Tuesday, 14 February 2012

திரைப்படத்திற்கு அடையாளம் தந்த வங்காளம்



ஒரு நாட்டின் கலாசாரம் அந்நாட்டின் ஒவ்வொரு மாநில தனிப்பட்ட கலாசார மொத்த மதிப்பீட்டின் சராசரியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் ஒரு நாட்டின் உடை, உணவு, நாகரிகம் மற்றும் கலைகள்தான் ஒரு கலாசாரத்தின் அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் மேற்கு வங்காளத்தின் திரைத் துறை, நம் இந்தியாவின்  கலாசார அடையாளமாக விளங்கிவருகிறது.
இன்று திரைத்துறையில் 2டி, 3டி, கிராபிக்ஸ், மிக்ஸிங் என்று பல்வேறு தொழில்நுட்பங்களை, ஹாலிவுட் பட அளவிற்கு நாமும் முன்னேறிவிட்டாலும், இந்தத் திரைப்படங்களுக்கெல்லாம் அரிச்சுவடி எழுதப்பட்டது மேற்குவங்காளத்தில் கொல்கத்தாவில்தான் (அதாவது அப்போது உள்ள கல்கத்தா).   ஒரு திரைப்படம் என்றால் எப்படி இருக்கவேண்டும்? என்பதும், கதை, ஒளிப்பதிவு, பாடல்கள் என்று ஒவ்வொன்றாக இந்திய திரைத்துறைக்கு கற்றுத் தந்தது மேற்கு வங்க சினிமா துறைதான்.
18 ஆம் நூற்றாண்டின் இறுதிவாக்கு அது. தெற்கு ஆசியாவில் சினிமா என்றாலே விஷயம் தெரிந்தவர்கள் சொல்லும் பெயர்கள், இந்திய சினிமாவை பொறுத்தவரை அது மேற்கு வங்காளத்தில் உள்ள கல்கத்தாவையும், வங்கதேச சினிமாவை பொறுத்தவரையில் டாக்காவையும்தான் சொல்வார்கள். ஏனெனில் 1890 ஆம் ஆண்டு பயோஸ்கோப் முறையில், ஒளிக் கலவையை காட்சியாக மக்கள்மத்தியில் இதுதான்  சினிமா என்கு உச்சரிக்க வைத்தது கல்கத்தாவில்தான். ஹிராலால்சென் என்பவர்தான் முதன்முதலில் ராயல் சினிமாஸ்கோப் சினிமா கம்பெனி எனும் நிறுவனத்தை முதன்முதலில் தொடங்கினார்.
 அதுவரை வீட்டில் ரேடியோ பெட்டியை மட்டும் காதில் வைத்துக்கொண்டிருந்த அவ்வூர்வாசிகள் வீதிக்கு வந்து ஒரு பெட்டிக்குள்  ஒளிக்கற்றைக்கு ஊடே படச்சுருள் காட்சிகள் பிம்பங்களாய் வந்துபோவதை ரசிக்க ஆரம்பித்தனர். பயாஸ்கோப் அடைந்த வெற்றித்தான் வங்காள திரைப்பட வளர்ச்சி உலக அளவிற்கு செல்ல அடித்தளமாய் அமைந்தது.
1918 ஆம் ஆண்டு வாக்கில் திரேந்திரநாத் கங்குலி என்பவர் இந்தோ பிரிட்டிஷ் பிலிம் அண்ட் கோ எனும் கம்பெனியை உருவாக்கினார். பெங்காலியில் சொந்தமாக ஒரு படக் கம்பெனி உருவானது அப்போதுதான். இந்த நிறுவனம் வெளியிட்ட முதல் திரைப்படம் பில்லாத் பெராத். இந்த திரைப்படம் இந்த நிறுவனம் தொடங்கி மூன்று ஆண்டு காலத்திற்குப் பிறகு வெளியானது. ஆனால், அதே மாநிலத்தின் மாடன்  தியேட்டர் என்ற நிறுவனம்  1919 ஆம் ஆண்டு பல்வாமங்கள் எனும் திரைப்படத்தை வெளியிட்டது. இந்தப் படம்தான் வங்காளத்தில் வெளியான முதல் முழுநீள திரைப்படம். அதற்குப் பிறகு மாடன் தியேட்டர் நிறுவனம் 1931 ஆம் ஆண்டு அமர் சௌதாரி இயக்கத்தில் ஜமாய் சாஸ்தி எனும் திரைப்படத்தை வெளியிட்டது. இந்தப் படம்தான் வங்காளத்தில் வெளியான முதல் பேசும் திரைப்படம் ஆகும்.
இன்று நம்மவீட்டு குட்டீஸ்கள் சின்னத்திரையில் வரும் விளம்பரப் படங்களை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார்களே.. இந்த விளம்பரப் படத்திற்கு முதல் அடித்தளமிட்டது கல்கத்தாவில்தான். ஹிராலால்சென் என்பவர்தான் முதன்முதலில் விளம்பர திரைப்படத்தை கல்கத்தாவில் அறிமுகப்படுத்தினார். ஹிராலால்சென் வெளியிட்ட அந்த விளம்பரப்படம்தான், இந்தியாவின் முதல் விளம்பரப் படம் என்று இன்றுவரை போற்றப்படுகிறது.  1931 கால கட்டத்தில் வங்கமொழி திரைப்பட துறையில் புகழின் உச்சியில் இருந்தவர்கள், பிரம்மதீஸ் பரூவா மற்றும் தீபகி போஸ் என்பவர்கள்தான். பரூவா நிறைய படங்களை இயக்கியிருக்கிறார். இன்று நாம் பார்க்கும் நவீன சினிமாவிற்கு அடையாளம் கொடுத்தவர் பரூவாதான். அதேபோல தீபகி போஸ் 1932 ஆம் ஆண்டு சந்திதாஸ் எனும் திரைப்படத்தை இயக்கினார். படத்தில் வசன இடைவெளியில் உள்ள அமைதியை குறைக்க முதன்முதலில் பின்னணி இசையை இந்திய சினிமாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.
அதுபோல இந்தியாவில் முதல் ஆஸ்கார் விருதைப் பெற்றுத் தந்த சத்யஜித்ரே என்ற மாபெரும் திரைப்பட இயக்குனரை தந்ததும் மேற்கு வங்க சினிமா துறைதான். 20 ஆம் நூற்றாண்டில் திரைப்படத் துறையில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதும் இவர்தான். எழுத்தாளர், புத்தக வெளியீட்டாளர், ஓவியர், கிராபிக் டிசைனர், மற்றும் திரைப்பட இயக்குனர் என்ற பன்முக திறமை கொண்ட ரே இயக்கிய படங்கள் மொத்தம் 37. இவர் இயக்கிய முதல் திரைப்படம் பதேர் பாஞ்சாலி 1955 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மொத்தம் 11 சர்வதேச விருதுகளைப் பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த மனிதநேய திரைப்படம் என்ற பெயரையும் பெற்றுத்தந்தது. இவருடைய திரைப்பட வாழ்வில் 32 தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார். திரைப்படத் துறையில் இவரின் சாதனையைப் பாராட்டி 1992 ஆம் ஆண்டு, இந்திய அரசு சத்யஜித் ரேக்கு பாரதரத்னா விருது வழங்கி கௌரவித்தது.
மனிதர்களின் உணர்வுகளையும், இந்திய கலாசாரத்தையும் தன்னுடைய படத்தில் காட்டுவதை எப்போதும் தவறியதில்லை ரே. தாகூர் பற்றிய இவரின் டாக்குமென்ட்ரி திரைப்படம் இன்றுவரை பாராட்டுதலுக்குரியதாக விளங்குகிறது. வாழ்க்கை சார்ந்த படங்கள் மட்டுமல்லாமல், வித்தியாசமான திகில் படங்கள், துப்பறியும் படங்களையும் இயக்கி, அதில் வெற்றியும் கண்டார் ரே. இருபத்தி நான்கு மணி நேர ரயில் பயணத்தில் ஒரு கதாநாயகன், கதாநாயகி சந்தித்துக்கொள்ளும் நிகழ்வு மட்டுமல்லாமல், அவர்கள் பற்றிய கதையை முழுவதும் ஒரு ரயில் பெட்டியிலே எடுத்து முடித்த சாருலதா என்ற சத்யஜித்ரேயின் படத்தின் வெற்றியை எந்த சினிமா சம்பந்தப்பட்டவர்களாலும் மறக்க முடியாது. இந்தப் படத்தில் நாயகன் வேடத்தில் நடித்திருந்த உத்தம் குமார் மற்றும் நாயகி ஷர்மிலா தாகூர் இருவரும் இந்தியா முழுவதும் பிரபலமானார்கள்.
 வங்காள மொழி திரைப்படத்துறைக்கு கிடைத்த அடுத்த பொக்கிஷம் மிருனாள் சென். மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவாக தன் வாழ்க்கையைத் தொடங்கிய மிருனாள் சென், திரைப்பட ஸ்டூடியோவில் ஆடியோ டெக்னீஷியனாக பணிக்குச் சேர்ந்தார். பின்னாளில் சினிமா மீதான காதலில் 1953 ஆம் ஆண்டு முதல் திரைப்படத்தை உருவாக்கினார். முதல் படம் வெறும் படமாக மட்டுமே இருந்ததே தவிர அவருக்கு பெரிய அடையாளத்தைப் பெற்றுத் தரவில்லை. ஆனால், அவருடைய இரண்டாவது படமான நீல் அக்ஷார் நீச்சி என்ற படம் மேற்கு வங்களாத்தை மட்டுமல்ல சுற்றியுள்ள மற்ற மாநில ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இவருடைய மற்றொரு படமான  பெய்ஸி ஷர்வண் திரைப்படம் சர்வதேச அளவில் புகழைப் பெற்றுத் தந்தது. இந்த சினிமா இந்திய சினிமாவில் புதிய பாணியை ஏற்படுத்தியது என்றுகூட சொல்லலாம். இவருடைய ஒவ்வொரு படமும், கதை, ஒளிப்பதிவு, இயக்கம், எடிட்டிங் போன்ற ஏதோ ஒரு பிரிவில் ஏதோ ஒரு புதுமையை புகுத்தியிருப்பார். அதுதான் மிருனாள்சென்னின் பாணியாக திரைத்துறையினர் புகழ்பாடுகிறார்கள். இவரது சினிமா கேன்ஸ், வெனிஸ், மாஸ்கோ, கார்லோ வேரி, சிக்காகோ, கெய்ரோ போன்ற நாடுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை தட்டிச்சென்றுள்ளது. இவரது திரைத்துறைக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக அவருக்கு, இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் கலாசாரம் வாழ்க்கை முறை, நடை, உடை, உணர்வுகள் இப்படி எந்த ஒரு விஷயத்தையும் விட்டுக்கொடுக்காமல் அனைத்தும் திரையில் காட்டி, சர்வதேச அளவில் திரைப்படத்தின் மகிமையை உலகுக்கு உணரச் செய்த மேற்கு வங்காளத்தின் கலாசார அடையாளமாக சினிமாவைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

