Friday, 2 April 2010

சண்டக்காரன்!




கணவனும், மகனும் வீட்டை விட்டு வேலைக்கு கிளம்பியதுமே மனதிற்குள் ஒருவித பய
உணர்வு தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது மீனாட்சிக்கு.
""ஏண்டி... ஈஸ்வரி ஜன்னல் எல்லாத்தையும் நல்ல மூடிடு. இன்னிக்கு அந்தப் பய
வீட்லதான் கெடக்கான். ஏதாவது பிரச்னை பண்ணுவான். அதுவும் ஆள் இல்லாத நேரம்
பார்த்துதான் கத்த ஆரம்பிப்பான், அந்த எழவெடுத்துப் போறவன்...'' என்று மறுபடியும்
கத்த ஆரம்பித்தாள் அம்மா. இந்தளவிற்கு அம்மா கோபப்படுவதற்கான காரணம்
முத்தையா.
எங்க வீட்டுக்கு அடுத்தவீடுதான் முத்தையாவின் வீடு. வேலைக்கு போவான். ஆனா,
எப்போ போவான்னுதான் யாருக்கும் தெரியாது. பெரும்பாலும் பக்கத்து வீடுகள்ல
ஆம்பளைங்களாம் வேலைக்கு போன பிறகுதான் தன்னுடைய கதா காலட்சேபத்தை
நடத்துவான்.
எதையாவது காரணத்தை வச்சிக்கிட்டு சண்ட போடுவான். தாறுமாறா கத்துவான். ஏன்
கத்துறான் எதுக்கு கத்தறான்னு அவனுக்கே தெரியுமோ தெரியலையோ தெரியாது.
அவனைப் பார்த்தாலே எல்லாருக்கும் ஒரு வித அலர்ஜி. ஒதுங்கித்தான் போவார்கள்.
நாங்களும் அப்படித்தான்.
எங்கத் தெருவுல முத்தையாதான் பட்டம் சூடாத ரவுடி, தாதா... இப்படி எல்லாம்.
தெருக்குழாயில தண்ணீ வந்துச்சுன்னா முதல்ல அவன் பொண்டாட்டிதான் எடுக்கணும்.
இல்லாட்டி அவ்வளவுதான்... ரணகளம் பண்ண ஆரம்பிச்சுடுவான் முத்தையா.
ரணகளம்னா... வேட்டியை கழற்றி போட்டுக்கிட்டு, டவுசரோடு இங்கிருந்து அங்கே
ஓடுவான். அங்கிருந்து இங்கே ஓடுவான். பாக்கறதுக்கே கர்ண கொடூரமா இருக்கும்.
பொம்பளைங்க எல்லாம் கண்ண மூடிக்குவாங்க. அதனாலையே முத்தையா வீட்ல
இருந்தான்னா, தெருவே அமைதியா இருக்கும்... பொம்பளைங்க வெளியவே
வரமாட்டாங்க.
அவன் அப்பப்ப கட்டை, கம்பு, கத்தி அருவாள்னு எல்லாத்தையும் வீராவேசமா
துõக்குவான். கொடுவா மீசை வச்சிக்கிட்டு பார்க்கறதுக்கு பயங்கரமா இருக்கறதுனால,
வீட்டு ஆம்பளைங்களும் எதுக்குடா வம்புன்னு அவனை எதிர்த்துகூட பேசறதுல்ல.
அண்ணனுக்கு அவனைப் பார்த்தாலே கோபமா வரும். "என்ன ஆனாலும் சரி; அவனை
அடிக்காம விடக்கூடாது'ன்னு கங்கணம் கட்டிக்கிட்டு அலைஞ்சான். ஆனா, அப்பா
வாத்தியார்ங்கறதால... வாத்தியார் பையனும் இப்படி அடாவடி பண்றானேன்னு
ஊருக்குள்ள சொல்லிடக்கூடாதுன்னு, அப்பா அடக்கி வச்சிட்டார். அதனால அவனும்
வாயை திறக்கல.
முத்தையா சுத்திமுத்தி எல்லா வீடுகள்லயும் சண்ட போட்டுட்டான். அவன் சண்ட
போடாதது எங்க வீட்ல மட்டும்தான்.
ஆனா, என்னிக்கு வேணாலும் சண்டைய இழுத்துருவான்னு அம்மா பயந்துக்கிட்டே
இருந்தாங்க.
""ஏண்டி சொல்லிக்கிட்டே இருக்கேன்... காதுலையே வாங்காம அப்படி என்னதான்
யோசிச்சிக்கிட்டு இருப்பியோ''ன்னு சொல்லிக்கிட்டே வந்து ஜன்னல் ரெண்டையும்
பளார்னு மூடும்போதுதான் நிஜம் நினைவுக்கு வந்தது.
அம்மா இன்னமும் புலம்பிக்கிட்டுத்தான் கிடந்தாள்.
""இன்னிக்கு மத்தியானம் என்னம்மா பண்ணிருக்க...''
""இத மட்டும் நல்லா கேளு... கூடமாட ஒத்தாசைக்கு ஒரு வேல பாக்காத...''
""என்னம்மா எப்ப பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்க... மத்தியானம் என்னதும்மா
சொல்லு...''
""புளிக்குழம்பு வச்சி, துவையல் அரைச்சிருக்கேன்.''
""ஏம்மா... நானே ஹாஸ்டல்ல காரக்குழம்பு சாப்ட்டு சாப்ட்டு நாக்கே
செத்துப்போச்சேன்னு சொல்லிக்கிட்டு கிடக்கேன். அதப் போய் வச்சிருக்கியே... பேசாம
இதுக்கு செமஸ்டர் லீவுல ஊரு பக்கம் வராம அப்படியே ஹாஸ்டல்லேய
உட்கார்ந்திருக்கலாம்.''
