Wednesday 4 July 2012

சனிமூலை

அமானுஷ்யங்கள் என்று நாம் வகைப்படுத்தும் அனைத்திலும் இறையருளின் பெருங்கருணை நீக்கமற நிறைந்திருக்கும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.  இந்த அமானுஷ்யங்களை ஏதோ தற்செயலான காரியம் என்று நினைத்து ஆச்சரியம் அடைந்தது இல்லை.  இது எப்படி நடந்தது என்று எதற்கும் எப்போதும் வியந்து நின்றது இல்லை.

இறையருள் துணையிருந்தால் இப்படித்தான் நடக்கும் என்கிற உறுதி எப்போதும் மனத்தில் உண்டு.

மனிதனுக்கு எதிரே நிறுத்தப்படும் அமானுஷ்யங்கள் வழித்தன்னுடைய இருப்பை உறுதி செய்கிறது இறையருள்.    சத்துவ, நிர்க்குண காருண்ய சாகரமாய் விளங்கும் இறைவன் ஏதோ ஒருவகையில், ஏதோ ஒரு வடிவில், ஏதோ ஒரு செயலின் வழியாகத் தன்னுடைய கருணையைப் பொழிகின்ற தயாவாணன்.    பலநேரங்களில் விடை தெரியாக் கேள்விகளாக நமக்கு முன்பு விஸ்வரூபம் எடுக்கும் பல்வகையான அமானுஷ்யமான நிகழ்வுகள் இதனை நமக்குக் காட்ட எத்தனிக்கும்.

என்னுடைய வாழ்க்கையில் பல நேரங்களில் இவை போன்ற அமானுஷ்யங்களை நின்று போற்ற மனம் இல்லாது நகர்ந்து போயிருக்கிறேன்.  ஏதோ ஒருவகையான அலட்சியம் மற்றும் அகந்தை கலந்த என்னுடைய அணுகுமுறை  இறையருளை நோக்கிப் பயணிக்க விடாமல் மடையை மாற்றுவதை உணர்ந்து இருக்கிறேன்.

பல நேரங்களில், பல வடிவங்களில் அமானுஷ்யங்கள் கண்முன் விஸ்வரூபம் எடுத்து நின்றாலும் அதனை அந்தக் கணம் கண்டு கொள்ளாது பின்னர் ஏதேனும் சந்தர்ப்பத்தில் எங்காவது மலைத்து அமர்ந்து இருக்கும்போது தவறவிட்ட அமானுஷ்யங்கள் மனதுக்கு சிறிது சஞ்சலங்களைத் தந்திருக்கின்றன.

2004ம் ஆண்டு.  புதுடெல்லி இராமகிருஷ்ணபுரத்தில் என்னுடைய அலுவலகம் இருந்தது.   உள்துறை அமைச்சகத்தின் கீழ்வரும் ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.  

ஒரு காலைநேரம்.  என்னுடைய நண்பராக இருந்த செயல்வீரர் ஒருவரிடம் இருந்து தொலைபேசி வந்தது.  அவருடைய இன்னொரு நண்பர் என்னைப் பார்க்க வருவதாகவும் முடிந்தால் ஏதாவது உதவி செய்யுங்கள் என்றும் அந்த நண்பர் கூறினார்.  என்னைப் பார்க்க வருவதாகச் சொன்ன அந்த நண்பர் சிறு வியாபாரம் ஒன்றை செய்து கொண்டிருந்தார்.  பொதுவாக யாவரும் தன்னைத் தொழிலதிபர் என்று அழைப்பதைப் பெரிதும் விரும்புவார்.  சில நிகழ்ச்சிகளின் அழைப்பிதழில் தன்னுடைய பெயருக்குக் கீழ் தொழிலதிபர் என்று   அச்சிடச் சொல்லி அதற்காக அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பணமும் கொடுத்தவர் அந்த மனிதர்.