Wednesday, 25 January 2012

சாதம் பிரசாதம் ஆவது எப்படி...?


உறவினர் வீட்டுக்கு போனால் எங்கள் சொந்தகாரரை பார்த்துவிட்டு வருகிறோம் என்கிறார்கள்

 ஆனால் ஆலயம் சென்று வந்தால் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகிறோம் என்று சொல்கிறார்கள்

 அது எப்படி மனிதனை பார்த்தால் வெறும் பார்வை என்றும் சுவாமியை கண்டால் தரிசனம் என்றும் ஒரே செயலை இரு வார்த்தைகளில் அழைக்கிறோம்?

 உண்மையில் தரிசனம் என்பது என்ன?  கோபுரத்தையோ, கொடி மரத்தையோ அல்லது வேறு தெய்வீக பொருட்களையோ தூரத்திலிருந்து காண்பது கூட எப்படி தரிசனமாகும் என்று பலருக்கு குழப்பம் வரும் 



அரிசியை கழுவி பாணையில் இட்டு வேக வைத்தால் அது சாதம் தான். 

 அதில் என்ன புனிதத்தன்மை வந்து திடீர் என பிரசாதம் ஆகிவிடுகிறது?

  கடவுளுக்கு மனபூர்வமாக அர்பணிக்கும் போது சாதாரண குழாங்கல் கூட சாளக்கிராம கல்லாகி விடுகிறது அது போல சாதாரண சாதமும் அன்போடு படைக்கும் போது பிரசாதமாகி விடுகிறது 

 ஒரு பொருளை வெறும் கண்ணால் பார்ப்பது திருஷ்டி மட்டும் தான். அதையே பக்திபூர்வமாக பார்ப்பது தரிசனமாகும்.

மூன்றாவது கண்ணை திறக்கும் சக்கரம் !


உலக அன்னையின் திருவுருவத்தை சனாதனமான இந்து மதத்தின் சாக்த பிரிவு மூன்று நிலையாக வகைப்படுத்துகிறது முதலில் ஸ்தூல வடிவம் இரண்டாவது சூட்சம வடிவம் மூன்றாவது காரண வடிவம் என்பதாகும் ஸ்தூல வடிவம் என்பது பாசம் அங்குசம் கரும்பு வில் மலர் அம்பு ஆகியவற்றை கொண்டு இடது பாதத்தை ஊன்றியும் வலது காலை மடித்தும் அமர்ந்திருக்கும் திருக்கோலமாகும் காரண வடிவம் என்பது ஸ்ரீ அன்னையின் மூல மந்திர ஒலிவடிவமாகும் சூட்சம வடிவம் என்பது புகழ் பெற்ற ஸ்ரீ யந்திரம் என்ற ஸ்ரீ சக்ர வடிவாகும்.

மோகினி ஹிருதயம் எனும் நூல் ஸ்ரீ சக்ர வடிவை பற்றி மிக எளிமையாகவும் தெளிவாகவும் பல விவரங்களை நமக்கு தெரிவிக்கிறது இந்த நூலை வாமகேஷ்வர தந்திரம் என்று வேறொரு பெயராலும் அழைக்கிறார்கள் இதில் தந்திர மார்க்கம் சார்ந்த உபாசன முறைகள் விவரிக்கப்பட்டுள்ளது ஸ்ரீ சக்ரம் என்பது பிரபஞ்சவெளியில் எங்கும் வியாபித்துள்ள பரம்பொருளின் தன்மையை ஒருமை பாட்டை விளக்குவதே ஆகும் இந்த விளக்கத்தை ஒவ்வொரு மனிதனும் நன்கு விளங்கிகொள்ள ஒன்பது நிலைகளை கடந்து செல்ல வேண்டும் அதாவது மனிதனுக்கும் பிரம்மத்திற்கும் இடையில் ஒன்பது மறைப்புகள் உள்ளன இந்த் மறைப்புகளை ஸ்ரீ சக்ர தத்துவம் ஒன்பது ஆவரணங்கள் என்று பெயரிட்டு அழைக்கிறது
ஸ்ரீ சக்ரம் என்பது எல்லை இல்லாத பிரபஞ்சத்தை குறிப்பதாகும் அண்டவெளிக்கு துவக்கமும் கிடையாது முடிவும் கிடையாது அப்படி பட்ட அண்டத்தின் ரகசியத்தை மனித அறிவால் எக்காலத்திலும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது அப்படி முடியாத விஷயத்தை அறிந்து கொள்ள அக்கால ரிஷிகளும் முனிவர்களும் முயற்சித்து கண்டறிந்த மெய்ஞான ரகசிய வடிவமே ஸ்ரீ சக்ரமாகும் இதை ஒரு பிரபஞ்ச கணித கண்டுபிடிப்பு என்றும் சொல்லலாம் 

ஒரு புள்ளிக்கு 360 பாகைகள் உண்டு ஒவ்வொரு தனித்தனி பாகையில் இருந்து புறப்படும் கோடுககள் பிரபஞ்சவெளியில் முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே கொண்டே செல்லும் அந்த கோடுகள் அனைத்தும் ஒரே இடத்தில் அதாவது புறப்பட்ட இடத்திலேயே வந்து சேர்வதால் வட்டமாகவோ கோளமாகவோ தோற்றம் அளிக்கும் அந்த வடிவத்தை இரண்டு பாகமாக பிளந்தால் 180 பாகைகள் கொண்ட அரைவட்டம் கிடைக்கும் நான்காக பகிர்ந்தால் ஒவ்வொரு பகுதிக்கும் 90 பாகைகள் பிரிந்து நான்கு துண்டுகளாக விரிவடையும் இப்போது அந்த தோற்றத்தை பார்த்தால் ஒரு கூட்டல் குறியை போல நம் கண்ணுக்கு தெரியும் இது தான் சிவ சக்தி ஐக்கியத்தின் வெளிப்பாடாக அமையும் அது தான் பிரபஞ்சத்தின் அக்ஷர வடிவாகும் 