""இப்ப என்னடி வேணும்...''
""ஒரு ஆம்லட் மட்டும் போடும்மா...''
""சரிடி... போட்டு தொலைக்கறேன்...'' அம்மா கடுகடுத்தப்படியே செல்ல,
வெளியிலிருந்து முத்தையாவின் குரல் ஓங்கி கேட்க ஆரம்பித்தது.
""வீட்ல மனுஷன் குடியிருக்கணுமா... வேண்டாமா... எப்படி நாறுது. ஏய் வெளிய
வா...'' என்று குரல்.
""ஏம்மா.. முத்தையா கெடந்து கத்தறான். யாரம்மா ஏசறான்...'' என்று கேட்க,
""ஸ்ஸ்ஸ்...'' அமைதியா இருக்குமாறு அம்மா எச்சரித்துவிட்டு, கதவோரமாய் காதை
வச்சிக்கிட்டு நின்றிருந்தாள்.
""ஏய்... நான் கெடந்து கத்திக்கிட்டு கிடக்கேன்... ஏதாவது வெளிய வருதா பாரு... குளிக்கற
தண்ணியா, இல்ல கழுவுற தண்ணியா தெரியல... யம்மா... என்னா நாத்தம்...'' என்று
மூக்கை பொத்தியபடியே பேச ஆரம்பித்தான்.
அவன் மூக்கைப் பொத்திக்கொண்டு பேசியது... எனக்கு குபுக்கென்று சிரிப்பை
வரவழைத்தது.
""பெரிய வாத்தியானாம்... இவன் வீட்டுக்குள்ள சாக்கட போச்சுன்னா இவன்
ஒத்துப்பானா...?''
""அம்மா... அவன் நம்மள பத்திதான் பேசறான்...'' எனக்கு சட்டென்று கோபம் வந்தது.
""பொறுடி... அப்பா வேற வீட்ல இல்ல... எதையாவது கத்தி தொலைச்சிக்கிட்டு
போறான். பேசாம வாய மூடிக்கிட்டு உட்காரு.'' அம்மாவும் இப்போது அணிச்சையாய்
கையை வைத்து வாயை பொத்திக்கொண்டு நின்றிருந்தாள்.
""நான் என்ன லுõசுப் பயலா... தனியா நின்னு கத்திக்கிட்டு நிக்கறதுக்கு... இப்ப வெளிய
வரல... அவ்வளவுதான், நான் என்ன பண்ணுவேன்னே எனக்குத் தெரியாது'' என்று
சொல்லி முடிக்கவும், வீட்டுக் கதவில் "டமார்'னு ஒரு சத்தம்.
""அம்மா... அவன்தான் கல்லைத் துõக்கி வீசறான். கதவத் திறம்மா... என்னன்னு
கேட்ருவோம்.''
""ஏய்... நீ உட்காரு. நான் வெளிய போய் கேட்டுட்டு வர்றேன்...'' என்று சொல்லும்போது
அம்மாவின் உடல் லேசாக நடுங்க ஆரம்பித்திருந்தது.
அம்மா கதவைத் திறந்துகொண்டு வெளியே நிற்க...
""ஏம்மா... இவ்வளவு கத்துறேன்... காது ரெண்டும் அவிஞ்சு போச்சா... இங்க பாரு...''
என்று அவன் கை நீட்டிய திசையை பார்த்தபோது எங்கள் வீட்டு சாக்கடை, லேசாக
உடைந்து சாக்கடைத் தண்ணீர் அவன் வீட்டு வாசலில் லேசாக தேங்கி நின்றது.
அம்மா அமைதியாக நின்றுகொண்டிருந்தாள்.
அம்மா எதிர்த்துப் பேசாதது அவனுக்கு ஒருபுறம் வசதியாய்போனது. வாய்க்கு வந்தபடி
கத்த ஆரம்பித்தான். அவன் பேசிய பேச்சு காது கூசியது. என்னால் சுத்தமாய் கேட்க
முடியவில்லை. நான் மெதுவாக வெளியில் வந்து எட்டிப் பார்த்தேன்.
துõரத்தில் அண்ணன் வருவது தெரிந்தது.
அப்பாடா... ஒருவழியா அண்ணன் வந்துட்டான் என்று மனசு கொஞ்சம் நிம்மதியானது.
அம்மாவை அவன் சகட்டு மேனிக்கு காட்டுக் கூச்சலில் கத்த, பக்கத்து வீட்டுக்காரங்க
எல்லாம் அவங்கவங்க வீட்டு முன்னாடி நின்னுக்கிட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு
இருந்தாங்க. யாரும் விலக்கு புடிக்கல.
அண்ணன் பக்கத்துல வந்துட்டான்.
அம்மாவை... முத்தையா திட்டுறதப் பாத்த அண்ணன் பதறிப்போனான்.
""என்னம்மா ஆச்சு...?'' என்று அண்ணன் அம்மாவின் தோளைத் தொடவும், அம்மா
தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். அண்ணனுக்கு விர்றுன்னு கோபம் வந்தது.
""ஏய்... உனக்கு என்னடா வேணும்?''னு சட்டுன்னு முத்தையா சட்டைய புடிச்சுட்டான்.
இத... முத்தையா மட்டுமல்ல நாங்களும் எதிர்பார்க்கல. அம்மா அப்படியே வாயடைத்துப்
போய் நின்றாள்.
""பொடிப்பய... நீ என் மேல கைய வச்சிட்டியா..'' என்று நாக்கை மடித்து முறைக்க,