நண்பருக்கு நண்பர் வீட்டுக்கு வந்தார்.  என்னிடம்   பல விஷயங்களைப் பேசிவிட்டு ஒரு உதவி வேண்டும் என்று ஆரம்பித்தார்.  தன்னுடைய வணிகத்தில் எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் விரைவில் எல்லாம் சரியாகிவிடும் என்றும் சொன்னார்.  ஒரு வங்கியின் கடன் அட்டை வழியாகப்  பெரும் தொகை ஒன்றைப் புரட்டியதாகவும் அதனைத் திருப்பிக் கட்டுவதற்கு உடனடியாகப் பெரும் தொகை ஒன்றை சரிசெய்தாக வேண்டிய நிலையில் இருப்பதாகவும் சொன்னார்.  எனவே அந்தத் தொகையை வங்கிக் கடனாக ஏற்பாடு செய்து கொண்டு இருப்பதாகச் சொன்னார்.

பிறகு நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.  நான் அரசு ஊழியனாக இருப்பதால் என்னுடைய ஊதியச் சான்றிதழைக் கொடுத்தால் அந்தப் பெரிய தொகையை சுலபமாகக் கடனாகப் பெற முடியும் என்றும் அப்படிப் பெற்றுத் தந்தால் தன்னுடைய கடன் தொல்லை உடனடியாகத் தீரும் என்றும் சொன்னார்.  நீங்கள் உங்கள் ஊதிய சான்றிதழைக் கொடுத்து ஒரு கையெழுத்துப் போட்டால் போதும்.    நான் ஒவ்வொரு மாதமும் தவணைத் தொகையை உங்கள் பெயரில் திருப்பிக் கட்டி விடுகிறேன்.  உங்களுக்குப் பிரச்னை இருக்காது என்றார்.

எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை.  இந்த மனிதரை என்னிடம் அனுப்பிய செயல்வீரர் வங்கி ஒன்றில்தான் பணிபுரிகிறார்.  அதுவும் அங்கு பெரும் செல்வாக்கோடு இருப்பதாக உலகத்துக்கே காட்டிக் கொள்கிறார்.  அந்த மனிதர் ஏன் உங்களுக்கு உதவக்கூடாது என்று இவரைக் கேட்டேன்.  பரிந்துரை செய்த அந்த மனிதரிடமும் கேட்டேன்.  பார்த்து செய்யுங்கள்.  எதற்கும் கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்றார் அந்தச் செயல்வீரர்.

இது விநோதமான பரிந்துரையாகப் பட்டது எனக்கு.

ஒரு பக்கம் கடன் கேட்கும் அந்த நபரிடம் நல்ல பெயர் எடுத்துக் கொள்ளலாம்.
இன்னொரு பக்கம் கடன் ஏற்பாடு செய்கிறவனை எச்சரிக்கையும் செய்யலாம்.  அதையும் மீறிக் கடன் எடுத்துக் கொடுத்தவன் அழிந்தாலும் தான் எந்தவகையிலும் பாதிக்கப் போவதில்லை என்ற நல்லெண்ணம்-.

இப்போது இப்படி  எழுதுகிறேனே தவிர அப்போது இதனை எனக்குக் கேட்கத் தோன்றவில்லை.  கடன் கேட்டு வந்த நபர் மிகவும் நம்பிக்கை அளிக்கும் வகையில் என்னிடம் பேசினார்.  என் இடத்தில் யாராக இருந்தாலும் மிகவும் எளிதாக நம்பி இருப்பார்கள்.  அந்த நண்பரின் உரையாடலில் அத்தனை பசப்பு விரவி இருந்தது.

பொதுவாக வீட்டுக்கு வரும் நண்பர்களிடம் நான் என்ன பேசுகிறேன் என்பதையோ எங்கள் உரையாடலின் இடையில் வருவதையோ என்றும் செய்யமாட்டாள் என் மனைவி.    எனவே அவளுக்கு இந்த விஷயம் தெரியாது.  அவளிடம் இதைப் பற்றிப் பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்று இருந்தேன்.

அந்த நண்பருக்கு இந்த உதவியை செய்துதான் பார்ப்போமே என்று தீர்மானித்து இருந்தேன்.  கடனுக்கான விண்ணப்பங்களை வங்கியில் இருந்து வாங்கி வருமாறு அந்த நண்பரிடம் சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்பினேன்.
என்னால் இயன்ற உதவியை செய்கிறேன் என்றும் அவரிடம் சொன்னேன்.

