Saturday, 9 June 2012

பேனா செய்த உதவி!


நாமக்கல்அருகே உள்ள நல்லிப்பாளையம் என்றகிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்றமாணவர் ஸ்ரீநிவாசனைத் தொடர்பு கொண்டு தனதுபிரச்சினையத் தெரிவித்துள்ளார். விக்னேஷ் ஒரு தொழிற்கல்வி படிப்பில்இரண்டாண்டுகளை முடித்துவிட்டு மூன்றாமாண்டில் அடியெடுத்து வைக்கும் மாணவர், நல்லிப்பாளையம் UCO  வங்கியில் கல்விக்கடன் பெற்று  படித்து வருகிறார்அவர்  வட்டிக்குஅரசு அளிக்கும் மானியம் பெறத் தகுதியானவர். ஆனால் கடந்த இரண்டாண்டுகளுக்கான வட்டியைக்கட்டினால்தான் மூன்றாமாண்டுக்கான கடன் தொகையைத் தரமுடியும்என வங்கி மேலாளார்  கண்டிப்பாகச்சொல்லி விட்டார். கல்லூரி திறக்கிற நேரமானதால்அவரது பெற்றொருக்கு என்ன செய்வது என்றுதெரியவில்லை.கந்து வட்டிக்காரர்களிடம் 36 சதவீத வட்டிக்குக்கடன் வாங்கி வங்கியில் பணம்கட்டிவிட்டனர்.


கல்விக் கடன் பெறும் மாணவர்கள்படிக்கும் காலத்தில் வட்டியைச் செலுத்த வேண்டியதில்லை. தொழிற்கல்விபயிலும் மாணவர்களுக்கு வட்டிக்கான மானியமும் உண்டு. இந்தத் தகவல்களைச்சென்ற வாரப் புதிய தலைமுறையில்  வெளியிட்டிருந்தோம்
கல்விக் கடன் பெறுவது எப்படிஎன்பது பற்றிய தகவல்களைத் திரட்டிகிருஷ்ணா எழுதியிருந்தார். அதில் Education Loan Task force (ELTF) என்ற அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீநிவாசனின் பேட்டியையும்வெளியிட்டிருந்தோம்

புதிய தலைமுறையைப் படித்த விக்னேஷ்  ஸ்ரீநிவாசனைஜூன் 7ம் தேதி இரவு  தொடர்பு கொண்டு தனது பிரச்சினையத்தெரிவித்துள்ளார். ஸ்ரீநிவாசன் மறுநாள் வங்கி மேலாளரைபோனில் தொடர்பு கொண்டு விதிகளைச்சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் வங்கி மேலாளார்ஆணவமாகப் பதில் சொன்னதாக ஸ்ரீநிவாசன்தெரிவிக்கிறார். “நீ யார் கிட்டவேணா போய்ச் சொல்லிக்கோ, வட்டிகட்டினால்தான் பணம் கொடுக்க முடியும்அது எங்கள் பாங்க் விதிகள்அப்படித்தான் சொல்கின்றனஎன்று சொல்லிவிட்டார்.

உடனே ஸ்ரீநிவாசன் மேலதிகாரிகளை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டுநடந்ததைத் தெரிவித்திருக்கிறார். அவரது மின்னஞ்சலில் புதியதலைமுறைக் கட்டுரையையும் குறிப்பிட்டுள்ளார். அன்று மாலை (ஜூன்8)  வங்கியின்  துணைப் பொது மேலாளர்திரு வெங்கடாச்சலம் ஸ்ரீநிவாசனுடன் தொடர்பு கொண்டு விவரங்கள்கேட்கிறார். சிறிது நேரத்தில்  வங்கிக்கிளை மேலாளரே விக்னேஷைத் தொடர்புகொண்டு  அடுத்த செமிஸ்டருக்கான கல்விக்கட்டணத்திற்குரிய  வரைவோலையை வாங்கிக் கொள் என்று சொல்லியிருக்கிறார். 9ம் தேதி விக்னேஷ் வங்கிக்குச்சென்று வரைவோலையைப் பெற்றுக் கொண்டுவிட்டார்.
இது போல் இன்னும் எத்தனைமாணவர்களுக்கு நடந்திருக்குமோ என்ற தன் கவலையைஸ்ரீநிவாசன் வங்கி நிர்வாகத்திடம் தெரிவிக்கிறார். ஜூன் 9ம் தேதி மாலைகோவை மண்டல மேலாளர் பாஷாதான் திங்கள் கிழமை  (ஜூன்11ம் தேதி) வங்கிக் கிளைக்கேசென்று விசாரணை நடத்த இருப்பதாகஸ்ரீநிவாசனைத் தொடர்பு கொண்டு தெரிவித்திருக்கிறார்.

புதிய தலைமுறையால் ஒரு மாணவனுக்கு விடிந்திருக்கிறது. இன்னும் பலருக்கும் தீர்வு கிடைக்கலாம்.

Friday, 1 June 2012

இந்து மத வரலாற்று தொடர் - 9


அடுத்தடுத்து நான்கு அத்தியாயங்களில் வேதங்களின் சாரத்தை தெளிவாக பார்த்தோம்.  அதை படித்த அறிவு நுட்பமுடைய வாசகர்களுக்கு ஒரு கேள்வி எழும்பும்.  வேதத்தை அறிவின் பெட்டகமாக ஆராய்ச்சியின் உறைவிடமாக இதுவரை கருதி வந்திருக்கிறோம்.  ஆனால் சென்ற அத்தியாயங்களில் அவற்றை படிக்கும் போது நமது கருத்துக்கும், மதிப்பிற்கும் உரிய அளவிற்கு அதில் விஷயங்கள் எதுவும் விசேஷமாக இல்லையே என்று தோன்றும்.  இறைவனை துதிப்பதும் அவரிடம் பிரார்த்தனைகள் வைப்பதும் தான் வேதத்தில் மைய கருத்து என்றால் அறிவுக்கு அங்கே இடம் எது?  என்றெல்லாம் தோன்றுவது இயற்கையாகும்.

 மிக முக்கியமாக ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும்.  துதிப்பாடல்களும், பிரார்த்தனைகளும் வேத சுலோகங்களில் அதிகம் தான் என்றாலும் அந்த சுலோகங்களின் மையக்கருத்தாக பல அரிய விஷயங்கள் மறைந்து கிடப்பதை வேத நூல்களை முழுமையாக படிக்கும் போது அறியலாம்.  அதே நேரம் வேதத்தின் நாத லையம் தான் ஜீவனே தவிர அதன் கருத்துக்கள் அவ்வளவாக முக்கியம் வாய்ந்ததாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

   பிரபஞ்சத்தில நாலாதிசையிலும் பரவி உள்ள சப்த சமுத்திரத்தை வேதங்கள் தனக்குள் கொண்டுள்ளது.  அதை சுருதி சுத்தமாக பாராயணம் செய்யும்போது தான் வேத ஒளியில் நம்மால் முழுமையாக நனைய இயலும்.  அதே நேரம் வேத பரிபாஷையை அறியாமல் மொழிமாற்றம் செய்யப்பட்ட சுலோகங்களை படித்துவிட்டு வேதக்கருத்தை முழுமையாக புரிந்துகொள்ள இயலாது.  எனவே வேதத்தை முழுமையாக அறிந்து கொள்ள நினைப்பவர்கள் வடமொழி பயின்று நான்கு வேதங்களையும் கற்றுக்கொண்டால் அறிவின் சிகரத்தை நிச்சயமாக அடையலாம்.  மேலும் வேத அறிவை எல்லோரும் அறிந்து கொள்வதற்கு இன்னொரு வழியும் உண்டு. அதுதான் உபநிஷதங்கள் ஆகும்.

  உபநிஷதங்களில் தான் இந்திய ஞானிகளின் அறிவு முழுவதும் கொட்டிக்கிடக்கிறது.  இந்த நூல்களுக்கு இணையான அறிவு நூல்கள் இதுவரை உலகில் படைக்கப்படவில்லை.  என்றே சொல்லலாம்.  காடுகளில் தூய்மையான காற்றையும், தெளிவான நீரையும், பருகிக் கொண்டு ஏகாந்தமாக வாழ்ந்த ரிஷிகள் தங்களது அனுபவ அறிவை உபநிஷதங்களில் அப்படியே உருக்கி வைத்திருக்கிறார்கள்.  அவைகளில் உள்ள வண்ணமயமான உண்மைகள் இன்றும் நமது வாழ்க்கைக்கு ஊன்று கோலாக மட்டுமல்ல,  அஸ்திவாரமாகவும் அமைந்திருக்கிறது.  அக்கருத்துக்களை ஓரளவு நாம் தெரிந்து கொண்டால் இந்து மதத்தினுடைய அறிவின் வரலாற்றின் மிக பெரும் பிண்ணனியை நன்கு உணரலாம்.

  உபநிஷதங்கள் என்றால் அருகாமையில் இருப்பது என்று பொருள் ஆகும்.  எதனருகாமையில்?  சகலத்தையும் கற்று உணர்ந்த அனுபவித்து உணர்ந்த மகாஞானியின் அருகாமையில் இருப்பது என்று பொருள் ஆகும்.  பல நூறு உபநிஷதங்கள் உள்ளன.  அதில் நூற்றி பதினெட்டு உபநிஷதங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவைகள் ஆகும்.  ஜெகத்குரு ஆதிசங்கர பகவத் பாதாள் 10 உபநிஷதங்களுக்கு வியாக்கியானம் எழுதி உள்ளதால் அந்த பத்தும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.  அவைகளில் சில உபநிஷதங்ககளின் கருத்துக்களை இப்போது நாம் சிந்தனை செய்வோம்.

 அறிஞர்கள் பலராலும் வியப்புடன் பேசப்படுவது கடோபநிஷமாகும்.  இது அப்படி பேசப்படுவதற்கு மிக முக்கிய காரணம் வாழும் போது மனிதன் கடைபிடிக்க வேண்டிய கடமைகளையும், வாழ்ந்த பிறகு அவன் அடையும் நிலைமைகளையும் இந்த உபநிஷதம் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.  அதே நேரம் வாழ்க்கையை பற்றியுள்ள அச்சத்தை விலக்கவும் வழிவகை செய்கிறது.

 கடற் என்ற முனிவரால் இயற்றப்பட்டது கடோபநிஷதம் ஆகும்.  இது யஜூர் வேத்தில் தைத்திரிய பிரிவில் இடம் பெற்றிருக்கிறது.  பழைய கால வடமொழி இலக்கியத்தில் காணப்படுகின்ற கதையமைப்பு இந்த உபநிதத்தில் மையமாக எடுத்தாளப்பட்டிருக்கிறது.  வாஜசிரவஸ் என்ற ஏழை அந்தணன் மகன் நசிகேதன் இவன் குழந்தை பருவத்திலேயே ஆத்ம விழிப்பு பெற்றவன்.  ஒரு சமயம் இவனது தந்தை யாகம் நடத்தி மெலிந்து போன பசுக்களை தானம் கொடுக்கும் போது அப்படி கொடுப்பது தவறென தந்தைக்கு சுட்டிக்காட்டி அப்பசுக்களுக்கு பதிலாக தன்னைத்தானம் கொடுக்குமாறு வற்புறுத்துகிறான்.  பையன் பலமுறை ஒரே விஷயத்தை வற்புறுத்தியதால் எரிச்சலுற்ற தந்தை மகனை பார்த்து உன்னை எமனுக்கு தானம் கொடுத்துவிடேன் என்கிறான்.

 இதைக்கேட்ட நசிகேதன் தான் யாருக்கு தாரை வார்க்க பட்டோமோ அவரிடத்தில் இருப்பது தான் தர்மம் என்று கருதி எமன் உலகம் செல்கிறான்.  எமனிடம் 3 வரங்களையும் பெறுகிறான்.  முதலாவது தன்னை உயிரோடு பெற்றவர்களிடம் திருப்பி அனுப்பவேண்டும், என்பது இரண்டாவது தன்னுடைய நற்செயல்கள் எதுவும பலம் இழக்காமல் இருக்கவேண்டும்.  3-வதுதாக பெற்றதுதான் மிக முக்கியமான வரமாகும்.  மறு பிறப்பை வெல்லும்.  வழியை தனக்கு சொல்ல வேண்டும்.  என்பது ஆகும்.

  கடோபனிஷதம் 2 பிரிவாக இருக்கிறது.  ஒவ்வொரு பிரிவிலும் மூன்று உட்பிரிவுகள் இருக்கிறது.  இதனுடைய பிரார்த்தனை மந்திரம் மிகவும் கவிதை நயத்துடன் அழகிய முறையில் அமைந்துள்ளது.  இறைவன் நம் இருவரையும் காப்பாறாக.  நமது இருவரிடமும் அவர் மனநிறைவு கொள்வாராக.  நாம் சீறிய திட்டத்துடனும் சுறுசுறுப்புடனும் செயல்படுவோமாக.  கல்வியின் மூலமும், அனுபவத்தின் மூலமும் ஆன்ம ஒளியில் பெறுவோமாக.  நம்மிடையே எந்த பொழுதிலும் எந்த நிலையிலும் வெறுப்பும் பகையும் ஏற்படாது உழைப்போமாக என்று தொடங்கும் பிரார்த்தனை மந்திரம் இன்றைய நிலையிலும், எந்த அளவிற்கு தேவைப்படுகிறது என்பதை சிந்திக்க வேண்டும்.

 ஒரு நீண்ட புல்லானது தளிராக இருந்து வளர்ந்து உலர்ந்து காய்ந்து போவது போல் ஒவ்வொரு மனிதனும், தனது வாழ்க்கை நிலையில் நிலையில்லாமல் அற்ப காலமே வாழ்ந்து மறைந்து போகிறான்.  பிறகு மீண்டும் பிறந்து அதன் பிறகும் இறந்து தொடர்ச்சியாக பிறவி தளைக்குள் சிக்கி தவிக்கிறான்.  இந்தக்கருத்தை எடுத்த உடனேயே கடோபனிஷதம் தூக்கிக் காட்டுகிறது.  எப்படியென்றால் எல்லா உயிர்களும் தோன்றி வளர்ந்து முதிர்ச்சியடைந்து சிதைந்து மடிகின்றன.  மனிதனின் நிலையும் அதுதான் சாஸ்வதமான வாழ்க்கையை பெறாவிட்டாலும் கூட தொடர்ந்து வாழ்வதை தவிர்க்க இயலாது.  என்ற வாசகத்தால் மறுபிறவி சித்தாந்தம் வலியுறுத்தப்படுகிறது.

   மேலும் வாழ்க்கையின் படித்தரத்தை அதாவது  பரிணாம வளர்ச்சியை அழகிய முறையில் இந்த உபநிஷதம் வடிவமைத்து காட்டுகிறது.  உங்கள் மூதாதையரை பொறுத்த வரை அவர்களது வாழ்க்கை எப்படி இருந்தது.  என்பதை எண்ணிப்பாருங்கள் இப்போது இருக்கும் நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதை அவர்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பாருங்கள் மனிதன் தானியப்பயிர்களைபோல வளர்ந்து முதிர்ந்து உதிர்கிறான்.  தானியங்களை போலவே மீண்டும் முளைத்து எழுகிறான்.  இந்த வாசகம் மனிதனின் வாழ்க்கை மரணத்தால் கூட முடிவடையாமல் மீண்டும் மீண்டும் ஒரு சக்கரத்தை போல சுழன்று கொண்டிருப்பதை நமக்கு காட்டுகிறது.

  இன்று விஞ்ஞானிகளும் சரி மெய்ஞானிகளும் சரி ஒரு விஷயத்தைப் பற்றி தொடர்ந்து வாதப்பிரதிவாதங்கள் செய்து வருகிறார்கள்.  அது என்னவென்றால் மரணத்துக்கு பிறகும் மனித வாழ்க்கை தொடர்கிறது என்றும் இல்லை இல்லை அத்தோடு முற்று பெற்று விடுகிறது என்றும் கருதுவதாகும்.  இதில் எது உண்மை என்பதை கடோபனிஷதம் மிக தெளிவாக நமக்கு சொல்கிறது.  இந்த விஷயத்தில் தேவர்களுக்கு கூட இன்னும் சந்தேகம் இருந்து வருகிறது.  மறுபிறப்பு கர்மாக்கள் என்பதை புரிந்து கொள்வது அத்தகைய கடுமையான விஷயமாகும்.  அந்த உண்மைகள் வெகு நுட்பமானது.  அதை தொடர்ச்சியான மனப்பயிற்சியாலும் ஒருமைப்பாட்டாலும், உணர்ந்து கொள்ளலாமே தவிர வாதங்களால் அல்லது பௌதிக சாதனங்களால் நிறுபித்து விட இயலாது என்று மிக தெளிவாக அருதியிட்டு உபநிஷதம் கூறுகிறது.

  நசிகேதன் எமதர்மனிடம் மிக முக்கியமான கேள்வியை வைக்கிறான்.  ஒரு மனிதன் நிலையான சுகத்தை அடைவது எப்படி?  பெண் சுகத்தால் சாசுவதமான இன்பத்தை அடைந்து விடமுடியாது.  அந்த சுகத்தை முதுமையானது தடுத்துவிடும்.

  அதேபோல அதிகார பலமும் நிலையான இன்பத்தை தந்துவிட முடியாது.  போட்டிகளும், யுத்தங்களும் பதவிகளை எப்போதுமே நிலையில்லாது செய்துவருகின்றன.  பணத்தாலும் மனித மனம் நிறைவு கண்டுவிடுவது இல்லை.  மரணத்தை ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்த்து அச்சத்துடன் காத்துக்கொண்டிருக்கும், மனதை பதவியும், பெண்ணும் செல்வ வளமும் திருப்தி அளிக்க விட்டுவிடாது.  ஆகவே நிலையான இன்பம் அழியாத வாழ்க்கை எது?  அதை எனக்கு விளக்கமாக சொல் என்கிறான்.