சட்டென்று முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டான் அண்ணன். அவ்வளவுதான்... ""ஏய்...
அடிச்சிட்டில்ல.. இன்னிக்கு ஒரு கை பார்க்காம விடமாட்டேன்... ஏடி.. அருவாள
எடுத்துக்கிட்டு வா... இன்னிக்கு... இவன...'' என்று சொல்லிக்கொண்டு, சுத்தி சுத்தி
எதையோ தேடினான் முத்தையா.
""என்னடா தேடுத... நாயே... இன்னிக்கு நான் இருக்கணும். அல்லது நீ இருக்கணும்.
ரெண்டுல ஒண்ணு பார்த்துடலாம்...'' என்று அண்ணன் விருட்டென்று வீட்டிற்குள்
ஓடிவந்து, ஓட்டுப்பிறையில் செருகி வைத்திருந்த அரிவாளை எடுத்தான். அப்போது
அவன் கண்கள் ரத்தச் சிவப்பாய் இருந்தது. கை, கால்கள் எல்லாம் லேசாக பதற்றத்தில்
நடுங்கிக் கொண்டிருந்தது. உண்மைய சொல்லப்போனா, அண்ணன் கையில் இருந்த
அருவா... ஒரு வாழைப்பழத்தைக்கூட சரியா வெட்டாது. ஆனா, அண்ணன் அதைப்பத்தி
எல்லாம் கவலைப்படாம துõக்கிட்டு அய்யனார் சாமிகணக்கா நின்னுக்கிட்டு இருந்தான்.
""டேய்... வேண்டாம்டா ராசா... உள்ள வாடா...'' அம்மா கெஞ்சிப் பார்த்தாள்.
""அம்மா...'' என்று ஒரு சத்தம்தான் அண்ணன் போட்டான். இதுவரை அந்தமாதிரி
அண்ணன் கோபப்பட்டு இதுவரை நான் பார்த்ததே இல்லை. டக்கென்று
அமைதியாகிப்போனாள் அம்மா.
ஆனால், அரிவாளை எடுக்க உள்ளே போன முத்தையா, இன்னும் வெளியே
வந்தபாடில்லை.
""டேய் நாயே வெளியே வாடா... நான் தெருவுலதான் நிக்கறேன். தைரியமான
ஆம்பளையா இருந்தா வெளியே வாடா...'' என்று அண்ணன் குரல் கொடுத்தான்.
எதிர் முனையில் எந்த சத்தமும் இல்லை. ஒரே நிசப்தம்... மையான அமைதி என்பார்களே,
அதேபோல் இருந்தது.
அண்ணன் முக்கால்மணிநேரமா அரிவாளோடு நின்று பார்த்தான். ஆனால், முத்தையா
வெளியே வந்தமாதிரி இல்ல... இப்போ அவன் வீட்டு முன்கதவு சாத்தப்பட்டிருந்தது.
""டேய்... உள்ள வாடா... அப்பாவுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாரு...'' என்று
அம்மா கண்ணீர் வடிக்க, வேறு வழியில்லாமல் வீட்டிற்குள் வந்தான் அண்ணன்.
அண்ணனைப் பார்த்து எனக்கு இப்போ பிரம்மிப்பா இருந்தது. இவ்வளவு பெரிய ரவுடிய
ஒத்த ஆளா நின்னுக்கிட்டு அண்ணன் எப்படி சமாளிச்சான்னு மனசுக்குள்ள ஒரு பூரிப்பு.
சாயங்காலம் அப்பா வந்தார். அப்பாவிடம் நடந்ததையெல்லாம் ஒவ்வொன்றாய்
சொன்னாள் அம்மா. அண்ணனைப் பார்த்து ஒரு முறைப்பு முறைத்தார் அப்பா.
இப்போதும் முத்தையாவின் வீட்டுக் கதவு மூடிதான் இருந்தது.
""இவன் நமக்கு ஒத்தைக்கோர் பிள்ளை... அவன் பாட்டுக்கு எடுத்தோம் கவுத்தோம்னு
அவன்ட்ட சண்டை போட்டுட்டான். நாளைக்கு இவன் ஒத்தசெத்தையா எங்கேயாவது
போய்ட்டு வரநேரத்துல அந்தப் பய வெட்டி போட்டுட்டான்னா, நமக்கு பிள்ள
கிடையாதுடி.''
""அப்படியெல்லாம் சொல்லாதீங்க...''
""உண்மைய சொல்லுதேன்... கசக்கத்தான் செய்யும். இவன பேசாம மதுரையில உங்க
அண்ணன் வீட்டுக்கு ரெண்டு மாசம் அனுப்பி வை. போய் இருந்துட்டு வரட்டும்.
அதுக்குள்ள... முத்தையாவப் பாத்து நான் சமாதானம் பேசிப் பாக்கறேன்'' என்று அப்பா
அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தது, எனக்கு காதில் விழுந்தது. ஆனால், அண்ணன்
எதுவும் பேசாமலே துõங்கிப் போனான்.
மறுநாள் காலை...
அம்மா வழக்கம்போல் முற்றத்தை சானம் போட்டு தெளிக்க வெளியே சென்றாள். நானும்
துணைக்கு வெளியே போனேன். அங்கு நான் கண்ட காட்சி எனக்கு அடக்க முடியாத
சிரிப்பை வரவழைத்தது. எங்க வீட்டு சாக்கடையை ரொம்ப பொருப்பா மண்வெட்டியை
வைத்து வெட்டி ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தான் முத்தையா.