என்னுடைய உயர் அதிகாரியைக் கேட்ட போது அரசு ஊழியர்கள் இதுபோன்று வங்கிகளில் பெறப்படும் கடன்களுக்கு அலுவலகம் ஏதும் உத்தரவாதம் அளிக்காது என்றும் சொந்த உத்தரவாதத்தின் பெயரில்தான் கடனை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.  ஆனால் அந்த வங்கியில் இருந்து கடன் பெற்றுக் கொள்வது குறித்து அலுவலகத்தில் சட்டரீதியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் சொன்னார்-.

அலுவலகத்தில் இருந்து உத்தரவாதம் எதுவும் தேவை இல்லை என்றும் என்னுடைய மாதாந்திர ஊதியச் சான்றிதழ் இருந்தாலே கடன் கிடைக்கும் என்றும் அந்த நண்பர் அன்று மாலை சொன்னார்.

மறுநாள் என்னுடைய ஊதியச் சான்றிதழில் கையெழுத்திட வேண்டிய அதிகாரி அலுவலகத்துக்கு வரவில்லை.  நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தேன்.  மாலை நான் வீடு திரும்புவதற்கு முன்பே என்னிடம் கடன் கேட்ட நண்பர் வாசலில் காத்துக் கொண்டிருந்தார்.  நெருக்கடி அதிகரித்து இருக்கிறது என்றும் இன்னும் இரண்டொரு நாட்களில் அந்தக் கடனைக் கட்டாவிட்டால் பெருத்த அவமானத்தை சந்திக்க நேரிடும் என்றும் பதட்டப்பட்டார்.
 

இந்த அதிகாரி வரவில்லை என்றாலும் சரி.  அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவரிடம் சான்றிதழில் கையொப்பம் பெற்று மறுநாள் நண்பருக்குக் கொடுத்து விடலாம் என்று நினைத்தேன்.   அன்றும் மனைவியிடம் இது குறித்து ஆலோசிக்கவில்லை.

மறுநாள் காலை அலுவலகத்துக்குக் கிளம்பினேன்.  வழக்கமாக இராம கிருஷ்ணபுரத்துக்கு, சாணக்கியபுரி காவல் நிலையத்தின் பின்புறமாகச் செல்லும் குறுகிய சாலை வழியாகச் செல்வது என் வழக்கம்.  அந்தச் சாலையில் நுழைந்த போது அங்குள்ள குடியிருப்பு ஒன்றின் வாயிலில் இரு ஃபக்கீர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.  அவர்கள் அஜ்மீர் தர்காவை சேர்ந்த ஃபக்கீர்கள்.  சூஃபி இறைத்தத்துவத்தில் சொல்லப்படும் தேடலில் இருப்பவர்கள்.

டெல்லியின் பல இடங்களில் அநேகமாக அவர்களைப் பார்க்கலாம்.  பச்சை நிறத்தில் நீளமான அங்கி அணிந்திருப்பார்கள்.  பலவகையான பாசிமாலைகளை அணிந்திருப்பார்கள்.  நீண்ட தாடியும் கூர்மையான பார்வையும் கொண்ட இந்த ஃபக்கீர்கள்   யாரிடமும் சென்று பொருள் இரக்கமாட்டார்கள்.  ஒரு பெரிய பச்சைநிற  வெல்வெட் சால்வை ஒன்றை இருவர் அல்லது நால்வர் ஏந்தி இருப்பார்கள்.  அந்த வெல்வெட் துணியில் யாரும் பணம் போடலாம்.  யாரையும் நெருங்கி  தொந்தரவு செய்யமாட்டார்கள்.  மந்திரம் மாயம் என்று ஏமாற்ற மாட்டார்கள். 


பொதுவாக நான் இவர்களை என்றும் லட்சியம் செய்தது இல்லை.  அவர்களுக்கு என்றும் பணம் தந்தது இல்லை.  எங்கு அவர்களைப் பார்த்தாலும் கடந்து சென்று கொண்டிருப்பேன்.  அன்றும் அதே போல அவர்களைக் கடந்து என் ஸ்கூட்டர் சென்றது.