 இதற்கு தர்மத்தின் தலைவனான மரண தேவன் சரியான பதிலை தருகிறான்.  தகுதியானது என்பது வேறு சுகம் தருவது வேறு.  இரண்டும் வெவ்வேறு கோணத்தில் பலன்களை தந்து மனிதனை பிணைத்து வைத்திருக்கிறது.  இவ்விரண்டிற்கு உள்ளே உள்ள தகுதியானதை ஏற்றுக்கொள்பவனுக்கு நன்மையே விளைகிறது.  ஆனால் சுகம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவன் தன்னுடைய நோக்கில் தோல்வி அடைகிறான்.  அறிவாளிகளான சிலர் மட்டுமே சுகமானதை தவிர்த்து விட்டு தகுதியான பாதையை தேர்ந்தெடுத்து வெற்றி பெறுகிறார்கள்.  ஆனால் பலநூறு ஜனங்கள் தகுதியானது எது என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.  அதனால் அவர்களது வாழ்க்கை பாதை சிக்கல் மிகுந்ததாக இருக்கிறது.  இதை மிக நுட்பமான முறையில் தான் தெரிந்து கொள்ள இயலும்.
  அறிவும், அறியாமையும் வெவ்வேறு விதமாக விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.  அவைகள் வெவ்வேறு எல்லைகளை கொண்டது.  அறியாமையில் உள்ளபவர்கள் தங்களை உயர்ந்தவர்களாகவும், சகலத்தையும், கற்றுணர்ந்த அறிவாளிகளாகவும், எண்ணிக் கொள்கிறார்கள்.  குருடனால் வழி நடத்தப்படும் குருடனைப்போல் மூடர்கள் வளைவுகள் மிக்க பாதையில் நடந்து செல்கிறார்கள்.  கடைசியில் அவர்கள் ஒருவரையொருவர் மோதிக்கொள்வதை தவிர வேறு வழியை அறியாமல் இருக்கிறார்கள்.

 குறுகிய மனம் படைத்த எதிலும் கவனம் இல்லாத தவறான வழியில் இழுத்து செல்லப்படுபவர்களுக்கு பூமியில் காணும் சுகங்கள் மட்டுமே நிரந்தரமானதாக தெரிகிறது.  அவர்களுக்கு இன்னொரு உலகத்தை பற்றி எதுவும் தெரியாது.  தாங்கள் மட்டுமே தங்களால் அறிந்தவைகள் மட்டுமே உண்மையானது,  சத்தியமானது என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.  இப்படிபட்டவர்கள் மீண்டும் மீண்டும் என்னிடத்திலேயே வந்து பலமுறை பூமியில் ஜனனம் எடுத்து வாழ்ந்து மடிகிறார்கள்.

  இறுதியான பேரின்பத்தை அடைய நினைப்பவர்கள் தற்காலிகமான சுகங்களில் கவனம் செலுத்தவது கிடையாது.  எதை பலரால் கேட்க முடியவில்லையோ எதை கேட்டாலும் பலரால் அறிய முடியவில்லையோ அதை விரும்புவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.  கேட்க முடியாத பொருள் என்றால் என்ன?  என்பதை நாம் சற்று சிந்தித்தால் இந்த வாசகத்தின் பொருள் என்னவென்று நமக்கு நன்றாக தெரிந்துவிடும்.

    இந்த உலகிலுள்ள உயிர்கள் எல்லாம் மனிதன் உட்பட எல்லா ஜீவனுமே உயிராற்றலால் தான் இயங்குகின்றன.  அந்த உயிராற்றல் என்பது எது?  அது நமது உடலில் எந்த பகுதியில் இருக்கிறது.  தலையில் மூளை, மார்பில் இதயம், வயிற்றில் குடல் இருப்பது நமக்கு நன்றாக தெரியும்.  ஆனால் நம் உயிர் நமது உடம்பில் எதில் இருக்கிறது?  எப்படி இருக்கிறது?  உயிருக்கு நிறம் உண்டா பருமன் உண்டா அல்லது எதுவும் இல்லாத காற்றா?  வெளிச்சமா?  சப்தமா?  என்று நாம் என்றேனும் சிந்தனை செய்து பார்த்து இருக்கின்றோமா?

  விஞ்ஞானம் உயிரை துடிப்பு அதாவது சலனம் என்கிறது.  மெய்ஞானம் உயிரை சப்தம் என்கிறது.  அதாவது பிரபஞ்சத்தில் உள்ள ஒலி அலைகள் நமது சரீரத்திற்குள் உயிராக உறைந்து கிடக்கிறது என்று கூறுகிறது.  அதனால் தான் உயிர்களின் தலைவனான இறைவனை நாத விந்து என்று அழைக்கிறார்கள்.  நாதம் தான் உயிர் அந்த நாத ஒலியை கேட்பது தான் அல்லது கேட்க முயற்சிப்பது தான் வாழ்க்கையின் அர்த்தம் என்று கடோபனிஷதம் தெளிவாக கூறுகிறது.  கேட்காத ஒலியை கேட்டு புரிந்து கொள்வது தான் நிரந்தரமான இன்பத்தை அறிந்து கொள்வதற்கு அனுபவித்துக் கொள்வதற்கு வழி என்றும், இந்த உபநிஷதம் கூறுவது தான் இந்து மதத்தின் ஆதார கருத்தாகும்.

 உயிரை அறிவது என்பது முதன்மையான கடவுளை காணூதக்கறிய பரம்பொருளை ஆத்மாவின் அடி ஆழத்தில் மறைந்து கிடப்பதை இதயக் குகையில் ஒளிவீசிக் கொண்டிருப்பதை மதி நுட்பத்துடன் கடின சிரத்தையுடன் தொடர்ச்சியாக முயற்சிப்பது ஒரே வழி.  இந்த முயற்சிக்கான தகுதியை ஆன்ம ஒளி பெற்ற ஒரு குருவிடமிருந்து கேட்டறியப்பட வேண்டும்.  ஆனந்தம் நிறைந்ததும் நுட்பமானதுமாகிய ஆத்மாவை பிரித்து உணர்கிறவன் ஆனந்த ஊற்றை கண்டு அடைந்தவன் ஆகிறான்.

  இத்தகைய ஆனந்த ஊற்றை கண்டு அடைவதற்கு என்ன வழி என்றால் பிரணவ மந்திரத்தை இடைவிடாது பற்றிக்கொள்வதே ஆகும்.  ஏனென்றால் ஓம் என்ற பிரணவ மந்திரமே இறைவனாகும்.  இதுவே பிரபஞ்சத்தின் கடைசி எல்லையாகும்.  இம்மந்திரத்தை அதன் நுட்பத்தை அதன் ரகசியத்தை அறிந்தவன் எல்லாவற்றையும், அறிந்தவனாகிறான்.  ஓம் என்ற பிரணவம் தான் மிக உயர்ந்த ஆதாரம் என்பதற்கு இதை விட வேறு ஆதாரங்களை தர இயலாது.  மனிதனின் அல்லது ஜீவனின் நாபியில் உறைந்திருக்கும் ஓம் என்ற பிரணவமே அண்டவெளி எங்கும் பரந்து கிடக்கிறது.

 நமது ஐம்புலன்களை விட பொருட்கள் வலிமை பெற்றது.  பொருட்களை விட மனம் வலுவானது.  மனதை விட புத்தி மதிப்புமிக்கது.  புத்தியை விட ஆத்மா மகோன்னதமான உயர்வானது.  எனவே ஆத்மாவை அறிவது தான் இறைவனை அறிதலாகும்.  இறைவனை அறிந்த பிறகு பிறப்பு என்பது இல்லை.  ஆகவே பகுத்தறிவு படைத்த மனிதர்கள் புறப்பொருட்கள் மீது உள்ள பற்றுதலை விட்டு விட்டு அகப்பொருளான ஆண்டவனிடம் நாட்டம் கொள்வதே சிறந்ததாகும்.  கண்ணுக்கு தெரிகின்ற காட்சிகள் மட்டும் தான் நம்பக்கூடியது.  என்று கருதுபவன் வாழ்க்கை பயணத்தை முழுமையாக முடிக்க முடியாமல் பாதியிலேயே நிறுத்தி மீண்டும் ஆரம்பத்திலிருந்து துவக்கக்கூடிய மதியற்றவனாக இருக்கிறான்.  எனவே உள்ளுக்குள் அதாவது நமக்குள் நமது ஆராய்சியை ஆளப்படுத்துவதே நம்மை மேம்படுத்திக் கொள்ளும் வழியாகும்.  அதை விடுத்து அற்ப காரியங்களில் மனதை செலுத்துவது மூடத்தனமாகும்.

   இன்று பலர் மதவாதிகளால் சொல்லப்படுகின்ற கடவுள் என்ற கருத்து புலன் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டதாக அதாவது கட்புலனாகாத விஷயமாக இருக்கிறது.  அதனால் அது நம்பத்தகுந்தது அல்ல என்று வாதிடுவார்கள்.  அவர்களுக்கு சரியான பதிலை கடோபஷத்தம் தருகிறது.

 இறைவனுடைய உருவம் கண்ணால் காணும் எல்லைகளுக்குள் அடங்குவது இல்லை.  எல்லோராலும் அவரை சாதாரண கண்களால் காணமுடிவது கிடையாது.  அவர் இதயத்தால் சிந்தனையால், மனதால் ஆத்மாவால் மட்டுமே அறியப்படுபவராக இருக்கிறார்.  அவரை அந்த நிலையில் அறிந்தவர்கள் பெருநிலையை அடைகிறார்கள்.

மன ஆற்றல்கள் எல்லாவற்றையும், ஒருமுகப்படுத்தி இறைவன் காண முயற்சிக்க வேண்டும்.  அதாவது நாலாதிசையிலும் சதா சர்வ காலமும் ஓடிக்கொண்டிருக்கின்ற நம் மனக்கதியை அடக்கி ஒரே வழியில் நேர்வழியில் ஓட்டப்பழக வேண்டும்.  அப்படி நாம் தொடர்ச்சியாக மனக்குதிரையை ஓட்டினால் கல்லும் முள்ளுமாக கரடுமுரடாக கிடக்கின்ற நமது இதயம் மென்மையானதாக தூயதாக மாறிவிடும்.

   அப்படி மாறும் பொழுது கடவுள் காட்சி இயற்கையாக தோன்றும்.  இறைவனை நாம் நமது இதயத்தில் பரி பூரண அழகோடு கண்டுகளிக்கலாம்.  இப்படி கண்டுகளிக்கும் மனப்பயிற்சியின் உள்ளத்தை உள்ளுக்குள் இழுக்கும் முயற்சி என்று சொல்லலாம்.  இந்த முயற்சி தான் ஏகாந்த பெருவழியை நிரந்தரமாக தரிசனம் செய்ய வழி வகுக்கும்.  அதாவது கடவுள் என்ற கருத்தமைவு நம்முடைய மனம் சார்ந்த இயல்பினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது.  அதனால் தான் இம்முயற்சிகள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொருவிதமாக அமைகிறது.

  பலரும் பலவழிகளை மேற்கொள்வதனால் தான் ஆத்ம பயணம் சிக்கலுடையதாகவும், குழப்பமுடையதாகவும், தெரிகிறது.  இதில் எதை எடுத்துக் கொள்வது எதை விடுத்து செல்வது என்று பல சாதகர்கள் ஆரம்ப நிலையில் குழப்பமடைகிறார்கள்.  நன்கு ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் அந்த வழிகள் எல்லாமே சரியானதாகவும், சத்தியமானதாகவும், தெரியும்.  அந்த வழியில் தான் நாம் செல்லவேண்டும் என்பதும் கிடையாது.  நமக்கு நாமே ஒரு புதிய பாதையை ஏற்படுத்திக் கொள்ளலாம்.  அந்த பாதை நிச்சயமாக இறைதரிசனத்தை நமக்கு பெற்றுத்தருமே அல்லாது நம்மை நிர்கதியாக விட்டுவிடாது.  எது பாதை என்பது முக்கியமல்ல.  எப்படி நாம் உழைக்கிறோம் என்பது தான் முக்கியம்.

   கடோபநிஷதம் முழுவதுமே இறப்பிற்கு பிறகு ஆத்மாவின் தகுதி பயணத்தை பற்றியும், மீண்டும் பிறவாத நிலை பற்றியும், விரிவாக பேசப்படுகிறது.  அத்தோடு சாதாரண மனிதன் கூட இறைவனை அடைவதற்கு வழிவகை சொல்லப்படுகிறது.  எனவே கடோபநிஷதம் ஒன்றை ஆழமாக பார்த்தாலே மற்றைய அனைத்து உபநிஷதங்களையும் தெளிவாக பார்த்தது போல் ஆகிவிடும்

  அதனால் தான் இந்த ஒரு உபநிஷத்தைப் பற்றி சற்று விளக்கமாக சொன்னேன்.  முழுமையாக அதை அறிந்துகொள்ள விரும்புவர்கள் அந்த உபநிஷத்தை படிப்பது நல்லது.  இந்த மதம் என்பது எத்தகைய அறிவு பூர்வனமானது என்பதை சுட்டிக்காட்டவே வேதங்களைப் பற்றியும் உபநிஷதங்களை பற்றியும் இங்கே ஓரளவு சொன்னேன்.  ஆனால் இத்தோடு இந்து மதத்தின் அறிவு ஆதாரங்கள் நின்றுவிடவில்லை.

  இவைகளை அடிப்படையாக கொண்டு இன்னும் ஆழமாக பல்வேறு சமயப்பிரிவுகளாக நமது மதம் பரவிக்கிடக்கிறது.  அவற்றையெல்லாம் நாம் இனி வரும் அத்யாயங்களில் தொடர்ச்சியாக சிந்தித்தாலே நமது சமய பண்பாடு எவ்வளவு அறிவு பூர்வமானது அனுபவ பூர்வமானது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்து மத வரலாற்று தொடர் - 8


 அதர்வண வேதம் கடைசி வேதமாக கருதப்படுகிறது ஏறக்குறைய யஜூர், சாம வேதங்கள் உருவான காலத்திலேயே அதர்வணம் உருவாகி விட்டது என்றாலும் அது அப்போது வேதமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை பகவத் கீதையில் கூட முதல் மூன்று வேதங்களை பற்றி விபரங்கள் தெரிவிக்கப்படுகிறது தவிர அதர்வணத்தை பற்றி பெரியதாக எதுவும் கூறப்படவில்லை இதனால் மகாபாரத காலத்திற்கு பின்னரே அதர்வணம் வேதம் என்ற அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும் என்று கருத முடிகிறது.

  ரீக் வேதம் தெய்வங்களை அறிமுகப்படுத்தி அவர்களின் பாதுகாப்பை எப்படி பெறலாம் என்று கூறுகிறது.  யஜூர் வேதம் தெய்வங்களுக்கான சடங்கு முறைகளை விரிவாகக் கூறுகிறது.  சாம வேதம் சோமபானம் முதலிய பொருட்களை உருவாக்குதலை பற்றி கூறுகிறது தெய்வத்தால் மட்டுமே மனிதர்கள் கலப்பில்லாத நன்மைகளை பெறலாம் என்பது இந்த வேதங்களின் பொதுவான கொள்கை ஆகும்.  தெய்வங்களை அடைவதற்கு மனிதர்கள் மனம் என்னும் படகை கொண்டுதான் பயனிக்க வேண்டுமென்று இந்த வேதங்களின் கருத்துகளை ஒட்டி உபநிஷதங்களும் பறைசாற்றுகின்றன.

     அதர்வண வேத பாடல்களும் யாக தேவதைகளை போற்றுகின்றன.  உதவிகளை கேட்கின்றன அதே நேரம் தெய்வங்கள் தரும் உதவி என்பது மனித உடல்களின் அவஸ்தைகளை தவிர்ப்பதாக இருக்க வேண்டுமே தவிர கஷ்டங்களை ஏற்படுத்துவதாக இருக்க கூடாது என்று தெளிவாக வலியுறுத்துகிறது.  ஆத்மாவானது செயல்பட வேண்டுமென்றால் சரீரம் என்பது அவசியம் தேவை ஆத்மாவை தாங்கி நிற்கும் உடல் உயிர் இல்லாவிட்டால் இயங்காது உடலின் இயக்கம் நின்று விட்டால் அதாவது உடலும் உயிரும் தனித்தனி ஆகிவிட்டால் ஆத்மாவால் எதையும் செய்ய முடியாமல் போய்விடும் எனவே உடம்பு என்பது அவசியமான பொருள் என ரிஷிகள் கருதினர்.  எனவே அவர்கள் உடம்பை நோய்களிடமிருந்தும் மற்ற அபாயங்களிலிருந்தும் பாதுகாத்து பத்திரப்படுத்த வேண்டும் என்கின்ற கருத்துகளை முதன்மையாக வைத்து பாடல்களை இயற்றினர். அத்தகைய பாடல்களின் தொகுப்பு தான் அதர்வண வேதமாகும். இந்த வேதத்தில் 5987 பாடல்கள் உள்ளன.  இந்த பாடல்களில் நோய்களிலிருந்து மனிதனை பாதுகாக்கும் படி வேண்டுகின்ற பாடல்களே மிகுதியாக உள்ளது.

    ஆரோக்கியத்தை விரும்பும் கோரிக்கைகள் அதிகமாக பல பாடல்களில் வெளிப்பட்டாலும் கூட வேறுசில பாடல்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கிறது திருமணம் ஆகாத குமரி பெண்களுக்கு திருமணம் வேண்டியும் வயதான பிறகு கூட திருமணம் முடியாமல் தனிமையில் தள்ளாடும் ஆண்களுக்கு தக்க துணை வேண்டியும் குழந்தைகள் இல்லாதவர்கள் மழலைச்  செல்வங்களை பெற்று மகிழ்வுற வேண்டியும் கடவுளிடம் முறையிடும் பாடல்கள் இருக்கின்றன. 

  ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் மலட்டுத் தன்மையை போக்கவும் கருச்சிதைவுகளை தடுத்து நிறுத்தவும் கோரிக்கை வைக்கும் பாடல்களும் உள்ளன.  இது மட்டுமல்ல பொறாமைகளை பொசுக்கும் படி சச்சரவுகளை நீக்கும்படி பேதங்களை மேலெழும்பாமல் அமுக்கும் படியும் கோபத்தை குறைக்கும் படியும் வீடுகட்டிக் கொள்ள உதவி செய்யும் படியும் விதை விதைக்கும் போதும் பயிர்களில் பூச்சிக்கள் பரவும் போதும் விளைச்சல் வீட்டுக்கு வந்து சேரும்போதும் கடவுளை பக்கத் துணையாக இருந்து பாதுகாத்து தரும்படி கேட்கின்ற பாடல்களும் அதர்வண வேதத்தில் உள்ளன.

    ஆயுதங்களைக் கொண்டும் ஆள் பலத்தைக் கொண்டும் வெற்றி பெற முடியாத எதிரிகளை மந்திரங்கள் கொண்டு செயலிழக்கம் செய்ய வைக்கும் வகைகளும் மேலும் பல மாந்திரீக ரகசிய வித்தைகளும் அதர்வண வேதத்தில் ஆழமாக விளக்கப்பட்டுள்ளது.  அதனால் இந்த வேதத்தை மக்களின் வேதம் என்று பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.  காரணம் மக்களுக்கு ஏற்படும் நோய் நொடியிலிருந்தும் அரசுகளுக்கு ஏற்படும் ஆபத்துக்களிடமிருந்தும் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த பிரச்சனைகளிலிருந்தும் வெளிவருவதற்கான அனைத்து விதமான ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் அதர்வண வேதம் காட்டுவதனால் அப்படி அழைக்கப்படுகிறது.