Tuesday, 30 March 2010

மடக்கலாம்... கையில் துõக்கிச் செல்லலாம்!




வீடுகளில் பாதி இடத்தை சைக்கிள், பைக்கே ஆக்ரமித்துக் கொள்ளும். ஊர் வழிக்கு போவது என்றால், இதை பாதுகாப்பது என்பதே தர்மசங்கடமானது. இதற்கு ஒரு புது ஐடியாவைத்தான் கண்டுபிடித்திருக்கிறார் ஜப்பான் ஆராய்ச்சியாளர் மகோடா ஆசாவா. இவர் கண்டுபிடித்த சைக்கிளை வழக்கமான நாம் ஓட்டும் சைக்கிளைப் போலவே ஓட்டலாம். வீட்டுக்கு வந்தாச்சா... டக்குன்னு சைக்கிள் பெடல் அருகில் உள்ள லிவரை அளுத்தினால், முன் வீல் அப்படியே மடங்கி பின் சக்கரத்தோடு இணைந்துகொள்ளும். பின்னர் அதை அப்படியே துõக்கி வீட்டு பரணில் ஏற்றிக்கொள்ளலாமாம். இந்த அட்டகாசமான சைக்கிளின் விலை ரூ.21,400. ஜப்பானில் மிகப் பிரபலம் அடைந்த இந்த சைக்கிள் கூடிய விரைவில் இந்தியாவிலும் தலைகாட்டவிருக்கிறது.

வந்துடுச்சு சூப்பர் குடை!




மழை, வெயில் போன்ற சீதோஷன நிலைக்கு நாம் குடை எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால், திடீரென்று பலத்த காற்று அடித்தால், குடை சட்டென்று வளைந்து மேல்நோக்கி துõக்கிக்கொள்ளும். அந்தநேரத்தில் சாலையில் நடந்து செல்லும் நமக்கு கொஞ்சம் அவமானமாக இருக்கும். இதுக்கு ஒரு விடிவுகாலம் வராதா என்று யோசித்து இருப்போம். படத்தில் நீங்கள் பார்க்கும் இந்த குடை மழை, வெயில், காற்று, பனி என்ற எதுக்கும் அசைந்து கொடுக்காதாம். இந்த குடையை நீங்கள் மாட்டிக்கொண்டு இரண்டு கைகளையும் வீசி வீசி நடக்கலாம். செல்போன் பேசலாம். ஏன்.. டீ கூட குடிக்கலாம். வழியில் செல்லும் மற்ற நபர்களை பதம் பார்க்காது. இந்தக் குடை காற்றில் மேல் நோக்கி துõக்காது. மழை பெய்தால் தோள்பட்டைக்கூட நனையாது. காற்றடித்தால் உங்கள் முடி கலையாது. இப்படி பல்வேறு நல்ல விஷயங்களை கொண்ட இந்த குடையை, கையில் பிடித்து செல்லவேண்டாம். மாறாக ஹெல்மட் டைப்பில் மாட்டிக்கொண்டு செல்ல வேண்டும்.

