாமி நடந்து வந்துக்கிட்டு இருந்தாரு. நம்ம ட்ரீட்மெண்டு எப்படி இருக்குன்னு அய்யாசாமிக்கிட்ட கேட்டு தெரிஞ்சிப்போம்னு ஒரு ஆர்வத்துல.. என்னுடைய நடையை குறைத்துக்கொண்டு அய்யாசாமிக்காக நின்றுகொண்டிருக்க, மனுஷன் கண்டுக்காம என்னை கடந்து நடந்து போய்கிட்டு இருந்தாரு. எனக்கு லேசாக அதிர்ச்சி.. “யோவ் அண்ணாச்சி.. ” என்று கூப்பிட்டதும்தான் சத்தம் வந்த திசையில் திரும்பி பார்த்தார். “என்னடே சின்ராசு.. நடுரோட்ல டிராபிக் கான்ஸ்டபிள் மாதிரி நின்னுக்கிட்டு இருக்கிறே என்ன விஷயம்..?”
“இந்த நக்கலுக்கு மட்டும் குறைச்சல் இல்ல..” எரிச்சல் தொற்றிக்கொண்டது எனக்கு. “அண்ணே ஞாபக மறதிக்காக ட்ரீட்மெண்ட் குடுத்தேனே இப்போ எப்படி இருக்கு..? ”
“ஏ.. ஆமாடே பாத்தியா சுத்தமா மறந்தே போயிட்டேன். ஆமா நீ சொன்னதைக் கூட என் பொண்டாட்டி, கமலம் கூட டைரியில எழுதி வெச்சாளே.. சரிதானடே நான் சொல்றது” என்று கேட்ட அய்யாசாமியை, உன் ஞாபக சக்தியில் இடி விழ என்று மனதில் திட்டிக்கொண்டு, அவர் கூப்பிட்டது கூட காதில் வாங்காமல் கோபமாய் நடையைக் கட்டிக்கொண்டிருந்தேன்.

Tuesday, 14 June 2011

வருகிறார்கள் வேற்றுக்ககிரக வாசிகள்





மனிதர்களை விஞ்சிய சக்திகள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறதா என்ற ஆய்வுப் பணிகள், தொடர்ந்து உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த ஆய்வுக்கு எப்போதுமே ஒரு முடிவு கிடையாது. நாடுகளும் கண்டங்களும்தான் மாறுபடுமே தவிர தேடுதல்களும், ஆய்வுகளும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

1938ஆம் ஆண்டு. சீனாவையும் திபெத்தையும் பிரிக்கும் எல்லைப் பகுதி அது. இமயமலையில் ஒரு சிறிய பகுதியான பேயான் காரா உலா என்ற மலைச் சிகரம். சீ பு டீ என்ற சீன புதைபொருள் ஆராய்ச்சியாளர் தங்கள் குழுவினருடன் அந்த மலைப்பகுதியில் ஒரு மாத காலமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவரின் ஆராய்ச்சிக்கான நோக்கம், மனிதர்களின் கலாசார முறைகளை தெரிந்துகொள்வது என்பது மட்டும்தான். ஆனால், அவரின் நோக்கத்திற்கான விடைகள் அந்த மலையில் கிடைத்தபாடில்லை. தேடுகிறார் தேடுகிறார் தேடிக்கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் போதும் என்று சலிப்புத் தட்டி ஊருக்கு திரும்பிவிடலாம் என்று நினைக்கும் தருவாயில், அந்த மலைச் சிகரத்தில் ஒரு பகுதியில் குகை போன்ற ஒரு அமைப்பு கண்ணுக்கு தென்பட்டது. பார்ப்பதற்கு விசித்திரமான அந்த குகையைப் பார்த்ததும், சீ பு டீக்கு அந்த குகையைச் சென்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை தொற்றிக்கொள்ள, தங்கள் குழுவினருடன் அங்கு சென்றார்.