இந்த அக்ஷர வடிவம் க என்ற எழுத்தாக அமைந்திருக்கிறது இந்த எழுத்து வடிவம் தான் படைப்பு தத்துவத்தின் வெளிப்புற சின்னமாகும் எல்லையே இல்லாத பிரபஞ்சம் க வடிவ சதுரத்துக்குள் காணப்படுகிறது இந்த சதுரத்தில் அணிமா லகிமா,மகிமா பிரத்தி பிராம வசித்துவம் சத் சித்துவம் என்ற அஷ்டமா சித்துகள் அடங்கியிருந்து ஆட்சி செய்கிறது இந்த சகரத்தில் உள்ள நான்கு புற சதுர ரேகைகளும் அண்ட வெளியை காவல் செய்யும் லோக பாலகர்களாக உருவகப்படுத்தப்பட்டு நிர்மானிக்கப்படுகிறார்கள் இச்சக்கிரத்தின் உள் வரிகளில் காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாச்சரியம் ஆகிய ஆறு குணங்களை கட்டுப்படுத்தும் பண்பு மற்றும் அறிவு ஆகிய இரண்டு நற்குணங்கள் மறைந்துள்ளன இதை பிரகட யோகினிகள் என்று அழைக்கிறார்கள்

நிலையான பார்வையை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்தால் வட்டத்திற்குள் சதுரம் தோன்றும் ஸ்ரீ சக்ர சதுரத்திற்குள் இதே போன்று தான் வட்டம் தோன்றுகிறது இது நமது கண்களில் உள்ள கருவிழிகள் போல் தெரிவதால் அண்டத்தின் ஒத்தைக் கண் எனவும் சுதர்மம் என்னும் அண்ட கருவாகவும் கருதப்படுகிறது சதுரம் என்பது ஆகாச வெளியினையும் வட்டம் என்பது ஆகாச காலத்தையும் குறித்து நிற்கிறது வெளி என்ற சதுரம் வளர்ந்து கொண்டே செல்கிறது காலம் என்ற வட்டம் சுழன்று கொண்டே செல்கிறது பார்வையை இன்னும் சற்று கூர்மை படுத்தி வட்டத்தை பார்த்தோம் என்றால் வட்டத்திற்குள் வட்ட வட்டமாக மூன்று வட்டங்கள் தோன்றும் இதில் இந்திரன் அக்னி எமதர்மன் நிருதிதேவன் வருணன் வாயு குபேரன் ஈசானன் ஆகிய எட்டு திக்கின் அதிபதிகள் நிற்கிறார்கள் ஒரு சதுரத்தில் அதற்குள் இருக்கும் வட்டத்தை அதாவது சதுரமான அண்டவெளியும் அதற்குள் இருக்கும் பூகோளத்தையும் எட்டு பாகமாக்கி அஷ்டதிக்கிலும் பிரபஞ்சம் பறந்து விரிந்துள்ளதை ஸ்ரீ சக்ர குறியீடுகள் காட்டுகின்றன 

ஸ்ரீ சக்ரத்தின் வட்டத்தில் உள்ள நடுவட்டம் அகமுகமான வழிபாட்டால் பெருகக்கூடிய கொல்லாமை வெகுளாமை புலனடக்கம் பொறுமை தவம் வாய்மை அன்பு ஆகிய நற்குணங்களை வரிசைபடுத்தி காட்டுகிறது அதற்கு அடுத்த வட்டத்திற்குள் மனிதனின் 360 சுவாச கூறுகளான காலம் நிற்கிறது இந்திய நாள்கணக்கு படி ஒரு நாளைக்கு அறுபது நாழிகைகள் உண்டு ஒரு நாழிகையில் அதாவது 24 நிமிடத்தில் ஒரு மனிதன் விடும் சுவாசத்தின் எண்ணிக்கை 360 இந்த 360தை 60 நாழிகையால் பேருக்கும் போது சராசரியாக ஒரு மனிதனின் தினசரி சுவாசம் 21.600 ஆகும் ஒவ்வொரு நாழிகைக்கான 360 சுவாசத்தை பாகங்களாக கொண்டோம் என்றால் அது ஒரு வட்டமாக வரும் இந்த பாகம் காலத்தை குறிப்பதாகும் இந்த காலம் என்னும் உள் வட்டம் கிருதயுகம்(அ) திருதயுகம் (அ) திரேதாயுகம் 2. திரேதாயுகம் 3. துவாபரயுகம் 4. கலியுகம் ஆகிய நான்கு யுகங்களாக சுழன்று வருகிறது இப்படி வட்டமும் சதுரமும் அண்டவெளியாகவும் காலமாகவும் விளங்கி மூலாதாரத்தில் கனலாக வடிவெடுக்கிறது இதை நெருப்புக்குள் நெருப்பு அல்லது சிவத்துக்குள் சக்தி அல்லது சகதிக்குள் சிவம் என்றும் சொல்லாம் இந்த மூன்றாவது வட்டத்தில் பத்து இதழ் கொண்ட தாமரை ஸ்ரீ சக்ரத்தில் மலர்கிறது

பதினாறு இதழ்கள் பிறக்கும் சக்ர பகுதியை சர்வ பரிபுரா சக்ரம் என்ற அழைக்கிறார்கள் இந்த ஒவ்வொரு இதழ்களிலும் அன்னையின் பதினாறு யோகினி சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது இந்த சக்திகள் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் தேவதைகள் ஆவார்கள் யோக நெறியில் இந்த பகுதி சுவாதிஷ்டானம் என்று அழைக்கப்படுகிறது இதில் மனம் சித்து சித்தம் அகங்காரம் ஆகிய நான்கு அந்தகரணங்களும் பார்த்தல் கேட்டல் நுகர்தல் சுவைத்தல் உரைத்தல் நினைவு வைத்தல் கனைத்தல் சூட்சமம் சுக்குலம் காரணம் பெயர் வளர்ச்சி ஆகிய பனிரெண்டு தன்மாத்திரைகள் அடங்கியுள்ளன இத்தகைய பதினாறு இயல்புகளும் நிரம்பி இயங்கினால் தான் உலக வாழ்க்கைக்கு தேவையான உடல் நலம் மனநலம் அறிவு நலம் பண்பு நலம் சமூக நலம் பொருள் நலம் ஆகிய பெயர்கள் கிடைக்கும் அதனால் தான் இப்பகுதியை படைத்தல் தத்துவம் என்கிறார்கள் 

அடுத்ததாக பதினாறு இதழ் தாமரைக்குள் எட்டு இதழ் கொண்ட மூன்றாவது ஆபரணம் பிறக்கிறது இது சர்வ சம்மோகன சக்ரம் என்ற பெயர் கொண்டதாகும் எட்டு இதழ் கமலத்தில் எட்டு யோகினிகள் உள்ளதோடு அனங்க மன்மதன என்ற சக்திகளும் அருளாட்சி செய்கின்றன அனங்க என்றால் உருவம் இல்லாதது என்ற பொருள் வரும் அதனால் இந்த பிரபஞ்சமானது உருவம் இல்லாத பரப்ரம்மத்தில் இருந்து உதயமானது என்ற மூல கருத்து வெளிப்படுகிறது மேலும் இந்த எட்டு இதழ்களும் எட்டு பிரம்மாணங்களாகும் மேலும் இந்த சக்ரம் மனித உடலின் சதை பகுதியை குறிக்கிறது



அடுத்ததாக உள்ள நான்காவது ஆவரணத்தில் கீழே எழும் மேலே ஏழும் ஆக பதினாறு உலகங்கள் அமைந்துள்ளன இதை சர்வ செளபாக்கிய தயகச்சக்கரம் என்று அழைக்கிறார்கள் மேலே உள்ள ஏழு கோணத்தில் பூர் பூவ சுவ ஜன தப சக்திய ஆகிய ஏழு உலகங்களையும் கீழே உள்ள ஏழு கோணங்கள் அதல விதல சுதல நிதல ரசாதல மகாதல பாதாள ஆகிய ஏழு உலகங்களையும் காட்டுகிறது அது மட்டும் அன்றி ஒலித்தத்துவமான சட்ஜமம் சமம் காந்தாரம் மத்திமம் பஞ்சமம் தைவதம் விவாதம் ஆகிய ஏழு சப்த லயங்களையும் ஊதா கருநீலம் நீலம் பச்சை மஞ்சள் ஆரஞ்சி சிவப்பு ஆகிய நிறதத்துவங்களையும் காட்டுகிறது அதாவது இறை சக்தி ஓசையாகவும் ஒளியாகவும் இருப்பதை இந்த கோணங்கள் விளக்குகின்றன 