பற்பசை மிஷின்:



மாசக் கடைசி ஆனாலே பல நடுத்தர வீடுகளில் பற்பசை பிரச்னை வந்துடும். பற்பசை டியூப்பில் கடைசி சொட்டு பசை வரை, முடிந்தமட்டும் பலம் கொண்டு பிசுக்கி எடுப்போம். கடைசியில் மனமில்லாமல்தான் அந்த டியூப்பை கடாசி எறிவோம். அப்போதும்கூட இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணினா, ரெண்டு நாளைக்கு பல் தேய்க்கலாம் என்ற நினைப்பு வரும். உங்களின் இந்த எண்ண ஓட்டம்தான், ஒரு புதுவித ஐடியாவுக்கு வித்திட்டு இருக்கிறது, ஜப்பான் ஆராய்ச்சியாளர்களுக்கு. அவர்கள் கண்டுபிடித்த ஐடியாதான் படத்தில் நீங்கள் பார்ப்பது. உங்கள் வீட்டு பற்பசையை இந்த மிஷினின் க்ளிப்பில் மாட்டிவிட்டு ஓரத்தில் இருக்கும் ஸ்க்ரூ போன்ற அமைப்பை திருக்கினாலே போதும், உங்களுக்கு தேவையான பற்பசை உங்களுக்கு வந்துவிடும். அதோடு, டியூபில் இருக்கும் கடைசி சொட்டு பசை வரை இந்த மிஷின் விட்டு வைக்காதாம். எப்பூடி...?

Sunday, 28 March 2010

என்ன செய்யப் போகிறோம்...?



கடந்த மார்ச் 15ம் தேதி... பாராளுமன்றத்தில் அணுவிபத்து நஷ்டஈடு மசோதா தாக்கல் செய்யப்படவிருந்து, பின் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால், மசோதா தள்ளிவைக்கப்பட்டது. ஆனால், இதுவும் சிவில் அணுசக்தி ஒப்பந்தந்தைப்போல் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே கையெழுத்தானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
அது என்ன... அணுவிபத்து நஷ்டஈடு மசோதா...? அமெரிக்கா சார்பில் இந்தியாவில் அணுமின் நிலையம் ஆரம்பிப்பார்கள். ஆனால், அணுமின் நிலைய கட்டுமான குறைகளாலோ, அல்லது ஏதாவது விஷவாயு கசிவால் இந்தியாவில் உயிரிழப்பு ஏற்பட்டாலோ அதற்கு எவ்விதமான நஷ்டஈடும் அமெரிக்கா தராது. இதற்கு சம்மதித்து இந்தியா கையெழுத்து இட வேண்டும். இதுதான் அணுவிபத்து நஷ்டஈடு மசோதா.
சில அமெரிக்க நிறுவனங்களின் நலனுக்காக ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலனை காவு கொடுக்கும் மறைமுகதிட்டம்தான் இது என்று சொன்னால் சரியாக இருக்கும்.
2008ம் ஆண்டில் இந்தியாவுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் பலகட்ட பாராளுமன்றம் ஒத்திவைப்பு, போராட்டங்களுக்கு இடையே கையெழுத்தானது. மசோதா மட்டுமே கையெழுத்தானது. ஆனால், இது நடைமுறைக்கு வரவேண்டுமானால்,
அணுவிபத்து நஷ்டஈடு மசோதா தாக்கல் ஆக வேண்டும்.
பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவில் அணு உலைகளை அமைத்திருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அந்த நாடுகள் இம்மாதிரியான ஒப்பந்தங்களை நிறைவேற்றச் சொல்லி எந்த ஒரு நிபந்தனையையும் இதுவரை விதிக்கவில்லை.
ஆனால், அமெரிக்கா மட்டும் நிபந்தனை விதிப்பது, இந்தியாவின் தார்மீக உரிமையில் கையை வைப்பதற்காகத்தான் என்பது நடுநிலையாளர்கள் கருத்து.
மிக அரும்பாடுபட்டு சிவில் அனுசக்தி ஒப்பந்தத்தை பல பேராட்டங்களுக்கு இடையே காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நிறைவேற்றியுள்ளது. அதேபோல அனுசக்தி நஷ்டஈடு மசோதாவையும் நிறைவேற்ற அவர்கள் முயற்சி மேற்கொள்கிறார்கள். ஏனென்றால் இது அவர்களுக்கு தன்மானப் பிரச்னை. இதை நிறைவேற்றாவிட்டால்,
அமெரிக்கா முன் இவர்கள் அவமானப்பட்டு நிற்கவேண்டியதிருக்கும்.
இவர்கள் அவமானப்படாமல் இருப்பதற்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலனில் கைவைப்பது எவ்வகையில் நியாயம்? போபால் விஷவாயுவால் இறந்தவர்களின் பட்டியலை மறந்துவிட்டதா நமது மத்திய அரசு?
இந்தப் பிரச்னையில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால், கூட்டணியில் உள்ள தமிழக கட்சிகளின் நிலை என்ன? என்பதுதான் இப்போதுள்ள மில்லியன் டாலர் கேள்வி.
இலங்கைத் தமிழர் பிரச்னை முதல், காவிரி பிரச்னை வரை முதல்வர் அறிக்கை விடுவதும், பிரதமருக்கும் சோனியாவுக்கும் கடிதம் எழுதுவதும் அனைவரும் அறிந்ததே. ஆனால், நம் நாட்டு மக்களுக்கு எதிரான இந்த மசோதா தாக்கல் விவகாரத்தில்
தம்முடைய பலத்த எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய கடமை, நம் முதல்வருக்கும் அவர் சார்ந்த கட்சிக்கும் இருக்கிறது. ஆனால், நடக்கும் சம்பவத்தை வைத்துப் பார்க்கும்போது, நாட்டுப் பற்றைவிட காங்கிரஸ் பற்றுதான் அதிகமாக இருக்கும்போல் தெரிகிறது. இல்லையென்றால் அவர்கள் சார்ந்த தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் குறைந்தபட்சம் இந்தச் செய்தியையாவது வெளியிட்டு இருக்கலாமே!.
ஒரு சில நாளிதழ்களில் மட்டுமே நாட்டுக்கு எதிரான இந்தப் பிரச்னைக்குறிய செய்தியை வெளியிட்டது. நாட்டு மக்களின் அறியாமையை ஒழிக்கிறோம் என்ற பெயரில் நித்யானந்தா விவகாரத்தை துவம்சம் செய்த முன்னணி வார இதழ்கள் கூட இந்தச் செய்தியை வெளியிடாதது, ஏனோ...?