அந்த குகை இயற்கையாக தோன்றியது அல்ல. சில நூற்றாண்டுகளுக்கு முற்பகுதியில் மனிதர்களால் அமைக்கப்பட்ட ஒரு குகையாகவே அது தோன்றியது. குகைக்குள் சென்றது, சீ பு டீயின் குழு. அந்த குகை ஒரு சிக்கலான ஒரு அமைப்பாகவே இருந்தது. சிறிய அளவிலான நீர் ஊற்று, பொருட்களை பாதுகாக்கும் அறைகள், சுவர்கள் முழுவதும் சதுரம் சதுரமாக அமைப்பில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அறை முழுவதும் உச்சக்கட்ட வெப்பம் சூழ்ந்திருந்தது.

குழுவினர் தங்கள் பணிகளை தொடங்கினார்கள். அந்த குகைப்பகுதியை சிறிய பள்ளமாக தோண்டியவுடன் குழுவினர் முகத்தில் பயங்கர அதிர்ச்சி. ஏனெனில் அவர்களின் கையில் சிக்கியது மனித எலும்புக்கூடு. ஒன்றல்ல இரண்டல்ல. கிட்டத்தட்ட நாற்பது எலும்புக்கூடுகள். அந்த எலும்புக்கூடுகள் சொல்லி வைத்தார்போல் 4 அடிக்கும் குறைவாக இருந்தது. அவற்றை தொடர்ந்து ஆய்வு ஆய்வு செய்தபோது, அந்த எலும்புக்கூடு மனிதர்கள் உடல் மிகவும் மெலிதானதாக, பலவீனமானதாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால், அவர்களின் தலைப் பகுதி மட்டும் உடல் பகுதியைவிட பெரிதாகவே இருந்திருக்கிறது என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆராய்ச்சிக் குழுவினர், எலும்புக்கூடுகளுடன் கல்லினால் செதுக்கப்பட்ட வட்ட வடிவிலான 716 தட்டு போன்ற அமைப்பையும் கைப்பற்றியிருந்தார்கள். அதில் என்ன ஆச்சர்யம் என்றால், அந்த தட்டுக்கள் அனைத்தும், அளவீட்டில் ஒரு சின்ன மாறுதல் கூட இல்லாமல் எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தன. தட்டின் மையப்பகுதியில் அளவெடுத்து அமைக்கப்பட்டிருந்ததுபோல் ஒரு சிறிய அளவிலான ஓட்டை ஒன்று இருந்தது. இந்தத் தட்டை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியபோது, அது கிட்டத்தட்ட 10 ஆயிரம் அல்லது 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள். அந்தத் தட்டில் எகிப்து பிரமீட்டில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களின் சாயலில் ஏதோ ஒரு விசித்திரமான எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தது. ஆனால், அந்த எழுத்துக்கள் என்னவென்று அவர்களால் சரியாக படிக்க முடியவில்லை.

இந்த நிலையில் 1962 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் டாக்டர். சுவாம் உம் நூயி என்ற சீன ஆராய்ச்சியாளர், தட்டில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களை படித்துவிட்டு அதுகுறித்த ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். அந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் எழுதியிருந்த விஷயம் எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்தியது என்றே கூறலாம். 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பகுதியில் வேற்றுக்கிரக வாசிகளின் விண்வெளி ஓடம் ஏதேனும் கோளாறினால், இந்த மலைச் சிகரத்தில் அவர்கள் தரை இறக்கியிருக்கலாம். தொடர்ந்து அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு அதில் தோற்றுப்போய் இருக்கலாம். திரும்பிச் செல்ல வழியில்லாததால் அவர்கள் இந்தக் குகையில் இருந்து, காலப்போக்கில் இறந்திருக்கலாம். அல்லது, பார்ப்பதற்கும் தோற்றத்திலும் மனித உருவத்திலிருந்து வித்தியாசமான அந்த தோற்றத்தைப் பார்த்ததும், சிகரத்தில் இருந்த பழங்குடியின மக்கள் தங்களை பாதுகாக்கும் நோக்கில் அவர்களை கொன்று இந்த மலைச் சிகரத்தில் புதைத்திருக்கலாம் என்று அனுமானமாக அந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததோடு, வேற்றுக்கிரக வாசிகள்தான் அந்த மனிதர்கள் என்று ஆணித்தரமாக குறிப்பிட்டிருந்தார் நூயி.