ஐந்தாவது ஆவரணமான சர்வார்த்த சாதக சக்கரத்தில் கீழே ஐந்து கோணமும் மேலே ஐந்து கோணமும் உள்ளது இந்த பத்து கோணங்களும் மனித உடலில் உள்ள தச வாயுக்களை குறிக்கிறது ஸ்ரீ அன்னையை வழிப்படும் தசமகாவித்தியா தோற்றங்களை இது காட்டுவதாகவும் அமைந்துள்ளதாக கூறலாம் மேலும் மேலே உள்ள ஐந்து கோணங்கள் சரஸ்வதி லஷ்மி கெளரி மகேஸ்வரி மனோன்மணி என்ற அன்னையின் பஞ்ச வடிவங்களையும் கீழே உள்ள ஐந்து கோணங்கள் தத்புருஷம் சத்யோஜாதம் அகோரம் வாம தேவம் ஈசானம் ஆகிய ஈஸ்வர பஞ்சப்ரம்ம வடிவத்தையும் காட்டுகிறது

தேவியை வழிபடும் சர்வசோமணி சர்வவிக்ஷிரவினி சர்வாஷ்ணி சர்வசந்தசர்வேசினி மாதினி சர்வமகோரங்குசா சர்வகேச சர்வபிகம்ப சர்வயோனி சர்வதிகண்டா ஆகிய பத்து மூர்த்திகளையும் இந்த கோணங்கள் காட்டுகின்றன இதே போல அன்னமய கோசம் ஞானமய கோசம் மனோமய கோசம் விஞ்ஞானமய கோசம் ஆனந்தமய கோசம் என்னும் ஐந்து உடல்களையும் அந்த உடல்களை தாக்கும் தோஷங்களான பொய்யாமை கொல்லாமை கள்ளுண்ணாமை திருடாமை காமியாமை ஆகிய ஐந்து நெறிகளை சுட்டிக்காட்டுகிறது இப்பகுதி விந்து அணுக்களையும் கருமுட்டைகளையும் காட்டுவதாக தாந்திரிக தத்துவம் காட்டுகிறது 

ஆறாவது ஆவரணமான சர்வஞசக்கரம் ஆஞ்சாசக்கரம் என்று அழைக்கப்படுகிறது இது உருவவழிபாட்டின் விளக்கமாகும் அன்னையானவள் சர்வத்தையும் அருளும் மூர்த்தியாகவும் திகழ்கிறாள் சர்வத்தையும் அழிக்கும் சக்தியாகவும் திகழ்கிறாள் உடல் இயக்க ரீதியில் இந்த ஆவரணம் எழும்பில் உள்ள மட்சையை குறிக்கும் 

சர்வரோகர சக்கரம் என்ற ஏழாவது ஆவரணம் பிந்துவை குறிப்பதாகும் இதில் எட்டு கோணங்கள் உண்டு இக்கோணங்கள் வசினி காமேஸ்வரி மோதினி விமலா அருணா ஜெயினி சர்வேஸ்வரி கெளலனி ஆகிய வித்தைக்கும் ஞானத்திற்கும் உரிய தேவதைகள் வாசம் செய்கிறார்கள் இந்த அஷ்ட கோணத்தின் அதிதேவதை திரிபுரா ஆவாள் யோகமார்க்கத்தில் கூறப்படும் இயமம் நியமம் ஆசனம் பிரணாயமம் பிரத்தியாகாரம் தாரணை தியானம் சமாதி ஆகிய எட்டு நிலைகளும் இதில் அடங்குகிறது

மேலும் நூல்களை கற்றுத்தரும் போத குரு பேதங்களை அறிய செய்யும் வேதகுரு மந்திர சித்தி பெற வழிகாட்டும் மிசிதகுரு செயலுக்கம் தரும் சூட்ச்சக குரு வார்த்தைகளால் ஞானத்தை போதிக்கும் வாசககுரு தான் பெற்ற ஞானத்தை சுயநலம் இல்லாமல் சீடருக்கு தரும் காரககுரு முத்தியடைய வழிகாட்டும் விஷிதககுரு ஆகிய அஷ்டகுருக்களையும் இக்கோணங்கள் உணர்த்துகின்றன 

அன்னை ஆதிபராசக்தியின் நான்கு திருகரங்களும் அந்த கரங்களில் இருக்கும் பாசம் அங்குசம் கரும்பு வில் மலர் கணை ஆகிய நான்கு கருவிகளும் இந்த எட்டு கோணத்தின் வடிவங்கள் எனலாம் இதில் பாசம் என்பது ஆசையின் வடிவம் அங்குசம் என்பது கோபத்தின் வடிவம் கருப்பு வில் என்பது மனதின் வடிவம் மலர் கணை என்பது உணர்வுகளின் வடிவம் 

எட்டாவதாக உள்ள ஆவரணம் முக்கோணமாக அமைந்த காயத்திரி பீடமாகும் அன்னை இந்த காயத்திரி பீடத்தில் திரிபுராம்பா என்ற திருநாமத்தோடு அமர்ந்திருக்கிறாள் காமேசி வச்சிரேசி பகமாலினி என்ற மூன்று தேவதைகளையும் முக்கோணத்தில் ஒவ்வொரு பகுதியிலும் நிறுத்தி உள்ளாள் மனிதனை கடைநிலைக்கு தள்ளுகின்ற ஆணவம் கர்மா மாயை என்ற மும்மலங்களும் இச்சக்கரத்தை பூஜிப்பதினால் எரிந்து சாம்பலாகி விடுகிறது

சுழன்றடிக்கும் சூறாவளி என்ற பேராசை அடங்கி விடவும் ஆயிரம் இடர்பாடுகள் வந்தாலும் அனைத்தும் தவிடு பொடி ஆகிவிடவும் வயிரக்கியத்தை பெறவும் சம்சார சாகரத்தில் உழன்று கொண்டிருக்கும் மனமென்னும் மாய பிசாசை வசக்கி ஒடுக்கி அன்னையின் திருபாதத்தில் பூர்ண சரணாகதி அடைய செய்யவும் இச்சக்கரம் வழிவகுக்கும் 

இறுதியாக சர்வானந்த மயசக்கரம் என்ற ஒன்பதாவது ஆவரணம் ஸ்ரீ சக்ரத்தின் மைய புள்ளியான பிந்து மையமாகும் இது பேரானந்தம் அடையக்கூடிய அம்பிகையின் திருகாட்சியை நேருக்கு நேராக தரிசிக்கும் நிலையை காட்டுகிறது அம்மையும் அப்பனும் இந்த பிந்து பகுதியில் ஒன்றாக இணைந்து நிற்கிறார்கள் இன்பம் துன்பமற்ற ஆழ்ந்த சமாதி நிலை பிந்து பகுதி காட்டும் சின்னமாகும் யோக மார்க்கத்தில் சொல்லப்படும் சமாதி நிலையின் மூன்றவது கண் திறக்கும் அனுபவமே ஸ்ரீ சகரத்தில் உள்ள மூல பிந்தாகும் 

இது வரையில் தாய்தெய்வ வழிபாட்டின் ஆழ்ந்த கருத்துக்களை சுருக்கமாக சிந்தித்தோம் இனி நமது இந்து மதத்தில் உள்ள மற்ற பிரிவுகளையும் சற்று ஆழ்ந்து சிந்திப்போம். 

நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...!



பிரணாயாமம் என்ற மூச்சு பயிற்சி ஆரோக்கியமான வாழ்கைக்கு சிறந்தது என்று கேள்விப்படுகிறோம்

 அதை செய்யும் முறையை குரு மூலம் தான் அறிய வேண்டும் என்பதும் நமக்கு தெரியும் 

அந்த பயிற்சியை செய்ய துவங்கும் முன் அதை எப்போது செய்ய வேண்டும் அதற்கான உணவு கட்டுப்பாடு ஏதேனும் உண்டா என்பதை அறிந்து கொண்டால் நம்மால் ஆகுமா ஆகாதா என்று முடிவு செய்யலாம் என சிலர் நினைக்கிறார்கள்

மூச்சு பயிற்சி என்பது ஆயுள் காலத்தை நீட்டிக்கும் ஒரு முயற்சி மட்டுமல்ல வாழும் காலம் எவ்வளவு ஆனாலும் அதில் ஆரோக்கியமாக இருக்கும் வழியேயாகும்.