    உதாரணமாக ஜூரத்தினால் துன்பப்படும் மனிதனை காப்பாற்றும் படி அக்னி தேவனை துதிக்கும் ஒரு பாடல் அதர்வண வேதத்தில் இருக்கிறது.  இந்த பாடலை முறையான சந்த லயத்துடன் நோயாளியின் முன்பு பாடினால் எத்தகைய ஜூரமாக இருந்தாலும் ஒரு மணி நேரத்தில் குறைந்து விடுகிறது மேலும் குழந்தை பேரு தருகின்ற மந்திரத்தால் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் தசரதனுக்கு மட்டுமல்ல சாதாரண தச்சுத் தொழிலாளிக்கும் கூட குழந்தை பிறக்கிறது.  இதை நாம் வேதங்களை புகழ்ந்து பேச வேண்டும் என்பதற்காக கூறவில்லை.  எனது சொந்த அனுபவத்தாலும் என் கண்முன்னே மற்றவர்கள் பெற்ற அனுபவத்தாலும் கூறுகிறேன். காய்ச்சலை விரட்டும் அதர்வண வேத பாடலை தமிழ் வடிவில் பார்ப்போம்.

     அக்னி பகவானே ஜூரம் என்ற துர்தேவதையை இங்கே இருந்து விரட்டி அடி.  சோமனையும் வருணனையும் உன்னுடன் சேர்த்துக்கொள்.  அவர்கள் ஆற்றல் மிகுந்தவர்கள் சக்தி தரும் சோமனும் குளிர்ச்சித் தரும் வருணனும் அக்னியாகிய நீயும் திரி சூலம் போல் இணைந்தால் இந்த நோய் தங்கி கொடுமைபடுத்தும் தேவதை புற்களின் மீதும் நெருப்பு குண்டங்கள் மீதும் அமர்ந்திருக்கும் தெய்வங்களே இந்த ஜூரம் என்ற தீயசக்தியை வெகுதூரம் துரத்துங்கள்.

    இந்த தீய சக்தி மனிதனை பிடித்து விட்டால் அவனை அது எப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது.  நெருப்பு குண்டமாக அவனது உடலை மாற்றி சக்திகள் அனைத்தையும் உறிஞ்சி விடுகிறது.  பழங்களின் சாரை உறிஞ்சி விட்டு சக்கைகளை தூர எறிவது போல் மனித உடல்களையும் ஜூரம் செயல்பட முடியாதவனாக மனிதன் மாறிவிடுகிறான்.   முப்பெரும் தெய்வங்களே இந்த தீயவனின் கொட்டத்தை ஒடுக்குங்கள். அவனை கீழே விழ்த்துங்கள்.  மீண்டும் அவன் எழுந்து வராத வண்ணம் குழிதோன்டி புதைத்து விடுங்கள். 

    இதோ அந்த தீயவன் வந்துவிட்டான்.  உடம்பில் குடியேறிவிட்டான். அதற்கான அடையாளங்கள் உடல் முழுவதும் பூரான்கள் போல் நெளிகிறது.   மண்ணில் புதைக்கப்பட்ட விதைகளிலிருந்து சிவப்பு நிற முளைகள் வெளிவருவது போல் உடல்முழுவதும் செம்புள்ளிகள் வரிசையாக பரவி மனிதனை வாட்டுகிறது.  உடல்களை வாட்ட அந்த தீயவன் பிரயோகம் செய்யும் ஆயுதங்கள் தான் இந்த சிவப்பு புள்ளிகளோ தெய்வங்களே விரைந்து வாருங்கள் அவன் ஆயுதத்தின் முனைகளை ஒடித்து போடுங்கள் ஆயுதம் வலுவிழந்து விட்டால் ஒடி விடுவான் அல்லவா.  அவனைதப்பி செல்ல விடாதீர்கள். மறைந்திருந்து மறுபடியும் தாக்குவான் எனவே அவனை புதைத்துவிடுங்கள்

    இவன் எப்போதும் தனி ஆளாக வருவது இல்லை.  இருமல் என்ற சகோதரனையும், எரிச்சல் என்ற தங்கையையும், நடுக்கம் என்ற மாமனையும் இன்னும் வித விதமான உறவு முறைகளையும் அழைத்து வந்து கும்பலாக தாக்குவான் அவர்கள் ஒவ்வொருவன் உருவங்களும் கண்டுபிடிக்க முடியாதவாறு மாயங்கள் நிரம்பியதாகவும் மர்மங்களின் வடிவங்களாகவும் இருக்கும் மரண தேவனே வந்து வைத்தியம் செய்தால் இவர்களின் கொட்டம் அடங்குமோ என்னவோ தெரியவில்லை.  சக்தி மிகுந்த அக்னி தேவதையே கரம் கூப்பி மண்டியிட்டு வேண்டுகிறோம்.  இந்த தீயவர்களை விரட்டு இனிமேலும் தலைகாட்டாதவாறு அடக்கு.    

    மேலே சொன்ன பாடலை மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள் ஜூரத்தை பற்றி மட்டுமல்ல அம்மை நோயின் அறிகுறியை பற்றியும் விளக்கப்பட்டிருப்பதை காண்பீர்கள். மேலும் அந்த தீயவனை புதைத்து விடுங்கள் என்று தேவதைகளை வேண்டுவதை வைத்து பார்க்கும் பொழுது நோயை புதைக்க தெய்வங்களை வேண்டிவிட்டு நோய்பாதித்து இறந்தவர்களை தகனம் செய்யாமல் புதைத்து விடும் பழக்கமும் அக்காலத்தில் இருந்திருப்பதை உணரலாம்.  நோயை விரட்ட பிரார்த்தனை செய்வது மட்டுமல்ல சிகிச்சை முறைகளையும் மேற்கொண்டு இருப்பதற்கான ஆதாரங்கள் தெரிகிறது.

    பொதுவாக அதிகரித்துவிட்ட உடல்  சூட்டை வெளியேற்றுவதற்கு ஜூரமும் வெளியேற்ற கால தாமதமாகியே அல்லது கிருமிகளின் தாக்குதலில் முடியாமல் போனதாலும் அம்மை நோய் வருவது உண்டு.  இந்த நோய்களுக்கு இன்றைய நவீன உலகில் பல மருந்துகள் இருப்பது போலவே வேதகாலத்திலும் குஷ்த்தா என்ற மூலிகைமருந்து கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்திருக்கிறது மலை பகுதிகளில் மட்டுமே கிடைக்கும் அந்த மூலிகையை தெய்வமாகவும் அம்மக்கள் கருதி இருக்கிறார்கள்.  அதை விளக்கும் ஒரு பாடலில் சில பகுதிகளை பார்ப்போம்.

    குஷ்த்தாவே நீ ஜீரத்தை அழிக்கும் தெய்வம் என்னிடமிருந்து அந்த தீயவனை விரட்டி அடித்தது நீ தான்.  உன்னை நான் வணங்குகிறேன்.  உலக தாவரவர்க்கங்களில் தலைவனான உன்னை  மலைகளிள் மீதும் நான் கண்டேன்.  கழுகுகள் கூடுகட்டும் எட்டாத உயரத்தில் நீ இருக்கிறாய்.  நீ எங்களை தாக்கும் ஜூரம் என்ற துர்தேவதையின் வருகையை அறிந்தாலே எந்த உயரத்தில் இருந்தாலும் எங்களுக்காக இறங்கி வருகிறாள்.  இமவானின் மகளான கங்கையை விடவும் வேகமாக நீ எங்களை நோக்கி வருகிறாய்.  நீயே எங்களின் கருவூலம் உனது பெருமையை ஊரெல்லாம் எடுத்துறைப்போம்.

    அரசமரம் என்பது தேவதைகள் குடியிருக்கும் புனிதபீடம் அதன் நிழலில் தான் தெய்வங்கள் வாழ்கிறார்கள். அந்த மரம் சொற்கத்திலிருந்து பூமிக்கு வந்ததாகும்.  தேவர்கள் அதன் நிழலிலிருந்தான் அமிர்தத்தை தயாரிக்கின்றார்கள். இந்த மரத்திற்கு குஷ்தா தனது சக்தியை வழங்கி இருக்கிறது. இதன் பட்டைகளும் வேர்களும் அமிர்தத்திற்கு ஒப்பானது சோமபானம் தயாரிப்பதை போல் இதை தயாரித்து குடித்து ஜூரம் என்னும் விரோதியை ஓட ஓட விரட்டுங்கள்.    

   குஷ்தா என்ற அமிர்தத்தை மலைகளின் மீதும் தேவர்கள் எப்படி அனுப்புகிறார்கள். தலை நகரத்திலிருந்து அரசனானவன் எத்தகைய ராஜ மரியாதையுடன் எல்லை புறத்திற்கு செல்வானோ அதே போலவே குஷ்தாவும் சொர்கத்திலிருந்து மலை முகடுகளுக்கு வருகிறாள்.  அமிர்தமான அவள் வரும்பாதை தங்கத்தால் ஆனது. அது எப்போதும் ஒளிமயமாகவே இருக்கும் தங்கரதத்தில் அவள் வருவாள். அவள் தேரை இழுக்கும் குதிரைகள் தங்க நிறமானது.  அவைகளும் வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டே இருக்கும் உயர்ந்தவர்களால் தயாரிக்கப்பட்டு உயர்ந்த வாகனத்தால் குஷ்தா என்ற அமிர்த தேவதை நம்மையும் உயர்த்துவாள் இவள் நமது அருகாமையில் வந்துவிட்டாலே போதும் நம்மை படுக்க வைக்கும் புரள வைக்கும் இம்சை செய்யும் ஜூர அசுரன் பயந்தே ஒடிவிடுவான்.  எனவே குஷ்கா தேவதையை துதிப்போம்.

     ஜூரம் அம்மை நோய் போலவே தலைவலி இருமல்,  மஞ்சள் காமாலை போன்ற நோய்களையும் குணப்படுத்த கோரும் பாடல்களும் அதர்வண வேதத்தில் இருக்கிறது.  இந்த நோய்கள் மின்னல்களால் ஏற்படுவதாக வேதகால மக்கள் நம்பினர்.      அதற்கு காரணம் மழையில் நனைந்து நோய் வந்தாலும் கூட அதற்கான குற்றத்தை தானியங்களை விளைவிக்க வரும் மழையின் மீது சுமத்த வேதகால மக்கள் விரும்ப வில்லை வானை கிழித்து கண்ணை பறிக்கும் மின்னல் மீது சுமத்தினால் நன்றி கொன்ற தன்மையிலிருந்து தப்பித்து விடலாம் என்று நம்பினார்கள்.  மின்னலால்தான் ஜூரம் நோய் வருகிறது என்ற நம்பிக்கையில் எழுந்த பாடலை பார்ப்போம்.

     மேகங்களின் கருப்பையில் இருந்து சிவப்புவண்ண எறுது ஒன்று வெளிவருகிறது. காற்றும் மழையும் இடியும் அதன் பிரசவத்தை கவனித்துக் கொள்கின்றன.  அப்படி பிறக்கும் மின்னல் என்னும் எறுது நம்மீது பாயாமல் நேராக போகட்டும் காரணம் அவன் அடிக்கடி வராவிட்டாலும் அத்திமரப்பூபோல் தாக்குதலுக்கு ஒரு முறை ஆளானாலே போதும் நாம் சின்னாபின்னமாகி விடுவோம்.

    குளிர் நோய்களின் அன்னை மின்னலே ஆகும்.  இவனால் தொடப்பட்டவர்கள் நிம்மதியை இழந்து விடுவார்கள்.  நம்மை இவன் ஒடுக்குகிறான், வதைக்கிறான், நடுநடுங்கசெய்கிறான் இவன் இறங்குவதற்கான இடம் மலைகளும் வெட்ட வெளிகளும் தான் எங்கள் வீடுகள் அல்ல அதோ விண்ணை நோக்கி மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.  பாம்புகளைப் போல் மலைகள் படுத்து கிடக்கின்றன.  வெட்டவெளி பிரதேசமோ மடிவிரித்த அன்னை போல் மலர்ந்து கிடக்கிறது. நீ அவர்களை தாக்கு அவர்கள் பலவான்கள் பதிலுக்கு அவர்கள் உன்னை தாக்குவார்கள்.  அல்லது உனது தாக்குதலையாவது தாங்கி கொள்வார்கள்.   

     பலசாலிகளை விட்டுவிட்டு பலஹீனர்களை தாக்குவது வீரனுக்கு அழகல்ல சண்டை போட தகுந்த மல்லர்கள் இருக்கும் போது குழந்தைகளிடம் மல்லுக்கு நிற்பது பாராட்டக் கூடிய செயலாகாது அதனால் எங்களை விட்டு விடு நாங்கள் இன்னும் கொஞ்ச காலம் வாழ விரும்புகிறோம் அதற்குள் எங்களை விறகுகளின் மேடைகளில் படுக்க வைத்துவிடாதே.

    நாங்கள் இந்த மண்ணில் நெடுங்காலம் வாழு ஆசைபடுகிறோம்.  நூறு கோடைகாலத்தையும் நூறு குளிர் காலத்தையும் பார்க்க விரும்புகிறோம். இந்திரனும்,  அக்னியும்,  பிரகஸ்பதியும் இதற்கான வரத்தை தரசித்தமாக இருக்கிறார்கள்.  மரண தேவன் கரம் நீட்டி அழைக்கும் பொழுதெல்லாம் எங்களை காப்பாற்ற தேவாதி தேவர்கள் தயாராக இருக்கிறார்கள்.   நல்ல பழங்கள் கனிந்து தொங்கும் போது அதை விட்டுவிட்டு பச்சை காய்களை கடித்து துப்பும் குருங்கை போன்று எங்களை குதறி விடாதே மற்ற தேவர்கள் எங்கள் மீது கருணையை பொழியும் பொழுது நீ மட்டும் நெருப்பை உமிழ்வது நீதியாகாது.

     வாயு தேவனே நீ அண்ட சராசரங்களில் உணர்ந்து கொள்ள முடியாத எத்தனையோ இடங்களில் தங்கி இருக்கிறாய்.  இந்த பூமியும் நீ வாழுகின்ற இடமாகும் அது மட்டுமல்ல எங்களது உடலும் நீ வாசம் செய்யும் பகுதியே ஆகும். நீ உள்ளே போகிறாய்.  வெளியே வருகிறாய் நாங்கள் தூங்கும் போதும் மயங்கும் போதும் கூட நாங்கள் அறியாமையிலேயே நீ இந்த செயலை செய்துகொண்டிருக்கிறாய் தயவு செய்து இத்தகைய வேலையை நிறுத்தாமல் தொடர்ச்சியாக எங்களிடத்தில் செய் உனது பயணத்தை எங்களிடம் இருந்து நீ துண்டித்துக் கொண்டால் மரணத்தில் வலையில் நாங்கள் விழுந்து விடுவோம்.  யம ராஜனை வெல்லும் தகுதி உனக்குதான் இருக்கிறது. கரங்களை கூப்பி சிரங்களை தாழ்த்தி உன்னை வணங்குகிறோம்.  நமது உறவு வெகு நாள் நீடிக்க வேண்டும்.   

    மனிதனே நீ மயங்காதே உனது நினைவுகளை தவறவிடாதே ஆயிரம் கயிறுகள் விண்ணை நோக்கி உன்னை இழுத்தாலும் மண்ணில் இருக்க தைரியத்துடன் போராடு ஆத்மாவை உதறித்தள்ள விரும்பாதே யம தூதர்கள் உன்னை அழைக்கலாம் வண்ண மயமான சொர்க்கம் உன் கண்ணில் தெரியலாம் அதனால் தூதர்கள் பின்னால் செல்ல நினைக்காதே இந்த மண்தான் உனது வீடு இதை மறக்காதே மருந்துகளை ஏற்றுக் கொள்ள தயங்காதே இதை ஏற்றுக் கொள்ள உன்னை பயம் தடுக்கிறதா யமனை விரட்டும் போர்வீரர்கள் உன்தாயும் தகப்பனும் சகோதரியும், சகோதரனும் மருந்துகளே ஆகும்.

     நோய்கள் உன்னை வதைக்கும் விதத்தை பார் எதற்கும் உதவாவதனாக அவைகள் உன்னை மாற்றுகிறது.  பாறைபோல் உன்மேல் ஏறி அமாந்து கொண்டு அழுத்துகிறது. ஆற்றில் துவைத்த துணியை ஈரம்போக பிழிவதைபோல் உன் சரீரத்தையும் பிழிந்தெடுக்கின்றனர். நோய் என்னும் கொடிய மிருகத்தை கொன்று வீழ்த்தும் ஆயுதம்தான் மருந்துகள் இந்த மருந்து உனது உடலுடன் கலந்து விட்டால் நோய்கள் வந்தவழியே இந்திரனைக் கண்டு அசுரப்படைகள் போல் ஒடி ஒளிந்து விடும்.

    இன்னும் பல நோய்களை பற்றியும் அவைகளை விளக்குவதை பற்றியும் ஏராளமான பாடல்களில் விவரித்து கூறப்பட்டுள்ளது.  அவைகளெல்லாம் ஏறக்குறைய இப்போது கூறப்பட்ட பாடல்களின் சாயலிலே இருப்பதனாலும் அதை பயன்படுத்தும் முறைகளை பற்றி நாம் இப்போது பேசப் போவதில்லை என்பதாலும் வேறு வகையான பாடல்களை சிந்திப்போம் பெண்கள் தக்க பருவம் வந்துவிட்டால் அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து விடுவது நமது மரபாகும்.   பெண்களின் திருமணம் என்பது சமுதாய அந்தஸ்டோடும் பொருளாதார நோக்கத்தோடும் இணைக்கப் பட்டிருப்பதால் மற்ற நாடுகளை விட நமது நாட்டின் திருமணத்திற்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  குறித்த காலத்தில் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெறாவிட்டால் பெற்றோர்கள் அதை பெரும் பாரமாகவும் கவலையாகவும் கருதுகிறார்கள்.  அதனால் திருமணம் நடைபெற வேண்டி தெய்வீக சடங்குகள் பல செய்கிறார்கள் இந்த வழக்கம் இன்று புதிதாக தோன்றியது அல்ல வேதகாலத்திலும் இருந்திருக்கிறது.  அப்படிப்பட்ட ஒரு சடங்கில் ஒதப்பட்ட பாடலை இப்போது பார்ப்போம்.