இந்த ஆராய்ச்சியில் முக்கியத் திருப்பமாக 1968ஆம் ஆண்டு, செயிட்சூ என்ற ரஷிய ஆராய்ச்சியாளர் அங்கு கண்டெடுக்கப்பட்ட தட்டுக்களில் ஒன்றை தங்கள் ஆராய்ச்சிக் கூடத்தில் பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டார். அந்த ஆராய்ச்சியில் நம்ப முடியாத ஆச்சர்யத்தை அந்த தட்டு செயிட்சூக்கு ஏற்படுத்தியது. ஏனெனில் அந்த தட்டு முற்றிலும் கிரானைட் கற்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில் அதிக சக்தி வாய்ந்த கோபால்ட் மற்றும் சில வேதிப்பொருட்கள் அதில் கலக்கப்பட்டிருந்தன. மொத்தத்தில் இந்தத் தட்டை அவர்கள் ஒரு சக்தியை புதுப்பித்துக்கொள்ளும் பேட்டரியாக அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம். கண்டிப்பாக இது 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதுதான். இத்தகைய அறிய மின் சீராக்கிச் சாதனம் இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பூலோக வாசிகள் பயன்படுத்தியதாக எந்த வரலாறும் குறிப்பிடவில்லை. அப்படியானால் இந்தத் தட்டை மனிதர்களை விஞ்சிய ஒரு சக்திதான் உபயோகப்படுத்தியிருக்கும் என்று செயிட்சூவும் தன்னுடைய ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அதோடு, நூயி சொன்னதுபோல் இது வேற்றுக்கிரக வாசிகளாகவும் இருக்கலாம் என்றும் தன்னுடைய ஆராய்ச்சியில் குறிப்பிட்டிருந்தார்.

மொத்தத்தில் இந்த அகழ்வாராய்ச்சியும், அதைத் தொடர்ந்து வெளிவந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளும் ஏதோ ஒரு வகையில் மனிதனை விஞ்சிய சக்தி ஒன்ற இருப்பதை திட்டவட்டமாக ஊர்ஜிதம் செய்திருக்கிறது. ஆனால், அந்த சக்தி வேற்றுக்கிரக வாசிகள்தானா என்று நிரூபணம் செய்யவில்லை. அனுமானங்களையும், சந்தேகங்களையும் ஏற்படுத்திய இந்த ஆச்சர்யங்களுக்கு சொந்தக்காரர்கள் வேற்றுக்கிரக வாசிகக்ஷிதானா?

இந்த கேள்விக்கான விடைதேடும் ஆராய்ச்சிகள் உலகத்தின் ஏதோ ஓர் பகுதியில் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. யார்கண்டது? இந்தக் கட்டுரை வெளிவருவதற்கு முன்பாகக்கூட இதற்கான விடையை வெளிவந்திருக்கக் கூடும். ஏனெனில் மாற்றம் என்ற ஒன்று மட்டும்தானே பிரபஞ்சத்தில் நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருக்கிறது.

2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்!