  முறைப்படி மூச்சு பயிற்சியை காலை மாலை இரு வேளைகளில் தான் செய்ய வேண்டுமென யோக நூல்கள் சொல்லுகின்றன

  சூரிய உதய நேரத்திலும் மறையும் வேளையிலும் தரையில் பத்மாசனம் இட்டு அமர்ந்து முதுகு தண்டுவடம் நேராக நிற்பது போல் நிமிர்ந்து அமர வேண்டும். 

  புலித்தோல், மான்தோல் போன்ற விரிப்புகளை தான் பயன்படுத்த வேண்டும் என்பது கிடையாது.

  பருத்தி மற்றும் கம்பளி துணிகளையும் பயன்படுத்தலாம். 

 தர்ப்பையால் ஆன பாய் சிறந்தது ஆகும். 

 நாம் மூச்சு பயிற்சி செய்கின்ற அறையில் நமக்கு பிடித்தமான கடவுள் படங்களை வைத்து கொள்ளலாம். 
 கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் இயற்கை காட்சி படங்களை வைக்கலாம். இந்த பயிற்சி கடவுள் நம்பிக்கை இல்லாதவனை கூட கடவுளிடம் அழைத்து செல்லும்

 மிக முக்கியமாக அந்த அறை காற்றோட்ட வசதி உள்ளதாகவும், வெளிச்சம் வர கூடியதாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும்.



  ஊதுபத்தியோ அல்லது மற்ற வாசனை பொருட்களோ உபயோகப்படுத்த கூடாது.

 அந்த நேரத்தில் மனிதர்களின் நடமாட்டமும் செல்லப் பிராணிகளின் அருகாமையோ கூடாது.

 அதிகமா ஒளியும் அங்கு வர கூடாது.

  மனதை கூடியமானவரை அலைய விடாமல், கண்களை மென்மையாக மூடி நிதானமாக அவசரமே இல்லாமல் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.

  இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது நேற்று ஒரு நேரம் இன்று ஒரு நேரம் என நமது விருப்பப்படி பிராணாயாமம் செய்யும் நேரத்தை வைத்துக் கொள்ள கூடாது.

  தினசரி மிக கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட நேரத்தை கடைபிடிக்க வேண்டும்.

  சத்தமாக பேசுதல் வன்மையான வார்த்தைகளை பயன்படுத்துதல் கூடாது. 

 கூடியமான வரை மனதை காம வசப்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். 

 பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி சாதத்துடன் சிறிது நெய், பருப்பு கலந்த உணவை அரை வயிற்றுக்கு எடுத்து கொள்ள வேண்டும். 

 கால் வயிற்றுக்கு நீரும், மீதம் வயிறு காற்றாலும் நிரம்பியிருக்க வேண்டும்.  

உணவு சாப்பிட்ட சிறிது நேரம் கழித்து வாழை பழம் மாம்பழம், ஆரஞ்சு பழம், சீத்தா பழம் ஆகிய பழங்களில் எதாவது ஒன்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

  வயிறு நிறைவாக இருக்கும் போதோ, பசியோடு இருக்கும் போதோ மூச்சு பயிற்சி செய்யக் கூடாது.

  மல ஜலம் கழித்த பிறகு குளித்து முடித்தே இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். 

 இப்படி செய்பவர்கள் இடத்தில் பெரிய நோய்கள் எதுவும் வராது. 

Tuesday, 10 January 2012

அஸ்ஸாம் முகா பட்டு!





ஒரு நாட்டின் கலாசாரம் என்பது அந்த நாட்டின் பேசும் மொழி, சடங்குகள், அணியும் ஆடைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், உறவுமுறைகள், சாஸ்திரங்கள் இப்படி அனைத்துவகையான அம்சங்களின் ஒட்டுமொத்த கலவைதான்.  இந்தியாவை பொருத்தவரை விருந்தோம்பல், ஒருத்தனுக்கு ஒருத்தி எனும் விஷயங்கள்தான் இன்றுவரை கலாசார அடையாளங்களாக சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
திருநெல்வேலி என்றால் அல்வா, திண்டுக்கல் என்றால் பூட்டு, மணப்பாறை என்றால் முறுக்கு என்று மாவட்டங்களைச் சொன்னதும் அதன் அடையாளங்கள், பெயரை ஒட்டியே சொல்கிறோம் அல்லவா? அதேபோல இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும், அதை அடையாளப்படுத்தும் ஒவ்வொரு சிறப்பு விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் இந்த இதழில் நாம் பார்க்கப்போகும் மாநிலம், அஸ்ஸாம். இந்தியாவின் வட கடைக்கோடிக்கு அருகே இருக்கும் இந்த மாநிலத்தின் பெயரைச் சொன்னவுடன் நமக்கு எல்லாம் நினைவுக்கு வருவது டீ. சர்வதேச அளவில் டீ உற்பத்தியில் இந்தியா முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பதற்கு காரணம் அஸ்சாமில் உற்பத்தி செய்யப்படும் டீயை குறிப்பிடலாம். அஸ்ஸாம் என்றாலே டீ என்று சொல்லும் நமக்கு அஸ்சாமின் கலாசார அடையாளமாக இருக்கும் முகா பட்டுப்புடவையைப் பற்றி யாரும் அவ்வளவு பெரிதாக தெரிவதில்லை. ஆனால், டீ யை விட கலாசாரத்திலும், அம்மாநில மக்களின் கௌரவக் குறியீடாகவும் விளங்குவது முகா எனும் பட்டு ரகம்தான் என்று சொன்னால் பலருக்கும் வியப்பாகத்தான் இருக்கும்.
தமிழ்நாட்டில் திருமணம், அதுவும் காஸ்ட்லி திருமணம் என்றால் யாரும் காஞ்சிபுரம் பட்டுப் புடவையை  விட்டுக்கொடுப்பதில்லை. அதுபோலத்தான் அஸ்ஸாம் முகா பட்டும். சர்வதேச சந்தையில் அஸ்சாமின் முகா பட்டுக்கு ஏக டிமாண்ட் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
தகதகவென ஜொலிக்கும் தங்க நிறம்தான் முகா பட்டுக்கான அடையாளம். முகா என்றால் மஞ்சள் நிறம் என்று பொருள். இந்தப் பட்டுப் புடவை முற்றிலும் தங்க நிறத்தில் ஜிகுஜிகுவென்று ஜொலிப்பதால்தான் இந்தப் பட்டுக்கு முகா என்று பெயர் வந்ததாம். நம்ம ஊர் பெண்கள் பட்டுப்புடவைகளை துவைப்பது என்பதே அரிது. ஏனென்றால், துவைத்தால் சாயம் போய்விடும். ஜரிகை புடவையில் இருந்து  வந்துவிடும். துவைக்க துவைக்க பழைய பட்டுப்புடவை போன்று தோற்றமளிக்கும் என்று பயந்தே பல பெண்கள் பட்டுப் புடவைகளை துவைக்காமலும், அணிந்துகொள்ளாமலும் வாங்கிய பட்டுப் புடவைகளை அப்படியே பத்திரப்படுத்தியே அழகு பார்ப்பார்கள். ஆனால், இந்த மாதிரி சமாச்சாரங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதுதான் முகா. இந்தப் பட்டுப்புடவையை துவைக்க துவைக்க இதன் அழகு கூடும். அதேபோல எத்தனை முறை துவைத்து துவைத்து அணிகிறோமோ, அதற்குத் தகுந்தார்போல் புதுப் புடவை போன்று காட்சியளிக்குமாம். பட்டு நூல்களுக்கெல்லாம் ராணி என்று புகழப்படும் முகா பட்டு, இந்தியாவின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில்தான் முதன்முதலில் அடையாளப்படுத்தப்பட்டது. அதற்குப்பிறகுதான் இந்த முகா பட்டு அஸ்ஸாமின் பாரம்பரிய சின்னமாக திகழ்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 200 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை தாங்கத்தக்க இந்த பட்டு ரகம், 85 சதவீத புறஊதாக் கதிர்களை உறிஞ்சும் தன்மை கொண்டதாம். கோடைக்காலத்திற்கு மட்டுமல்லாமல், குளிர்காலத்திலும் இந்தப் பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டால், சுகமாக இருக்கும் என்கிறார்கள் அஸ்ஸாம் வாசிகள்.
முகா பட்டுப்புடவையின் முதல் தரம் வெண்மை நிறத்தில் இருக்கும். வெண்மை நிற முகா பட்டுப் புடவைக்கு சர்வதேச பட்டு சந்தையில் எப்போதும் பெரும் வரவேற்பு உண்டு.
முகா பட்டு நூல் அன்ந்திரியா அஸ்ஸாமினிஸ் என்ற பட்டுப் புழுவிலிருந்து எடுக்கப்படுகிறது. இந்த வகையான புழு அஸ்ஸாமில் மட்டும்தான் வாழ்வது குறிப்பிடத்தக்கது. இந்தப் புழுவின் முட்டைப் பருவத்திற்கு அடுத்தப் பருவத்தில் மட்டும் இரண்டு மி.மீ. அளவுக்கு பட்டு நூல் எடுக்க முடியுமாம். ஆனால், இதை சரியாக வளர்க்கும்பட்சத்தில் ஒரு பட்டுப் புழுவிடம் இருந்து மட்டும் 30 மி.மீ. நீளம் வரை பட்டு நூல் எடுக்கமுடியும். இந்த அத்தனை சமாசாரங்களும் நடப்பது வெறும் எட்டு நாட்கள்களில் என்றால் வியப்பாக இருக்கிறதுதானே.
அதுமட்டுமல்லாமல் 1000 பட்டுப் புழுவிலிருந்து 125 கிராம் பட்டு நூலை எடுக்க முடியுமாம். இதை வைத்துக்கொண்டு 750 கிராம் முதல் 1 கிலோ வரையிலான பட்டுப் புடவை தயாரிக்க முடியும் என்கிறார்கள், முகா பட்டு நெசவாளர்கள். அதுமட்டுமல்லாமல் இந்தப் பட்டு நூலும் ஜூலை - ஆகஸ்ட், செப்டம்பர் - அக்டோபர் மற்றும் நவம்பர் - டிசம்பர் உள்ளிட்ட குறிப்பிட்ட மாதங்களில் மட்டும்தான் புழு உற்பத்தி செய்யும். இதில் முதல் இரண்டு மாதங்களில் கிடைக்கும் பட்டு நூல்தான் தரத்திலும் நிறத்திலும், உயர்ந்ததாக இருக்கும். இந்த நூலுக்குத்தான் உலக பட்டுச் சந்தையில் அதிக விலை. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் முகா பட்டுப் புடவைக்கு எப்போதும் தனி மவுசுதான். ஜப்பான் நாட்டில் இப்போது வரை முகா பட்டு நூலை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் நெசவாளர்கள்.
உலக அளவில் பட்டுநூல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த உற்பத்தியில் 90 சதவீதம் அஸ்ஸாமில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் இந்தியாவில் உற்பத்தியாகும் பட்டுநூல் மட்டும் 22 ஆயிரம் டன். இவ்வளவு உற்பத்தி செய்தும் நம் நாட்டில் பட்டு நூல் தேவை இருப்பதால், தற்போது சீனாவிடம் இருந்து 8ஆயிரம் டன் பட்டு நூல் இறக்குமதி செய்தகொண்டிருக்கிறோம். சீனா மட்டுமல்லாமல், உஸ்பெகிஸ்தான், பிரேசில்,வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்தும் தற்போது பட்டுநூல் இறகக்குமதி செய்துகொண்டிருக்கிறோம். பட்டுவர்த்தகம் மூலம் மட்டும் இந்தியா கடந்த ஆண்டில் சம்பாதித்த வருமானம் ரூ.2,600 கோடி என்கிறார் முகா பட்டு நூல் உற்பத்தியாளர் மேனன்.
சாதாரண மஞ்சள் நிற பட்டுத் துணி, இந்தியாவை சர்வதேச சந்தையில் கவுரவப்படுத்துகிறது என்றால், முகாவை நினைத்து பெருமைப்பட்டுத்தானே ஆகவேண்டும்!