அன்று எனக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.  சிறிது தூரம் கடந்ததும் எதையோ மறந்தவன் போல ஸ்கூட்டரைத் திருப்பி அவர்களை நோக்கிச் சென்றேன்.  அவர்கள் சுமந்து சென்ற பச்சைத் துணியில் தன்னிச்சையாக பத்து ரூபாயை ஸ்கூட்டரில் உட்கார்ந்தவாறே எறிந்தேன்.  பணத்தை எறிந்து இடத்தை விட்டு நகருவதற்கு எத்தனித்தேன்.  ஸ்கூட்டரின் கைப்பிடியைப் பிடித்து நிறுத்தினார் ஒரு ஃபக்கீர்.  பார்வையற்ற அந்த மனிதர், பச்சைத் துணி விரிப்பில் இருந்து ஒரு ஒற்றை செண்டு மல்லிப் பூவை எடுத்து என் தலைமீது ஆசீர்வதிப்பது போல வைத்தார்.

எனக்கு அது பிடிக்க வில்லை.  இன்னும் அதிகமாகக் காசு கேட்கிறார் என்று நினைத்துக் கிளம்புவதற்குத் திமிறினேன்.  என் கரங்களை இறுகப் பிடித்துக் கொண்டு உருதுவில் சொன்னார் சீக்கிரம் நீ வேலையை விடப் போகிறாய். உனக்குப் பிடித்த வேலையை செய்யப் போகிறாய்.  யாருக்கும் எதற்காகவும் கையெழுத்துப் போடாதே.  பெரும் ஆபத்தில் சிக்கிக் கொள்வாய்.’’

அந்த ஒற்றைப் பூவை என் கையில் அழுத்தித் திணித்துவிட்டு மீண்டும் அந்தப் பச்சை விரிப்பை ஏந்திக் கொண்டு நடக்கத் துவங்கினார்.

பளீரென்று அறைந்தது போலிருந்தது எனக்கு.  அலுவலகம் சென்று என்னுடன் மிகவும் நட்புடன் பழகும் என்னுடைய உயர் அதிகாரியிடம் விஷயத்தை சொன்னேன்.  ஃபக்கீர்கள் சொன்னார்கள் என்றால் அதை எக்காரணம் கொண்டும் அலட்சியம் செய்யாதே.  இன்று அஜ்மீரின்  அருளாளர் உன் மீது பெருங்கருணை பொழிந்திருக்கிறார். எதையாவது தவறாக செய்து அவதிப்படாதே என்று சொன்னார்.

பிறகு என்ன செய்திருப்பேன் என்று உங்களுக்கு சொல்லத் தேவையில்லை.  இன்று என்னிடம் பெருந்தொகையைக்  கடனாகக் கேட்டு இறையருளால் நான் தப்பித்த அந்த நபருக்குப் பல இடங்களில் கடன் பெற்றுத் தந்து அவதிப்படுபவர்கள்,   வட்டிக்குக் கடன் வாங்கித் தந்து பேரவதிப் படுபவர்கள், அவர் தனக்குப் பணம் ஏற்பாடு செய்து கொள்ள நடத்திய மாதாந்திர சீட்டில் பெரும் தொகை இழந்து மனநிம்மதியைத் தொலைத்தவர்கள் என்று பெரிய பட்டாளத்தையே நீங்கள் டெல்லித் தமிழர்களிடையே நீங்கள் காணலாம்.

இந்தத் தொழிலதிபருக்காகப் பலரிடமும் கடன் வாங்கித் தருமாறு பரிந்துரைத்த செயல்வீரர் மட்டும் எவ்வித பாதிப்பும் இன்றி எவ்விதப் பொருளாதார இழப்பும் இன்றி இயங்கி வருகிறார்  என்பதும்  இன்னொரு நடைமுறை நிஜம்.

இப்போது மீண்டும் இந்தக் கட்டுரையின் முதல் பத்திக்குச் சென்று படித்தீர்கள் என்றால் அங்கு நான் சொல்ல முயற்சித்தது   இன்னும் சற்றுத் தெளிவாகும்.

No comments:

Post a Comment