     அக்னியே இந்த இளம்பெண்ணுக்கு எல்லா விதத்திலும் பொருத்தம் உள்ள கணவனை கண்டுபிடித்து கொடுப்பாயாக அவன் இவளது இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பட்டும். அவன் இவளது வாழ்வில் அதிஷ்ட பொக்கிஷமாக அமையிட்டும் திருமணமான பிறகு அவனால் இவளுக்கு களிப்பு ஏற்படட்டும். திருவிழா காலங்களில் இருவரும் இனிமையை அனுபவிக்கட்டும். இந்த திருமணம் சோமனின் அங்கிகாரத்தை பெற்றதாகட்டும்.  பிரம்மனும்  இதற்கு இணக்கம் தெரிவிக்கட்டும் ஆயமான் என்னும் தெய்வம் திருமணத்தை முடித்து வைக்கட்டும். தாதர் என்னும் கடவுளும் தயங்காமல் ஆசிர்வாதம் செய்யட்டும்.  எல்லாத் தெய்வங்களும் இணைந்து தேடி கொடுத்த சௌந்தர்யம் நிரம்பிய வல்லமை பொருந்திய கணவனால் மகிழ்ச்சியை இவள் முழுமையாக அனுபவிக்கட்டும். அந்த மகிழ்ச்சி நெடுநாள் தொடரட்டும்.

    இந்த பெண்ணுக்கு விரைவிலேயே கணவன் வருவான் அது உறுதி ஏனென்றால் இவள் அழகும். அறிவும் அடக்கமும் நிறைந்தவள்.  இவளுக்கு அழகை கொடுத்த  சோமன் கணவன் வராமலா தடுத்து விடுவான் பெண்ணே உனது கணவனுக்கு நீ ராணியாக இரு அவன் உன்னை நெருங்கும் போது இனிமையான ஒளி உன்னிடமிருந்து பிரகாசிக்கட்டும். அவன் குழந்தைகளை வம்சம் தழைக்க சுமந்து கொடு செல்வத்தின் அதிபதியான இந்திரனே இவள் எத்தனை நாளைக்கு தனிமையில் இருப்பாள்.   சிதறிகிடக்கும் மாமிசத்துண்டுகளை கழுகுகள் கொத்துவது போல் தனிமையில் இருக்கும் இவளை மற்றவர்கள் கண்கள் கொத்தாதா.  அதனால் இவளுக்குரியவனை ஆணையிட்டு அழைத்து வா உனது ஆணைக்கு கீழ் படியாத யாரையும் பூமியில் உண்டா இவளை மணக்க இருக்கும் இளைஞனின் மனதை இவளோடு இணைத்துவிடு.

     திருமணம் முடிவதற்கு எத்தகைய பிரயத்தனங்களை வேதகால மக்கள் செய்தார்களோ அதே அளவிற்கு கடுமையான முயற்சிகளை ஆண் குழந்தைகளை பெறுவதற்காகவும் செய்தனர். ஏனென்றால் ஆண்களின் பலம்தான் அவர்கள் சமூகத்தை பாதுகாத்து பகைவர்களிடமிருந்தும், கொடிய மிருகங்களிடமிருந்தும் ஆபத்து வராமல் தடுக்க முடியும் என்று நம்பினர். அந்த காலத்தில் பெண்களும் இந்த காரியத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என்றாலும் கூட ஆண்கள் தான் மிக முக்கியமாக இப்பணிகளை ஏற்றிருந்தனர். பகைவர்களோடும். மிருகங்களோடும் சண்டையிடுகின்றபோது ஆண் மக்கள் பல நேரங்களில் இறந்து விடுவதும் உண்டு அந்த காலி இடத்தை நிரப்புவதற்காக அடுத்தடுத்து ஆண்கள் பிறந்தால்தான் படைமாட்சி என்பது சிறப்புடன் இருக்கும் அதற்காக ஆண் குழந்தைகள் அதிகமாக வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அதனடிப்படையில் தேவதைகளிடம் வேண்டுதலையும் வைத்தனர்.  அந்த வேண்டுதல் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
   
    இவளது கர்ப்பபையில் ஒரு ஆண் சிசு உருவாகட்டும்.  அதற்காண வித்து வில்லிலிருந்து பாயும் அம்பைபோல் இவள் கருவளைக்கு விரையட்டும் பத்து  மாதங்கள் நிறைவடைந்த பிறகு வீரத்திருமகனாக இந்த பூமியில் ஜனனம் எடுக்கட்டும் பெண்ணே உனது குழந்தைக்கு பால் கொடுக்கின்ற பொழுது உன் முலைக்காம்புகள் பசுவின் மடிக்காம்புகளாக மாறட்டும்.  காளை போல் உனது மகன் வீரமுடன் வளரட்டும். சக்தி மிகுந்த தாவரங்களிலுள்ள மூலிகைகளை நீ அருந்து அந்த மூலிகைகளின் தகப்பன் மழை மேகங்கள் உலா வருகின்ற ஆகாயமாகும்.  தாயோ உள்ளதை எல்லாம் வாரிக் கொடுக்கும் பூமி ஆகும். பூமிக்கும் ஆகாயத்திற்கும் பிறந்த மூலிகையை நீ அருந்துவதினால் உனது ஆண் மகவு நோய்களை எதிர்த்தும் வல்லமையோடு கூடியும் பிறப்பான்.

     கரு உருவாக மட்டுமல்ல உருவான கரு சிதையாமல் முழுமையான குழந்தையாக பிறப்பதற்கான மந்திரப்பாடலும் அதர்வண வேதத்தில் இருக்கிறது. இந்த மண் எத்தனை வகையான மரவிதைகளை தனக்குள் ஏற்றுக் கொண்டு செழுமையாக வளர விடுகிறது. அதே போல இவளது கருப்பையும் ஒரு குழந்தையை உறுதியாக ஏற்கட்டும். இந்த மண்ணில் எத்தனை வகையான பறவைகளும், விலங்களும் வளருகின்றன.  அதே போன்று இவளது மணி வயிற்றிலும் மழலைச் செல்வம் கருகாமல் வளருட்டும் என்ற பாடல் வரிகள் கருச்சிதைவை தடுக்க கோரி நிற்கின்றது.

    அடுத்ததாக அமானுஷ்யமான விஷயங்களை பற்றி கூறும் வேத பாடல்களை சிந்திப்போம் அதர்வண வேதத்தில் வசியம் முதலான அஷ்டகர்மங்கள் தெளிவாக கூறுப்பட்டுள்ளது இந்த அஷ்டகர்மங்களை தந்ர சாஸ்திரபடி பிரயோகம் செய்து மனிதன்,  விலங்குகள் இயற்கை சக்திகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் வழி வகைகள் கூறப்பட்டிருக்கிறது. இந்த வழிமுறைகள் அனைத்தையும் கடும் முயற்சியுடனும் தூய பிரம்மச்சரிய விரதத்துடனும் பழக்கப் படுத்திக் கொண்டான் சாத்தியமே இல்லாதது என்று ஒதுக்க கூடிய அனைத்தையும் சாத்தியப்படுத்திக் காட்டலாம் என்பதை எனது சொந்த அனுபவத்தில் நான் நன்கு அறிந்திருக்கிறேன்.  இருந்தாலும் அந்த வழி முறைகளை பற்றிப் பேசுவது இந்த நூலின் நோக்கம் அல்ல என்பதனால் அதர்வண வேதத்திலுள்ள பேய்களை விரட்டும் மந்திரப் பாடல்   ஒன்றை தமிழ்படுத்தி தருகிறேன்.  இதை படித்தாலே அதர்வண வேதத்திலுள்ள மந்திர சாஸ்த்திரத்தின் நுட்பத்தை ஒரளவு தெரிந்து கொள்ளலாம்.

     ஏவலின் மூலமாக ஒரு பெண்ணிடத்தில் தீய சக்தி குடி புகுந்துவிட்டது அவள் மணமானவள் அதனால் அவளுக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கண்டு அந்த கவலையை போக்கி அந்த பெண்ணை சகஜ நிலைக்கு கொண்டு வர ஒரு ரிஷி முயற்சிக்கிறார்.  அப்போது அவர் பிரயோகம் செய்த மந்திரத்தின் தமிழ் வடிவம் இதோ உங்கள் முன்னால் தருகிறேன்.

    இவளிடமிருந்து தீய சக்தியே நீ ஒடிவிடு உன்னால் இவள் படும் பாடுகள் போதும் இவள் கைகள் குணமாகட்டும்.  அங்கே அழகு திரும்பட்டும் இவளை விட்டு நீ ஒடிவிட்டால் பழைய நிலைக்கு இவள் வந்துவிடுவள் திருமணம்  முடிந்து கணவனை சந்தித்த நானத்துடன் கால் எடுத்து வைக்கும் போது எப்படி இவள் அழகு பொருந்தியவளாக இருந்தாளோ இவள் மேனியில் அழகு தேவதை எத்தகைய வர்ணஜாலங்களை நிரப்பி இருந்தாளோ  அதே வடிவத்தை இவள் மீண்டும் பெறுவாள்

   குடி வெறியில் ஆட்டம் போடும் குரங்கை போன்று குதித்து கும்மாளம் அடிக்கும் தீய சக்தியே எனது கையிலுள்ள மந்திர தண்டத்தை நன்றாக பார் இதனால் உன்னை தண்டிக்கும் முன்னால் ஒடி விடு நீ போய் விட்டால் இவளது குடும்பம் அமைதி அடையும் உன்னை ஏவி விட்டது யார் அவன் சூத்திரனா அரசகுமாரனா, அந்தன புரோகிதனா, அழகுடைய வைசீக பெண்ணா அது யாராக இருந்தாலும் அவர்களிடமே நீ திரும்பி விடு மறுத்தால் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணை போல் நீ கதறப்போகிறாய் அடிப்பட்ட கழுதையை போல் துடிக்கப்போகிறாய் எனது மந்திரங்கள் சூரியனிலிருந்து புறப்பட்ட கதிர்கைள போல் உன்னை சுட்டுவிடப் போகிறது.  

    நீ நெருப்பில் விழுந்த பஞ்சு போல சாம்பலாகப் போகிறாய் இனி உன் வேலை நடக்காது உன்னை கால்களையும் கைகளையும் இணைத்து கட்டப்போகிறேன். உனது தலையை பின் புறமாக திருப்பப் போகிறேன்.  உன் விரல் நகங்களை தலைமுடியை இரும்பு கம்பியில் சுற்றி முறுக்கப்போகிறேன்.  எனது மந்திர வார்த்தைகள் உனது உடலெங்கும் துளைகளை போடட்டும். உனது இரண்டு செவிகளும் வவ்வால்களைப்போல் அருந்து தொங்கட்டும் இதோ உன்னை மந்திரச் சக்கரத்தில் உட்கார வைகிறேன். எனது மந்திரங்கள் கத்தியை போலவும்,  ஈட்டிகளை போலவும் உன் நெஞ்சை பிளக்கப்போகிறது.

    அதிலிருந்து தெரிக்கும் பச்சை ரத்தத் துளிகள் உனது மேனி எங்கும் நெய்போல் பரவும் அக்னி தேவனின் செந்நிற நாக்குகள் உன்னை சாம்பலாக்கப் போகிறது விழிகள் பிதுங்க கோரை பற்கள் நீல நாக்கைத் தொங்கவிட்டு கருத்த மேனியுடன் பருந்த சதைகளோடு ஆட்டம் போடும் ஆலகால விஷமே நீ அழிந்து போ நீ வாசம் செய்யும் இந்த பெண்ணின் உடல் புனித அடையட்டும் புது பொலிவு பெறட்டும் என்பதாக அந்த பாடல் தொடர்ந்து செல்கிறது.

    மனித தேவைகளை நிறைவேற்ற வழிகூறும் அதர்வணவேதம் பிரம்மத்தை பற்றியும் ஆத்மாவைப் பற்றியும் நிறைவே பேசுகிறது இருப்பினும் அந்தக் கருத்துக்கள் ரிக் வேத சிந்தனைகளோடும் உபநிஷத தத்துவங்களோடும் பெருவாரியாக ஒத்து போகிறது எனவே அதைப்பற்றி அதாவது உபநிஷத தத்துவங்களை பற்றி அடுத்த அத்யாயத்தில் ஆழமாக சிந்திக்க போவதினால் இங்கே அதைப்பற்றி சொல்லாமல் விடுகிறேன்.

    அதர்வண வேதம் மற்ற மூன்று வேதங்களைக் காட்டிலும் மக்களோடு இணைந்து வருவதினால் தனிச்சிறப்பு உடையது என்றே சொல்லலாம்.   ஒரு தகப்பனும் ஆச்சாயனும் வருங்கால தலைமுறைகளுக்கு சிக்கல்களை தீர்த்துக் கொள்ள எவ்வாறு வழிமுறைகள் கற்றுதருவார்களோ அதே போலவே அதர்வண வேதமும் மனிதன் வாழ்வில் ஏற்படும் சிறு சிக்கல்களிலிருந்து பெரிய சிக்கல் வரை ஏற்படாமல் தடுக்கவும் ஏற்பட்டால் அதிலிருந்து விடுதலை பெறவும் வழியை சொல்கிறது.  எனவே அதர்வண வேதத்தை மக்களின் வேதம் என்று அடித்துச் சொல்லலாம்.

இந்து மத வரலாற்று தொடர் - 7


இசைக்கு மயங்கி வருபவனாக இறைவனை சொல்லுவார்கள்.  இறைவனே இசை வடிவம் தான் என்றும் கூறுவார்களும் உண்டு.  இசைக்கு இத்தகைய முக்கியத்துவம் கொடுக்கின்ற பாங்கு இன்று நேற்று வந்தது அல்ல.  வேத காலம் தொடங்கிய வருகின்ற மரபாகும்.  அதனால் தான் நான்கு வேதங்களில் மூன்றாவதாக கருதப்படும் சாம வேதம் இசை வடிவமாகவே இருக்கிறது.  இறைவனான திருமால் பகவத் கீதையில் தன்னை சாம கீதமாக இருப்பவனாக குறிப்பிடுகிறான்.  சிவ பெருமானும் சாமகீதப் பிரியன் என்று போற்றப்படுகிறார்.  சாம வேதத்தின் நாத அலைகள் மனதை மட்டுமல்ல உடலையும் உறுக்கும் சக்கி வாய்ந்தது.  எங்கெல்லலாம் சாம வேதம் முறைப்படி ஓதப்படுகிறதோ அங்கெல்லாம் பயிர் பச்சைகள் செழிப்புடன் வளர்வதை அனுபவத்தில் காணலாம்.  இதனால் தான் சாம வேதத்தை சாமகானம், சாமகீதம், சாமபாடல் என்று இசையின் பெயரிட்டே அழைக்கிறார்கள்.

  இந்த வேதத்தில் சம்ஹிதை பகுதிகளில் இருக்கும் பாடல்களில் எண்ணிக்கையை பற்றிய கருத்து பேதங்கள் இன்று வரை நீடித்து வருகிறது.  சில சாமவேத உரையாசியர்கள் 1575 பாடல்கள் தான் உள்ளது என்று சொல்கிறார்கள்.  வேறு சிலரோ 1603 பாடல்கள் என்று சொல்லுகிறார்கள்.  பாடல்களின் எண்ணிக்கை கூடுவதாகவோ குறைவதாகவோ இருந்தாலும் அனைவரும் ஒரு பொது முடிவை ஒப்புக் கொள்கிறார்கள்.  அந்த பொது முடிவு என்னவென்றால் சாம வேதம் என்பது தனி ஒரு பிரிவாக இருந்தாலும் இதிலுள்ள பெருவாரியான பாடல்கள் ரிக் வேதத்திலிருந்தே எடுக்கபட்டிருக்கிறது என்பதாகும்.  சாம வேதத்திற்கென்று தனியாக கண்டெடுக்கப்பட்ட பாடல்கள் 99 பாடல்கள் தான் என்பது எல்லோரும் ஒத்துக் கொள்ளும் முடிவாகும்.

  சாம வேதத்தை ஆறு வகையான சந்த வகைகளில் பாராயணம் செய்கிறார்கள்.   அந்த ஆறு வித ஒலி அமைப்பிற்கு ரதந்தரா, பிரகத், வைரூபா, வைராஜா, ஷிக்வாரா, ரைவாதா என்று பெயரிடப்பட்டுள்ளது.  பாடும் போது ஒலிகளை ஏற்றியும் சமப்படுத்தியும் இறக்கியும் பாடுவதை பொருத்து இந்த ஆறு முறைகளும் பயன்படுத்த படுகிறது.  சாமகானத்தை பாடுவதற்கு வேத காலத்தில் ஒரு நெறி பின்பற்றப்பட்டது.  அதாவது சோமரசத்தை தயாரிக்கும் போது தான் இந்த வேதத்தை ஓத வேண்டும் என்பது அந்த நெறியாகும்.

   சோமபானம் என்றால் என்ன?  வேதங்களைப் பற்றியும் வேதகால மக்களைப் பற்றியும் பேச்சு எழும்பொழுதெல்லாம் சோம பானத்தை பற்றிய பேச்சு தானாக வந்துவிடுகிறது.  நம்மில் நிறைய பேர் சோம பானம் என்பது ஆதிகால சாராயம் என்றே நம்புகிறோம்.  உண்மையில் சோமபானம் போதை தருகின்ற சாராய வகையை சார்ந்தது தானா அல்லது உடலுக்கு தெம்பூட்டக்கூடிய சக்தி மிக்க பானங்களின் ஒன்றோ என்பது பற்றி ஆராய்ச்சி செய்யவும் விடைகானவும் அனைவருக்கும் ஆவல் எழும்புவது இயற்கைதான்.  அந்த ஆவலை நிவர்த்தி செய்து கொள்ள வேதங்களை நுண்ணியமாக ஆராய்ந்த போது அது போதை தரும் பானம் தான் என்ற அதிர்ச்சியான உண்மை தெரியவந்தது.  இதில் என்ன அதிர்ச்சி இருக்கிறது?  சோம பானம் என்றாலே போதை வஸ்து என்று தானே நம்பிக் கொண்டிருக்கிறோம் அது அப்படி அல்ல என்று தெரிய வந்தால் அதிர்ச்சி ஏற்படலாம் இதில் ஒன்றுமே வியப்பு இல்லையே என்று சிலர் எண்ணக்கூடும்.

 பொதுவாக நாம் பூஜைகள் போன்ற புனிதமான காரியங்களுக்கு மது மாமிசங்களை படையல் செய்வதையோ பயன்படுத்துவதையோ கீழ்தரமானதாகவே கருதி வருகிறோம்.  கிராம புற தேவதைகளான ஐயனார், வீரன் போன்றவர்களுக்கு சாராயம், சுருட்டு படைத்து வழிபடுவதை அனாகரீகம் என்றே கருதுகிறோம்.  நாம் இன்று கீழ்தரமாக எண்ணுவதும் அனாகரீகம் என்று கருதுவதும் ஒரு காலத்தில் வழிபாட்டின் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது.  காலம் செல்ல செல்ல மக்களின் மனதும் அறிவும் வளர வளர வழிபாட்டு முறைகளில் பல வித மாறுபாடுகள் ஏற்பட்டு இருக்கிறது.  இந்த உண்மையை சுலபமாக நாம் மறந்து விடுகிறோம்.  இன்று நாம் செய்கின்ற வழிபாடுதான் நாகரீகமானது வேதங்களின் அங்கிகாரம் பெற்றது என்று கருதிக் கொண்டு மாறுபட்ட வழிபாட்டு முறைகளை கேலி செய்து வருவது விந்தையிலும் விந்தை அல்லவா.