நாய்க்கு சிலை எழுப்பிய வீர சிவாஜி!






இன்றைய செய்தி நாளைய வரலாறு என்று சொல்வார்கள். ஆனால் கடந்த காலங்களில் நம் தேசத்தில் ஆண்ட மன்னர்கள் ஆட்சி நடத்திய பகுதி, அவர்கள் வணங்கிய கோயில், அவர்கள் வசித்த கோட்டை.. இப்படி அவர்களின் வரலாற்றைச் சொல்லும் அடையாளங்கள் இன்னும் நம்மிடைய இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
அவர்கள் விட்டுச்சென்ற வரலாற்று அடையாளங்கள் இன்று கூட நமக்கு பிரமிப்பின் உச்சக்கட்டம்தான். இவ்வளவு பெரிய மாளிகையை எப்படி கட்டியிருப்பார்கள். இவ்வளவு பெரிய மாளிகையிலா குடியிருந்தார்கள். இவ்வளவு பெரிய கற்களை எல்லாம் எப்படி தூக்கியிருப்பார்கள்  என்று பார்க்கும் ஒவ்வொரு அடையாளங்களும் நமக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பாமல் இல்லை. ஆனால், ஒவ்வொரு வரலாற்று அடையாளங்களும், இன்று நமக்கு  வாழ்க்கையின் பல்வேறு சூட்சுமங்களை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறது என்பதை புத்தகத்தில் வரும் புகைப்படங்களையோ தொலைக்காட்சியில் வரும் காட்சித் தொகுப்புகளை  வைத்தோ புரிந்துகொள்ள முடியாது. அத்தகைய வரலாற்று அடையாளங்களை நேரில் போய் பார்க்க வேண்டும். நேரில் சென்று பார்வையிடுவதற்கும், அந்த வரலாற்றுப் பொக்கிஷங்கள் குறித்த கூடுதல் தகவல்களையும்தான் இந்தத் தொடரில் வரும் இதழ்களில் பார்க்கவிருக்கிறோம். எல்லாருக்கும் பரிட்சயமான, கேள்விப்பட்ட இடங்களைத்தான் நாங்கள் இந்தப் பகுதியில் சொல்லவிருக்கிறோம். ஆனால், இதுவரை நீங்கள் பார்க்காத புகைப்படங்கள், நீங்கள் கேள்விப்படாத புது தகவல்களை நாங்கள் இங்கு தொகுத்திருக்கிறோம். வாருங்கள்.. வரலாறை ருசிப்போம்.
மராட்டிய மாநிலம் என்று சொன்னவுடனேயே மகாவீரர் சத்ரபதி சிவாஜியும். அவர் சிறுவயதாக இருக்கும்போது, அவருக்கு வீரக்கதைகளை சொல்லி வளர்த்த அவர் தாய் புத்திலிபாய் பெயரும்தான் நமக்கு ஞாபகம் வரும். அப்படிப்பட்ட வீரரின் வாழ்க்கையை பறைசாற்றும் வகையில் இன்றுவரை கம்பீர தோற்றத்தில் காட்சியளிக்கிறது சிவாஜியின் தலைநகராகத் திகழ்ந்த ராய்கட் மலைக்கோட்டை. கிட்டத்தட்ட 350 ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட இந்த மலைக்கோட்டை, சீனப் பெருஞ்சுவரின் மினியேச்சர் என்று கூட சொல்லலாம்.
மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையில் இருந்து தெற்காக 210 கி.மீ., தொலைவில், சஹாயத்ரி மலைப் பகுதியில், ஈட்டி வடிவ பாறைகளின் மீது 5.12 சதுர கிலோமீட்டர் பரப்பில் விரிந்து பரந்துள்ளது ராய்கட் கோட்டை. ஆரம்பத்தில் ரெய்ரி என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப் பகுதியை கி.பி.1656ஆம் ஆண்டு கைப்பற்றிய சிவாஜி ராய்கட் என்று புதுப்பெயர் சூட்டினார். நண்பர்கள் எளிதாக வரும் வகையிலும், எதிரிகள் நுழைய முடியாதபடியும், கோட்டையை அமைக்க வேண்டும் என்று ராஜதந்திர நோக்குடன் சிவாஜி அளித்த உத்தரவுப்படி அபாஜிசோன்தேவும் ஹிரோஜி இந்துல்கரும், ஒரே ஒரு குறுகிய வழிப்பாதை கொண்ட இந்த கோட்டையை உருவாக்கினார்.
வரலாற்று சிறப்புமிக்க சத்ரபதி சிவாஜியின் பட்டாபிஷேகம் கி.பி.1674ல் இங்குதான் நடந்தது. இதே கோட்டையில்தான் 1689ல் சிவாஜி மரணமடைந்தார். சிவாஜியின் மகன் சாம்பாஜியிடம் இருந்து இந்த கோட்டையை 1689ல் முகலாயர்கள் கைப்பற்றினர். பின்னர், 1818ஆம் ஆண்டில் இதை பிரிட்டிஷார் கைப்பற்றினர்.
கோட்டைப் பகுதியில் பிரமாண்டமான சுற்றுச்சுவர்கள், அரண்மனைகள், சிவாஜி வழிபட்ட ஜகதீஸ்வரர் கோயில், தர்பார் மண்டபம், அரியணை, பெண்களுக்கான அரண்மனைகள், எதிரிகளைக் கண்காணிக்க வசதியாக 12 மாடிகள் கொண்ட கோபுரங்கள், பாதாளச் சிறைகள், சந்தைப் பகுதி கட்டடங்கள், நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றின் சிதிலங்கள் இந்திய வரலாற்றின் மகத்தான காலகட்டத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
அரசவைப் பெண்கள் வருவதற்காகவும், அரசக் குடும்பத்து பெண்கள் வருவதற்காகவும் இந்தக் கோட்டையில் சிறப்பு வழி அமைக்கப்பட்டிருக்கிறது, மீனா தர்வாஜா என்ற பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நுழைவாயிலை ஒட்டி 6 முக்கிய அறைகள் இருக்கின்றன.ஒன்று சிவாஜியின் தாயான புத்தலி பாயுக்கும் மற்றும் உள்ள ஐந்து அறைகள் அரசக் குடும்பத்து மகளிர்கள் தங்குவதற்கும் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
ராணி தர்வாஜாவின் முன் பகுதியின் பால்கி தர்வாஜா அமைந்திருக்கிறது. இது மகாராஜா சிவாஜி வந்து செல்வதற்கான நுழைவாயிலாக அமைந்திருக்கிறது. அந்த நுழைவாயிலை ஒட்டி 8 அறைகள் இருக்கின்றன. இந்த எட்டு அறைகளும் அரண்மனையின் தானியக் கிடங்குகளாக இருந்திருக்கலாம் என்கிறார்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். தானியக் கிடங்குகளுக்கு வலது புரத்தில்தான் சிவாஜி மகாராஜாவின் கோட்டை ஆரம்பிக்கிறது. ராஜ் பவன் என்று அழைக்கப்படும் இந்தப் பகுதிதான்  அன்றைய சிவாஜி மகாராஜாவின் சந்தோஷம், துக்கம், வெற்றி, தோல்விகள், சட்டம் இயற்றும் இடமாக இருந்திருக்கிறது. அதற்கான அடையாளங்கள் இன்னும் மிச்ச சொச்சத்தை நேரில் சென்றால் காணலாம்.
ராஜ்பவன் கோட்டையின் உட்புறத்தில் மிகப்பெரிய தண்ணீர் தொட்டிகள் இருக்கின்றன. சத்ரபதி சிவாஜி குளிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த அந்த தொட்டிகளின்  அருகே அன்றைய காலத்தில் அமைக்கப்பட்டிருந்த மிக  நவீன கழிவறைகளும் இருக்கின்றன. ராஜ் பவனின் கிழக்குப் பகுதியில் பாதாள அறைகள் இருக்கின்றன. இதில்தான் சிவாஜி தன் போர்த் திட்டங்களை முக்கிய தளபதிகளுடன் விவாதித்ததாகவும், தன்  இஷ்ட மாதாவான பவானி தெய்வத்தை அங்குதான்  வழிபட்டதாகவும், சூரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை இங்குதான் சிவாஜி மறைத்து வைத்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த மலைக்கோட்டையின்  சிறிது தொலைவில் உள்ள சித் தர்வாஜா கிராமத்தில் சிவாஜியின் தாய் ஜீஜாபாயின் சமாதி உள்ளது. கோட்டைக்குள் சிவாஜியின் சமாதி உள்ளது. கோட்டைக்குள் ஒரு ஆச்சர்யம். சிவாஜி வாக்யா என்ற பெயரில் ஒரு நாயை வளர்த்தார். இந்த நாய் என்றால் சிவாஜிக்கு கொள்ளைப் பிரியமாம். திடீரென்று இந்த நாய் இறந்துவிட ரொம்பவே சோர்ந்துவிட்டாராம். நாயின்  பிரிவை தாங்க முடியாதவர், தான்  தினமும் விழித்தவுடன் தன் செல்லப்பிரானியான வாக்யாவின் முகத்தில்தான் விழிக்கவேண்டும் என்பதற்காகவும், அதன் ஞாபகர்த்தமாகவும் வாக்யாவின் தத்ரூப சிலையை அரண்மனை சிற்பியின் மூலம் செய்தார். வாக்யாவின் சிலையும் இந்த மலைக்கோட்டையில் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது.