முக மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை என்று இன்று மருத்துவம் எட்டாத சிகரத்தை எட்டிவிட்டது என்பது நாம் எல்லாம் அறிந்த ஒன்றுதான். ஆனால், இந்த மருத்துவம் சில நூறு ஆண்டுகளுக்கு முன், எப்படி இருந்திருக்கும். இவ்வளவு நவீன வசதிகள் இல்லாத காலத்தில் முறையான மருத்துவக் கல்வியை பெற்றிறாத மக்கள் என்ன செய்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.
பாவம்.. அறுவை சிகிச்சை வசதியில்லாத அந்தக் காலத்தில் நோயாளிகள் இறந்துதான் போயிருப்பார்கள் என்பதுதான் நம்மில் பலரின் நினைப்பாக இருக்கும். ஆனால், அதில் சற்றும் உண்மை இல்லை. கி.மு. 715 ஆம் ஆண்டு. ரோமப் பேரரசின் முக்கியமான நாள் அது. அந்நாட்டு இளவரசி பிரசவ வேதனையால் துடித்தாள். வழக்கமாய் குழந்தை பிறப்பதை விட இளவரசிக்கு விளங்காத ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதாகவே அரண்மனை வைத்தியர் உணர்ந்தார். என்ன செய்வதென்று புரியவில்லை அவருக்கு. மன்னரின் அதிகாரம் ஒரு பக்கம். வயிற்றைக் கிழித்துத்தான் குழந்தையை எடுக்க வேண்டுமோ என்ற தடுமாற்றம் வைத்தியருக்கு. இளவரசிக்கு இதில் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் ஒருபுறம். வேறு வழியின்றி வயிற்றைக் கிழித்துத்தான் குழந்தை எடுக்கப்பட்டது. அந்த குழந்தைதான் ஜூலியஸ் சீசர். இந்தத் தகவல்கள் எல்லாம் அரண்மனையின் அறிக்கை ஏட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு விஷயம் தெரியுமா? நாம் பயன்படுத்தும் சிசரியன் என்ற வார்த்தை கூட சீசர் பிறந்த பிறகுதான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாம்.
கி.மு.320ஆம் ஆண்டு இந்தியாவில் மௌரியப் பேரரசு ஆண்டு வந்த காலம். சந்திரகுப்த மௌரியரின் மனைவிக்கு பிரசவ வலியால் துடித்தபோது, இயற்கையாக குழந்தை பிறக்கவில்லை. அறுவை சிகிச்சை மூலமே குழந்தை பிறந்தது. அந்த குழந்தைதான் மௌரியப் பேரரசின் மிக முக்கிய அரசரான பிந்துசாரர். ஆனால், எதிர்பாராத விதமாக இந்த சிகிச்சையில் அவரது தாயார் இறந்துபோனார்.
அதேபோல இருபதாம் ஆண்டு தொடக்கத்தில் கூட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் சிசரியன் மூலமே குழந்தை பெற்றுள்ளார்கள். அந்த பிரசவத்தின் போது எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் மருத்துவ அறிக்கை கூறுகிறது.
அதேபோல 1998 ஆம் ஆண்டு திபெத் நாட்டின் கிங்காய் பகுதி அது. அகழ்வாராய்ச்சி ஆராய்ச்சியாளர்கள், அக்காலத்து மனித நாகரிகத்தை தெரிந்துகொள்வதற்கான தேடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஆராய்ச்சியாளர்கள் ஒரு பகுதியை தோண்டும்போது நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகள். ஆராய்ச்சியாளர்களின் முகத்தில் ஏக மகிழ்ச்சி. ஏனெனில் அந்த மண்டை ஓடுகளின் வயதை கணக்கிடும்போது, அந்த மண்டை ஓடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருந்தது. மனித நாகரிகத்தின் அரிச்சுவடியை நாம் இனி எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு சொல்ல முடியாத உற்சாகம். ஆனால், கிடைத்த மண்டை ஓடுகளில் சில மற்றும் மற்ற மண்டை ஓடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. மண்டை ஓடு விரிந்து பிளக்கப்பட்டு இருந்தது. ஒரு வேளை யாராவது இவர்களை படுகொலை செய்திருக்கலாமோ? என்று ஆராய்ச்சியாளர்களுக்கு குழப்பம். சோதனைக் கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன மண்டை ஓடுகள். சோதனையின் முடிவில் ஆராய்ச்சியாளர்களுக்கு பெருத்த ஆச்சர்யம். ஏனெனில் தலையில் அறுவை சிகிச்சை நடந்ததற்கான தடயங்கள் கிடைத்தது. மற்றொருவரின் மூளையை இன்னொருவருக்கு பயன்படுத்தியிருந்ததும், தலையில் ஏற்படும் ஏதோ சில பிரச்சினைகளுக்க அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தார்கள்.