  சோமன் என்ற வார்த்தை சந்திரனை குறிக்கும்.  அதே போன்றே சோமபானம் என்ற வார்த்தையும் சந்திரனின் ரசம் என்ற அர்த்தத்திலேயே அழைக்கப்படுகிறது.  இதனால் இப்பானம் நேரிடையாக சந்திர கிரகணங்களை கிரகித்து உருவாக்கப்பட்டது என்ற பொருளை ஏற்றுக் கொள்ள முடியாது.  சந்திரன் உதயமாகி நடுவானத்திற்கு வருகின்ற பொழுது இந்த பானம் தயாரிக்கப்படுவதினாலும் சோமக் கொடி என்ற மூலிகையின் வேர் பகுதியை பயன்படுத்த உருவாக்கப்படுவதினாலும் இதற்கு சோமபானம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.  வேதங்களில் சோமபானம் தயாரிக்கும் முறை மிக அழகுடன் விவரிக்கப்பட்டுள்ளது.

  சோமக் கொடிகள் செழித்து வளர்ந்திருக்கும் மலையடிவாரத்திற்கு சென்று அதன் வேர்பகுதிகள் சேகரிக்கப்படும் அப்படி சேகரிக்கப்பட்ட வேர்கள் ஆடுகள் இழுக்க கூடிய அழகிய சிறு வண்டிகளில் வைத்து ஊர் புறத்திற்கு கொண்டுவரப்பட்டு நேர்த்தியான முறையில் குறிப்பிட்ட பகுதியில் அடுக்கிவைக்கப்படும்.  சோம பானத்தை சுலபமாக எல்லோரும் தயாரித்து விட முடியாது.  அதை தயாரிப்பதற்கு 20-லிருந்து 25-வயது நிரம்பிய இளைஞர்கள் 12-பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  அவர்கள் 12-நாள் கடுமையான விரதம் இருக்கவேண்டும்.  முதல் மூன்று நாட்கள் ஒரு வேளை உணவு மட்டுமே அருந்த வேண்டும்.  அதை தொடர்ந்து வரும் ஆறு நாட்கள் ஒரு வேளை உணவையும் சமைக்காமல் பிச்சை எடுத்து உண்ண வேண்டும்.  கடைசி மூன்று நாட்கள் உணவு எதுவும் உட்கொள்ளாமல் சோமபானம் தயாரிக்க ஆரம்பிக்க வேண்டும்.  சோமச் செடிகளின் தண்டுகளையும் இலைகளையும் விறகுகளாக்கி மண்பான்டத்தில் சுத்தமான நீரை நிரப்பி சோம வேர்களை அதில் வைத்து காய்ச்ச வேண்டும்.  இப்படி காய்ச்சும் பொழுது தேர்ந்தெடுக்கப்பட்ட வேத விற்பன்னர்கள் சூழ்ந்து நின்று சாம வேதத்தை கானம் செய்வார்கள்.  வேத கானத்துடன் தயாரிக்கப்படும் சோமரசம் யாகங்களில் படைக்கப்பட்டு பங்கு பெற்ற அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.

  சோமபானத்தை வேதகால மக்கள் யாகங்களின் போது மட்டுமே பயன்படுத்தினர்.  போதை தருகிறது என்பதற்காக மற்ற நேரங்களில் அது பயன்படுத்தப் படவில்லை.  காரணம் என்னவென்றால் சோமபானம் தெய்வங்களுக்குய புனிதப் பொருளாக கருதப்பட்டது.  சோமன் என்ற சந்திர தேவன் பிரளயம் ஏற்பட்டு உலகமெல்லாம் அழிந்த பிறகும் நீடித்து நிலைத்திருப்பவனாக கருதப்பட்டான் அப்படி நிலையான சந்திர தேவன் தருகின்ற சோமபானம் அதை அருந்துபவர்களையும் நிலையாக ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும் என்ற நம்பிக்கை அக்கால மக்களிடத்தில் ஆழமாக வேரூன்றி இருந்தது.  அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஆரோக்கியம் தரும் சோமத்தை தயாரிக்கும் பொழுது ஆனந்தத்தை தரும் சாமவேதம் ஓதவேண்டும் என்ற நெறி நடைமுறையில் இருந்தது.

 இனி சாம வேத கருத்துகளை சிறிது சிந்திப்போம்.  இந்த வேதத்தின் முதல் பாடல் அக்னி தேவனை ஆராதனை செய்கிறது.  சோமரசம் உற்பத்தியாக அக்னி பெரும்பங்கு ஆற்றுகிறதல்லவா.  அதனால் அவனுக்கு அர்ப்பணம் செய்யும் முறையிலேயே இப்பாடல் அமைந்திருக்கிறது.  இந்த முதல் பாடல் 10 பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளது.  பரத்வாஜ மகரிஷி 5 பகுதிகளையும் மேதாதிதி, உசானா, புருமீதா, வத்ச, வாமதேவர் ஆகியோர்கள் ஒவ்வொரு பகுதியையும் பாடி இருக்கிறார்கள்.  இனி அந்த பாடலின் முழுக்கருத்தையும் பார்ப்போம்.

  அக்னியே இங்கே வா.  உனக்காக ஆடம்பரமான விருந்தொன்று காத்திருக்கிறது.  உனது பெருமைகளை ஒன்றன் பின் ஒன்றாக நாங்கள் அடிக்கி கொண்டே போகிறோம்.  எல்லா தெய்வங்களுக்கும் நீனே தூதுவனாக செயல்படுகிறாய்.  உன் மூலமாகத்தான் தெய்வங்கள் எல்லா விதமான ஆகுதிகளையும் எடுத்துக் கொள்கிறது.  இத்தகைய தகுதி வாய்ந்த நீ எங்களை காக்க வேண்டும்.  புனிதமான தர்பை புல் மூலம் உனக்கு இருக்கை செய்யப்பட்டுள்ளது.  அதில் வந்து நீ கம்பீரத்துடன் அமர்ந்துக் கொள்.

  மனிதர்கள் வாழுகின்ற பூமியெங்கும் சடங்குகள் நடத்தப்படுகின்றன.  அந்த சடங்குகளில் புனிதமான நெருப்பே எப்பொழுதும் மூட்டப்படுகிறது.  அந்த நெருப்பு அக்னி தேவனான உனது அழகிய வடிவமென்றோ உனது திவ்யமான நெருப்பு சரீரத்தில் தான் நாங்கள் எல்லா தேவர்களையும் தரிசனம் செய்கின்றோம்.

 அக்னியே நீ தெய்வங்கள் அனைத்திற்கும் பிரதிநிதியாகிறாய்.  அதனால் செல்வங்கள் அனைத்திற்கும் நீயே அதிபதி.  இந்த தெய்வீக திருச்சடங்கு குற்றமின்றி அமைய எங்களுக்கு துணை செய்.

  எங்களை நோக்கி வரும் எல்லாவிதமான துன்பங்களையும் பகைவர்களையும் வதம் செய்வது நீதான்.  நாங்கள் பெற்றிருக்கும் செல்வங்களெல்லாம் உன்னுடையது தான்.  இப்படி அனைத்தையும் தரும் உன்னை துதிக்கவும் வணங்கவும் இந்த ஒரு பாடல் போதுமா போதாது அதனால் உன்னை வணங்கும் பாடல்கள் பெருகி கொண்டே போகிறது.  ஒளிமயமான தேகத்துடன் வருகின்ற தேவா எங்களது துதிகள் அனைத்தும் உனக்கே அர்ப்பணம்.

 அக்னியே புகழுக்கு தகுதியானவனே நீயே எங்களது இனிய விருந்தினர்.  நம்பிக்கைக்குரிய நண்பன்.  அறிவை நாங்கள் அடையும் பாதையை எங்களுக்கு காட்டும் வழிகாட்டி நீ.  அறிவுப் பாதையில் நாங்கள் சுகமாக பயணம் செய்ய குதிரைகள் பூட்டிய தேர்போல் நீ உதவுகிறாய் எங்களை சுற்றி கொடிய பகைவர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் கண்களிலிருந்து வெறுப்பும் பொறாமையும நிரம்பி வழிகிறது.  அவர்களின் தாக்குதலிலிருந்து எங்களை பாதுகாவல் செய்.  உன்னை போற்றுவதில் உண்மையான சொற்களே பயன்படுகிறது.  அவற்றில் எதற்காக வாய்மை இல்லாததை சேர்க்க வேண்டும்.  உனை போற்றும் உண்மைகள் எங்கள் இதய ஆழத்திலிருந்து ஊற்றெடுக்கிறது.  அந்த ஊற்றின் உருவகமாக சோமபானம் இருக்கிறது.  சோமரசத்தை அள்ளி குடித்து எங்களுக்கு துணை செய்ய துள்ளி குதித்துவா.

  உனக்கு பிரியமானவர்கள் நாங்கள் தான்.  உன்னை புகழ்வதால் எங்களது இதய மாசுகள் அகன்று புனிதத்தை அடைகின்றன.  எங்களது விருப்பங்களும் நிறைவேறுகின்றன.  எங்கே நீ தூரத்திலிருந்தாலும் உன்னை அழைக்கும் எங்கள் குரல் அங்கேயும் செவிகளில் வந்து விழும்.  நீ தொலைவில் இருந்தாலும் சொர்க்கத்தில் இருந்தாலும் எங்கள் குரலுக்காக ஒரே பாய்ச்சலில் அருகில் வந்து விடுவாய்.  அக்னியே உலக மக்களின் நலன் கருதி அதர்வ முனிவர் யாக நெருப்பை முதல் முதலில் மூட்டினார்.  உயர்ந்ததும் மேன்மையானதுமான சாயக் கிரிகைகளை பயன்படுத்தி அவர் உன்னை எழுப்பினார்.  அந்த நேரம் முதல் இந்த நேரம் வரை நீ எங்களுடன் இருக்கிறாய்.

  அக்னியே நீ இருட்டை மட்டும் விலக்குபவன் அல்ல.  அந்த இருட்டை அழிப்பவனும் இல்லாது செய்பவனும் நீயே ஆகும்.  உனது அழகிய வடிவத்தை தரிசனம் செய்ய நாங்கள் அனைவரும் கூடி இருக்கின்றோம்.  உனது தெய்வீக திவ்ய மங்கள திரு உருவை எங்களுக்கு காட்டு.  எல்லாத் துன்பங்களிலிருந்தும் எங்களை பாதுகாக்கும் அக்னி தேவனே! எங்கள் முன் நாங்கள் பார்க்கும் படி அன்புடன் வந்து காட்சி தா.  எங்களுக்கு அறிவை கொடுத்து ஞானத்தை வளர்க்கும் பேராசான் நீ.  எனவே எங்கள் அறிவுக்கனல் மூண்டெறிய எங்கள் முன் தோன்று.

  இந்த பாடல் வரிகள் மூலம் வேதகால மக்கள் அழிந்து போகக் கூடிய உலக பொருட்களை மட்டும் தெய்வங்கள் தராது அதையும் தாண்டிய நிலையிலுள்ள அழியாத சந்தோஷத்தையும் மன சாந்தியையும் தரவல்ல அறிவையும் ஞானத்தையும் தேவதைகள் தரும் என்று நம்பியது தெளிவாகிறது.  இனி சாம வேதத்தின் இரண்டாவது சம்ஹிதையிலுள்ள இந்திரனை துதிக்கும் ஒரு பாடலை பார்ப்போம்.

 உலகிலுள்ள அனைத்து உயிர்களும் இந்திரனை வணங்குகின்றன, வாழ்த்துகின்றன.  நமக்கு கிடைத்திருக்கும் பசுகளும் செல்வங்களும் அவன் தந்ததே ஆகும்.  பலம் மிகுந்த காளையை போல் காட்சி தரும் இந்திரன் ஒருவனே நமக்கெல்லாம் தலைவன் ஆவான்.  சோமபானத்தைக் கொண்டு நடத்தப்படும் தெய்வீகம் சடங்குகள் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.  இந்த நேரத்தில் நமக்கெல்லாம் வழிகாட்டும் தலைவனாகவும், அரவணைக்கும் தாயாகவும், அனுக்கிரகம் செய்யும் தெய்வமாகவும் திகழும் தன்னிகரற்ற இந்திரனை போற்றி பாடுவோம்.  அவனைப் பாடுவதற்காக அடிவயிற்றிலிருந்து பெருங்குரலை எழுப்புங்கள்.  இந்த குரல் ஓசைகள் நமது ஆத்மாவோடு இணையட்டும்.

  நூறு யாகங்களை செய்து பெரும் ஆற்றல் பெற்ற இந்திரன் என்ற தேவாதி தேவா உன்னை தவிர இத்தகைய ஆற்றலை வேறு யார் பெறமுடியும்.  அதனால் தான் எல்லா தெய்வங்களும் உன் பின்னால் அணிவகுத்து நிற்கின்றன.  நீ அவர்களின் தன்னிகரற்ற தலைவன் அல்லவா.  உன்னை புகழ்ந்து பாடும் சொற்களால் நீ மட்டுமா சந்தோஷப்படுகிறாய் அந்த சொற்களை பயன்படுத்தும் நாங்களும் தான் மகிழ்வென்னும் பால் குடத்தில் மூழ்கி ஆனந்தக்களிப்படைகிறோம்.  உனது கருணை என்னும் பெரிய கவசங்கள் எங்களை பாதுகாக்கும் போது நாங்கள் யாரை பார்த்து பயப்பட போகிறோம்.  யார் தான் எங்களுக்கு துன்பம் தர இயலும்.  உனது அருள் பார்வை ஒன்றே எங்களது துயரங்களை தூர விலக்கி விடும்.

 தேவர்களை தலைவனாக இருக்கும் இந்திரன் மழையின் அதிபதி.  ஆகாயத்திலுள்ள வண்ண முகில்களை தேர்களாக்கி பவனி வந்துகொண்டிருக்கும் ஆற்றல் மிகுந்த அந்த தெய்வத்தின் பெருமைகளை எடுத்துரைத்த நமது குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும்.  அந்த தேவனின் காதுகளில் மின்னல்கள் குண்டலங்களாக ஒளி வீசுகின்றன.  அவன் விரல் அசைவுகளில் இடி முழக்கங்கள் கட்டுப்பட்டு கர்ஜனை செய்கின்றன.  அவனது அருளால் இந்த பூமி நனைந்து குளிர்கிறது.  பச்சை பசுஞ் செடிகள் அவன் அருளுக்கு தலை சாய்த்து வணக்கம் செலுத்துகிறது.

  உயர் தகுதி உடைய ரிஷிகளின் புதல்வர்களே நீங்கள் தெய்வங்களின் புகழைப் பாடி கொண்டாடுங்கள்.  உங்கள் கொண்டாட்ட கோலாகலத்தில் நெருப்பின் நாக்குகள் ஜொலிக்கட்டும்.  உங்கள் ஆத்மாக்கள்  அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணையட்டும்.  இந்த தெய்வம் நாம் விரைந்து செல்வதற்கு தேர்களையும், குதிரைகளையும் கொடுத்திருக்கிறது.  நமது சரீரம் ஊட்டம் பெறுவதற்காக ஏராளமான பால் பசுக்களை தந்திருக்கிறது.  நமது வாழ்வு முடிவு பெற்று மரணத்தின் வாசலை நாம் தொடுகின்ற பொழுது சொர்க்கத்தையும் நமக்காக தருகிறது.

 விராடன் என்ற கொடிய அசுரனை அழித்து நம்மையும் தேவர்களையும் காத்தவன் இந்திரனே ஆவான்.  அப்படி காத்த அவனை பாராட்டுவது நமது கடமை அன்றோ புனிதமான சடங்குகளின் போது தேவர் தலைவனை பாரட்ட புதிது புதிதான பாடல்களை அமைத்து அவனுக்கு பரிசாகக் கொடுப்போம்.

 வல்லமை படைத்த இந்திரனே! நீ மழையை கொடுத்து மண்ணை வளப்படுத்தி நாங்கள் கணக்கில் அடங்காத செல்வங்களை பெற காரணமாக அமைகிறாய்.  இத்தகைய செயல்களை தனி ஒருவனாக செய்கின்ற ஆற்றல் உனக்கு உண்டு என்றாலும் பல தேவதைகளுக்கு புகழ் வந்து சேரவேண்டும் என்பதற்காக பணிகளை பங்கிட்டும் கொடுக்கிறாய்.

  நாம் புனிதமான முறையில் சடங்குகளை செய்தால் இந்திரன் இன்பம் அடைகிறான்.  ஏனென்றால் இந்தப் புனித சடங்குகள் இந்திரனை வளரச் செய்கிறது.  வளம் பெறச் செய்கிறது.  புயல் காற்றாக இந்த உலகத்தை அவன் வலம் வருகிறான்.  தனது புன்னகை என்னும் இடி முழுக்கங்களால் தேவர்கள் வாழும் சொர்க்கத்தையும் அதிரச் செய்கிறான்.

 இந்திரனே! அனைத்து செல்வங்களுக்கும், அனைத்து வளங்களுக்கும் நீயே தலைவன்.  உன்னை போல நாங்களும் அந்த நிலையை அடைய எங்களுக்கு உதவுவாயாக.  உன்னை துதித்துப்பாடும் அனைவரின் இல்லங்களிலும் பசுக் கூட்டம் நிறையட்டும்.  நமது சடங்குகளில் வளர்கின்ற நெருப்பு இந்திரனின் இதயத்தை குளிர்விக்கிறது.  சோமபானத்தின் தலைவனான அவன் அதை தயாரிக்கும் உங்களுக்கு அன்பு மிகுதியால் பல நன்மைகளை குவித்து தருவான்.  தேவர்களின் தலைவா!  இது உனது பானம் உயர்ந்த முறையில் தயாராகி விட்டது.  கோவைப் பழம் போல் சிவந்திருந்தாலும் உறுதி மிக்க உனது உதடுகள் சோம ரசத்தை ருசி பார்க்கட்டும்.  இதன் இனிமை உன்னை பரவசப்படுத்தும்.  உன் மூலமாக சோமபானத்தை பெற்றுக் கொள்ளும் மற்ற தேவதைகளும் எங்களை ஆசிர்வதிக்கட்டும்.  உனது கட்டளையை பெற்று அந்த தேவர்கள் எல்லா உதவிகளையும் எங்களுக்கு செய்யட்டும்.  எங்களை பயம் என்ற உணர்விலிருந்து காப்பாற்றும் இந்திரனே உன்னுடன் சேர்ந்து நாங்களும் இந்த ரசத்தை அருந்துகிறோம். 