Saturday, 26 November 2011

ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இன்டீரியர் டெக்கரேஷன்!





 ஆரம்பம் ஒன்று இருந்தால் முடிவு ஒன்று இருக்கத்தானே செய்யும். அந்த ஆரம்ப ரகசியம் என்ன என்பதுதான் இப்போதைக்கு எல்லோருடைய தேடலும். இதுதான் முடிவு என்று எதையும் சொல்லிவிடாதபடிதான் மனிதர்கள் குறித்த நம் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சொல்கின்றன. தொடக்க காலத்தில் மனிதன் எப்படிப்பட்டவனாக இருந்திருப்பான்? தற்போது பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கும் இதே இயல்புடன்தான் ஆதிமனிதன் இருந்திருப்பானா? அல்லது நம்மைவிட திறமைசாலிகளாகவும், அதி புத்திசாலிகளாகவும் இருந்திருப்பானா? என்ற தேடல்கள் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒவ்வொரு நொடியும் நடந்துகொண்டிருக்கின்றன.
 தற்போதைய மனிதனின்  ரசனைத்தன்மையும், ஆதிமனிதனின் ரசிப்புத் தன்மையும் எப்படி இருந்தது என்பது குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைதான் இது. ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் ரசனைக்குத் தகுந்தவாறு வீட்டை அமைத்திருப்போம். வரவேற்பரை ஆரம்பித்து, வீட்டு சமையல் அறை உள்பட அனைத்து அறைகளிலும், தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு அறைகளை அழகுப்படுத்தி பார்ப்பது மனிதனுடைய இயல்பு. இந்த இயல்பு நம் முன்னோர்களுக்கு இருந்திருக்குமா? இருந்திருக்கும் ஆனால், கொஞ்சம் குறைச்சலாக இருந்திருக்கும். ஏனெனில் இப்போது இருக்கும் வசதிவாய்ப்புகள் அப்போது இல்லையே! என்றுதான் நம் மனம் சொல்லும். ஆனால், நாம் நினைப்பது முற்றிலும் தவறு. நம்மைவிட வீட்டை அழகுப்படுத்துவதில் நம்மைவிட ரசனைத்தன்மையும், ரசிப்புத் தன்மையும் நம்மைவிட அதிகமாகவே இருந்திருக்கிறது. அந்த நாடு இந்த நாடு என்று ஆராய்ச்சியை நோக்கியே நாம் செல்லவேண்டாம்.
நாம் தினமும் வணங்கும் கோயிலுக்குச் சென்று பாருங்கள். நம் முன்னோர்களின் ரசிப்புத் தன்மை தெரியும். கரிகாலன் கட்டிய கல்லணை ஆரம்பித்து, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் வரை மலைக்கத்தானே செய்கிறது. இந்த அளவு தொழில்நுட்பம் அப்போது இல்லை. இந்த அளவுக்கு வாகன வசதிகளோ, நவீன கருவிகள் இல்லாதபோது, அவ்வளவு பெரிய கல்லணையும், இவ்வளவு பிரமிக்க வைக்கும் கோயிலை அவர்களால் கட்ட முடிந்திருக்கிறது. இடி, மின்னல், பல இயற்கைச் சீற்றங்களைத் தாண்டி இன்னும் அவர்களின் கட்டடக்கலையை நாம் ரசித்துக்கொண்டிருக்கிறோம் என்றால் நம்மைவிட அறிவியலில் சிறந்தவர்களாத்தானே இருக்க முடியும். ஆனால், இன்று அதைப்போல் ஒன்றுகூட நம்மவர்களால் அமைக்க முடிவதில்லையே. இந்த விஷயங்களை மட்டும் ஒப்பிட்டு பார்க்கும்போது, நம்முடைய ரசிப்புத் தன்மையுடைய நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த நம் முன்னோர்கள் ரசிப்புத் தன்மையும், அறிவியல் அறிவும் நம்மைவிட அதிகமாக பெற்றிருந்திருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.
வாழ்க்கையின் சூட்சுமத்தையும், இல்லறத்தின் ரகசியத்தையும், ஒரு சில சிற்பங்களால் காட்டத் தெரிந்திருக்கிறது என்றால் நம்மைவிட எல்லா விஷயத்திலும் அறிவுப்பூர்வமானவர்களாகத்தானே இருந்திருக்கவேண்டும். இம்மாதிரியான பல கேள்விகள்தான்  ஆராய்ச்சியாளர்களின் மண்டையையும் குடைந்துக்கொண்டிருக்கிறது. விஞ்ஞானத்திலும், அறிவியலிலும் நம்மைவிட நம் முன்னோர்கள் விஞ்சியவர்களா என்பதை தெரிந்துகொள்வதைவிட அவர்களின் ரசிப்புத் தன்மையை மட்டும் சரியாக கணித்துவிட்டால், அவர்களின் அறிவியல் அறிவை எளிமையாக கண்டுபிடித்துவிடலாம் என்பதுதான் அறிவியலாளர்களின் கருத்து. அந்த அடிப்படையில்தான்  அந்த ஆராய்ச்சியும் நடந்தது.