Wednesday 4 July 2012

அழியுமா உலகம்?

திடீரென ஒரு பரபரப்பு உலகின் பார்வையை இருள்மண்டிக்கிடந்த அமெரிக்கக்காடுகளுக்கு திருப்பியது. ஆனால் அந்தப்பார்வையில் ஆழ்ந்து தேடும் தேடலுக்கான அறிகுறியைவிட அஞ்சும் மரணபயமே தென்படுகிறது. ஆம்….அழியுமா உலகம்? இந்தக்கேள்வி தோன்றிய இடத்திலிருந்தே விடையை தேட ஆரம்பித்துள்ளனர்…..
ஸ்பெயின் சிப்பாய்களின் படையெடுப்பால் சின்னாபின்னமாகிப்போன மாயன்களின் மாயதேசத்திலிருந்து உலகிற்கு ஒரு புதியசெய்தி கிடைத்தது அந்த செய்தியை தாங்கி வந்த கல்வெட்டுத்தான் மாயர்களின் நாட்காட்டி. ஆனால் அந்த செய்தியை முற்றுமுழுதாக சரியான முறையில் மொழிபெயர்க்கும் அல்லது புரிந்து கொள்ளும் ஆற்றல் இன்றைய மனிதர்களிடம் மங்கித்தான் போய்விட்டது. ஒவ்வொருவரும் தங்கள் இஷ்டப்படி புரிந்துகொண்டார்கள். ஆனால் எல்லோருடைய கருத்துக்களும் ஒரு விடயத்தில் ஒத்துப்போகிறது. அதுதான் நாட்காட்டியின் ஆரம்பகாலமும் முடிவுக்காலமும். கி.மு 20ம் திகதி செப்டம்பர் மாதம் 3113 ஆம் ஆண்டை தொடக்க ஆண்டாக கொண்ட அந்த நாட்காட்டி21ம் திகதி டிசம்பர் மாதம் 2012 ஆம் ஆண்டு நிறைவடைகிறது. அந்த நாட்காட்டி எம்மவர்களின் நாட்காட்டியிலிருந்து சற்று வேறுபட்டது. நாள் என்பதை அவர்கள் கின் எனக் குறிக்கிறார்கள்.
19 கின் (19 நாள்)= 1 உனியல்
359 கின் = 1 துன்
7200 கின் = 1 கதுன்
144 002 கின் = 1 பக்துன்
1 872 025 கின் = 13 பக்துன்
2 880 025 கின் = 1 பிக்துன்
57 600 025 கின் = 1 கலப்துன்

இப்படியாக விரிகிறது மாயர்களின் நாட்காட்டி. இது இயற்கை மாற்றங்களையும் காலநிலைகளையும் அடிப்படையாகக்கொண்டது. அது மட்டுமன்றி கடவுள்களுடன்பேசுவதாகவும் வேற்றுக்கிரக உயிரினங்களுடன் தொடர்பு கொள்வதாகவும் வரையப்பட்டுள்ள சித்திரங்களும் மாயர்களைப்பற்றி ஒரு புதிய எண்ணக்கருவை உருவாக்குகின்றன.
மாயன்களின் கணிப்புப்படி உலகம் பலமுறை அழிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது உலகம் குறித்த காலத்திற்கு ஒரு முறை புதிப்பிக்ப்படும். உலக வரலாற்றில் நாகரிகம் தோன்றிவளர்ந்து சரித்திரம் படைத்த முக்கிய இடங்களான சிந்துசமவெளி, எகிப்து மக்களிடையேயும் இத்தகைய நம்பிக்கைகள் குடிகொண்டுள்ளன. சிந்துநதியோரம் தோன்றிய எமது நாகரிகத்தில் பிரளய காலம் என குறிப்பிடப்படுவதும் நைல்நதிக்கரையோலம் நடைபயின்ற எகிப்திய நாகரிகத்தில் Asy Syi'ra நட்சத்திரம் நைல் நதியை கடக்கும் காலமென குறிப்பிடப்படுவதும் இவ்வாறானதொரு மாற்றமேற்படும் காலம்தான்.

மாயர்களின் வானியல் அறிவுக்கு அவர்களுடைய சூரியக்கடவுளுக்கான கோயிலிலுள்ள சூரியனின் தட்சணாயன, உத்தராயண கால மாற்ற நாளில் மட்டும் ஒளிபுகக்கூடிய மண்டபமே சாட்சி. அதுமட்டுமன்றி மந்திர மாயங்களிலும் கைதேர்ந்து விளங்கிய மாயர்களின் கணிப்பை இலகுவில் புறந்தள்ளமுடியாது. மாயர்களின் நாட்காட்டியுடன் ஒத்தூதும் வண்ணம் விஞ்ஞானிகளும் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளனர். விண்கல் ஒன்று பூமியுடன் மோதலாம் என்றும் சூரியப்புயல் புவியை தாக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கட்டியம் கூறுகின்றனர். பூமியின் மின்காந்தப்புலங்களின் திசை மாற்றமடையலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
அதேசமயம் உலகப்புகழ்பெற்ற தீர்க்கதரிசி நஸ்ரடோமஸ் இன் கணிப்புக்கள் 2012 ஐயும் தாண்டி நீள்வதால் 2012 டிசம்பர் 23 உலக அழிவுக்குரிய நாளல்ல எனக்கொள்ளலாம்.

உலகஅழிவைப்பற்றிய செய்திகள் வந்ததிலிருந்து ஒப்பிட்டு பார்க்கையில் மாயர்களின் நகரப்பகுதி சுற்றுலாப்பயணிகளால் நிறைந்துவிட்டது. நல்ல வருமானம் கொழிக்கும் துறையாக சுற்றுலாப்பயணத்துறை அரசுக்கு காசை அள்ளிக்கொட்டுவதாக தகவல். சரியான சமயம் பார்த்து வெளிவந்த 2012 உலக அழிவு தொடர்பான திரைப்படமும் சக்கைப்போடு போட்டு தயாரிப்பாளருக்கு பணமழை பொழிந்ததும் அறிந்ததே. அதெல்லாவற்றையும் தூக்கிவிழுங்கும் சம்பவங்கள் இலங்கையின் சில பகுதிகளில் நடந்து கொண்டிருக்கின்றன. சாதாரண மனித பலவீனத்தை பயன்படுத்தி மதம் மாற்றும் முயற்சிகள் இடம்பெறுவது வேடிக்கையானது. பல இடங்களில் சுவரொட்டிகளாகவும் சில இடங்களில் வீடுவீடாக பிரச்சாரமாகவும் இவ்வாறு முழங்கப்படுகிறது.

”உலக அழிவிலிருந்து உங்களைக்காக்க ********** ஆல் மட்டுமே முடியும், ஆகவே விரைவாக  ********** இனுடைய பாதத்தை பற்றிக்கொள்ளுங்கள்.”

இதே கூட்டம் 2000 ம் ஆண்டு (மிலேனியம்) ஆரம்பத்தின்போதும் இதே முறையை பயன்படுத்தி கூட்டம் சேர்த்தது எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது.
இப்படியாக ஒன்றுமே இல்லாத விடயத்தை சுயலாபங்களுக்காக ஊதிப்பெரிதாக்குவதாக வாதிடும் தரப்பின் கருத்துக்களையும் வெறுமனே ஒதுக்கிவிடமுடியாது.

குறிப்பிட்ட காலப்பகுதியில் உலகில் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதே தவிர சூரியமண்டலத்திலிருந்து சுற்றும் பூமி காணாமல் போய்விடும் என்ற அளவிற்கு யோசிக்கத்தேவையில்லை.

No comments:

Post a Comment