 வருணன் நமக்கு அறிவாற்றலை வாரிவழங்கிறான்.  நமது ஞானத்தையும் வளர செய்கிறான்.  நாம் இன்று பெற்றிருக்கும் அறிவு எல்லாமே அவனிடமிருந்து வந்தவைகள் தான்.  அவனே தான் நமது ஞான குரு.  அவன் நமது அருகாமையில் இருக்கும் பொழுது அறியாமை என்ற அரக்கன் நம்மை தொட்டு விட முடியுமா.  தமது ஆசை விரல்களால் நம்மை சுட்டு விட முடியுமா.  மித்திரன், ஆரியமன் என்கின்ற தேவதைகளும் நம்மை பாதுகாக்கின்றன.  இவர்கள் நம்மை காக்கும் பொழுது வேறு எந்த சக்தி நம்மை சாகடிக்க முடியும்.  வெற்றி கொள்ள முடியும். வாகை சூடுதல் என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் நம்மை அனுகாது.

 நம் ஆசை என்னும் அம்பு எதன் மீது அடிக்கடி பாய்கிறதோ குதிரைகள் மீதும், தேர்களின் மீதும் தானே இவைகள் ஏராளமாக நமக்கு வேண்டும் என்று ஆசைபடுகிறோம்.  அந்த ஆசைகள் நியாயமானவைகளாகும்.  நாம் இந்த பூமி எங்கும் பறந்து விரிவதற்கு இந்த ஆசைகளே நிலக்கலங்கள் ஆகும்.  எனவே அந்த ஆசைகள் நிச்சயம் நிறைவேரும்.  இதை நிறைவேற்றி கொடுக்கும் தெய்வங்கள் அனைத்துமே நமது அருகில் உள்ளன.  அவர்களுக்கு அக்னியின் மூலமாக நாம் கொடுக்கும் ஆகுதிகள் அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்கிறது.

  இந்த பாடலை ஊன்றி கவனிக்கும் பொழுது ஒரு உண்மை நமக்கு தெரிகிறது.  இந்திரன் என்பவன் தேவர்களுக்கு தலைவனாகவும், செல்வங்களுக்கு அதிபதியாகவும், வெற்றிகளின் பிறப்பிடமாகவும், தன்னிகரற்ற ஆற்றல் பொருந்தியவனாகவும் இருந்தாலும் கூட அவன் மனிதர்களோடு சரி சமமாக எளிய நிலையில் வரக் கூடியவனாகவே கருதப்பட்டிருக்கிறான்.  உன்னுடன் சேர்ந்து நாங்களும் சோமரசம் அருந்துகிறோம் என்ற பாடலின் கருத்து நமக்கு இதை தெளிவாகப்புலப்படுத்துகிறது.  அதாவது கடவுள் உயரிய நிலையில் இருந்தாலும் அன்பினால் தனது நிலையிலிருந்து கீழிறங்கி வந்து நம்மோடு பழகுவான் என்ற வேதகால மக்களின் நம்பிக்கை ஆத்ம வளர்ச்சிக்கு முட்டு கட்டையாக அமையும்.  இறை அச்சமாக இல்லாமல் இறை பக்தியாக வளர்ச்சி அடைந்திருப்பதை கவனத்துடன் பார்க்க வேண்டும்.

 அடுத்தாக இந்திரனுடன் வருணன், மித்திரன், ஆரியமன், சரஸ்வதி, நகுஷன் ஆகிய தெய்வங்களை துதிக்கும் விதத்தில் அமைந்துள்ள பாடலை பார்ப்போம்.  இதில் ஒரு முக்கியமான விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும்.  சாமவேதத்தில் பாடல்கள் எல்லாமே மிகப்பெரியது.  குறைந்த பட்சம் பத்து பகுதிகளுக்கு மேல் உள்ளவையாகும்.  அதே நேரம் ஒரு பாடலை ஒரே ஒரு ரிஷிகள் சேர்ந்து ஒரு பாடலை உருவாக்கியும் இருக்கிறார்கள்.  இனி பாடல் வரிகளுக்குள் நமது பயணத்தை தொடருவோம்.

  வெற்றிகளை கொடுக்கும் தெய்வங்களை புகழும் பாடல்கள் நம்மிடமிருந்து பெருகட்டும்.  அந்தப் பாடல்களின் இசை நாதம் எட்டு திக்குகளிலும் நிரம்பட்டும் ஆகாயத்தில் அந்த நாத அலை மேகக்கூட்டங்கள் போல் பரவட்டும்.  கீதங்களை பாடி சோமரசத்தை எல்லா தேவதைகளுக்கு கொடுத்து மகிழ்வோம்.  சோம பானம் பெற எந்த தெய்வம் தான் வரமறுக்கும்.  சோமச் செடிகளின் வேர்களில் ஆயிரமாயிரம் மதுக்குடங்கள் தொங்குகின்றன.  அதன் சுவை மனிதர்களின் மனங்களை மட்டுமல்ல தெய்வங்களின் ஆத்மாவையும் சிலிர்க்க செய்யும் இந்த சுவையை பகிர்ந்து கொள்வதினால் தேவர்ளும் மனிதர்களும் வேறுபாடில்லாமல் ஒரே மாதிரியானவர்களால் மாறிவிடுகிறார்கள்.  தெய்வங்களை நமது விருந்தாளிகள்.  நாம் விருந்தளிப்பவர்கள்.  நமக்கு செல்வங்களையும் வெற்றிகளையும் தருகின்ற அவர்களுக்கு சோம ரசத்தால் ஆராதனை நிகழ்த்துவோம்.

 அனைத்து கலைகளிலும் ஆத்மாவாய்  இருக்கின்ற கலைமகளை வழிபடுவோம்.  அவளே நம்மை இருட்டிலிருந்து மீட்டெடுக்கும் அன்னை.  மனிதத்தாய் பத்து மாதம் மட்டுமே நம்மை சுமக்கிறாள்.  கலைகளின் தலைவியான இந்த தெய்வத்தாய் நம்மை காலமெல்லாம் சுமக்கிறாள்.  வழிதெரியாமல் தவிக்கும் நம்மை விரல் பிடித்து அழைத்து சென்று உரிய இலக்கை காட்டுகிறாள்.  இவளின் ஞான வெளிச்சம் தான் உலகத்தை இருள் அண்டாமல் காப்பாற்றுகிறது.  இவள் தரும் அறிவுதான் ஆற்றலின் ஊற்றுக் கண்களாக இருக்கிறது.  குதிரைகளையும் தேர்களையும் பெறலாம்.  கொட்டகை நிறைய பசுக்களையும் பெறலாம்.  இந்த செல்வங்களை ஆற்றலினால் மட்டும் காப்பாற்ற முடியுமா.  அறிவு இல்லாத ஆற்றல் நம்மை மட்டுமல்ல செல்வத்தையும் அழித்துவிடுகிறது.
  இந்திரன் எதனால் மகிழ்ச்சி அடைகிறான்.  நமது சடங்குகள் தான் அவனை சந்தோஷம் அடைய செய்கிறது.  நமது சடங்குகளோ நாகுஷத்தை அடிப்படையாகக் கொண்டது.  நாகுஷ விதிமுறைச் சடங்குகள் தான் இந்திரனை மகிழ்விக்கும் தன்மை கொண்டதாகும்.  இந்திரன் எல்லையில்லாத செல்வங்களின் சொந்தக்காரன் ஆவான்.  பகைகள் அனைத்தையும் அடக்கி ஆளும் வீரனும் ஆவான்.  நமது ஆயூதங்களுக்கும் ஆற்றல்களுக்கும் அவனே மூலம்.  அதனால் நம்மிடமிருந்து சோமரசத்தை பெற்று வெற்றி என்னும் ஆனந்தக் கடலை நமக்கு தருகிறான்.

 சாம வேதத்தின் பல பகுதிகள் சோம ரசத்தின் பெருமைகளை பேசுவதாகவே இருக்கிறது.  அதனால் இதை சாம வேதம் என்று அழைப்பதை விட சோம வேதம் என்று அழைத்தால் பொருத்தமாக இருக்கும்.  இனி இந்த வேதத்தின் இறுதி பகுதியை பார்ப்போம்.

 பிரகஸ்பதி என்ற பெயர் இந்திரனுக்கு உரியது.  இப்போது இவன் வெள்ளை குதிரைகள் பூட்டிய அழகிய தேரில் வருகிறான்.  கம்பீரமான அவனது குதிரைகள் காற்றை விடவும் வேகமாக செல்லக் கூடியதாகும்.  இததகைய குதிரைகள் பூட்டிய தேரில் அமர்ந்த படியே பல போர்களங்களை அசுரர்களின் அழிவுக்களமாக ஆக்கி வெற்றி வாகை சூடி இருக்கிறான்.  வெற்றி ஒன்று தான் இந்திரனின் பிரகடனப்படுத்தப்படும் செய்தி ஆகும்.  இத்தகைய வெற்றியின் அரசனான இந்திரன் நமது தேர்களை காக்கட்டும்.

  இந்திரன் தனது ஆயுதத்தால் மேகங்களை பிளக்கிறான்.  அவற்றில் அடங்கி இருக்கும் நீரை பூமியின் மேல் மழையாக பொழிய செய்கிறான்.  இந்திரனின் கோபம் மிகவும் பயங்கரமானது.  எந்த ஆயுதமும் அவனை வெல்லாது.  அவனது இருக்கையிலிருந்து அவனை அசைக்கும் சக்தி எவருக்கும் இல்லை.  எல்லா தேவர்களும் அவனிடத்தில் அடங்கி நடப்பவர்களே ஆவார்கள்.  அசுரர்களும் அவன் முன்னால் சக்தியற்று போய் விடுகிறார்கள்.  இந்திரன் வரும் போது அனைத்து தேவர்களும் வணங்கி வரவேற்பார்கள் அவனை.  அவனது படை முன்னேரும் போது சடங்குகளின் அதிதேவதையான சோமன் அவைகளை வழி நடத்துகிறான்.  சண்டமாருதமும், மந்த மாருதமும் அப்படியே செய்கின்றன.  இந்திரனை எவரும் வெல்ல முடியாது என்பது போலவே அவனது படைகளையும் யாரும் வெல்ல முடியாது.  ஏனென்றால் அவன் படைவீரர்கள் அனைவருமே சோம பானத்தை சுவையுடன் பருகிய தேவர்கள் ஆவார்கள்.  சோம பானம் அருந்துவதினால் உடலிலுள்ள எல்லா உறுப்புகளும் புதிய பலத்தை பெறுகின்றன.  கவசத்தால் சூழப்பட்டு ஆயுதங்களால் காக்கப்பட்டால் எந்த உணர்வு தலைக்கேருமோ அதே உணர்வு சோமபானம் அருந்துவதால் ஏற்படுகிறது.  அமிர்தத்தால் ஏற்படும் அழிவற்றத் தன்மை சோமபானத்தால் தற்காலிகமாக ஏற்படுகிறது.  

  தேவர்களின் ஆற்றல்களால் எங்கள் பாதுகாப்பு பலபடுத்தப்படட்டும்.  நஞ்சு நிறைந்த தலையை இழந்த நாகப்பாம்பை போல் எங்கள் விரோதிகள் கண்களை பறிகொடுத்து அழியட்டும்.  எங்களது பகைவர்களும் அவர்களது படைகளும் அக்னி தேவனின் கொடிய பார்வை பட்டு வெறும் சாம்பலாக மாறட்டும்.  நாங்கள் வெறுக்கும் பகைவர்களும் எங்களை வெறுக்கும் பகைவர்களும் தேவர்களால் கொல்லப்படட்டும்.  அத்தகைய தேவர்களை பாடி பரவும் பாடல்களின் ஓசை நாலாபுறமும் சூழ்ந்து ஒரு கவசம் போல் எங்களை பாதுகாக்கட்டும்.

 இந்திரனே! உனது பலம் ஆயிரம் சிங்கங்களின் வீரியத்திற்கு ஒப்பாகும்.  உனது பாதச் சுவடுகள் வனாந்திரங்களிலும் மலைகளின் சிகரங்களிலும் படிந்திருக்கிறது.  சிகரங்களையும் சமுத்திரங்களையும் பாதங்களால் நசுக்கி மார்தட்டி நீ அறை கூவல் செய்தால் திசைகளெல்லாம் நடுக்கம் அடையும்.  உயிர்களெல்லாம் கதிகலங்கும் உனது குரலுக்கு அஞ்சாத உயிர்கள் எதுவுமே இல்லை.  உன்னை மனநிறைவு கொள்ளச் செய்யும் யாகங்களையும் சடங்குகளையும் நாங்கள் செய்வதினால் எங்களை தொடர்ந்து பாதுகாப்பாயாக.
  வாழ்க்கையை ரசமுடையதாக்கும் பகுதிகள் பல சாம வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர வாழ்வை கடந்து செல்ல உதவி செய்யும் தத்துவங்கள் மிகக் குறைவாகவே இந்த வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.  இருந்தாலும் வயிற்று பிழைப்புக்காகவும் தொழில்களுக்காகவும் நாலாபுறமும் நாடோடிகள் போலும் சுற்றி திரிந்த வேதகால மக்களுக்கு போதிய ஓய்வும் களியாட்டமும் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் இந்த வேதத்தில் தெளிவாக காணமுடிகிறது.

 சாதாரணமான உணவுகளினால் மனிதர்கள் எப்போதுமே திருப்தி அடைவது கிடையாது.  உணவின் சுவைகளையும் தாண்டி வேறு சிலவற்றையும் மனித மனம் நாடுகிறது.  ஏனென்றால் மாற்றும் சுவையை அனுபவிக்கும் பொழுது இனம் புரியாத உல்லாசம் தனக்கு ஏற்படுவதாக அவன் நம்புகிறான்.  பாதுகாப்பற்ற நிலையிலும் பயத்துடனும் வாழ்ந்த ஆதிகால மனிதன் அவற்றை மறைப்பதற்காகவும் மறப்பதற்காகவும் மயக்கம் தருகின்ற பானங்களை நாடி இருக்கிறான்.  அந்த நாட்டத்தின் கண்டுபிடிப்பே சோம பானம் ஆகும்.  இந்த பானம் இப்போது எங்கும் தயாரிக்கப்படவில்லை.  காரணம் சோமச் செடிகள் இன்று மனிதர்களுக்கு கிடைக்கவில்லை.  அவைகள் முற்றிலுமாக அழிந்து போய் இருக்கலாம் அழிக்கப்பட்டு இருக்கலாம் அல்லது இது தான் சோமச் செடி என்று அடையாளம் தெரியாமல் இருக்கலாம்.

  எது எப்படி இருந்தாலும் போதைக்கு மயங்கும் மனித சுபாவம் ஆரம்ப நாட்களில் புனிதத் தன்மையோடு இணைக்கப்பட்டிருக்கிறது.  அப்படி இணைத்ததற்கு காரணம் தீயதை நல்லதாக காட்டும் சதி உணர்வா அல்லது அவர்களின் இயற்கையே அப்படித்தானா என்பது இன்றைய நிலையில் அமர்ந்து கொண்டு நம்மால் சிந்தித்து முடிவு செய்து விடமுடியாது.  இருப்பினும் சாம வேதத்தின் இந்த கருத்துகளை பிரதானப்படுத்த சில குழுவினர் வைதீகச் சடங்குகள் அனைத்துமே போதை களியாட்டங்கள் தான் என்று பிரச்சாரம் செய்வதற்கு தக்க பதிலடியை நமமால் சரிவர கொடுக்க இயலவில்லை.  அதற்காக வைதீகச் சடங்குகளை கொச்சை படுத்துவதை பொருத்துக் கொள்ள முடியாது.  காரணம் எந்த இலக்கியமும் அது தோன்றிய காலத்தின் பண்பாடுகளையும் பழக்கங்களையும் புறந்தள்ளாமல் தன்னகத்தே கொண்டு பல புதிய கருத்துகளை உருவாக்குவதே ஆகும்.  வேத இலக்கியமும் இதற்கு விதி விலக்காக முடியாது.  அதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது சோமபானம் என்ற மதுவகை ஓடி ஆடி உழைத்த வேதகால மக்களின் உடல் வலியை போக்கி உற்சாகத்தை கொடுத்திருப்பதினால் வேதத்தில் அது புகழப்பட்டிருக்கலாம்.  அதற்காக இன்று கூட வைதீகச் சடங்குகள் களியாட்டமாக அமைந்திருக்கிறது என்று வாதிடுவது முழுமையான அறியாமையாகும் அல்லது முரட்டுத் தனமான மூடச் சிந்தனை ஆகும்.

 சாம வேதம் அக்கால மக்களின் இன்ப நுகர்வு எப்படி இருந்தது என்பதை நமக்கு தெளிவாகக் காட்டுகிறது.  உல்லாசம் இல்லாத எந்த வகையான வாழ்வும் மனிதனுக்கு சுமையாகி விடும்.  உல்லாசங்களை அனுபவித்தால் தான் மனதில் எழும்பும் உணர்ச்சிகள் அடங்கும்.  அனுபவிக்காமல் உணர்வுகளை அடக்கினால் அது பூதாகரமாக வேறோரு வடிவத்தில் வெளிபட்டு மனிதனை அழிவு பாதைக்கு அழைத்துச் சென்று விடும்.  அனுபவித்து முடிந்த பிறகு மனம் அமைதி அடைந்து மோட்சம் என்ற அடுத்த படியை நாடுகிறது.  இதை தெளிவாகக் காட்டுவதே சாம வேதத்தின் முக்கிய நோக்கமாகும்.  இதை மனதில் வைத்துக் கொண்டு அடுத்த வேதமான அதர்வணத்தை பற்றி சிந்தித்தால் இந்து மதத்தின் உண்மை நிலை நன்கு தெளிவாகும்.

இந்து மத வரலாற்று தொடர் - 6


யஜூர் வேதம் இந்த பெயர் பெறுவதற்கு வழிபடுதல் என்ற பொருளைக் கொண்ட யஜ் என்ற வினைச் சொல் மூலக் காரணமாகும்.  நான்கு வேதங்களில் இது இரண்டாவது இடத்தில் வைக்கப்படுகிறது.  இந்த வேதத்தில் அரசர்களும் குடிமக்களும் பின் பற்ற வேண்டிய சடங்கு முறைகளை பற்றியும் அந்த சடங்குகளை செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரங்களை பற்றியும் விரிவாக கூறுகிறது.