Friday, 26 March 2010

குட்டிச்சுவர்!

வழக்கமா காலேஜ் முடிஞ்சு வந்தா, கலையரங்கு பக்கத்துல உள்ள குட்டிச் சுவத்துலதான்
நான், வழுக்கன், செல்வம், கோபால் நாலுபேரும் உட்கார்ந்துகிட்டு அரட்டை
அடிச்சிக்கிட்டு இருப்போம். அப்படித்தான் அன்னைக்கும் எதிர்பார்த்துப் போனேன்.
அந்தச் சுவர் காலியாய் கிடந்தது. எனக்கு ஆச்சர்யம் ஒருபுறம் இருந்தாலும், பசங்க
நம்மகிட்ட சொல்லாம போக மாட்டாங்கேளன்னு ஒரே குழப்பம். கொஞ்ச நேரம் அந்த
குட்டிச் சுவத்து மேல ஏறி உட்கார்ந்திருந்தேன். அந்த வழியா தண்ணி எடுக்கப் போன
அம்பிகா அக்காவும், கோகிலா அக்காவும், ""என்னடே... விக்னேஷ் உன் சேக்காலிங்க ஒரு
பயலுகளையும் காணோம்.''
""தெரியலைக்கா... உங்க தம்பி எங்க போயிருக்கான்? ஏதாவது வீட்ல சொன்னானா?''
என்று கேட்டேன் கோபாலின் அக்கா அம்பிகாவிடம்.
""ஏய்... சும்மா புழுகாதடே... உன்ட்ட சொல்லாததையா என்ட்ட சொல்லிட்டு
போயிடப்போறான். எல்லாப் பயலுகளும் கூட்டுக் களவானிங்கதானடே... ஏதோ நல்ல
பிள்ளையாட்டம் கேக்குற...'' என்று சொல்லிவிட்டு ஊர்க்கதையை அளந்தபடியே
செல்ல, வேண்டா வெறுப்பாய் வீட்டுக்கு வந்தேன்.
""என்ன... மகராசன் விளக்கு வைக்கறதுக்கு முன்னாடியே வீட்டுக்கு வந்த மாதிரி தெரியுது.
கூட்டாளிங்க யாரும் இன்னிக்கு கிடைக்கலையோ'' என்று கேலி பேசினாள் அம்மா.
""அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லைம்மா... செமஸ்டர் லீவு விட்டாச்சுல்ல. எல்லாப்
பயலுகளும் நாகர்கோயிலுக்கு சினிமாவுக்கு போயிருப்பானுக. நீதான் உள்ளூர்
தியேட்டருக்கே, அப்பாவதான் துணைக்கு கூட்டிட்டு போகணும்னு சொல்லுவ. அந்தால
தனியா நாகர்கோயில் வரைக்கும் சினிமாவுக்கு ஒத்தையில பசங்க கூட விட்டுட்டாலும்...
உலகம் அழிஞ்சுடாது'' என்று பதிலுக்குச் சொன்னேன்.
""ஏல... ராசா அந்த காவாலிப் பசங்களையெல்லாம், அவனுக அம்மாமாரு தலையில
தண்ணிய தெளிச்சு அனுப்பிட்டாங்க. நீ அப்படியால..., நீ எங்களுக்கு ஒத்தைக்கோரு
பிள்ள... எங்க ராசாடா நீ. அந்த காவாலிப்பயலுகக் கூட சேர்ந்து சுத்தறது கொஞ்சம் கூட
அப்பாவுக்குப் பிடிக்கல. இருந்தாலும், நீ சந்தோஷமா இருக்கீயேன்னுதான் நானும் விட்டு
வச்சிருக்கேன்'' என்றாள் அம்மா.
அம்மாவின் அர்ச்சனைகள் தொடர்ந்தாலும், எனக்கு இந்தப் பயலுக எங்க
போயிட்டாணுங்க... என்று கேள்விக் கணைகள் தலையைக் குடைந்தது.
மறுநாள்...