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க்கில் அமைந்துள்ளது விட்வாட்டர்ஸ்ட்ராண்ட் எனும் பல்கலைக்கழகம் இந்த பல்லைக்கழகத்தில் மனிதனின் ரசனை குறித்த ஆராய்ச்சிக் குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்தது பேராசிரியர் கிறிஸ்டோபர் ஹென்சில்வுட் தலைமையில் அமைந்த  ஆய்வுக்குழு. மனிதன் ரசிப்புத் தன்மை நவீன காலத்தில்தான் அதிகம். ஆதி மனிதர்களுக்கு நம்மைவிட ரசிப்புத் தன்மை குறைவுதான் என்பதுதான் இவர்களின் ஆய்வுக்கான அடித்தளம். இதுசம்பந்தமான ஆய்வுக்கான பயணத்திற்கு கிறிஸ்டோபர் கிளம்பும்போதே இன்று தனக்கான விடை கிடைத்துவிடும் என்று அதிதீவிர நம்பிக்கையுடன் தன் சகாக்களுடன் பயணித்தார். தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுண் பகுதிக்கு அப்பால் காடும், மலையும் சூழ்ந்த பகுதியை அவர்கள் நெருங்கியிருந்தார்கள். இருள் சூழ ஆரம்பித்திருந்தது. அந்த அடர்ந்த காட்டின் உள்ளே உள்ள குகைகள்தான் இவர்களின் ஆராய்ச்சிக்கான பகுதி. அதைத் தேடித்தான் அவர்கள் பயணித்துக்கொண்டிருந்தார்கள். இருள் சூழ ஆரம்பித்திருந்ததால், மறுநாள் காலை பயணத்தை தொடர்ந்துகொள்ளலாம் என்று கிறிஸ்டோபர் சொல்ல  மற்றவர்களும் ஆரம்பித்தார்கள். கூடாரத்தை அமைக்க முற்படும்போது, குழுவின் இருந்த ஒருவர் தூரத்தில் ஒரு குகை தெரிவதுபோல் இருக்கிறது. இங்கு கூடாரம் அமைத்து தங்குவதற்கு அங்கு போய் ஓய்வு எடுக்கலாமே என்று சொல்ல, ஆய்வுக் குழுவினர் அந்த குகையை அடைந்தார்கள்.
கும்மென்று இருட்டு. வவ்வால்களின் சத்தம், வண்டுகளின் ரீங்காரத்தைத் தவிர நிசப்தமாக இருந்தது அந்தப் பகுதி. கொண்டு வந்த விளக்குகள் உதவியுடன் படுத்து உறங்குவதற்கான பணிகளை குழுவினர் மேற்பார்வையிட கிறிஸ்டோபர் தன்  கையில் வைத்திருந்த டார்ச் விளக்கின் ஒளியை குகையின் மேற்புறச் சுவற்றின் மேல் பாய்ச்சினார். கரடுமுரடாக இருந்த கற்களுக்கு ஊடே சிவப்பும் கறுப்புமாக நெளிவு சுளிவுகளாக கோடுகள். இது ஆதிமனிதன் விட்டுச்சென்ற மனிதர்களின் ரசனை வடிவங்கள் என்று அப்போது அவருக்கு தெரியவில்லை. அசதியில் படுத்து தூங்கிவிட்டார்கள். பொழுது புலர ஆரம்பித்தது. ஓரளவு குகைக்குள்  சூரிய வெளிச்சம் ஊடுருவ ஆரம்பித்திருந்தது. டக்கென்று விழிப்புத் தட்டியது கிறிஸ்டோபருக்கு. உடனடியாக லென்சும், பிரஷ்ஷும் சகிதமாக குகையின் மேற்புறத்தை நோட்டமிட ஆரம்பித்தார். நிச்சயமாக ஆதி மனிதனின் கைவண்ணம்தான் என்று ஊர்ஜிதப்படுத்திக்கொண்டார். குகையின் படிகத்தை எடுத்து ஆராய்ச்சிக்கு அனுப்பியபோது, அது ஒரு லட்சம் ஆண்டுக்கு முந்தையது என்பது கிறிஸ்டோபருக்கு தெரியவந்தது. ஆச்சர்யம் தாங்கவில்லை கிறிஸ்டோபருக்கு. ஒரு லட்சம் ஆண்டுக்கு  முந்தைய மனிதர்கள் இப்படி ஒரு ஓவியம் எப்படி வரைய முடிந்தது என்பதுதான் அவருக்கு ஏற்பட்ட ஆச்சர்யத்திற்கு காரணம். ஓவியத்தில் அப்படி ஒரு நுணுக்கம். இப்படி ஓவியம் வரைய தனிப்பட்டக் கருவிகள் பயன்படுத்தியிருக்கவேண்டும். ஓவியத்திற்கான கலவைகள் எப்படி தயாரித்திருப்பார்கள் என்பது போன்ற விஷயங்கள் கேள்விகளாக கிளம்பவே குகைகளைச் சுற்றி தொடர் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. விலங்குகளின் கூறிய எலும்புகள், கற்களின் கூழ் இவற்றைப் பயன்படுத்தி வரையப்பட்ட ஓவியங்கள் என்பதற்கு அகழ்வாராய்ச்சியில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் அந்த அதிசய மக்கள் எச்சம் சொச்சமாக கிடைத்தது சின்ன சின்ன அடையாளங்கள் கிடைத்தது கிறிஸ்டோபருக்கு.
ஆய்வின்  கடைசியில் கிடைத்தது, ஆதி மனிதர்கள் வாழ்ந்த பிளாம்போஸ் குகைதான் அது. அவர்கள் பல ஆண்டுகள் தன் வாரிசுகளுடன்  வாழ்ந்த பகுதியாகத்தான் அது இருந்திருக்க வேண்டும். தாங்கள் வாழ்ந்த பகுதியை கலைவண்ணத்துடன் இருக்கவேண்டும் என்று அவர்கள் செய்த இண்டீரியர் டெக்கரேஷன்தான் அந்த ஓவியங்கள் என்பதுதான் கிறிஸ்டோபரின் அளித்த ஆய்வறிக்கையின் முடிவு. நம்மைவிட சிறந்த வகையில் யோசித்திருக்கிறார்கள். இருக்கும் உபகரணங்களை எப்படி வேறு வகைகளில் பயன்படுத்தலாம் என்று அவர்களுக்கு யோசிக்கத் தெரிந்திருக்கிறது என்பதுதான் கிறிஸ்டோபரின் ஆய்வு முடிவு.
இதுவரை நாம் பார்த்த ஆராய்ச்சிகளும், ஆராய்ச்சி முடிவுகளும் சொன்ன விஷயம்தான் இந்தக் கட்டுரையும் சொல்கிறது. விஞ்ஞானமும், அறிவியலும், உச்சத்தைத் தொடாத ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்கூட்டிய அந்த ஆதிமனிதர்கள் கலைநயமும், ரசனைத்தன்மையும் மிக்கவர்களாக இருந்திருக்கும் பட்சத்தில் நம்மைவிட நிச்சயமாக அறிவுஜீவிகளாகத்தானே இருந்திருக்க முடியும். ஆனால், அவர்களை விட அறிவிலும், சிந்தனையிலும் நாம் பின்தங்கியிருப்பதற்கு காரணம் வளர்ச்சியடைந்த அறிவியலாலா? கேள்விகளுக்கான பதிலைத்தேடி ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.