  அதனால் இது மந்திரப்பகுதி, சடங்கு பகுதி என்று இரு பகுதிகளை கொண்டதாகவும் மந்திரங்களை கூறும் பகுதி சுக்கில யஜூர் என்றும் சடங்குகளை கொண்ட பகுதி கிருஷ்ண யஜூர் என்றும் பெயர் சூட்டி அழைக்கப்படுகிறது.  யஜூர் வேதத்தில் உள்ள பாடல்களின் மொத்த எண்ணிக்கை 1946 ஆகும். 

  இந்த பாடல்கள் பெறும் பகுதி சுக்கில யஜூர் வேதத்திற்குள் அடங்கி விடுகிறது.  கிருஷ்ண யஜூர் வேதப்பகுதி உரைநடையாகவே இருக்கிறது.  பொதுவாக மற்ற வேதங்களை போலவே இதிலும் சம்ஹிதை, பிரமாணம், ஆரண்யம் என்ற மூன்று பிரதானப் பகுதிகளும் கடைசியாக தத்துவ விளக்கங்களை கூறும் உபநிஷத பகுதியும் உண்டு.  யஜூர் இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டிருப்பதால் ஆரண்யம் என்பது சுக்கில பகுதியில் மட்டுமே காணப்படுகிறது.

யஜூர் வேதம் 40 அத்யாயங்களை கொண்டது இதில் பெரிய அத்யாயங்களும் சிறிய அத்யாயங்களும் அடங்கியுள்ளது.  ஒவ்வொரு அத்யாயமும் ஒரு தனிப்பட்ட விஷயத்தை பற்றி மட்டுமே பேசவில்லை.  பலதரப்பட்ட விஷயங்களின் கலவையாகவே ஒவ்வொரு அத்யாயமும் அமைந்துள்ளது.

  இதில் உள்ள மந்திரங்கள் சடங்குகளின் போது ஒருவராலோ, பலராலோ ஓதப்படும் வண்ணம் அமைந்துள்ளது.  சடங்குகள் எதற்காக செய்யப்பட்டாலும் நெருப்பு இல்லாமல் எந்த சடங்குகளும் வேதகாலத்தில் நிகழ்த்தப்பட முடியாது.  சடங்குகளின் நெருப்பு அவசியம் என்பதனால் அந்த நெருப்பை மூட்ட சமித்துக்கள் என்ற மரக்குச்சிகள் தேவை.  எல்லா மரங்களிலுள்ள உலர்ந்த குச்சிகளை சமித்துக்கள் என்று அழைத்துவிட முடியாது.  சில குறிப்பிட்ட வகை மரக்குச்சிகளை தான் குறிப்பாக அரசு, மா, தேவதாரு, சந்தனம் போன்ற மரக்குச்சிகளை தான் வேதகால ரிஷிகள் சமித்துக்கள் என்ற தகுதியில் அழைத்தார்கள்.  அவர்கள் அன்று சமித்துக்கள் என்று தனித்தகுதி சிறபித்த மரக்குச்சிகளே இன்றளவும் யாகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சடங்குகள் என்பது ஒரு தனி மனிதனின் சுய தேவைக்காகவும் ஒரு சமுதாயத்தின் பொது நோக்கத்திற்காகவும் நடத்தப்பட்டது.  தனி மனிதனுக்குரிய சடங்குகளை செய்ய எழுப்பப்படும் அக்னி குண்டங்கள் அல்லது யாகசாலைகள் ஆகவனியம், தட்சனாக்னியம், காரக பத்தியம் என்று மூன்று வகையாக அழைக்கப்பட்டது. 

   எந்த திசையை நோக்கி யாக குண்டம் அமைக்கப்படுகிறதோ அதை பொறுத்து. அதாவது மேற்கு திசை நோக்கி யாக சாலை அமைக்கப்பட்டால் காரகபத்தியம் என்றும் கிழக்கு நோக்கி அமைந்தால் ஆகவனி என்றும் தெற்கை நோக்கி அமைந்தால் தட்சனாக்னியம் என்றும் வழங்கப்பட்டது.

இனி யஜூர் வேதத்தின் சில பகுதிகளை பார்ப்போம் இந்த வேதத்தின் முதல் பாடல் சூரிய தேவனை வணங்கி ஆரம்பிக்கிறது.  ஒளி மயமான கதிர்களுடன் கிழக்கு வானிலிருந்து புறப்பட்டு வரும் சூரிய தேவனே உன்னை மங்களமாரன வார்க்தைகள் சொல்லி வரவேற்கிறேன்.

   நீ எங்கள் பசுகூட்டத்தை பாதுகாக்கிறாய் அவைகளின் மீது மிருகங்களும் துஷ்டமனிதர்களும் பாயாதபடி வெப்பம் நிறைந்த உனது கண்களால் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.  எங்களது செல்வங்களான பசுக்களின் எண்ணிக்கை வளரும் வண்ணம் அவற்றிற்கு தாராளமாக உணவை கொடுகிறாய்

  இந்த பசு செல்வங்களை எங்களிடமிருந்து அபகரிக்க நினைக்கும் தீய மனம் கொண்ட பகைவர்களை உன் ஒளிக்கரங்களால் விரட்டுகிறாய்.  அதற்கு நன்றி செலுத்த இந்த யாகத்தில் உனக்குய பங்கினை அக்னியிடம் கொடுக்கிறேன்.  உன் பங்கு மேன் மேலும் பெருகட்டும் என்று சூரியனை வேதகால ரிஷி போற்றி வணங்குகிறான்.

  இந்த பாடல் மூலம் அடிப்படையான இரண்டு விஷயங்கள் நமக்கு தெரியவருகிறது.  நாம் நினைப்பது போல் அந்த கால மக்கள் அறிவியல் சிந்தனை அற்ற அசடர்களாக இருக்கவில்லை.  புல் பூண்டுகள் சூரிய வெளிச்சத்தினால் தான் நன்கு வளரும் வெளிச்சம் இல்லை என்றால் தாவரங்களின் வளர்ச்சி சரிவர அமையாது என்பதை போன்ற அடிப்படையான அறிவியல் அறிவையும் அவர்கள் பெற்றிருந்தார்கள். 

  அடுத்ததாக அவர்கள் மாடு மற்றும் கால் நடைகளை நம்பி வாழ்ந்தவர்களாக இருந்தமையனால் ஒரே இடத்தில் நிரந்தரமாக தங்கும் இயல்பு இல்லாதவர்களாகவும் பல இடங்களுக்கு சுற்றி திரியும் தன்மையோடு இருந்தமையாலும் பட்டறிவு என்பது அளவுக்கு அதிகமாக கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். 

மேலும் யஜூர்வேதத்தில் உள்ள மூன்றாவது பாடல் ஆழமான தத்துவக் கருத்தை வெளியிடுகிறது.  என்னை அதனுடன் இணைத்தது யார் அவன் தான்.  என்னை அதனுடன் பிணைத்தவன் யார் அதுவும் அவன் தான்.  இந்த வேலையை தொடங்கியவன் நீயே அதை முழுமையாக்கியவனும் நீயே என்ற கருத்து பட நீண்டு செல்லும் இந்த பாடலில் வரும் அது என்ற வார்த்தை வேத கால தெய்வங்கள் எதையும் பொதுவாகவோ சிறப்பாகவோ சுட்டிக் காட்டாமல் மறை முகமாக பரமாத்ம தத்துவத்தை சுட்டி நிற்பதை உணரலாம்.  இதே போக்கில் வேறு இரு பாடல்களும் முடிவாக விஷ்ணுவை பற்றிய ஒரு பாடலும் வருகிறது.  இப்பாடல்கள் அனைத்தையும் இணைத்து பார்க்கின்ற பொழுது நாராயணனை பரம் பொருளாக கருதும் கருத்து யஜூர் வேதத்திலும் இருந்திருப்பது தெரிகிறது.

சிந்து நதி கரையிலும் அதன் உபநதிகளான ஆறு நதிகளையும் இணைத்துக் குறிப்பிடும் சப்த நதி மண்டலத்தில் இந்த மக்கள் தங்களது வாழ்க்கை ஓட்டத்தை நடத்திக் கொணடிருந்த போது பல தேவதைகளை வழிபடுபவர்களாக இருந்திருக்கிறார்கள்.  அப்பொழுதெல்லாம் ஒரே கடவுள் தான் உண்டு என்ற வாதங்கள் உருவாகாமல் இருந்திருக்கிறது. 

  சிந்துவை தாண்டி யமுனையையும், கங்கையையும் கடந்து அந்நதிகரையோரம் பரந்து விரிந்த சமவெளியில் நிலையான வாழ்வைத் துவங்க குடியேறிய பின்னரே வேத மைந்தர்களுக்கு ஒரே கடவுள் தான் இருக்க வேண்டு மென்ற சிந்தனை தெளிவு ஏற்பட்டிருக்கிறது.  அதனால் தான் ரிக் வேதம் தோன்றி பல காலத்திற்கு பின்னால் தோன்றிய யஜூர் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் ஒரே கடவுள் என்ற சிந்தனை அதிக அளவில் நம்மால் காண முடிகிறது.

வேத கால வாழ்வில் சிந்தனைகளை விட சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது.  யாககுணடங்களை ஏற்படுத்தி அக்னியை வளர்த்தான் அதிலிருந்து  கிளம்பும் புகை மழையை வரவழைக்கும் சக்தியை பெற்றிருப்பதாக நம்பினர்.  அதனால் தான் நெருப்பை உருவாக்கும் சமித்துகளையும் அதனை வளர்க்கும் நெய்யையும் புனித மிக்கதாக கருதி சமித்துக்கள் அக்னி தேவனின் உணவு என்றும் நெய் அவனுக்கு ஆற்றலைக் கொடுக்கும் பொருள் என்றும் புகழ்ந்து பாடினார்கள்.

  இயற்கையோடு ஒருங்கிணைந்து வாழ்ந்ததினால் இயற்கையின் வளர்ச்சியில் தான் தங்களது சமூக வளர்ச்சியும் அடங்கியிருப்பதாக கருதி இயற்கை வளங்களை செழுமைபடுத்துவதற்கான சடங்குகளை ஏற்படுத்தி எந்த சடங்கை எப்போது செய்ய வேண்டும் என்ற நியதியையும் வகுத்தார்கள். 

  அந்த ஒழுங்கு முறைக்கு எதிராக பிற்கால சமூகம் செல்லக் கூடாது என்றும் எச்சரித்தனர்.  வேத நெறிகளை அலச்சியம் செய்யாதே அந்த நெறிப்படி தினசரி நெருப்பை வளர்த்து தேவதைகளை திருப்தி படுத்து யாகப்புகை மேலே செல்லாவிட்டால் மேகங்கள் கூடாது மழை பொழியாது மழை இல்லை என்றால் வாழவே முடியாது என்று அவர்கள் எச்சரித்தது அன்றைய  வாழ்க்கைக்கு மட்டுமல்ல இன்றைய வாழ்க்கைக்கும் பொறுத்தமாகவே இருக்கும்.

  யாகங்களிலுள்ள விஞ்ஞான பூர்வமான உண்மைகளை விவரிப்பது இந்த இடத்தில் நமது நோக்கம் இல்லையென்றாலும் யாகங்களின் சிறப்பை ஓரளவாவது நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.  முறைப்படி சப்தம் தவறாத வேத கோஷங்களுடன் செய்யப்படும் யாகங்கள் மழையை வருவிப்பதும் நச்சு புகையிலிருந்து உயிர்களை பாதுகாப்பதும் நாம் அறிந்ததே ஆகும்.

  தீயை வளர்த்து நெய்யை வார்த்து செய்யப்படும் யாகங்கள் அறியாமையின் வெளிப்பாடு அல்ல.  கண்ணுக்கு தெரியாமல் பூமியெங்கும் பரவி கிடக்கும் அணுக்களை வேதியியல் முறையில் அசைவித்து நமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் அறிவுப் பூர்வமான செயல்பாடே யாகங்கள் ஆகும்.

 அந்த யாகங்கள் சரிவர செய்யப்படாததினால் செய்யும் பண்டிதர்களும் யாகங்களை முறைதவறி செய்வதினாலையும் தான் பருவ காலங்கள் தனது கடமைகளை சரிவர செய்ய முடியாமல் இயற்கை அழிவுகளுக்கு விதை தூவுகிறது.  இதை உணர்ந்து தேசத்தில் எதாவது ஒரு மூலையில் நியமப்படி வேதகால யாகம் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்றால் பூமி பந்தின் கோபச்சூடு கொஞ்ச நேரம் குறையும்.

 நாம் பிராமணனுக்கும், சத்திரியனுக்கும், சூத்திரனுக்கும், ஆரியனுக்கும், அருகில் உள்ளவனுக்கும், அந்நியனுமாகிய அனைத்து ஜனங்களுக்கும் இம்மங்கலகரமான வேதத்தை உபதேசம் செய்கிறேன்.  காணிக்கை அளிக்கும் தேவர்களுக்கு நான் பிரியமுடனாக வேண்டும் எனது விருப்பம் பூரணமாகட்டும்.  அது எனது ஸ்வாதினம் ஆகும்.

  பிரகஸ்பதியே சத்தியத்தின் புதல்வனே சத்துரு சிறப்புக்கதிகமாயும் அறிவுள்ள ஜனங்களின் நடுவே பிரகாசமுடையதாகிய உறுதியுள்ள செல்வத்தை எமக்களிப்பாய்.  நீ ஆதரவோடு கிரகிக்கப்பட்டுள்ளாய்.

  செல்வம் மிகுந்த இந்திரனே! இங்கே வா நூறு மடங்கு சக்தி உள்ளவனே சோமனை பருகவும் சோமன் பெருமையான சாதனங்களால் நிறைந்துள்ளது.  நீ ஆதரவோடு பற்றப்பட்டுள்ளாய்.  நான் செல்வம் மிகுந்த இந்திரனை பற்றுகிறேன்.  பசுக்கள் நிறைந்த இந்திரனே இது உனது மூலஸ்தானமாகும்.  இங்கே வந்து உனது அருளை நிரப்பு.

  ஜோதியின் தலைவனாகவும் அழியாதவனாய் உள்ளவனே நாங்கள் நாடுகிறோம்.  நாங்கள் வைசுவா நரனின் நல்ல நிலையில் சாய வேண்டும் அவனே புவனங்களின் தன்னிகரற்ற தலைவன் ஆவான்.  இவனே ஜீவனாக தோன்றி விழிகளால் அனைத்தையும் காண்கின்றான்.  இவன் சூரியனுக்கு சமமாய் உள்ளவன்.  வெகு தூரத்திலுள்ள வைசுவா நரனை அக்னி எங்கள் அருகில் அழைத்து வரட்டும்.

 அக்னி பவித்திரமான ரிஷி ஆவான்.  பஞ்ச ஜனங்களின் புரோகிதன் அக்னியே.  அதிகமாக பிரகாசிக்கவும் ஜோதிவடிவாகவும் உள்ள அக்னியே நீயே செல்வமும் செழுமையும் தரும மூல முதல்வன் பருவகாலங்கள் உனது யாகத்தை விசாலப்படுத்தட்டும்.  மாதங்கள் உனது அவிர் பாகத்தை ரட்சிக்கட்டும்.  வருடங்கள் உனது பிரஜைகளை காவல் செய்யட்டும்.  மலைகள் அருகிலும் நதிகளின் சங்கமத்திலும் தோன்றிய அறிவாளி உனது புகழை பாடி பரவட்டும்.

  நாங்கள் வீரமக்கள் எங்கள் பசுக்களும் குதிரைகளும் பல்கி பெருகட்டும்.  சகல புஷ்டிகளுடன் எமது எல்லா விருப்பங்களும் ஓங்கி வளரட்டும்.  எங்களை சுற்றியுள்ள மனிதர்களும் மற்ற உயிரினங்களும் பெருகி நிரம்பட்டும்.  தேவர்கள் எங்கள் யாகத்தை பருவ காலத்தோடு வழி நடத்தி செல்லட்டும்.

  சோமனே நீ பசியை அழிப்பவன்.  அனைத்து மனிதர்களின் நண்பனும் நீ.  இன்பம் அளிக்கின்ற தாரையுடன் பெருகி நீ வழிய வேண்டும்.  தங்கத்தால் ஆன துரோனத்தில் சமமான மூலஸ்தானத்தில் வந்து அமர்ந்துக் கொள்.

இந்த பாடல்கள் யஜூர் வேதம் 26-வது அத்யாயத்தில் 392-வது அனுவாகத்தில் 2 முதல் 26 வரையிலான பாடல்வகளாகும்.  இவைகளை மீண்டும் ஒருமுறை வாசித்து பாருங்கள் பல உண்மை தெரிய வரும்.  வேதங்கள் என்பது பிராமணர்களுக்கு மட்டும் உரிமையான சொத்தாகும்.  அதை மற்ற ஜாதி ஜனங்கள் எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்து ஆழமான முறையில் பிரச்சாரம் செய்யப்பட்டு இன்றைய நாள் வரை வந்து கொண்டு இருக்கிறது. 

  அது மட்டுமல்ல வேதங்களை ஓதினால் மற்ற ஜாதிகாரர்களின் நாக்கை துண்டிக்க வேண்டும் காதுகளால் கேட்டால் செவிகளில் ஈயத்தை உருக்கி ஊற்ற வேண்டும் என்பதாகவும் மனுசாஸ்திரத்தில் எழுதப்பட்டிருக்கிறது.  இவைகளை அறிவு தெளிவுள்ள எந்த மனிதனும் படித்தாலே அருவருப்பு அடைந்து விடுவான்.  அதிர்ச்சியில் உரைந்து விடுவான்.  

  ஆனால் வேதகால கவிஞன் வேதங்களை தனிப்பட்ட சொத்தாக கருதவில்லை.  மனிதனாக பிறந்த ஒவ்வொருவனுக்குமே வேதம் சொந்தமாகும் என்று கருதுகிறான்.  வேதக் கட்டளைக்கு விரோதமாகவும் விருப்பத்திற்கு மாறாகவும் வேதங்களை தனி உடமையாக்கியது யார்?  எதற்காக?  அது ஜாதிவளைக்குள் சுருட்டப்பட்டுள்ளது என்பதை நாம் சிந்தித்து பார்த்து வாதங்களில் ஈடுபடாமல் வேதத்தை விருப்பமும் தகுதியும் உடைய அனைவருக்கும் கற்பிக்கவும் கற்றவழி நிற்கவும் முன் வரவேண்டும்.

 மேலும் புவனங்களின் தலைவனாக இருப்பவனும் மக்களின் உற்பத்திக்கும் சுகதுக்கங்களுக்கும் ஒருவனே காரணம் என்ற கருத்தும் கவனிக்க தக்கது.  தேவதைகளுக்கு பல பெயர்களை வைத்து ரிஷிகள் அழைத்தாலும் அவையாவும் ஒரே தேவதையின் மாறுபட்ட பெயர்களே என்பது தெளிவாகிறது இந்திரன், அக்னி, சோமன் என்ற பெயர்களெல்லாம் மூல பரம் பொருளை குறிப்பிடுவதற்காகத்தான் பயன்படுத்தி இருப்பார்களோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்துகிறது.  இனி உழவத் தொழிலை பற்றி வேதக் கருத்தை பார்ப்போம்.