காலை விடிஞ்சதும்தான் தாமதம். வழுக்கன் வீட்டிற்கு ஓடினேன். அவன் பேரு பெருமாள்.
முன் நெற்றி ஏறியிருக்கும். அதனால்தான் அவனுக்கு வழுக்கன் என்ற பட்டபேரு. அவன்
அம்மா கூட அவனை அப்படித்தான் கூப்பிடுவாள்.
""அம்மா... வழுக்கன் இருக்கானா...?'' என்று முற்றம் தெளித்துக்கொண்டிருந்த அவன்
அம்மாவிடம் கேட்டேன்.
""இல்லையேப்பா... காலையிலேயே உன் சேக்காலிங்க எல்லாம் வந்து, பெருமாளை
கூட்டிக்கிட்டு போயிட்டாங்களே. நீ போகலையா..?''
""எங்கம்மா...?'' என்று புரியாமல் கேட்டேன்.
""உனக்கு விஷயமே தெரியாதா... நம்ம ஊருக்கு புதுசா குங்பூ சொல்லிக்கொடுக்கற
மாஸ்டர் ஒருத்தர் வந்திருக்காரு. அவருக்கிட்ட குங்பூ கத்துக்கிடறதுக்காகத்தான் இவனுக
எல்லாம் போயிருக்காணுங்க'' என்று சொன்னதும், எனக்கு கஷ்டமாய் போனது. இந்த
விஷயத்தை எதுக்காக என்னிடம் இருந்து மறைக்கணும் என்ற கோபம். வரட்டும்...
அவனுங்ககிட்ட கேட்காம விடக்கூடாது. வழுக்கன் வீட்டு வாசலிலேயே நின்று
கொண்டிருந்தேன்.
பத்து மணி இருக்கும், வழுக்கன், கோபால், செல்வம் எல்லாரும் ஆளுக்கொரு சைக்கிளில்
வந்தார்கள். என்னைப் பார்த்ததும், ""பாருல... வீட்டு வாசல்ல சுடலை மாதிரி நிக்கான்''
என்று வழுக்கன் சொல்ல, ""லேய்... ஏதோ ஒரு காட்டத்துலதாண்டே நிக்கறான்'' என்றான்
கோபால்.
""என்னடே விக்னேஷ்... எப்போ வந்த...?''
""ஏல பேசாத. நீங்க எல்லாம் ப்ரண்ட்ஸாடே... ஒரு வார்த்தை என்ட்ட சொல்லாம நீங்க
மட்டும் குங்பூ கத்துக்கப் போயிருக்கீங்க.''
""ஆமா... சொன்னா மட்டும் அந்தால புள்ள வந்துடுவான். இப்ப வரைக்கும், உங்கம்மா
முந்தானையை புடிச்சுக்கிட்டுத்தான் அலையற... சும்மா பேசாதடே'' என்று கோபால்
சொல்ல, மூன்று பேரும் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் சொல்வதும் வாஸ்தவம்தான்.
நான் ஒத்தைக்கு ஒரு பையன் என்பதால், வீட்டில் விளையாடக்கூட அதிகம் வெளியே
என்னை விடமாட்டார்கள்.
""கோபால்... மாஸ்டர் எப்படிடே... நல்லா சொல்லித் தாறாரா?'' என்று கோபத்தை ஒதுக்கி
வைத்துவிட்டு ஆர்வத்துடன் கேட்டேன்.
""சும்மா சொல்லக்கூடாது விக்கி, சும்மா ஜாக்கி சான் மாதிரி இருக்கார்டே... ஒரே நேரத்துல
6 பேரை அடிக்கார். நாங்கல்லாம் மிரண்டுட்டோம். அவரு முடியப் பார்த்தேன்னா...
அவ்வளவு நீளம் இருக்குடே...'' என்று கோபால் புகழ்ந்து தள்ள, ""ஏல விக்கி...
இன்னொரு முக்கியமான விஷயம்... குங்பூ கத்துக்கிடருத்து நேரடியா சீனாவுக்கே
போயிட்டு வந்திருக்காருடே...''
""எதை வச்சு இவ்வளவு கரெக்ட்டா சொல்லுத...?'' என்று அப்பாவியாய் கேட்டேன்.
""ஜாக்கிசான் கூட நின்னு போட்டோ எடுத்திருக்காருன்னா... அது பொய்யாடே'' என்று
அகல கண்களை விரித்தான் வழுக்கன். அவர்கள் சொல்ல சொல்ல மனதுக்குள் பொறாமை
எழுந்தாலும் அடக்கிக்கொண்டு, ஆற்றாமை தாங்காமல் அவர்களிடம் இருந்து