திபெத்தில் சொகைல் என்ற இந்தியர் திபெத்தில் வசித்து வந்தார். இவர் ஒரு மருத்துவர். இவருடைய திபெத்திய நண்பர் ஒருவருக்கு தீராத தலைவலி. என்னென்னமோ சிகிச்சைப் பெற்றிருக்கிறார். ஆனால், எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை தலைவலி. சொகைல் தனது நண்பரிடம் தலையில் சிறிய அறுவை சிகிச்சை செய்தால் சரியாய்ப்போகும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், நண்பருக்கோ பயம். என்ன செய்வதென்று புரியவில்லை. ஆனால், அறுவை சிகிச்சை செய்யும்போது உயிருக்கு ஏதும் ஆபத்தும் நேரிடக்கூடும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். ஒருபுறம் சொகைல் மீதுள்ள நம்பிக்கை. மற்றொருபுறம் உயிர்மீதுள்ள பயம். அறுவை சிகிச்சை செய்யலாமா? வேண்டாமா? என்று பெரும் மனப் போராட்டத்திற்கு இடையில் தலைவலி இன்னும் அதிகரிக்கவே, உயிரைப் பற்றி கவலைப்படாது, அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார் திபெத் நண்பர். சொகைல், திபெத் மருத்துவ நண்பர்களின் உதவியுடன் மூளை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார். அதற்குப் பிறகு அந்த நண்பருக்கு தலைவலி ஏதும் வரவில்லை. இந்த மாபெரும் அறுவை சிகிச்சை நடந்தது எப்போது தெரியுமா? கிட்டத்தட்ட 2900 ஆண்டுகளுக்கு முன்.
அதுமட்டுமல்லாமல், இந்த அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட கத்தி போன்ற ஆயுதங்கள் அனைத்தையும், சொகைல் ஸ்டெர்லைஸ் செய்துதான் பயன்படுத்தியிருக்கிறார். ஏனெனில் அவருடைய மருத்துவக் குறிப்பு ஒன்றில் மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு ஸ்டெர்லைஸ் செய்வதன் முக்கியத்துவம் குறித்து மிக விரிவாக கூறியிருக்கிறார். அத்துடன் அதன் அவசியம் மிக முக்கியமானது என்றும் விளக்கியிருக்கிறார்.
திபெத் பல்கலைக்கழகத்தின் மொழி மற்றும் இலக்கிய ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் கர்மா த்ரிமோலி. இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில்தான் இத்தகைய அபூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் திபெத்தியர்களின் அறுவை சிகிச்சை மிகவும் விசித்திரமானதும் நுட்பமானதும் ஆகும் என்று தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் அறுவை சிகிச்சை நுணுக்கங்கள் அனைத்தும் மிகப் பழமையான திரிபித்தகா என்ற தகவல் களஞ்சியத்தில் (என்சைக்ளோபீடியாவில்) விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் கர்மா த்ரிமோலி குறிப்பிட்டுள்ளார்.
பண்டைய கால மனிதர்கள் நாகரிகம் அறியாதவர்கள், விஞ்ஞானம் கற்றறியாதவர்கள் என்ற ஆராய்ச்சியாளர்களின் கணிப்புகள் அனைத்தும் திபெத்தில் நடந்த அகழ்வாராய்ச்சி பொய்க்க வைத்தது. அப்படியானால், பண்டைய கால மனிதர்கள் நம்மைவிட நாகரிகத்தில் சிறந்தவர்களா? மருத்துவத்தில், தற்போதுவிட பல நுணுக்கங்களை கற்றறிந்தவர்களா? அப்படியானால், தலைவலியாலும், வயிற்று வலியாலும் சில நூறு ஆண்டுகளுக்கு வைத்திய வசதி இல்லாமல் இறந்துபோனதாக செய்திகள் கூறுகின்றனவே அப்படியானால், இந்த மருத்துவ நுணுக்கங்கள் அப்போது மட்டும் காணாமல் போயிருந்தது எப்படி என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கான பதிலைத்தான் ஆராய்ச்சியாளர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆச்சர்யங்கள் விரியும்.