 யஜூர் வேத சுக்கில பகுதியில் வேளாண்மையை பற்றி பல பாடல்கள் உள்ளன.  அவற்றில் மிக முக்கியமானதாக 12-வது அத்யாயத்தில் ஒரு பாடல் உள்ளது.  அதில் நிர்த் என்ற தேவதையின் பெயர் குறிப்பிடப்படுகிறது.  விவசாயத்திற்கு தேவைபடுவது மண்ணும், நீரும், ஒளியும், காற்றுமாகும்.  இந்த நான்குமே வேதங்களில் தேவதையாக வணங்கப்படுகிறது.

 நிர்த் என்ற வேதகால விவசாய தேவதை பூமியாக விரிந்து கிடக்கிறாள்.  முதலில் அவள் பச்சை வண்ண ஆடையை உடுத்தி இருக்கிறாள்.  முடிவில் பொன் வண்ணமாக காட்சி தருகிறாள்.  அவள் நீராடுவதற்காக குளிர்ந்த நீர்திவலைகளை கார்முகில் என்ற வானப்பந்தலை அமைத்து வருணதேவன் சாரலாக தெளிக்கிறான்.  நேரம் செல்லச் செல்ல முகிலினங்கள் பெரும் மழையை கொட்டுகிறது.  இதில் அந்த தேவதை முழுமையாக குளிர்ச்சி அடைகிறாள்.  அவள் உடலெங்கும் ஆறுகளும், குளங்களும், ஏரிகளும், அருவிகளும் வெள்ளியை உருக்கி விட்டது போல் பெருகி ஓடுகிறது.

   இந்த நேரத்தில் கலப்பைகள் தயார் செய்யப்படுகின்றன.  கலப்பையின் முனைகளில் கூர்மையான இரும்பு கொழுவுகள் பொறுத்தப் படுகின்றன.  நுகத்தடியில் வெள்ளை எருதுகள் பூட்டப்படுகின்றன.  நிர்த் தயாராக இருக்கிறாள்.  கலப்பைகளை பலமாக பிடித்துக் கொண்டு முன்னால் செல்கிறாள்.  அதே நேரம் ஏர் முனையை தனது உடலில் தாங்கியும் கொள்கிறாள்.

  இரும்பு முனை மண்ணை அழுத்தி கீறுகிறது மண் கீழும், மேலுமாக புரள்கிறது.  மலர்களைப் போல் விரிந்து கலப்பை என்னும் வண்டுகளுக்கு மகரந்தத்தை கூடலில் வாரிக் கொடுக்க தயாராகிறது.  உழவன் விதைகளை நாலாபுறமும் தூவுகிறான்.  நிர்த் தேவதை அதை வாங்கிக் கொள்கிறாள்.  தனக்குள் தாங்கியும் கொள்கிறாள்.  தனக்கு கிடைத்த ஒரு தானிய மணியை பல நூறு மடங்காக பெருகி தருகிறாள்.

  தேவதையின் உடலில் உழவன் ஏறி விளையாடுகிறான்.  அரிவாள்களைக் கொண்டு முற்றி தலை சாய்ந்த கதிரை அறுவடை செய்கிறான்.  தன்னை ஏர் கொண்டு பிளப்பதினாலோ வாள் கொண்டு வெட்டுவதாளோ பூமி தேவதை மனிதர்களை கோபத்துடன் முறைப்பது இல்லை

  ஏனென்றால் அவள் உயர்களுக்கெல்லாம் தாயை போன்றவள் முலைக்காம்பை குழந்தை கடித்தால் தாய் அதன் வாயை கிழித்து விடவா போகிறாள் வாரி அணைத்து தானே கொள்வாள்.  அத்தகைய தாயான தானியங்களை கொடுக்கும் நிர்த் தேவதையை வணங்குவோம்.  அவள் பசியை போக்கும் அன்னை சக்தியை கொடுக்கும் வெண்ணை.  நமது மகிழ்ச்சி தீபத்தை சுடர்விட்டு பிரகாசிக்க செய்யும் எண்ணெய்.  அவளை மீண்டும் மீண்டும் வழிபடுவோம்.

  பூமியின் தாகத்தை தனித்தவன் வருணன்.  தானியங்களை தருபவன் வருணன்.  வருணனின் செங்குருதியே மழை நீராகும்.  அந்த குருதியை நீராக பெற்றுக் கொள்ளும் பூமித்தாய் தானியபாலாக நமக்கு புகட்டுகிறாள்.  அக்னியின் வடிவமான சூரிய தேவனும் ஆகாயத்திலிருந்து இறங்கி வந்த வாயு தேவனும் நிர்த்க்கு உதவி செய்கிறார்கள்.  அவர்களை நாம் வணங்குவோம்.  நமது வீட்டு களஞ்சியங்களில் தானியங்களை நிரம்பி வழிய செய்த இந்த நான்கு தேவதைகளும் நமது கருவூலங்கள் ஆவார்கள்.  அதனால் தங்கநிற தானியங்களை அக்னியிடம் வழங்குவோம்.  அவன் அவைகளை தேவதைகளுக்கு நிச்சயம் கொண்டு கொடுப்பான். 

  இந்த சடங்கு பாடல் தேவகால மக்களின் வாழ்க்கையை நமக்கு படம் பிடித்து காட்டுகிறது.  ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு நாடோடியாக திரிந்த ஆரம்பகால மக்கள் யஜூர் வேத காலத்தில் நிலையாக ஒரு இடத்தில் தங்கி விவசாயம் முதலியன செய்ய ஆரம்பித்து இருப்பது இந்த பாடல்களால் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. 

  அது மட்டுமல்ல விவசாயத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு உடல் உழைப்பு அதிகம் தேவை.  உடலால் உழைப்பவர்களை சூத்திரர்களை என்று வேதம் வகைபடுத்தி காட்டுகிறது.  சூத்திரர்கள் தாழ்ந்தவர்களாக இழிகுல மக்களாக கருதப்பட்டு ஒதுக்கப்பட்டு இருந்தால் வேதங்கள் அவர்களையும் அவர்களது தொழில்களையும் சிறப்பித்து கூறப்பட்டிருக்குமா இருக்கவே முடியாது.  எனவே வேதகாலத்தில் எவனும் எந்த தொழிலிலும் இழிந்தவனாக கருதப்படவில்லை என்பது நன்றாக விளங்குகிறது.

  இனி சடங்குகள் என்பது அந்தகால மக்களுக்கு எந்த வகையில் உதவி புரிந்தன என்பதை பார்ப்போம்.  யஜூர் வேதம் 18-வது அத்யாயத்தில் 77 பாடல்கள் இருக்கிறது.  இதில் 29 பாடல்கள் சடங்குகளை பற்றியும் அவைகளால் ஏற்படும் நன்மைகளை பற்றியும் விவரித்து கூறுகிறது.

  கிரிகைகள் எனக்கு கொடுப்பது எது?  அவற்றை செய்வதினால் தெய்வங்களிடமிருந்து எதை நான் பெறுகிறேன். எல்லாம் எல்லாவற்றையும் நான் பெறுகிறேன்.  கிரிகையினால் பலத்தை நான் அடைகிறேன்.  ஆதாயம் அடைகிறேன்.  என் மனது ஆற்றல் அடைகிறது.  உடல் பலம் அடைகிறது.  எனது எண்ணங்கள் தெளிவடைகின்றன.  எனக்கு புகழும் பாராட்டும் கிடைகிறது.  ஒளிமயமான சொர்க்க கதவுகள் எனக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

  இதோ நான் நன்மையும் நன்மைக்கு மேல் நன்மையும் பெற்றுக் கொண்டே இருக்கிறேன்.  எனது மூச்சு காற்று தடங்கல் இன்றி உள்ளே செல்கிறது.  சிரமப்படாடல் வெளியேயும் வருகிறது.  அதன் பாதைகளில் அது தங்கும் இடங்களின் எந்த துன்பத்தையும் அனுபவிக்கவில்லை.

   எனது கண்கள் தெளிவாக இருக்கிறது.  நெருப்புத் துண்டுகள் போல் அவைகள் ஜொலிக்கவும் செய்கின்றன.  வில்லிலிருந்து புறப்படும் அம்புகளை போல் எனது பார்வை எல்லா இடங்களிலும் கூர்மையுடன் பாய்கின்றன.  எனது காதுகளும் அப்படியே இருக்கின்றது.

  இந்திரனின் கட்டளையால்  மேகங்கள் மோதி உண்டாகும் இடி முழக்கங்களால் எனது செவிகள் துன்பப்படவில்லை.  மிருதுவான இனிமையான புல்லாங்குழலின் ஓசை எனது காதுகளை குளிர்விக்கின்றன.  எனது நாவும் நல்லதையே பேசுகிறது.  தீய சொற்களை உருவாக்கும் வயலாக அது என்றும் மாறியது இல்லை.

   இத்தகைய நன்மையெல்லாம் பெற எனக்கு உதவியது எது.  இந்த சடங்குகளும் இந்த யாகங்களும் தான்.  இதில் எரியும் நெருப்பு எல்லா இடத்திலும் இதமான வெப்பத்தை பரப்பட்டும்.  இதன் புகை நாலா புறமும் பரவி நறுமணமாக கமழட்டும்.

இன்னும் என்னவெல்லாம் எனக்கு கிடைக்கிறது தெரியுமா?  அவைகளை எல்லாம் இதோ பட்டியலிட்டு சொல்கிறேன்.  இவைகள் உண்மைக்கு புறம்பான பொய்கள் அல்ல.  உண்மையை போல் தோன்றும் கற்பனைகள் அல்ல.  பயமும் தயக்கமும் இல்லாமல் இதை நான் சொல்லுவதினால் இவை அனைத்துமே உண்மைகள்.  என்றும் நிலைத்து இருக்கும் சத்தியங்கள்.

யாகங்களால் நான் உண்மையென்னும் பேருலகில் நிலைத்து இருக்கிறேன்.  அது அசத்தியத்தில் இருந்து என்னை எப்போதும் பாதுகாவல் செய்கிறது.  எனது சொற்களில் சத்தியம் மட்டுமே ஒலிப்பதனால் நான் எப்போதும் நாணயத்திடமிருந்து பிரியாமல் இருக்கிறேன்.

  தர்மத்தை மட்டுமே எனது கண்கள் பார்ப்பதனால் நேர்மை என்ற காவல் படை என்னை சுற்றி எப்போதும் அரணாக இருக்கிறது.  வெற்றியை தருவது சத்தியம் மட்டும் தான் என்பதனால் நான் அடைகின்ற ஒவ்வொரு வெற்றியுமே சத்தியத்தின் வடிவங்களாக மின்னுகிறது.

 எனது பசுக் கூட்டத்தின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.  அதனால் எனது செல்வம் மிகுதியாகிறது.  எனது சொத்துக்கள் பல மடங்கு பெருகுகிறது.  எனது பொருட்கள் குவிவதனாலும் பெருகுவதானலும் நான் அதை அனைவரிடத்திலும் பகிர்ந்து கொள்கிறேன்.  அந்த பகிர்வு எனக்கு மகிழ்ச்சி பேரை தந்த வண்ணமே உள்ளது.

 இந்த மகிழ்ச்சியினால் அதிகமான குழந்தைகள் எனது வீட்டில் பிறக்கின்றன.  குழந்தைகளின் மழலை நாதம் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.  மதுவை விட அதிகமான போதையும் பெண்ணை விட அதிகமான சுகத்தையும் வாரி தருவது குழந்தைகளின் அருகாமையும் மழலை மொழிகளும் தானே.  குழந்தைகளே மனிதர்களின் சொர்க்கமாவார்கள்.

 யாகங்களால் எந்த நோயும் என்னை அனுகாது அதனால் நான் பிணி என்ற பெரும் துன்பத்தை அனுபவிக்கவே மாட்டேன்.  எனது உடல் வலுவாக இருப்பதனால் எனது வலது கையில் இருக்கும் ஏர்முனை தானியங்களை உற்பத்தி செய்கிறது.  இடது கையில் இருக்கும் கூர்மையான ஈட்டி எனது மக்களை பாதுகாக்கிறது.

 எனது ஆயுள் பரிபூரணமாக இருக்கும்.  மரணம் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறேன்.  ஏனென்றால் அது வாழ்வில் ஒருமுறை மட்டுமே வரக்கூடியது.  தவிர்க்க முடியாத அதை எண்ணி நான் ஏன் வருத்தப்பட வேண்டும் எப்போதுமே நான் சுதந்திர காற்றை சுவாசிப்பவனாக இருக்கிறேன்.

    நான் எவராலும வெல்ல முடியாதவன் என்னை அடிமையாக்கும் தகுதி எவருக்குமே இல்லை.  எனக்குரிய பசுக்கள் மட்டுமல்ல எல்லாமே பெருகும்.  கல்லும், களி மண்ணும், குன்றுகள், பாறைகளும், தங்கமும், பித்தளையும், இரும்பும் இதர உலோகங்களும் நீரும், நெருப்பும் எப்போதுமே குறையாமல் எனக்காக பெருகிக் கொண்டே இருக்கும்.

இதே மாதிரியான பல விஷயங்களை பேசி கொண்டு செல்லும் யஜூர் வேதம் கடைசி பகுதிகளில் தெய்வத்துடனான சிந்தனையை ஒருமுகப்படுத்துகிறது.  இறைவனுடன் ஆத்மாவானது இரண்டற கலந்தால் தான் நிரந்தரமான அமைதியும் சந்தோஷமும் கிடைக்குமென்று சொல்கிறது அப்படி பேசும் யஜூர் வேத பாடல் ஒன்றை சிந்தித்து பார்ப்போம்.

இந்த பூமியிலுள்ள எல்லாமே இறைவனின் படைப்புகள் தான் ஒரு சிறு மண் துகள்கள் கூட மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல.  அவன் படைத்தவற்றை வைத்து நாம் மகிழ்ச்சியை பெருக்கி கொள்கிறோம்.  அவன் படைப்பை நாம் அனுபவிக்க அயராது உழைக்க வேண்டும்.  உழைத்தால் தான் ஆயுள் கூடும்.  ஆரோக்கியம் பெருகும் உழைக்காமல் கிடந்தால் கல்லைப் போல் வாழ்ந்து காலனின் கைகளில் அகப்பட்டு அழிய வேண்டியது தான்.

மரணத்திற்கு பிறகு நாம் என்னவாக மாறுகிறோம் நமக்கு என்ன நேருகிறது.  நாம் எங்கே போகிறோம்.  நமது பயனத்தின் விவரம என்ன என்ற கேள்விகள் அனைத்திற்கும் மர்ம முடிச்சுகளே பதிலாக கிடைக்கிறது.  இந்த பதில்களை பற்றி கவலைபடாமல் இறைவனின் திருவடியே அடைவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.  

   அவனை போய் அடைவது மட்டுமே நமது பயணத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.  அவன் இருக்கும் இடத்திலேயே நமது பயணம் முடியும்.  அவன் எப்படி பட்டவன் எத்தகைய குண இயல்பு கொண்டவன் எதுவும் நமக்கு தெரியாது அவன் அசைவற்றவன்.  அதே நேரம் எல்லாவற்றையும் அசைத்து கொண்டிருப்பவன்.  அவன் நம்மிடமிருந்து தொலைவிலும் இருக்கிறான் அருகிலும் இருக்கிறான்.  அவன் எங்கும் நிறைந்தவனாக இருக்கிறான்.  அவன் இல்லாத இடம் என்று பூமியிலும் ஆகாயத்திலும் எதுவுமே இல்லை.

இதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும்.  அந்த புரிதல் தான் அறிவு அது தான் ஞானம்.  இந்த ஞானம் பிறந்து விட்டால் ஐயம் இல்லை, எண்ணம் இல்லை, குழப்பம் இல்லை எல்லாவற்றிற்குமே முற்று புள்ளி ஏற்பட்டுவிடும்.  அவனை பற்றிக்கொண்டால் அடைந்து விட்டால் உடல் என்ற கூடு நமக்கு இல்லை உடல் வேதனைகளும் ஆசைகளும் அவஸ்தைகளும் ஏற்படப்போவது இல்லை.  ஏன் என்றால் பிறக்க வேண்டிய அவசியமே நமக்கு இல்லை.  பிறப்பும் இறப்பும் இறப்பும் பிறப்பும் முற்றிலுமாக அழிந்தே விடுகிறது.  நாம் ஒளிமயம் ஆகிவிடுவோம்.  மிகத்தூயதாக மாறிவிடுவோம்.

அதோ அந்த பொன் மயமான உலகத்தில் அவன் அமர்ந்து இருக்கிறான்.  அவனுக்கு அருகில் மிகப் பெரும் சிம்மாசனம் போடப்பட்டிருக்கிறது.  அதில் நாமும் அவனும் சமமாக அமரலாம்.  அவனது இந்த உலகம் தான் சொர்க்கம்.  அவன் தான் அனைத்துமாய் ஆன பிரம்மம்.  அவனை அடைந்த பின் நமக்கு கிடைப்பது அழிவற்ற குழப்பமில்லாத அன்பு மயமான சாந்தி! சாந்தி! சாந்தி! மட்டுமே.

யஜூர் வேத பாடல்கள் அனைத்தும் கங்கை கரையில் மக்கள் பரவி வாழ்ந்த பிறகு உருவானவைகளாக இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்ற கருத்தை இந்த பாடல் வகள் மெய்பிக்கின்றன.  சிந்து நதி ஓரம் வாழ்ந்த போது 33 தேவதைகளை வழிபட்ட இவர்கள் யஜூர் வேத காலத்தில் சிந்தனை கூர்மைபட்டவர்களாக காணப்படுகிறார்கள். 

  இவர்கள் வாழ்க்கையில் அபாயங்கள் குறைந்து அமைதி நிலவிய காலமாக இது இருந்திருப்பதினால் தான் மனம் இறைவனை பற்றி அவன் ஒருமையை பற்றி சிந்திக்க வழி ஏற்பட்டிருக்கிறது.  அதன் விளைவுகளையே இந்த பாடல்களின் மூலக் கருத்தாக அமைந்திருப்பதை நாம் காணலாம்.  இந்த யஜூர் வேத கருத்துக்கள் தான் நாளடைவில் ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள் உலகம் ஓர் இன்பகேணி என்ற கருத்துக்களின் விரிவாக்கமாக அமைந்திருக்கிறது.  இனி நாம் சாம வேதத்தை பற்றி சிந்திப்போம்.