விடைபெற்று வீட்டிற்கு வந்தேன்.
இரண்டு மாதங்கள் ஓடியிருக்கும்.
கோபால், வழுக்கன், செல்வம் மூன்று பேர்களின் நடை, உடை பாவனையே
மாறியிருந்தது. நீளமாய் முடி வளர்ப்பதும், டைட்டாய் டீ சர்ட் போடுவதுமாய் எப்போது
பார்த்தாலும் குங்பூ மாஸ்டரைப் பற்றி புகழ்வதுதான் அவர்களின் வேலையே
என்பதுபோல் ஆகிவிட்டது.
இதற்கிடையில் குங்பூ மாஸ்டருக்குப் பிறந்தநாளாம். ஊர் முழுக்க இவனுங்களே செலவு
செய்து போஸ்டர் எல்லாம் ஒட்டியிருந்தார்கள். இதுபோக உள்ளூர் தியேட்டரில் ஆறு
பேரை ஒருத்தராய் நின்று அடித்து துவம்சம் செய்வது போல் சிலேடு வேறு. எனக்கு
எரிச்சலாய் வந்தது. இப்போதெல்லாம் கலையரங்கு குட்டிச்சுவர் காலியாய் கிடந்தது.
அவர்களுடனான அரட்டை முற்றிலும் குறைந்துபோய் இருந்தது. இது என் அம்மாவுக்கு
மகிழ்ச்சிதான் என்றாலும், எனக்கு கஷ்டமாய் இருந்தது.
மூன்றாவது மாதம் ஆரம்பம். ஒரு நாள் மாலை... பால் வாங்குவதற்காக கலையரங்கம்
பக்கம் போயிருந்தேன். எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. மூஞ்சை
தொங்கப்போட்டுக்கொண்டு, மூன்று பேரும் குட்டிச்சுவரில் அமர்ந்திருந்தனர். எனக்கு
தாங்க முடியாத மகிழ்ச்சி.
""என்னடே... இன்னிக்கு மூணுபேரும் குங்பூ கிளாஸ்க்கு போகலையா...?'' என்று
சிரித்துக்கொண்டே கேட்டேன்.
""ஏல... இவன் தெரிஞ்சிக்கிட்டே நம்மள கிண்டல் பண்ணுதான்'' என்றான் கோபால்.
எனக்கு ஒன்றும் புரியலை. ""என்னடே சொல்லுதீங்க... என்னடே விஷயம்...'' என்று
சீரியஸானேன்.
""ஏல... உனக்கு உண்மையிலேயே விஷயம் தெரியாதா...?''
""என்னடே விஷயம்... சத்தியமாய் தெரியாது சொல்லுங்கடே'' என்றேன்.
""எங்க மாஸ்டரை ஆஸ்பத்திரியிலே வச்சிருக்காங்க...'' என்று தலையை குனிந்தபடியே
சொன்னான் பெருமாள்.
""என்னடே சொல்றீங்க...?'' எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.
""நேத்தைக்கு சாயங்காலம்... கிளாஸ் முடிஞ்சி நாங்கல்லாம் வந்துட்டோம். அப்போ அந்த
வழியா நம்ம காலேஜ் பொண்ணுங்க ரெண்டுபேர் போயிருக்காங்க... எங்க மாஸ்டர்,
அந்தப் பொண்ணுங்களை ஏதோ கிண்டல் பண்ணாராம். உடனே அந்தப் பொண்ணுங்க...
வீட்லபோய் விஷயத்தைச் சொல்ல, அந்தப் பொண்ணுங்களோட தம்பி, ரெண்டு மூணு
பேர் வந்து மாஸ்டரை நையப் புடைச்சிட்டாங்களாம். இப்போ மாஸ்டர் காயத்தோட
ஆஸ்பிட்டல்ல கிடக்கார்'' என்று மூஞ்சை தொங்கப் போட்டுக்கொண்டே பதில்
சொன்னார்கள் நண்பர்கள் மூவரும்.
""ஆறுபேரை ஒத்தையில நின்னு சமாளிக்கக்கூடியவர ரெண்டு பேரு எப்படி வந்து
அடிச்சிட்டுப் போனாங்கன்னு புரியவே இல்லை...'' என்று வழுக்கன் சோகமாய்
சொல்லிக்கொண்டே முகவாயைத் தடவ எனக்கு குபுக்குன்னு சிரிப்பு வந்தது.

Thursday, 25 March 2010

1. ஆரஞ்சு 2. ஆப்பிள் 3. வாழைப்பழம். 3. இளநீர் 5. அன்னாசி 6. பப்பாளி 7. மாம்பழம் 8. கறுப்பு திராட்சை 9. சீதாப்பழம் 10. பேரிக்காய்.